யோகா செய்ய சோம்பல் வருவதேன்?
‘இன்று போய் நாளை வா!’ என போர்க்களத்தில் இராமன் இராவணனிடம் சொன்னதாக கம்பர் சொல்கிறார். நம்மில் பலர் யோகா கற்றிருந்தும், பயிற்சியைத் தொடராமல் யோகாவை நாளைக்கு வரச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்! சத்குரு இந்த சோம்பல் மனநிலை பற்றி சொல்லும்போது...
 
 

உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் சிலர் யோகா கற்க வருகிறார்கள். சிலர் காலையில் வாக் போக முனைகிறார்கள். சிலர் வேறு உடற்பயிற்சிகள் பற்றிக் கேட்டு அறிகிறார்கள்.

ஆனால், கற்றுக்கொண்டதைத் தவறாமல் செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை. அவர்களைக் கேளுங்களேன். ‘இன்றைக்குக் களைப்பாக இருக்கிறது, நாளையிலிருந்து நான் தவறாமல் செய்கிறேன் என்று சொல்வார்கள். உண்மையில் நாளைக்கு இவர்கள் வாக் போவார்களா? உடற்பயிற்சி செய்வார்களா? வாய்ப்பே இல்லை.

நீங்கள் விரும்பியதைச் செய்யாமல் சோம்பி உட்கார்ந்திருந்தால், ‘அதென்ன சோம்பலாய் உட்கார்ந்திருக்கிறாய்? எழுந்திரு..’ என்று உங்கள் மனமே குற்ற உணர்ச்சியில் உங்களை அதட்டும். பொறுப்பில்லாமல் இருக்கிறேன்’ என்று ஒத்துக்கொள்ள உங்கள் அகங்காரம் ஒருபோதும் இடம் கொடுக்காது. நான் ஒன்றும் சோம்பேறி இல்லை. நாளைக்கு ஆரம்பிப்பதாக இருக்கிறேன்’ என்று அகங்காரம் மனதைச் சமாதானம் செய்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

கர்நாடகத்தில் சில கிராமங்களில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. சூரியன் அஸ்தமித்த பிறகு அந்தப் பகுதியில் இருக்கும் பேய்களும், பிசாசுகளும் வீடுகளுக்குள் நுழையப் பார்க்குமாம். இந்தப் பேய்களை விரட்டியடிக்கப் பார்த்தால், அவற்றுக்குக் கோபம் வந்து, படுமோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று அந்த மக்களுக்கு பயம். அதனால், அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். பேய்களுக்கு ரத்தச் சிகப்பு பிடிக்கும் என்பதால், அந்தச் சிகப்பு வண்ணத்தில் ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் ‘நாளைக்கு வா’ என்று எழுதி வைத்துவிட்டார்கள்.

கேட்டால், பேய்கள், பிசாசுகள் எப்போது வந்தாலும், வாசலிலேயே இந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் என்பார்கள்.

இன்று என்றாலோ, இப்போது என்றாலோ, அதை உடனே சந்திக்க வேண்டிய அவசியம் வருகிறது. எந்த தினத்திலும், நாளை’ என்பது வராத நாளாகத்தானே இருக்கிறது? உடல்நலத்தையும், வெற்றியையும், ஆனந்தத்தையும், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதையும் நாளைக்கு வா’ என்று சொன்னால், அவை சந்தோஷமாக ஒதுங்கிப் போய்விடும், எச்சரிக்கையாக இருங்கள். ‘நாளையிலிருந்து...’ என்பது மனதிற்குள் பேயாடுகிற மிக ஆழமான ஒரு தந்திரம். உங்கள் வாழ்க்கையில் பல கட்டங்களில் இந்த மாயத் தந்திரத்துக்கு நீங்களே இடம் கொடுத்துவிட்டீர்கள். செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பவர்களுக்கு, நாளைக்கு என்பதுதான் எப்போதுமே நல்ல நாள். நாளைக்கு என்று சொல்லிவிட்டால், பொறுப்பு முடிந்துவிட்டது. இப்படி அப்படி ஆரம்பித்து, வேலைகளை ஒத்திப் போடுவதுதான் தீர்வு என்று பாராளுமன்றம் வரை பழக்கமாகிவிட்டதுதான் வேதனை. ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். நாளை என்பதை நாம் சந்திக்கப் போவதேயில்லை. அது இன்று என்றாகும்போதுதான் எதிர்கொள்கிறோம். நாளை என்பது நம் வாழ்வில் உணர்வுப்பூர்வமாக வரப்போவதே இல்லை.

சங்கரன்பிள்ளை கார் மெக்கானிக்கிடம் சென்றார். “என் காரில் ஹாரன் இன்னும் ஓங்கி ஒலிக்கும்படி மாற்றித் தர முடியுமா?” என்று கேட்டார். “ஹாரன் ஒழுங்காக இருக்கிறதே? என்றார், மெக்கானிக். “பிரேக் பிடிக்கவில்லை. அதை ரிப்பேர் செய்வதைவிட, ஹாரன் ஒலியைக் கூட்ட  குறைவான கட்டணம்தானே ஆகும்? அதனால் கேட்டேன்” என்றார், சங்கரன்பிள்ளை. நாளைக்கு என்பது பிரேக்கை சரிசெய்ய வேண்டிய நேரத்தில் ஹாரனை ஒலித்து, ஆட்களை நகரச் சொல்வது போல்தான். விபத்தை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க நேரலாம். இந்த நிலையை எப்படி மாற்றுவது? வீட்டு வேலையானாலும் சரி, ஒரு தொழில் நடத்துவதானாலும் சரி, நம் ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சியானாலும் சரி.. அதற்குச் சாதகமான சூழ்நிலையை முதலில் உருவாக்க வேண்டும்.

இரவு பத்து மணிக்கு மேல் வயிறு அடைக்க தோசை சாப்பிட்டீர்கள். காலையில் ஆறு, ஏழு மணிக்கு யோகா செய்ய வேண்டும், வாக் போக வேண்டும் என்றால், உடல் எப்படி ஒத்துழைக்கும்? காலை நான்கு மணிக்கே விழிப்பு வருமளவு குறைவாகச் சாப்பிட்டுப் பாருங்கள். தானாக விழிப்பு வரும். யோகா பண்ணலாம், வாக் போகலாம் என்று உடல் சொல்லும். சில நாட்கள் தொடர்ந்து செய்தால், பலன் தெரியும். அதற்கப்புறம் உங்களுக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையிருக்காது. மனதில் ஓர் உறுதி, வெளியில் சரியான சூழ்நிலை இரண்டையும் உருவாக்கினால், ஆசைப்பட்டதைத் தள்ளிப் போடாமல் செய்து முடிக்கும் பலம் நமக்குத் தானாக வந்துவிடும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1