காலை எழுந்தவுடன் டிவியில் ராசிபலனைக் கேட்டுவிட்டுத்தான் இன்றும் பலர் வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். இதுபோன்ற கனவுநிலை வாழ்க்கையை வாழ்வதால் ஒருவர் தவறவிடும் சாத்தியங்களை எடுத்துரைப்பதோடு, வாழ்க்கை அற்புதமாய் நிகழ நாம் உணரவேண்டியவற்றையும் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!

சத்குரு:

மனித மனத்தில் சரியான எண்ணங்களைப் புகுத்தினால்தான் அதைத் தேவையான முறையில் நாம் இயக்க முடியும். இன்று பலரும் தங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டிய விஷயங்கள் பற்றியே திரும்பத் திரும்பப் பட்டியல் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதைவிட என்னென்ன வேண்டும் என்ற எண்ணங்களைப் புகுத்துவதுதான் சரியான அணுகுமுறை. அப்படிச் செய்தாலே, தேவையில்லாதவை தானாகவே விடைபெற்று விலகிவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.
தனது தனிப்பட்ட ஆற்றல் பற்றி இன்றைய மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால்தான் சில அற்புதங்கள் எதிர்பார்த்து அவர்கள் அலைமோதுகிறார்கள்.

நம் வீட்டில் இருக்கிற சில மின்சார சாதனங்களைப் போல, தேவைப்பட்டால் இயக்குவதும், தேவை இல்லையென்றால் நிறுத்துவதும் மனித மனத்துக்கும் சாத்தியம். அந்த அளவுக்கு மனம் மீது ஆளுமை செலுத்துவது அவசியம்.

கனவு காணுவது நல்லது. அது உங்களுக்கு ஊக்கம் தருவது. ஆனால் நிறையப் பேர் கனவு நிலையிலேயே நின்றுகொண்டு வாழ்க்கைக்குள் இறங்கப் பயப்படுகிறார்கள். உங்களைக் கனவு நிலையிலேயே வைத்திருக்கக்கூடியவற்றில் ஒன்று, ஜோதிடம். ஒரு பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு அதில் என்ன விழப்போகிறது என்று எதிர்பார்ப்பது போல உங்கள் வாழ்க்கையை நீங்களே ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்திக்கொண்டு கிரகங்கள் அதிலே என்ன போடப் போகின்றன என்று பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது.

உங்கள் தகுதியை, ஆற்றலை அறிந்துகொள்ளாதபோதுதான் அதிர்ஷ்டங்களை நம்பத் தொடங்குகிறீர்கள். வேகமாக ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள், பதட்டப்படுகிறீர்கள். இந்தப் பதட்டத்தின் காரணமாகத்தான் ஜாதகத்தை நம்பிப் போகிறீர்கள். தன்னை அறிந்துகொள்ளாமல் சில வெற்றிகளைப் பெற்றால் அதை அதிர்ஷ்டத்தால் வந்தவை என்று நீங்களே நம்பத் தொடங்கிவிடுவீர்கள். பிறகு ஒவ்வொன்றுக்கும் உங்கள் ஜாதகத்தையோ, கைரேகையையோ, எண் கணிதத்தையோ பார்த்துக்கொண்டுதான் உங்களால் செயல்பட முடியும்.

தனது தனிப்பட்ட ஆற்றல் பற்றி இன்றைய மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. அதனால்தான் சில அற்புதங்கள் எதிர்பார்த்து அவர்கள் அலைமோதுகிறார்கள். இவையெல்லாம் பதட்டத்தின், அச்சத்தின் வெளிப்பாடுதான். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப்பெரிய அற்புதம் என்ன தெரியுமா? வாழ்க்கையை விளையாட்டாய் நடத்திச் செல்வது. இது ஒவ்வொருவருக்கும் சாத்தியமே!