இந்த வார சத்குரு ஸ்பாட்டில், குருவுடன் ஒருமுறை அமர்ந்துவிட்டால் அவர் அருளிலிருந்து தப்பித்துக்கொள்ள இயலாது என்பதையும், அது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பதில் உள்ள ஆனந்தத்தையும் சத்குரு விளக்குகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: குருவருள் நமக்கிருக்கிறதா என்று அறிவது எப்படி?

சத்குரு:

பல நேரங்களில், வீட்டில் ஓய்வாக இருக்கும்போது, பின்னணியில் இசையை ஒலிக்கவிட்டு நீங்கள் அமர்வீர்கள், ஆனால், சிறிது நேரம் கழித்து, இசை ஒலிப்பதே உங்களுக்குத் தெரியாது, கவனித்திருக்கிறீர்களா? பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருக்கும் இசை உங்கள் கவனத்தில் இல்லை, யாருடனாவது உரையாட முற்படுகையில் மட்டுமே அது இடையூறாகத் தெரியும். அதே போல் சுவாசம் நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் அது உங்கள் கவனத்தில் இல்லை. இயல்பாக நடந்துகொண்டிருக்கும் சுவாசம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தால் உடனே அதை உணர்வீர்கள் அல்லவா? அதைப் போலவேதான் தெய்வீகமும். அது எப்போதும் உங்களுடன் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதை உணர்வதில்லை.

நம்முடன் எப்போதும் இருக்கும் ஏதோ ஒன்றை உணராமல் இருப்பதால் என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், வாழ்க்கை எப்படியோ நடந்துவிடும், ஆனால் அந்த தெய்வீகம் அல்லது அருள் அளிக்கும் ஆனந்தத்தை முழுவதுமாக இழந்துவிடுவீர்கள். அருள் என்பது ஒரு கணம் இருப்பதும் மறுகணம் போவதுமான ஒன்றல்ல. எனக்கு அருள் இருக்கிறதா என வாரயிறுதி நாட்களில் மட்டும் சிந்திக்கும் விஷயமல்ல அது. அருள் எந்நேரமும் இருக்கிறது. ஆனால் அருள்மடியைப் பற்றிய விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளும் போதுதான் அருளின் அரவணைப்பால் கிடைக்கக்கூடிய ஆனந்தத்தையும் உணரமுடியும்.

ஒரு முறை நீங்கள் என் முன் அமர்ந்து விட்டால், அந்த கணத்திலிருந்து - குறிப்பாக என்னிடம் தீட்சை பெற்றிருந்தால் - நான் அருளின் அரவணைப்பில் இருக்கிறேனா, இல்லையா என்னும் கேள்விக்கே வாய்ப்பில்லை. அது எப்போதும் இருக்கும். துரதிருஷ்டவசமாக நீங்கள் கேட்பவற்றை பூர்த்தி செய்வதுதான் அருள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இது, கோவிலுக்குச் சென்று, கடவுளே இதைச் செய்துவிடு, அதை நிறைவேற்றிக் கொடு என்று வேண்டுவது போல. கேட்டது நிறைவேறாவிட்டால் கடவுளையே மாற்றி விடுகிறீர்கள்.

அற்பமான உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கல்ல அருள். எப்படியும் நீங்கள் உங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். வாழ்வின் வெவ்வேறு தருணங்களில், 'இதுதான் வேண்டும்' என்று முடிவெடுத்துவிட்டுப் பிறகு அடுத்த ஷணமே மாற்றிக் கொள்கிறீர்கள். இருப்பினும், "சத்குரு, நீங்கள் ஏன் எனக்கு உதவுவதில்லை?" என்கிறீர்கள். எனவே, நான் அருளின் அரவணைப்பில் இருக்கிறேனா, இல்லையா என ஒவ்வொரு நாளும் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். குருவின் அருள் என்பது உங்கள் திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக இல்லை. அது உயிரின் திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக இருக்கிறது. இதோ அழகிய இந்த உயிர் தன்னிலையில் நிறைவடைவதற்காகவே குருவின் அருள்.

Love & Grace