சமீபத்தில் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கரண் ஜோஹருடன், மும்பையில் நடந்த “In Conversation with the Mystic” நிகழ்ச்சியில் சத்குரு உரையாடினார். அதில் விரைவான கேள்விகளுக்கு சத்குருவிடம் ஒருவார்த்தை பதில்கள் கேட்டபோது நடந்த சுவாரஸ்யமான உடையாடலே இந்தவார சத்குரு ஸ்பாட். அதோடு, சமீபத்தில் சத்குரு கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பையும் இணைத்துள்ளோம்.

கரண் ஜோஹர்: நான் சாதாரணமாக எனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை உங்களிடமும் எடுத்துக்கொள்ளப் போகிறேன். அதாவது rapid fire ரவுண்டு.

சத்குரு: நான் இளமைக்காலத்தில் நிறைய சண்டைப் படங்கள் பார்த்திருக்கிறேன். கேள்விக்கணைகளை நீங்கள் வீசினால் நானும் அதே வேகத்தில் பதிலளிப்பேன். (கைதட்டல் & சிரிப்பலை)

கரண் ஜோஹர்: இல்லை, நான் வாக்குக் கொடுக்கிறேன், இது அப்படி இருக்காது. நீங்கள் என் தாக்குதலை சந்திக்க நேரிடாது. நான் அப்படி நடந்துகொள்ளமாட்டேன். இது விரைவாக கேட்கப்படும் கேள்விகள். இதற்கு ஒரு வார்த்தையில் பதில் கேட்கும்போது நீங்கள் ஒரு வார்த்தைதான் சொல்லவேண்டும், ஏனென்றால் நீங்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிலசமயங்களில் நேரடியாக பதில் சொல்வதில்லை. மாறாக கருத்தாழமிக்க பதில் சொல்லி திகட்டவைத்து விடுவீர்கள். அதனால் இப்போது எனது வேண்டுகோள், உங்கள் பதில் ஒரு வார்த்தையில் வேண்டுமென்று கேட்டால் ஒரு வார்த்தையில் பதில் சொல்லவேண்டும்.

சத்குரு: (சிரித்தபடி) சரி.

கரண் ஜோஹர்: சரி. சமநிலையான வாழ்க்கை வாழ அத்தியாவசியமாக இருக்கும் ஒரு விஷயம் என்ன?

சத்குரு: புத்திசாலித்தனம்.

கரண் ஜோஹர்: சமநிலையான வாழ்க்கை வாழ நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன?

சத்குரு: முட்டாள்தனம்.

கரண் ஜோஹர்: சரி. அந்த பதிலை நான் எதிர்பார்த்தேன். நான் அடுத்து சொல்லப்போகும் விஷயங்கள் ஒவ்வொன்றிற்கும், அதை நான் சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் முதல் வார்த்தையை சொல்லுங்கள்.

ஒருங்கிணைக்கப்பட்ட மதம்?

சத்குரு: பைத்தியக்காரத்தனம்.

கரண் ஜோஹர்: திருமணம்?

சத்குரு: உடன்வசித்தல்.

கரண் ஜோஹர்: போட்டி?

சத்குரு: அபத்தமானது.

கரண் ஜோஹர்: பணம்?

சத்குரு: உபயோகமானது.

கரண் ஜோஹர்: அன்பு?

சத்குரு: ஒரு வாக்கியத்தில் சொல்லலாமா? (சிரிப்பலை & கைதட்டல்)

கரண் ஜோஹர்: சொல்லலாம், நான் அனுமதிக்கிறேன். (சிரிக்கிறார்)

சத்குரு: மிக அழகானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மனிதர்களுக்கு அன்பு என்பது ஊனமாக்கும் விஷயமாக இருக்கிறது. இதை விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், கசப்பான ஒன்றோ அசிங்கமான ஒன்றோ உங்களை ஊனமாக்கினால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அழகான ஒன்று உங்களை ஊனமாக்கும்போது, அது உண்மையிலேயே பரிதாபமானது.

கரண் ஜோஹர்: உயிரோடு இருப்பவர் அல்லது இல்லாதவர் ஒருவரிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்கமுடியும் என்றால், யாரை கேட்பீர்கள், என்ன கேட்பீர்கள்?

சத்குரு: என் கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் கண்டுபிடித்து விட்டேன். ஏனென்றால் எனக்கு நானே கல்வி புகட்டவோ, வேறேதோவொன்று செய்யவோ என் நேரத்தை செலவிடவில்லை. என் வாழ்க்கை முழுவதும் எனக்கு இருந்த ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கண்டுபிடிக்கவே செலவழித்தேன். சொல்லப்போனால் என் கேள்விகளெல்லாம் தீர்ந்துவிட்டன. (கைதட்டல்)

கரண் ஜோஹர்: நிச்சயமாக பதில்கள் தீர்ந்துபோகவில்லை, தீர்ந்துபோகவும் போகாது. நீங்கள் பெற்றுள்ளதில் சிறந்த அறிவுரை?

சத்குரு: எதுவுமில்லை.

கரண் ஜோஹர்: அறிவுரை கேட்டதே கிடையாதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: இல்லை. நான் எப்போதும் அறிவுரை கேட்டதும் இல்லை, எவருக்கும் கொடுத்ததும் இல்லை. எவரிடமும் அறிவுரை கேட்கவோ கொடுக்கவோ தேவையில்லாத விதத்தில் என்னை நானே உருவாக்கிக்கொண்டேன். (கைதட்டல்)

கரண் ஜோஹர்: முற்றிலும் கற்பனையான ஒரு சூழ்நிலையில், எந்த நிகழ்ச்சிகளும் பொறுப்புகளும் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் உங்களிடம் இருந்தால், அந்த நாளில் என்ன செய்வீர்கள்?

சத்குரு: ஓ! நிறைய செயல்கள் செய்வேன், இதற்கு ஒரு வார்த்தையில் சொல்லமுடியாது.

கரண் ஜோஹர்: (சிரித்தபடி) சரி, ஒரு வார்த்தையில் சொல்லத் தேவையில்லை.

சத்குரு: எனக்கு எல்லாவற்றின் மீதும் பாரபட்சமில்லாத பேரார்வம் உண்டு. நான் ஒரு காலத்தில் பல விஷயங்கள் செய்தேன். ஆனால் இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. அதனால் பொதுவாக, கொஞ்சம் நேரமிருந்தால் கால்ஃப் விளையாடுவேன். ஏனென்றால் அது நகரத்துக்குள் இருப்பதோடு, வேறேதோ செய்யத் தேவையாக இருந்தால் நான் உடனே திரும்பிவிட முடியும். ஆனால் ஒரு நாள் முழுக்க எனக்குக் கொடுத்தால், அப்படி நீண்ட காலத்திற்கு எனக்கு அவர்கள் கொடுக்கவில்லை, ஒருவேளை அப்படி நடந்தால் நான் கண்மூடி உட்காருவேன். ஏனென்றால் உண்மையிலேயே எனக்கு செய்வதற்கு ஏதும் இல்லாதபோதுதான் நான் என் உச்சநிலையில் இருக்கிறேன். (கைதட்டல்)

கரண் ஜோஹர்: உங்கள் வாழ்க்கையின் முடிவில், உங்களைப் பற்றி மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பும் விஷயம்?

சத்குரு: என் ஞாபகமே இல்லாத அளவு அவர்கள் அற்புதமாக வாழவேண்டும்.

கரண் ஜோஹர்: காலத்தின் ஊடே பயணிக்க வழி கிடைத்தால், எந்த காலத்திற்கு செல்வீர்கள்?

சத்குரு: அப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாம் முடிந்துவிட்டது. (சிரிப்பலை & கைதட்டல்)

கரண் ஜோஹர்: நீங்கள் பிரபஞ்சம் முழுவதும் ஏற்கனவே பயணித்துவிட்டீர்கள். இப்பகுதியின் எல்லா இடங்களுக்கும் உங்களிடம் கடவுச்சீட்டு இருக்கிறது.

சத்குரு: இதற்கு சற்று நிதானமாக பதில் சொல்ல முடியுமென்றால்...

கரண் ஜோஹர்: சரி.

சத்குரு: ... ஏனென்றால் இந்த கேள்விக்கு பல கோணங்கள் இருக்கிறது. (...) காலம் மற்றும் இடம் சார்ந்த கருத்துக்கள் அனைத்தும், அடிப்படையில் நீங்கள் உங்கள் தர்க்க அறிவின் கட்டமைப்பிற்குள் வாழ்வதால்தான். அந்த பரிமாணத்தை நீங்கள் கடந்து சென்றால், காலம் இடம் என்று எதுவும் இல்லை. எல்லாம் இங்கு இப்போது இருக்கிறது. (...) அதனால் காலத்தின் ஊடே பயணம் செய்வது எனக்கு அர்த்தமற்றது. (...)

கரண் ஜோஹர்: ஒரு மனிதரை சந்திக்கும்போது நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம்?

சத்குரு: முற்றும் கவனிக்கிறேன்.

கரண் ஜோஹர்: முற்றுமா?

சத்குரு: முழுவதும் பார்க்கிறேன் -கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.

கரண் ஜோஹர்: நீங்கள் விரும்புவதை செய்வது முக்கியமா, அல்லது செய்வதை விரும்புவது முக்கியமா?

சத்குரு: ஒரு வார்த்தையா அல்லது அதற்கு மேல் சொல்லலாமா?

கரண் ஜோஹர்: உங்கள் விருப்பப்படி சொல்லலாம்.

சத்குரு: நீங்கள் புத்திசாலியான மனிதராக இருந்தால், நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றை செய்ய முயற்சிப்பீர்கள். நீங்கள் அதிமேதாவியாக இருந்தால், என்ன தேவையோ அதை மட்டும் செய்வீர்கள்.

கரண் ஜோஹர்: ஒரு நாள் நீங்கள் எவர் கண்களுக்கும் தென்படாமல் இருக்கமுடியும் என்றால், என்ன செய்வீர்கள்?

சத்குரு: அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. (சிரிப்பலை & கைதட்டல்)

கரண் ஜோஹர்: உரிய மரியாதையுடன் கேட்கிறேன், உங்களுடைய மிகப்பெரிய பலவீனம் என்ன?

சத்குரு: சாதாரணமாக மக்கள் அவர்கள் வாழ்வில் பலவீனம் என்று கருதுவது... சரி, இதற்கு நான் சாதாரணமாகவே பதில் சொல்கிறேன். (...) என்னுடைய மிகப்பெரிய பலவீனம், எனக்கு ஆபத்து என்றால் பிடிக்கும். ஆபத்து இல்லாமல் என்னால் வாழமுடியாது. நான் உயிர்வாழ்வதன் விளிம்பில் இருக்கும்விதமான ஏதோவொன்றை செய்தாக வேண்டும். உயிர்வாழ்வதற்கும் இறப்பதற்கும் இடையிலான அந்த கோட்டில் நான் எப்போதும் நடந்திட விரும்புகிறேன். தினமும் ஏதோவொரு விதத்தில் அந்தக் கோட்டில் நான் கால்வைக்கிறேன். அது ஒரு பலவீனமா? நான் அப்படிக் கருதுவதில்லை, ஆனால் மக்கள் அப்படி நினைக்கிறார்கள். "சத்குரு, உங்கள் உயிரை பணயம் வைத்து நீங்கள் இப்படி செய்யக்கூடாது" என்பார்கள். ஆனால் ஆபத்து இல்லாவிட்டால், என்னை போதுமான அளவு சோதிக்காதது போல நான் உணர்கிறேன். நான் என்ன செய்துகொண்டு இருந்தாலும், என் வாழ்க்கையின் பெரும்பாலான சமயங்களில் நான் சோதிக்கப்படாதது போலவே உணர்கிறேன். ஆபத்தான தருணங்களில் மட்டுமே நான் சோதிக்கப்படுவது போல உணர்கிறேன்.

அதனால் நான் என் முழு ஆற்றலுக்கு சோதிக்கப்பட விரும்புவதே என் பலவீனம். நான் இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் என் பைக்கில் பயணித்தபோதும், பிறகு கார் ஓட்டத் துவங்கியபோதும், என் திறமையை சோதிக்கும் ஒரு இயந்திரம் வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. நான் என் முழு ஆற்றலுக்கு அவற்றை இயக்கினால் அவை எப்போதுமே உடைந்துபோயின. இந்நாட்களில், சமீபகாலமாக என்னை சோதிக்கும் இயந்திரங்கள் நான் இயக்கிப்பார்க்கக் கிடைத்துள்ளன, என்னால் அவற்றை முழுத்திறனுக்கு இயக்கமுடியுமா முடியாதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது என் வயதினால் கூட இருக்கலாம். நான் இன்னும் இளமையாக இருந்தபோது அவற்றை சந்தித்திருந்தால், அவற்றையும் நான்... (சிரிக்கிறார்)

கரண் ஜோஹர்: பதம் பார்த்திருப்பீர்கள். உலகம் உங்களைப் பற்றி அறியாத ஒரு விஷயம்?

சத்குரு: அவர்களுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. (சிரிப்பலை & கைதட்டல்) அதுதான் உண்மை.

கரண் ஜோஹர்: உங்களைப் பற்றி நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விஷயம்?

சத்குரு: ஓ, நான் அப்படி சிந்தித்ததில்லை. நான் ஹிந்தி, அல்லது மராத்தி பேசத் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும். (சிரிப்பலை & கைதட்டல்)

கரண் ஜோஹர்: உலகத்தில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விஷயம்?

சத்குரு: நிறைய விஷயங்கள் உள்ளன.

கரண் ஜோஹர்: ஒரு விஷயம்?

சத்குரு: மனிதர்கள். (சிரிப்பலை)

கரண் ஜோஹர்: கட்டாயம் அதற்கான அவசரத் தேவை இருக்கிறது. (சத்குரு சிரிக்கிறார்) உங்கள் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது என்ன?

சத்குரு: அப்படி எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் என்னால் என்ன செய்ய முடியுமென்று நான் எதிர்பார்க்கிறேனோ அதைவிட மிகக் குறைவாகவே எனக்கு செய்யக் கிடைக்கிறது, அதனால் நான் எதையும் சாதனையாக கருதுவதில்லை.

கரண் ஜோஹர்: நீங்கள் எப்போதும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல் இருக்கிறதா?

சத்குரு: என் இளமைப்பருவத்தில், இது என் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எனக்கு கேட்கக் கிடைத்ததால் இருக்கலாம், மற்ற பாடல்களைவிட இந்த பாடல் அடிக்கடி என்னிடம் வரும். நான் அதைத் தேடிப் போவதில்லை, ஆனால் ஏதோவொரு விதத்தில் திரும்பத் திரும்ப இந்த பாடல் என்னிடம் வருகிறது “How many times….” (Bob Dylan பாடிய “Blowin’ in the Wind” பாடல்)

கரண் ஜோஹர்: சரி. என் திரைப்படங்கள் எதையும் நீங்கள் பார்த்ததில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்களுக்குப் பிடித்த திரைப்படம் ஏதேனும் உண்டா?

சத்குரு: ஓ! நான் நிறைய நல்ல திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன், ஒருகாலத்தில் நான் நிறையவே பார்த்ததுண்டு. நான் அதிகமாக இந்திய சினிமா பார்த்ததில்லை, ஆனால் ஆங்கிலப் படங்கள் நிறையவே பார்த்திருக்கிறேன். ஆனால் நான் மிகவும் ரசித்த ஒரு திரைப்படம் என்றால், அன்று நடந்த நிகழ்வுகளாலும் பல வாழ்க்கை சூழ்நிலைகள் அமைந்த விதத்தாலும், நான் அந்த திரைப்படத்தை முழுக்க முழுக்க ரசித்துப் பார்த்தேன், அது ரோமன் ஹாலிடே திரைப்படம்.

கரண் ஜோஹர்: ஓ! அந்த திரைப்படம்தான் என் வாழ்க்கையில் நான் பார்த்த முதல் திரைப்படம். என் அம்மா என்னை திரையரங்கிற்கு அழைத்துச் சென்றார்.

சத்குரு: (சிரித்தபடி) பாருங்கள்!

கரண் ஜோஹர்: உண்மைதான். ரோமன் ஹாலிடே நான் பார்த்த முதல் திரைப்படம். அந்த திரைப்படத்தின் மூலம்தான் பெரியதிரை எனக்கு அறிமுகமானது. உங்களுடன் இந்த ஒரு ஒற்றுமையாவது எனக்கு இருப்பது மகிழ்ச்சி.

சத்குரு: ஆட்ரீ மற்றும் கிரகரி பெக் (திரைப்படத்தின் கதாநாயகர்கள்) முகங்கள் எப்படியோ மனதில் பதிந்துவிட்டன.

கரண் ஜோஹர்: அற்புதம்.

சத்குரு: என் வயதால் அப்படி நடந்திருக்கலாம். (இருவரும் சிரிக்கிறார்கள்)

கரண் ஜோஹர்: அப்படித்தான் இருந்திருக்கும். நீங்கள் ரசித்து செய்யும் விஷயம், அதைச் செய்ய அதிகம் நேரமிருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் விஷயம்?

சத்குரு: அதிக நேரமிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. என்னை நானே எப்படி உருவாக்கிக்கொண்டேன் என்றால், நான் ரசிக்காதது எதுவுமில்லை. நான் செய்வதனைத்தையும் நான் ரசிக்கும் விதமாக என்னை செய்துகொண்டேன். சாதாரண விஷயங்கள் உட்பட, அமைதியாக உட்காருவது, யாருடனாவது பேசுவது, இப்படி எதை செய்தாலும் ரசித்து செய்வேன். ஏனென்றால் என் செயல் ஒரு குறிப்பிட்ட துறைக்கு உட்பட்டது கிடையாது, பல செயல்களில் ஈடுபடுகிறேன். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும், நீங்கள் செய்யாத செயல்கள் அனைத்தையும் ரசிக்காவிட்டால், பல விஷயங்களை நிர்வகிக்க முயல்வதில் நீங்கள் பைத்தியமாகி விடுவீர்கள். ஆனால் நான் பைத்தியமாக மாட்டேன், ஏனென்றால் நான் உயிருடன் இருப்பதையே ரசிக்கிறேன். எந்த செயலும் எனக்கு விருப்பமானதுதான். நான் செய்வதனைத்தையும் நான் ரசிக்கிறேன். சின்ன விஷயங்கள், பெரிய விஷயங்கள், எல்லா விதமான விஷயங்களையும் ரசிக்கிறேன். ஆழமான விஷயங்களையும் சிறுபிள்ளைத்தனமான விஷயங்களையும் நான் முழுமையாக ரசிக்கிறேன். (இருவரும் சிரிக்கிறார்கள்)

கரண் ஜோஹர்: நாங்கள் அனைவரும் அப்படித்தான் ரசிக்கவேண்டும். கடைசியாக உங்கள் கதையை திரைப்படமாக வடித்தால், அதில் உங்கள் பாத்திரத்தில் யார் நடிக்கவேண்டும்?

சத்குரு: முதலில் என் கதையை யார் திரைப்படமாக எடுக்கப்போகிறார்கள்?

கரண் ஜோஹர்: இல்லை, ஆர்வமுடையவர்கள் நிறையபேர் இருப்பார்கள்.

சத்குரு: நீங்கள் அனிமேஷன் படமாக எடுக்கவேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

கரண் ஜோஹர்: நீங்கள் அப்படி விரும்புவீர்கள் என்று தோன்றவில்லை. சரி, இத்துடன் rapid fire ரவுண்டு முடிவடைந்துவிட்டது. இது முடிந்ததும் வாடிக்கையாக நான் தரும் பரிசுப்பொருளுக்கு நீங்கள் எல்லாவிதங்களிலும் தகுதியாகிவிட்டீர்கள். ஆனால் இந்த மேடையில் பரிசுப்பொருள் இல்லை. ஆனால் என் அன்பும் நன்றியும் ஆழமான மரியாதையும் நிறைந்த ஒரு கற்பனையான பரிசை நான் உங்களுக்குத் தருகிறேன்.

 

Love & Grace