நமது அன்பிற்குப் பாத்திரமான அமெரிக்கா மீண்டும் ஒருமுறை அதிபர் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. ஒரு நாடு சரியாகக் கட்டமைக்கப்பட வேண்டுமென்றால், ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டுமென்றால், அந்த நாடு தேர்தல் பிரச்சாரம் என்னும் வேதனையை எதிர்கொண்டே ஆக வேண்டும் - ஜனநாயகத்தின் விளைவு இது.

ஒரு மிகப் பெரிய நாட்டின் உருவாக்கத்துக்கான மிகச் சிறந்த உதாரணமாக அமெரிக்கா திகழ்கிறது. அதற்கு ஒரு இருட்டான பக்கம் இருக்கிறது என்றாலும், நன்மை, தீமைகளை எடை போட்டுப் பார்த்தால், அதிர்ஷ்டவசமாக இந்த சிறப்பான நாட்டின் ஆக்கப்பூர்வமான தன்மைகள், அதன் எதிர்மறையான விஷயங்களை மறக்கடித்து விடுகின்றன.

எந்த ஒரு மதிப்புமிக்க, பிரமாண்டமான விஷயமும் கடுமையான, இரக்கமற்ற செயல்பாடுகள் உதவியுடன்தான் உருவாகிறது. துரதிருஷ்டவசமாக, மனித இனம் இப்போதிருக்கும் விழிப்புணர்வு நிலையில், இப்படித்தான் எதையுமே செய்ய முடியும்.

எதிர்காலத்தில் ஒரு நாட்டையே அன்பாலும், மகிழ்ச்சியாலும் கட்டமைக்க வேண்டும் என்கிற நோக்கம் நமக்கிருந்தால், மனித விழிப்புணர்வை பெரிய அளவில் தட்டி எழுப்பும் பிரமாண்டமான பணியினை நாம் செய்தாக வேண்டும்.

இந்தியா என்னும் தேசத்தின் பிறப்பு, பெரும்பாலும் அமைதியான முறையிலேயேதான் நடந்தது. அதற்கு நாம் மகாத்மா காந்தி என்னும் அரசியல் சாணக்கியருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால் சுதந்திர இந்தியா பிறந்தவுடன், மிகப் பெரிய வன்முறை வெடித்து, நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த அந்த அமைதியின் தூதுவர் கொலை செய்யப்படுவதில் போய் முடிந்தது. இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த மனக் கொந்தளிப்பு, இன்னமும் இரு நாடுகளுக்கிடையே, அவ்வப்போது போர்கள் மற்றும் கலகங்களாக வெளிப்பட்டு வருகிறது.

மனித இன வரலாற்றின் சக்கரங்கள் எப்போதுமே மனித இரத்தத்தைக் குடித்தே நகர்கிறது. எதிர்காலத்தையாவது நாம் மாற்றியமைக்க முடியுமா என்கிற பெரிய கேள்வி நம் முகத்துக்கு நேராகத் தொக்கி நிற்கிறது.

இதுவரை அமெரிக்காவில் நடைபெற்ற இன்னர் இன்ஜினியரிங் வகுப்புகளிலேயே மிகப் பெரிதான, 964 பேர் பங்கேற்ற வகுப்பை ஹுஸ்டன் நகரில் நிறைவு செய்துவிட்டு, ஒரே நாளில் ஆயிரம் மைல்கள் நீண்ட, நெடிய பயணம் செய்து இப்போதுதான் அமெரிக்க யோக மையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.

ஹுஸ்டன் வகுப்பு அற்புதமான பங்கேற்பாளர்களுடனும், அபாரமான ஏற்பாடுகளுடனும் நடந்து முடிந்தது. அங்கிருக்கும் நம்முடைய ஆசிரியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் கடந்த இரண்டு மாத காலமாக அயராது பணியாற்றி வந்தார்கள்.

தன்னை உணர்வதற்கான அமைதிப் புரட்சியை உருவாக்கும் தீவிர நோக்குடன்தான் இது போன்ற மெகா வகுப்புகளை நடத்துகிறோம். அனைத்தையும் உள்ளடக்கிய விழிப்புணர்வு இல்லாவிட்டால், தற்போது நம் கைகளில் இருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள் காரணமாக, நம்மை நாமே ஒரு சூப்பர்மேனாக நினைத்துக் கொள்ளும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

நூறு வருடங்களுக்கு முன்னால் ஆயிரம் மனிதர்கள் சேர்ந்தும் செய்ய முடியாத செயலை, இன்று ஒரே ஒரு மனிதர் எளிதாக செய்து முடித்துவிடுகிறார். இப்படிப்பட்ட ஒரு நிலையில், மனிதர்கள் அவர்களது இச்சைகளுக்கு அடிமையாகி செயல்படாமல் இருக்க வேண்டிய மிக அவசரமான சூழல் உருவாகியுள்ளது.

மனித விழிப்புணர்வை உயர்த்துவதுதான் தற்போது இந்த உலகத்தில் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இனியும் தாமதிக்காமல் அதை உடனே செய்தாக வேண்டும்.

அடுத்த வருடம் அமெரிக்க ஈஷா யோகா மையம் அதிவேகமாக பயணிக்கப் போகிறது - தயாராகுங்கள்.

 

Love & Grace