Question: சில நாட்களில், சில நேரங்களில் நான் மிக மந்தமாகவும், சோம்பலாகவும் உணர்கிறேன். அவ்வாறு இல்லாமல் எப்போதும் எப்படி சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பது? யோகா செய்தால் அப்படி சுறுசுறுப்பாக இருக்க முடியுமா?

சத்குரு:

நீங்கள் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருப்பதற்கும், உங்கள் சக்திநிலைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. உங்கள் சக்திநிலை நன்னிலையில் இருந்தால் நீங்களும் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள், இல்லையெனில் நீங்கள் மந்தமாக உணர்வீர்கள். இப்போது உங்கள் சக்திநிலை எதைச் சார்ந்து இருக்கிறது என்று பார்ப்போம். உங்கள் அன்றாட தேவைகளுக்கு, உங்களுக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? நீங்கள் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, உள்வாங்கும் சூரிய ஒளி இவற்றால் தானே? இவைதான் உங்கள் உடலியக்கத்திற்கு சக்தியாக மாறுகிறது. இது ஏதோ ஒரேயொரு நாள் உங்களுக்கு சக்தி அளிக்கிறது என்றல்ல. ஒவ்வொரு நாளும் இவற்றின் வாயிலாக உங்கள் சக்திக்கிடங்கை நீங்கள் நிரப்பி வருகிறீர்கள். இப்படி நீங்கள் சேர்த்து வைக்கும் சக்தியின் அளவு மனிதருக்கு மனிதர் வேறுபடக்கூடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மற்றொரு கோணத்தில், எதை உயிர் என்று அழைக்கிறீர்களோ அல்லது எதை "நீங்கள்" என்று அழைக்கிறீர்களோ அதுவே ஒரு சக்திதான். நீங்கள் எந்த அளவிற்கு விழிப்போடு, உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பது உங்கள் 'சக்திஆக்க'த் திறனைப் பொருத்து அமைகிறது. அதாவது, நீங்கள் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, உள்வாங்கும் சூரியக் கதிர், ஆகியவற்றை எந்த அளவிற்கு பயனுள்ள சக்தியாக நீங்கள் மாற்றிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்து அமைகிறது. இந்த ஆற்றல், மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது.

இது உங்கள் ஜீரண சக்தி பற்றியது அல்ல. 'சக்தி ஆக்க'த் திறன் என்பது உங்கள் விழிப்புணர்வு, உங்கள் சக்திநிலை ஆகியவற்றை பல நிலைகளில் சார்ந்து இருக்கிறது. யோகப் பயிற்சிகளை தினமும் செய்யத் துவங்கினால், உங்கள் சக்திநிலை முற்றிலும் வித்தியாசமாய் இருக்கிறது. இன்னும் அதிக விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள். நீங்கள் விரைவில் சோர்வும் அடைவதில்லை.

பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது, உங்கள் விழிப்புணர்வு, செயல்திறன், வாழ்க்கை நடைமுறை என எல்லாமே மேம்படும். யோகப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், நடுவில் ஒரேயொரு நாள் அதை செய்யத் தவறினாலும் அந்த வித்தியாசத்தை உங்கள் உடல் இயக்கத்தில் நீங்கள் உணர முடியும். யோகப் பயிற்சிகள், தியானம் ஆகியவை உங்கள் சக்திநிலையை இப்போது இருக்கும் நிலையை விட இன்னும் விழிப்பாக வைத்துக் கொள்ளும்.

Question: ஈஷா யோகாவில் கற்றுத்தரப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா, நான் மரணத்தை விழிப்புடன் அணுக உதவுமா?

சத்குரு:

மரணத்தை விழிப்புடன் அணுகுவதற்கு முன், வாழ்வை விழிப்புடன் அணுக வேண்டாமா? ஷாம்பவி மஹாமுத்ரா, வாழ்வை அதன் முழுமையில் அணுகுவதற்கான வழிமுறை. எப்படியும் எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம். ஆனால், இறப்பதற்கு முன் வாழ்வை முழுமையாக வாழுங்கள். நான் இப்படிச் சொல்வதால், தினமும் விருந்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஆர்த்தமல்ல.

இங்கு ஒருமுறை மனிதராகப் பிறந்துவிட்டால், இறப்பதற்கு முன்பு வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் நீங்கள் அறிந்திட வேண்டும். இல்லையெனில் உங்கள் வாழ்வே வீண்தான். வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் அறிந்திட நீங்கள் ஆணிப்படுக்கையில் படுப்பது, தலைகீழாகத் தொங்குவது, குகைகளில் கடும் குளிரில் பயிற்சி செய்வது போன்று கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என்றல்ல. ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை குடும்ப சூழ்நிலையில் இருந்துகொண்டு பயிற்சி செய்தாலே போதுமானது. படைத்தலின் மூலத்தை உங்களுக்குள்ளேயே உணர்வதற்கான எளிய, இனிய, அற்புதமான கருவி ஷாம்பவி மஹாமுத்ரா. இதற்கு முன்னர் குரு தமது மிக நெருங்கிய சிஷ்யர்களுக்கு மட்டும் தான் இப்பயிற்சியை வழங்குவார் என்பதால், இது சிறிய குழுக்களில் மட்டுமே கற்றுத்தரப்பட்டது. மனிதகுலத்தின் வரலாற்றில் இவ்வளவு அதிகமான மக்களுக்கு ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி கற்றுத்தருவது இதுவே முதல்முறை.