அமெரிக்க ஈஷாவில் பூமிதின கொண்டாட்டங்கள்

கடந்த ஒரு மாதமாக நம் அமெரிக்க மையத்தில் வகுப்புகளிலும் கருத்தரங்கங்களிலும் பங்கேற்று வரும் சத்குரு, சமீபத்தில் அங்கு நடந்த பூமி தின கொண்டாட்டங்களைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அது மட்டுமல்லாமல் அத்தினத்தன்று அங்கு பிரபல வானொலி பத்திரிக்கையாளருடன் ஏற்பட்ட உரையாடலையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். படித்து மகிழுங்கள்!

இதோ அமெரிக்க ஈஷா யோகா மையத்தில் வெடித்தெழுந்திருக்கும் இந்த வசந்தகாலம், "பூமி நாள்" கொண்டாட்டங்களுக்கு சிறந்த சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளது. நம் மையம் 1300 ஏக்கரில், செங்குத்துப் பாறைகளுக்கு இடையில், கர்ஜிக்கும் நீரூற்றோடு, கால்களுக்கு சவால் விடும் நிலஅமைப்புடையதாகவும் அமைந்திருக்கிறது. இங்கு அருகாமையில் இருக்கும் மக்களும் இதன் அழகினை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில், நடப்பதற்கான தடங்களையும், மவுன்டன் பைக்கிங் (mountain biking) எனப்படும் மலைகளில் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான வசதிகளையும் இந்த பேரற்புதமான பீடபூமியில் செய்து வருகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த கிரகத்திற்கு மனிதகுலம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாரத்தைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளே "பூமி நாள்". நம் உடலின் சாராம்சமாகவும் நாம் வாழும் இடமாகவும் இருக்கிற இந்த தன்னிகரில்லா பூமி முன்னெப்போதும் இல்லாத வகையில் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதனை நாம் உருவாக்கியதே சந்தோஷத்தையும் நல்வாழ்வையும் நோக்கி நாம் மேற்கொண்ட பயணத்தில்தான். மனித ஆரோக்கியமும் நல்வாழ்வும் சந்தோஷமும் உள்ளிருந்தே தோன்றுகின்றன என்பதை மனிதர்களாகிய நாம் புரிந்துகொண்டு, கற்றுக் கொள்ளாவிட்டால், "வெட்டிக் கொண்டிருக்கும் கிளை நுனியிலேயே அமர்ந்து கொண்டு மரத்தை வெட்டுவான்" என்று நாடறிந்த ஒரு கதை சொல்லி வருகிறோமே அதைப் போலவே மனிதன் எதை நல்வாழ்வு என்று அழைக்கிறானோ அதுவே அவனது முடிவுக்கு வழி வகுக்கும்.

இவ்வருட பூமி நாள் கொண்டாட்டங்களில், அமெரிக்காவின் பிரபல வானொலி பத்திரிக்கையாளர் திரு. பில் ஜெக்மன் அவர்கள் என்னுடன் கொண்ட கலந்துரையாடலின் தொகுப்பு முத்தாய்ப்பாய் அமைந்தது. நீங்கள் அனைவரும் உங்கள் உயிரின் பரவசத்தை உணர்வீர்களாக, அது நிச்சயம் உங்களை இந்தப் பூமியின் மேல் மென்மையாக கால்பதிக்க அனுமதிக்கும்.

Love & Grace

Question: சத்குரு, நாம் பூமிக்கும் சுற்றுச்சூழலுக்கும் மரியாதை செலுத்தும் ஒரு நாள் - பூமி தினம். அமெரிக்காவிலும் உலகின் பிற தேசங்களிலும் இயற்கை சார்ந்த சுற்றுசூழலைக் காப்பதைப் பற்றியும் வளத்தை விவேகத்துடன் பயன்படுத்துவது குறித்தும் அரசியல் ரீதியாக, கருத்து ரீதியாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது எதனால் என்று கூறுகிறீர்களா?

சத்குரு:

இதற்கு கலாச்சார, வரலாறு சார்ந்த பின்னணி இருக்கலாம். சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவிலிருந்து மக்கள் இங்கு தரையிறங்கியபோது இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் தன் சொந்த பூமியுடன் கொண்டிருந்த உறவுபோல் அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அவர்கள் இங்கு வந்தபோது, நிலத்தை வசப்படுத்த மட்டுமே அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது, அதனுடன் கைக்கோர்த்துக் கொள்ளவல்ல. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாய் இங்கு வந்தனர். நாம் இன்னும் அந்தவொரு மனநிலையிலிருந்து வெளி வரவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஆட்சேபம் தெரிவித்து சிவப்புக் கொடிகள் ஏற்றப்பட்டாலும், கண் பார்வையில்லாத ஒரு மனிதரால் காணக்கூடிய அளவிற்கு இங்கு விஷயங்கள் நடந்தேறிவிட்டாலும், வசப்படுத்தி ஆட்சி செய்வதில்தான் வெற்றி உள்ளது என்று நாம் நினைக்கிறோம். அவர்கள் நிலத்தை "அழித்துவிட்டோம்" என்றே சொல்கின்றனர். அதனால், நிலத்தை அழிப்பதிலிருந்து, நிலத்தை வசப்படுத்துவதிலிருந்து வெளியேறி, நாம் தோன்றிய நாள் முதலே நாம் இந்த நிலத்தின் ஒரு பாகம்தான் என்பதை உணர்ந்து, அதனுடன் கைக்கோர்த்திடும் நிலை வேண்டும்.

Question:
"தொடர் பரிமாற்றம்" என்றொரு வார்த்தையை நீங்கள் பிரயோகிப்பீர்கள். நாம் வெளிமூச்சு விடும்போது கரியமில வாயுவை வெளிவிடுகிறோம், மரங்கள் அவற்றை உள்ளெடுத்துக் கொண்டு நமக்கு உதவி செய்யும்விதமாக பிராண வாயுவை உமிழ்கிறது. அமெரிக்க சமூகம், இயற்கைக்கு உகந்த வகையில் இருக்க வேண்டும் என்கிற கவனத்தோடு வாழ்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சத்குரு:

இது மெல்ல நிகழத் தொடங்கியிருக்கிறது. ஆனால் எத்தனை துரிதமாக நிகழ வேண்டுமா, எத்தனை பெரிய அளவில் நிகழ வேண்டுமோ அப்படி நடைபெறவில்லை. நிகழவேயில்லை என்றும் நாம் சொல்லிவிட முடியாது, நிச்சயமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த தலைமுறையிலேயே மாற்றத்தை தோற்றுவிக்கும் படியான வேகத்தில் நாம் செயல்படவில்லை. மறுசுழற்சி, மறுபயனீடு, குறிப்பிட்ட விதமான வாகனத்தில் பயணம் செய்வது இவையெல்லாம் மனித சமூகத்திடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நல்ல வழிகள்தான் ஆனால் இவை சிறந்த தீர்வுகள் அல்ல. இவையே தீர்வுகளும் அல்ல. இந்த முயற்சிகள் யாவும் மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகத்தான். ஒரு விளக்கை அணைப்பதோ, மரத்தை நடுவதோ இதற்கு தீர்வாகாது, இவற்றைச் செய்வதன் மூலம் நாம் சீரழிவைத் தள்ளிப் போட மட்டுமே செய்கிறோம்.