சத்குரு:

சாந்தியா காலம்

இந்தியாவில் "சாந்தியா" என்று சொன்னால், அதற்கு வழிபாடு என்றே அர்த்தம் கொள்ளப்படுகிறது. அதேபோல், "சாந்தியா வந்தனா" என்று சொன்னால், அது வழிபாட்டு நேரம் என்ற அளவிற்கு, நம் கலாச்சாரத்தோடு ஆழமாக ஒன்றிவிட்டது. காரணம், எவ்வித ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதாக இருந்தாலும், அதற்கு ஏற்ற நேரமாக இந்த நேரம் வழங்கப்பட்டது.

சாந்தியா என்றால், சூரிய உதயத்திற்கு 20 நிமிடம் முன்பும் பின்பும். உச்சி வேளைக்கு 20 நிமிடம் முன்பும் பின்பும், சூரிய அஸ்தமனத்திற்கு 20 நிமிடம் முன்பும் பின்பும், மற்றும் நள்ளிரவிற்கு 20 நிமிடம் முன்பும் பின்பும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஒரு நாளில் நான்கு சாந்தியா வேளைகள் வருகின்றன. ஒவ்வொன்றும் 40 நிமிடங்கள் கொண்டது. இந்த நேரத்தில் மூச்சில் மிக எளிதாக மாற்றம் கொண்டுவர முடியும். இவ்வுலகின் எந்த மூலையாக இருந்தாலும், ஆன்மீகப் பயிற்சிகள் என்றால் விடிகாலை, மாலை அல்லது நள்ளிரவு என்று வகுத்தனர். இந்நேரங்களில், தேவையான சமநிலையை அடைய இயற்கையே உங்களுக்கு உதவுகிறது.

பிரம்ம முகூர்த்தம்

ஆன்மீகத்தில் விரைந்து முன்னேற நீங்கள் விரும்பினால், யோகப் பயிற்சிகளை சூரியோதயத்திற்கு முன்னர் செய்யவேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது சிறந்தது. அதாவது, அதிகாலை 3.40 மணி. அந்நேரத்தில், இயற்கையில் குறிப்பிட்ட சில விஷயங்கள் நிகழ்வதால், ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் இயல்பாகவே விழிப்புணர்வு நிலையினை எட்டுவீர்கள். ஆசனாக்கள் செய்து, உங்கள் உயிரியலுக்கும், இந்த பூமியின் உயிரியலுக்கும் ஒத்திசைவு ஏற்படும்போது தினசரி காலை 3.20 முதல் 3.40 வரை இயல்பாகவே உங்களுக்கு விழிப்பு ஏற்படும்.

3.40 மணி என்பது யாரோ ஒருவர் கண்டுபிடித்த அல்லது வகுத்துக் கொடுத்த நேரமல்ல. நம் உடலமைப்பில் உள்ள ஏதோவொன்று இந்த பூமியுடன் தொடர்பில் உள்ளது, அது உங்களை விழிப்படையச் செய்கிறது.

உடல்தன்மையை தாண்டிய ஆன்மீகப் பரிமாணங்களை உணர நீங்கள் விரும்பினால், பிரம்ம முகூர்த்தம்தான் சிறந்த நேரம். வெறும் உடல் ஆரோக்கியத்திற்காக யோகாவை நாடுபவராய் நீங்கள் இருந்தால் சாந்தியா காலத்தில் பயிற்சி செய்யலாம்.