Question: நான் எப்போதும் மிகவும் ஆச்சரியப்படுவது என்னவென்றால், அந்தரத்தில் மிதத்தல், தண்ணீரில் நடப்பது போன்றவை. உண்மையில் யோகிகளால் இதைச் செய்ய முடியுமா? அல்லது இது கட்டுக்கதையா? அது எப்படி ஏற்படுகிறது என்று விளக்க முடியுமா? சத்குரு, உங்களால் அந்தரத்தில் மிதக்க முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

முடியும். ஈர்ப்பு சக்தியிலிருந்து படிப்படியாக விடுபடுவதற்கு சில வழிகள் உள்ளன. கிரியாக்கள் எனப்படும் செயல்முறைகள் இருக்கின்றன. அவற்றின் மூலமாக இது நிகழக்கூடும். இது சாத்தியம்தான் அல்லது உங்கள் குண்டலினி அதிக வலிவுடன் ஏறும்போது - நீங்கள் அந்தரத்தில் மிதக்க முடியாது என்றாலும் - உங்கள் உடல் தானாக மேலே எழும்பி கீழே இறங்குவதைப் பார்க்க முடியும். அந்தரத்திலேயே நிற்காது. மேலே போகும் கீழே இறங்கும், மீண்டும் மேலே போகும் கீழே இறங்கும். சிலர் சம்மணம் போட்ட நிலையில் ஒரே எட்டில் 50 முதல் 60 அடி நீளம் தாவிக் குதிப்பதை நானே பார்த்திருக்கிறேன்., ஒரே தடவையிலேயே அவ்வளவு தூரம் தாண்டி விடுவார்கள். ஒலிம்பிக் போட்டியில் நீளத்தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கின்ற தூரத்திற்கு உட்கார்ந்தபடியே தாண்டுபவர்கள் இருக்கிறார்கள். சிறிது முயற்சியுடன் உங்கள் சக்தி உயரும்போது, அது நிகழ்கிறது.

ஒலிம்பிக் போட்டியில் நீளத்தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கின்ற தூரத்திற்கு உட்கார்ந்தபடியே தாண்டுபவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மாயம்மா என்னும் பெண் ஞானியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எங்கிருந்து வந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் உருவத்தைப் பார்த்தால் நேபாளத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும். அவர் பேசுவதே இல்லை. தென் இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் வாழ்ந்தார். நாய்கள்தான் அவர் நண்பர்கள். தன்னுடன் நிறைய நாய்களை வைத்திருந்தார். நாய்களுடன் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தார் என்றால், அவைகளுக்காக ஓட்டல்களில் சாப்பாட்டைத் திருடிக் கொண்டு வருவார். சின்ன ஓட்டல்களில் வடை போன்ற பொருட்களை எங்கு வைப்பார்கள் என்று தெரியுமல்லவா? அவர் அவற்றைப் பறித்துக்கொண்டு வந்து நாய்களுக்குக் கொடுப்பார். பல முறை மக்களால் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். அவருடன் தவறாக நடந்து கொண்டிருக்கின்றனர். அவரை அடிப்பதுடன் அவர் மீது கற்களை எறிந்திருக்கின்றனர். ஏனென்றால் அவர் பலரிடமிருந்து சாப்பாட்டைப் பறித்து நாய்களுக்குக் கொடுத்து வந்தார். அவர் சில சமயம் கடல் அலைகள் மீது உட்கார்ந்து கொண்டு மிதந்து கொண்டிருப்பதை சிலர் பார்த்திருக்கின்றனர். பிறகு மக்கள் மெல்ல மெல்ல அவருக்குத் தொல்லை தருவதை நிறுத்திக் கொண்டனர். அவருடைய சாப்பாட்டைப் பாதுகாப்பதுடன் அவரைத் துன்புறுத்துவதையும் விட்டுவிட்டனர்.

புவி ஈர்ப்பு சக்தியிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. என்னால் செய்ய முடியுமா என்று கேட்கிறீர்கள். நான் இந்த பூமியின் மீது நடக்க விரும்புகிறேன். மிதக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ஹடயோகம் கற்றுத்தரும் பாதை மூலம் இத்தகைய வித்தைகளைச் செய்ய முடியும். இவை வாழ்க்கைக்கு முக்கியம் அல்ல. நீங்கள் ஒரு நாளில் சில நிமிடங்கள் அந்தரத்தில் மிதந்தாலோ அல்லது தண்ணீரில் மிதந்தாலோ அது எந்த வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றமுடியும்?

நான் இந்த பூமியின் மீது நடக்க விரும்புகிறேன். மிதக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

நம்முடைய முயற்சி எல்லாம் நீங்கள் இந்த பூமியில் ஒழுங்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான். வாழ்க்கையில் எது நடந்தாலும், எத்தகைய சிக்கலான நிகழ்வுகள் ஏற்பட்டாலும், புதிதாகப் பிறந்த குழந்தை போல் நீங்கள் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் பரவாயில்லை. எல்லாமே தவறாகப் போனாலும், ஒவ்வொரு நாளும் ஒரு நெருக்கடி என்றாலும் வாழ்க்கை உங்கள் மேல் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் நீங்கள் இருக்க வேண்டும். இதுவே ஒரு அற்புதம் ஆகும். நீங்கள் அனைவரும் இந்த அற்புதத்தை நிகழ்த்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். நீங்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட பிறந்தபோது எப்படி இருந்தீர்களோ அப்படியே இருந்தால் நீங்கள் பாராட்டத்தக்க அற்புதத்தை நிகழ்த்துகிறீர்கள் என்பேன். இதைச் செய்ய முடியும். அத்தகைய அற்புதத்தை மட்டுமே நாம் விரும்புகிறோம்.

வானத்தில் மிதப்பதும், தண்ணீரின் மீது நடப்பதும் - இவற்றை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் 3 நாட்களுக்கு தண்ணீர் மீது நடந்தால், அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் நீங்கள் தண்ணீர் மீது நடந்துகொண்டிருந்தால், யாரும் உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்கள் போய் சேர வேண்டிய இடத்திற்கு வேகமான படகில் போய் சேர்ந்து விடுவார்கள். உங்களுக்கும் ஒரு வேகமாகப் போகும் படகு கிடைக்காதா என்று பிறகு ஏங்குவீர்கள்.