உத்தராயணம் முடிந்து தட்சிணாயணம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், நம் அடிப்படைத் தன்மையை எப்படி நிலைநிறுத்திக்கொள்வது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் சொல்கிறார் சத்குரு...

யோகக் கலாச்சாரத்தில் வருடத்தின் இந்த பாதி கைவல்ய பாதை என்று அழைக்கப்படுகிறது. அதாவது அறுவடை செய்யும் காலம் என்று பொருள். தட்சிணாயணம் (ஜூன் 21) முதல் உத்தராயணம் (டிசம்பர் 22) வரை சாதனா பாதை என்று அழைக்கப்படுகிறது. இது வேலை செய்யும் காலம். உதாரணமாக உங்கள் இடத்தில் ஒரு மாமரம் இருந்தால், இது அறுவடை செய்யும் காலம். அது போல ஒரு சாதகர் தன் ஆன்மீக பயிற்சிகளின் பலனை அறுவடை செய்யும் காலம் இது. மேலும் முன்னேறுவதற்கு அதை வைத்து ஒரு அடித்தளம் அமைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பயிற்சி செய்ய துவங்கும் பொழுது விட்ட இடத்தில் இருந்து துவங்குகிறோம். பழைய செயலையே மீண்டும் செய்ய வேண்டியதில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முப்பது வருடங்களாக கணவன் மனைவியாக இருக்கும் ஒரு தம்பதி சமீபத்தில் என்னைக் காண வந்திருந்தார்கள். சரியான முடிவுதான் எடுத்தோமா என்ற சந்தேகம் இன்னும் அவர்கள் இருவருக்கும் உள்ளது. இது போன்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். உங்கள் வாழ்நாள் 1000 வருடங்கள் இருந்தால், 30 வருடங்கள் பரிசோதனையில் செலவழித்து சரியா தவறா என்று முடிவுக்கு வரலாம். ஆனால் வாழ்க்கை 60 அல்லது 70 வருடங்கள்தான். அதைத் தாண்டி சிறிது காலம் நீங்கள் இருக்கக் கூடும். ஆனால் இந்த 60, 70 வருடங்கள் தான் கணக்கில் வரும். இதில் 30 வருடங்கள் பரிசோதனை என்பது நிச்சயம் சரி இல்லை. காலம் அல்லது நேரம் என்பவை உங்கள் வாழ்க்கையில் ஒரு பாதி மட்டும்தான். வாழ்க்கையின் இன்னொரு பாதி சக்தி. சக்தியை நீங்கள் சேமித்து வைக்கலாம் ஆனால் காலம், காலடியில் நழுவிக் கொண்டே இருக்கிறது.

சூரியனின் பாதை மாற்றத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் அனைவரும் உங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். "ஒரு வருடம் முன்பு நான் எப்படி இருந்தேன், இன்று எப்படி இருக்கிறேன், என்ன என்ன படி எடுத்திருக்கிறேன்? என் புரிதல், வாழ்க்கை பற்றிய என் அறிவு, என் சக்தி இவற்றில் இப்போதிருப்பதை விட கீழிறங்க மாட்டேன், இன்று முதல் இதுதான் இதுவே எனது அடித்தளம், நான் ஒரு வருடம் முன்பு இருந்தது போல் அல்ல".

எல்லையற்ற வெளியில் எந்த விதமான பிரிவுகளும் இல்லை. ஆனால் உங்கள் மனதில் இருக்கிறது. நீங்கள் அழிவற்ற தன்மையோடு வேலை செய்யவில்லை. உங்கள் உடலோடும், மனதோடும் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த இரண்டிலும் நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள எல்லை கோடுகள் வரைய வேண்டும். இல்லையென்றால் முன்னே போகிறீர்களா அல்லது பின்னே போய்க் கொண்டிருக்கிறீர்களா என்பது தெரியாது. இது ஏதோ உங்களை பாதுகாப்பது என்று இல்லை. உங்களை நீங்கள் பாதுகாக்க முடியாது. இறந்தவர்களை கெடாமல் பேணலாம், ஆனால் உயிரை பாதுகாக்க முடியாது. உயிரை, எவ்வளவு தீவிரமாக முடியுமோ அவ்வளவு தீவிரமாக செலவழிக்க வேண்டும். உயிரை பாதுகாக்க நினைத்தால் வாழ்கையில் இருந்து விலகிப் போய் விடுவீர்கள். வெடித்து சிதறும்படி தீவிரமாக செலவு செய்வதே ஒரே வழி. பாதுகாப்பது இறந்தவர்களுக்கானது.

சங்கரன்பிள்ளை அவரது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் மிகுந்த குடிகாரராக இருந்தார். ஆனால் பெருந்தன்மையானவர். அதனால் தனது உறுப்புகளை ஆராய்ச்சிக்காக தானம் செய்திருந்தார். ஆனாலும் நாள் முழுக்க குடித்துக் கொண்டே இருப்பார். குடியை கொஞ்ச நாளாவது நிறுத்தக் கூடாதா என்று யாரோ கேட்டதற்கு, "இல்லை, இல்லை, எனக்கு ஒரு புனிதமான கடமை இருக்கிறது, என் உறுப்புகளை எல்லாம் அறிவியல் ஆராய்ச்சிக்கு தானம் செய்திருக்கிறேன். அதனால் அவற்றை ஆல்கஹாலில் ஊற வைத்து கெடாமல் பாதுகாக்க வேண்டும்" என்றார்.

உங்கள் உள்ளுணர்வு, தன்னை எப்படி காத்துக் கொள்வது என்பதிலேயே எப்பொழுதும் கவனமாக இருக்கிறது. உயிரை பாதுகாக்க முடியாது. இந்த உயிர், பலவீனமாக மடிந்து போகாமல், சுடர்விட்டு எரிய வேண்டும். பாதுகாத்துக் கொள்ள முனைப்பாக இருப்பவர்கள், உயிரோடு இருக்கும் பொழுதே இறந்து போவார்கள். ஆனால், மரணம் நெருங்கும் தருவாயில், வாழவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். கைவல்ய பாதை என்பது ஆறு மாத காலம் சாதனா செய்து, சாதனா இப்பொழுது சுடர்விட்டெரிய தயார்நிலையில் உள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் இந்த நிலையை இன்னும் திடப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த நிலையிலிருந்து இனி எப்போதும் கீழே இறங்கிவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக தீர்மானம் செய்வதில்லை, அதிக சாதனா செய்ய வேண்டும். நான் கீழே போகமாட்டேன் என்று வெறுமனே சொல்லிக் கொள்வது பலன் தராது. பலூனில் தேவையான ஹைட்ரஜன் வாயு இருந்தால் அது எப்படியும் கீழே வராது. எனவே கீழே வராமல் இருக்க தீர்மானங்கள் தேவையில்லை. அப்படி அது பலன் தராது. தேவையான காற்றை நிரப்பினால் பறக்கப் போகிறது. ஒருவரின் சுயத்தை பொறுத்தவரை இதே விதிதான். இதில் (தன்னை சுட்டிக்காட்டுகிறார்) தேவையான சக்தியை உள்ளே நிறைத்தால் இது கீழே போகாது. உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்தால் அது கீழே இறங்காது.

Love & Grace