யோகா செய்தால் மனதைக் கட்டுப்படுத்த முடியுமா?

என் மனதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் யோகா வகுப்புக்கு வருகிறேன். என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத என் மனதை உங்களால் எப்படி கட்டுப்படுத்த இயலும்?
 

Question:என் மனதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் யோகா வகுப்புக்கு வருகிறேன். என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத என் மனதை உங்களால் எப்படி கட்டுப்படுத்த இயலும்?

சத்குரு:

நிச்சயமாக முடியும். நீங்கள் ஈஷா யோகா வகுப்புகளில் கலந்து கொண்டு அதில் கற்றுத் தரும் பயிற்சிகளை செய்து வந்தால், எந்தவித முயற்சியுமின்றி அமைதி, ஆனந்தம் என்பது உங்களுக்குள் இயல்பான ஒரு விஷயமாக மாறிவிடும். இப்படி ஆனபிறகு உங்கள் மனம் உங்கள் கையில். அதன் பிறகு அதை நீங்கள் விரும்பியவாறு இயக்கிக் கொள்ளல்லாம்.

உங்கள் அமைதி முற்றாகத் தொலைந்து போய்விட்டால் என்ன செய்கிறீர்கள்? வீட்டிற்குப் போய் எல்லோரையும் சத்தம் போடுகிறீர்கள்.

இதை இன்னும் ஆழமாக பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு குழந்தையாயிருந்தபோது அமைதியும், ஆனந்தமும் உங்கள் இயல்பாகவே இருந்தது. எப்போதும் ஆனந்தமாகவே இருப்பீர்கள்.

எப்போதாவது, யாராவது உங்கள் ஆனந்தத்தைக் கெடுப்பார்கள். ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.எப்போதும் வருத்தமாகவே இருக்கிறீர்கள். எப்போதாவது யாராவது உங்களை ஆனந்தப்படுத்த வேண்டி இருக்கிறது.

உங்கள் அமைதி முற்றாகத் தொலைந்து போய்விட்டால் என்ன செய்கிறீர்கள்? வீட்டிற்குப் போய் எல்லோரையும் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் கணவரையோ, மனைவியையோ, குழந்தையையோ கோபித்துக் கொள்கிறீர்கள். உங்கள் அமைதியின்மைக்கு முதல் பலி அவர்கள்தான்.

அடுத்தநாளும் உங்கள் அமைதியின்மை தொடருமேயானால் உங்கள் அண்டை வீட்டுக்காரரிடம் சத்தம் போடுகிறீர்கள். இதே மனநிலை தொடர்ந்தால் சகபணியாளர்களிடம் சத்தம் போடுகிறீர்கள். அமைதியின்மை அப்படியே தொடர்ந்தால் உங்கள் முதலாளியிடமே சத்தம் போடுகிறீர்கள்.

உங்களுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை இயல்பாகவே ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானத்திற்கு யோகா என்று பெயர்.

நீங்கள் முதலாளியிடம் சத்தம் போட்டதுமே உங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதை சுற்றியிருப்பவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிகிச்சைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார்கள். மனநல மருத்துவர் உங்களிடம் பேச்சுக் கொடுத்து உங்களை அமைதிப்படுத்தப் பார்க்கிறார். அதுவும் முடியாதபோது, உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார். ஒரு சிறு மாத்திரைதான். அதை விழுங்கிய மாத்திரத்தில், அதுவரை பதட்டத்தில் இருந்த உங்கள் உடலும், மனமும் அமைதியாகிவிடுகிறது. அது தற்காலிகமானதுதான் என்றாலும் உங்களுக்கு உடனே அமைதி ஏற்படுகிறது. அந்த மாத்திரையில் இருப்பதென்ன? ஒருசில ரசாயனங்கள்தான். அவை உங்களுக்குள் சென்று உங்களை அமைதிப்படுத்துகின்றன.

இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், அமைதி என்பதே ஒருவிதமான ரசாயனம்தான். ஆனந்தம் என்பதும் ஒரு ரசாயனம்தான். பதட்டம் என்பதும் ஒரு ரசாயனம்தான். ஒவ்வொரு மனித அனுபவமுமே, அவ்வப்போது உங்களுக்குள் ஏற்படுகிற ரசாயன மாற்றங்களின் வெளிப்பாடுதான்.

எனவே, யோகா என்னும் எளிய முறையின் வழியாக அமைதியும், ஆனந்தமும் இயல்பாகவே ஏற்படுவதற்கான ரசாயனத்தை உங்களுக்குள் உருவாக்க முடியும். குழந்தையாக இருந்தபோது அந்த ரசாயனம் உங்களுக்குள் இருந்தது. வாழ்க்கையின் அடிப்படை புரியாமல் அனைத்தையும் குழப்பிக் கொண்டதால் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறீர்கள். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய யாராவது தூண்டிவிட வேண்டும். சிலரைக் கொந்தளிக்கச் செய்வதற்கோ எளிய காரணங்களே போதும். அந்த அளவுக்குக் கொந்தளிப்பில் நிபுணர்களாகி விட்டார்கள்.காரணமே இல்லாமல் கோபப்பட அவர்களால் முடியும்.

எனவே, உங்களுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை இயல்பாகவே ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானத்திற்கு யோகா என்று பெயர். யோகா என்றதுமே விசித்திரமான கோணங்களில் உங்கள் உடலை வளைத்துக் கொள்வதென்று கருதி விடாதீர்கள். யோகா என்பது, உங்களுக்குள் அந்த மாற்றத்தை நீங்களாக விரும்பி ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம். புறநிலையில் நீங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. உள்நிலையில் ஏற்படுகிறமாற்றம் அது.