யோகா வேலை செய்யுமா’ என்று சந்தேகமா?!

யோகா செய்தால் நன்மை விளையும் என்று சொல்லும்போது, மக்களுக்கு ஆர்வம் வருகிறது; கூடவே தயக்கங்களும் சந்தேகங்களும் சேர்ந்தே வருகின்றன. யோகாவிற்கு உத்தரவாதம் தரும்விதமாக சத்குரு சொல்லும் வார்த்தைகள் இங்கே!
 

"யோகாவினால் நன்மை கிடைக்கும் என்று உத்தரவாதம் தர முடியுமா?"

"பரிபூரணமாக!

யோகா என்பது தலைகீழாக நிற்பதோ, பல கோணங்களில் உடலை வளைப்பதோ அல்ல. அது யோகாசனம். அது யோகாவில் ஒரு சிறு பகுதி, அவ்வளவுதான்!

யோகா என்றால், வித்தியாசங்களைக் களைந்து, மற்றதுடன் ஐக்கியமாவது.

40 ஆயிரம் வருடங்களுக்கு மேலாகவே யோகப் பயிற்சி அளிக்கப்பட்டதற்கான சான்றுகள் நம்மிடம் இருக்கின்றன. நிச்சயமான வெற்றி இல்லாமலா பல்லாயிரம் வருடங்களாக யோகா தனக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்து இருக்க முடியும்!

சென்ற 100 தலைமுறைகளில் நாகரீகங்களும், கலாச்சாரங்களும், மொழிகளும் எத்தனையோ விதமாகப் புரண்டுவிட்டன. ஆனால், யோகா சற்றும் மதிப்பிழக்கவில்லை. முறையான யோகா ஒரு விஞ்ஞானம்!

பல்பு எப்படி வேலை செய்கிறது என்பதைப் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்ளாதவன் சுவிட்சைப் போட்டாலும் விளக்கு எரியும்.

யோகாவும் அதைப்போலத்தான். கல்வியோ, கல்லாமையோ அதற்குப் பொருட்டல்ல. குறிப்பிட்ட கலாச்சாரத்துக்கோ, ஒரு மதத்துக்கோ அது அடிமை அல்ல. எந்தவொரு குழுவையும் அது சார்ந்து இருக்கவில்லை. எந்த தெய்வ நம்பிக்கையும் அதற்குத் தேவையில்லை.

'ஈஷா'வில் யோகாவை அப்படித்தான் வழங்குகிறோம். எதனுடனும் தன்னைப் பிணைத்துக் கொள்ளாத காரணத்தாலேயே யோகா தனி மகத்துவம் கொண்டு இருக்கிறது.

நீங்கள் ஆணா, பெண்ணா... கறுப்பா... சிவப்பா... இந்தியனா, அமெரிக்கனா... என யோகா கவலைப்படுவதில்லை. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், முறையான யோகா மிகச் சரியாகவே வேலை செய்யும்.

உலக சரித்திரத்தில் அது தோற்றதே இல்லை. அது எண்ணற்றவர்களுக்கு வேலை செய்திருக்கிறது. எனக்கும் வேலை செய்திருக்கிறது. உங்களுக்கும் வேலை செய்யத் தவறாது! யோகா துணையிருந்தால், நீங்கள் விரும்பியதை விரும்பியபடி உருவாக்கிக் கொள்ள முடியும்.

இன்னும் என்ன யோசனை?

வாருங்கள், யோகாவின் அற்புதக் கதவுகள் அகலமாகத் திறந்து உங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றன!"

எல்லோரிடமும் ஒரே தெய்வீகம் குடிகொண்டிருக்கையில் எப்படி ஒருவரை விரும்பவும், இன்னொருவரை வெறுக்கவும் முடியும்?

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1