சண்டை சச்சரவுகள் சாதாரணமாக நிகழும் இன்றைய காலகட்டத்தில், "உலகை சரிசமமானதாக, நல்லிணக்கம் மிக்கதாக அமைதியானதாக எப்படி மாற்றுவது?" என்ற கேள்விக்கு இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பதிலளிக்கிறார் சத்குரு. "உங்கள் மனதில்கூட இணக்கமில்லாதபோது, உலகில் இணக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?" எனும் கேள்வி, உண்மை நோக்கி நம்மை உந்தித்தள்ளுகிறது.

சமீபத்தில் நான் உலக வங்கியில் உரையாற்றியபோது, "உலகை சரி சமமானதாக, நல்லிணக்கம் மிக்கதாக, அமைதியனதாக மாற்றிட நாம் என்ன செய்யமுடியும்?" என்று என்னிடம் ஒருவர் கேட்டார். நான் அவர்களுக்கு அடிப்படையான ஒன்றை எடுத்துச் சொன்னேன், அதற்கு இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினேன்.

என் மகள் வளரும் பருவத்தில் இருந்தபோது, எவரும் அவளுக்கு எதையும் கற்றுக்கொடுக்கக் கூடாது என்பதை ஒரு விதிமுறை ஆக்கினேன். உலகில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று இதுதான்: நீங்கள் பிறக்கும் அந்தக் கணமே, அனைவருமே அவர்களுடைய வாழ்க்கையில் வேலை செய்யாத ஒன்றை உங்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார்கள். என் மகளுக்கு இந்த தந்திரங்கள் எதுவும் தேவைப்படவில்லை.

இயற்கைக்கும் சுற்றியுள்ள உயிர்களுக்கும் அவள் போதுமான அளவு பரிச்சயப்படுத்தப்படும் சூழலை மட்டும் நான் உறுதிசெய்தேன். அவள் ஆனந்தமாக வளர்ந்தாள். ஆனால், அவளுக்கு 13 வயது ஆனபோது, உணர்ச்சிரீதியாக சற்று கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை சந்தித்தாள். அந்தச் சூழ்நிலையில் அவளுக்கு நான் ஒன்று சொன்னேன், "ஒருபோதும் எவரையும் உயர்வாக வைத்தும் பார்க்காதே-எவரையும் தாழ்வாகக் கருதியும் பார்க்காதே. ஒருபோதும் எதையும் உயர்வாகவும் பார்க்கவேண்டாம்-எதையும் தாழ்வாகவும் பார்க்க வேண்டாம். ஒவ்வொன்றையும் அது இருக்கும்படியே பார்." ஒரு அழகான வாழ்கையை அமைத்துக்கொள்ள இவ்வளவுதான் தேவைப்படுகிறது.

ஏதோ ஒன்றை நீங்கள் உயர்வாகப் பார்க்கும்போது, அதிகாரத்தை நீங்கள் உண்மை ஆக்குகிறீர்கள். அப்படிச் செய்தால், உண்மை ஒருபோதும் உங்கள் வாழ்க்கையின் அதிகாரமாக இருக்கமுடியாது. உண்மை உங்கள் வாழ்க்கையில் அதிகாரமாக இல்லையென்றால், நீங்கள் ஒருபோதும் வாழ்க்கையை உணரமாட்டீர்கள். ஏதோ ஒன்றை உயர்வாகப் பார்க்கும்போது, வேறு ஒன்றைத் தாழ்வாகப் பார்ப்பதை உங்களால் தவிர்க்க முடியாது. ஏதோவொன்றை நீங்கள் உயர்வாகவோ தாழ்வாகவோ பார்ப்பதை நிறுத்தும் அந்தக் கணமே, உங்களுக்கு சொர்க்கமும் நரகமும் இல்லாமல் போய்விடும். நீங்கள் வேறு ஏதோவொரு இடத்திற்குப் போகப் போகிறீர்கள் என்று நினைக்கும்வரை, எல்லாவிதமான முட்டாள்தனங்களையும் இங்கு செய்கிறீர்கள். நீங்கள் இந்த பூமியில்தான் வாழவேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால், புத்தியுடன் வாழ்வீர்கள்.

இணக்கத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், எவ்வளவு மனிதர்களால், உங்களில் எவ்வளவு பேரால், நேர்மையாகப் பார்த்து, நீங்கள் சும்மா உட்கார்ந்தால் உங்களுக்குள் உண்மையாகவே ஏதோவொரு இணக்கத்தை உணர்கிறீர்கள் என்று சொல்லமுடியும்?

தனிமனிதர்களுக்குள் நிகழ்வதன் பிரதிபலிப்பே இந்த உலகம். உலகில் மிகைப்படுத்தப்படுவதால் அசிங்கமாகத் தெரிகிறது. ஆனால், சிறிய அளவில் தனிமனிதரிடம் பார்க்கும்போதும் இது அசிங்கமானதுதான். என்னிடம் மனிதர்கள் அடிக்கடி அவர்களுடைய கணவன், மனைவி, மாமியார், அல்லது வேறு யாரையாவது பற்றி குறை கூறுவார்கள். நான் அவர்களிடம், "யோகா மையத்திற்கு வந்து தங்குங்கள். அவர்கள் அனைவரிடம் இருந்தும் விலகியிருப்பீர்கள். ஆனால், ஒன்றே ஒன்று, உங்களை முன்னறிவிப்பின்றி அவ்வப்போது பரிசோதித்துப் பார்ப்போம். அப்படிப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் ஆனந்தமாக இருக்கவேண்டும். துயரத்திற்குத் தீனி போடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை," என்று சொல்வேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனிதர்கள் தனியாக இருக்கும்போது எவ்வளவு விதமாக தங்களை குழப்பிக்கொண்டு முடிச்சுகள் போட்டுக் கொள்கிறார்கள் என்று சற்று கவனித்துப் பார்க்கவேண்டும். உங்களுக்கு நீங்கள் மட்டுமே துணையாய், தனிமையில் இருக்கும் நேரத்தில் வேதனைப்பட்டால், மோசமான சேர்க்கையில் இருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்!

உங்கள் மனதிற்குள்ளேயே இணக்கத்தை உங்களால் கொண்டுவர முடியாவிட்டால், உலகில் இணக்கம் ஏற்படுத்திவிட முடியுமா என்ன? உங்களை உங்களால் கையாள முடியாதபோது, உலகை எப்படி நல்லவிதத்தில் திறம்படக் கையாள முடியும்? தனிமனிதர்கள் தங்கள்மீது வேலை செய்யாதவரை, உண்மையில் இதற்குத் தீர்வு கிடையாது.

உலகமயமான தீர்வு என்று எதுவும் கிடையாது. தனிமனிதர்களின் விடுதலைதான் உலகத்தின் விடுதலைக்கு வழிவகுக்கும். நீங்களும் நானும் அற்புதமாக இருக்கும்போது, உலகம் அற்புதமாக இருக்கும். உலகம் என்பது வெறும் வார்த்தை. நீங்களும் நானும்தான் நிஜம். நீங்களும் நானும் நம்மை நாமே சரிசெய்து கொள்ளாவிடில், உலகை சரிசெய்ய விரும்புவது நிஜத்துடன் தொடர்பில்லாத பகட்டு கோஷமாகிவிடும்.

ஒரு காலத்தில், உலக அமைதி மாநாடுகளில் உண்மையாகவே ஏதாவது நிகழ்த்துவார்கள் என்று நினைத்து அதில் பங்கேற்க விழைந்தேன். அப்படி ஒரு மாநாட்டில், நோபல் பரிசு பெற்ற 43 பேர் இருந்த அந்த "அமைதிக் குழு"வைப் பார்த்தேன். அவர்கள் முகத்தைப் பார்த்தபோதே, இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கணம் கூட அமைதியை உணர்ந்ததில்லை என்பதை உணர்ந்தேன்.

"நீங்கள் தூங்கும் நேரத்தைத் தவிர..."-சிலர் உண்மையில் தூங்கிக்கொண்டு இருந்தார்கள், - "நீங்கள் உங்களுக்குள் உண்மையாகவே அமைதியை உணர்ந்துள்ளீர்களா?" என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் "இல்லை" என்று சொல்லும் அளவிற்கு நேர்மையாக இருந்தார்கள். அப்படியானால் உலக அமைதியைப் பற்றிப் பேசுவதில் ஏது அர்த்தம்!

பிரச்சனை மனதில் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் மிகவும் அற்புதமான பொக்கிஷம் நம் மனம், ஆனால் அதை நீங்கள் சாபமாக மாற்றிவிட்டீர்கள். உங்களுக்கு ஒரு சூப்பர் கம்ப்யூட்டரைக் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் அதை பயன்படுத்தும் குறிப்புகள் கொண்ட கையேட்டை நீங்கள் படித்ததில்லை. உங்களை நீங்களே எப்படிக் கையாளுவது என்பதில் நீங்கள் கவனம் செலுத்தியதில்லை.

மூளையின் திறனும், புத்தியும், பரிணாம வளர்ச்சியில் இன்று இருக்கும் நிலைக்கு வருவதற்குப் பலகோடி வருடங்கள் எடுத்துள்ளது. ஆனால், உங்கள் புத்தியாலே இன்று வேதனைப்படுகிறீர்கள். உங்கள் மூளையில் பாதியை எடுத்துவிட்டால், உங்களில் பெரும்பாலானோர் அமைதியாக, எல்லாவற்றுடனும் இணக்கமாக இருப்பீர்கள். உங்களிடம் இருக்கும் சிறந்ததை மிக மோசமான ஒன்றாக நீங்கள் மாற்றிவிட்டீர்கள், ஏனென்றால் நவீன கல்விமுறைகள், குடும்ப அமைப்புகள், மற்றும் கலாச்சாரங்களுக்கு, ஒருவர் தன்னை எப்படிக் கையாளவேண்டும் என்பது குறித்த புரிதல் துளிகூட இல்லை. நீங்களும் நானும் அமைதியாக இருந்தால் உலகம் அமைதியாக இருக்கும். நீங்களும் நானும் ஆனந்தமாக இருந்தால் உலகம் ஆனந்தமாக இருக்கும்.

இதனை நாம் நிகழச் செய்வோம்.

Love & Grace