சத்குரு, ‘யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், அது குருவுடன் நாம் தொடர்பில் இருக்க உதவும் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்கு என்ன பொருள்? இதை இன்னும் விளக்கமாகக் கூறுங்கள்.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அப்படி உங்களிடம் யார் கூறியிருந்தாலும் சரி, மற்றவர்கள் அப்படி பேசிக் கொள்வதை நீங்கள் கேட்டிருந்தாலும் சரி, அல்லது அது உங்கள் கற்பனையாகவே இருந்தாலும் சரி, இது பற்றி நாம் பேசுவது தேவையானது தான், எனவே, அதைப் பற்றி நாம் பேசலாம். நான் செய்யும் பயிற்சிக்கும், குரு என்னைத் தொடர்பு கொள்வதற்கும், என்ன தொடர்பு? என்று நீங்கள் கேட்கலாம்.

உங்கள் சக்தியானது முழுமையாகத் திறந்த நிலையில் இருந்தால், உங்கள் குரு என்ன, அந்த சிவனே கூட உங்களிடம் வர வேண்டியிருக்கும். அவர்களுக்கு அதைத்தவிர வேறு வழி இல்லை.

இப்போது நீங்கள் எளிமையான ஒரு பயிற்சியை கற்றிருக்கிறீர்கள். அதை தொடர்ந்து செய்து வரும் போது, உங்கள் உணரும் திறன் அதிகரிப்பதையும், உங்கள் சக்தி திறந்த நிலையில் இருப்பதையும் நீங்களே கவனித்திருப்பீர்கள். உங்கள் சக்தி திறந்த நிலையில் இல்லாவிட்டால், உங்கள் குரு மட்டுமல்ல, யாருமே உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும்.

சக்திநிலை எப்படி இருக்க வேண்டும்?

உங்கள் சக்திநிலை சிக்குண்டு போயிருந்தால், அல்லது சிலவகையில் செயல்பட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கை கூட உங்களைத் தொட வழியில்லாமல் போய்விடும். உங்கள் சக்திநிலை முழு வீச்சில் செயல்படாமல் இருப்பதற்கு, உங்கள் கர்மவினை, உங்கள் வாழ்க்கைமுறை என இன்னும் சில காரணங்கள் கூட இருக்கலாம். யாராவது உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், உங்கள் முழு இயக்கமும் திறந்த நிலையில் இருப்பது மிக அவசியம். நீங்கள் உங்கள் உடல்நிலையிலும், மனநிலையிலும், திறந்த நிலையில் இருக்க வேண்டுமென்றால், உங்கள் சக்திநிலை ஓரளவுக்காவது தயார் நிலையிலும் திறந்த நிலையிலும் இருந்தே ஆக வேண்டும்.

சக்திநிலையை சார்ஜ் செய்யுங்கள்

உங்கள் பயிற்சிகள் உங்கள் பெற்றுக் கொள்ளும் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் செல்போனை சொல்லலாம். உங்கள் செல்போனில் சார்ஜ் இல்லை என்றால், நான் உங்களை எத்தனை முறை அழைத்தாலும் அந்த அழைப்பு உங்களுக்கு வந்து சேராது. நான் மட்டும்தான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருப்பேன். எனவே உங்கள் செல்போனை சார்ஜ் செய்து வைத்திருப்பது மிகவும் அவசியம். அது போலத்தான் இதுவும். உங்கள் சக்திநிலை நன்றாக சார்ஜ் ஆகி, திறந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

அது மட்டுமல்ல, தொடர்ந்து பயிற்சிகள் செய்து வருவது, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதைக்கு உங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி கூட. அந்த ஒரு அர்ப்பணிப்பு இல்லையென்றால், உங்களிடத்தில் ஒரு நோக்கு இருக்காது, அதனால் பெற்றுக் கொள்ளும் திறனும் வராது.

இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் தன்மையே எப்படி இருக்கிறதென்றால், நீங்கள் உங்கள் வாழ்வில் உங்கள் கவனத்தை, எதை நோக்கி வைத்திருக்கிறீர்களோ, அது தான் நடக்கும். குறிப்பாக உங்கள் சக்திநிலை எந்த திசை நோக்கி செயல்படுகிறதோ அது தான் நடக்கும். உங்கள் உடல்நிலை, மனநிலை குறித்து கூட இதுதான் உண்மை. இருந்தாலும் குறிப்பாக உங்கள் சக்திநிலை எதை நோக்கி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் பயிற்சிகள், உங்கள் சக்திகளை ஒரு உயரிய வாய்ப்பை நோக்கி பண்படுத்துவதற்கு உதவக் கூடிய ஒரு எளிமையான வழி.

சிவன் உங்களைத் தேடி வர...

உங்கள் சக்தியானது முழுமையாகத் திறந்த நிலையில் இருந்தால், உங்கள் குரு என்ன, அந்த சிவனே கூட உங்களிடம் வர வேண்டியிருக்கும். அவர்களுக்கு அதைத்தவிர வேறு வழி இல்லை. உங்கள் சக்தியானது இறைமைக்கான ஒரு தீவிர அழைப்பாக அமைந்து விட்டால், அந்த இறைவன் கூட அந்த அழைப்பை மறுக்கமுடியாது. உங்கள் சக்திநிலை அந்த அளவிற்கு தீவிரமடைந்து விட்டால், அதன் அழைப்பை, உங்கள் குருவிற்கு விருப்பமில்லை என்றால் கூட, அவரால் அதை மறுக்க முடியாது. எனவே உங்கள் பயிற்சிகள் மூலம் நீங்களே இறைமைக்கு ஒரு அழைப்பாக மாறுகிறீர்கள். கூடுதலாக உங்கள் உடல்நலன், நல்வாழ்க்கை போன்ற பலன்களும் இருக்கின்றன. அதனால் நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான். உங்கள் பயிற்சிகள் தான் நீங்கள் எந்த அளவிற்கு, பிறர் உங்களை அணுகுவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.