யாகம் என்றால் நெருப்பு மூட்டி, புரோகிதர்கள் சுற்றியமர்ந்துகொண்டு மந்திரங்களைச் சொல்லியவாறு, புகைமண்டலத்தை உருவாக்கும் காட்சியே நம் கண்முன் விரியும்! இன்று வியாபார நோக்கமுள்ளவர்களால் யாகம் எனும் வார்த்தை சீர்கெட்டுள்ளதையும் யாகங்கள் செய்வதிலுள்ள விஞ்ஞானத்தையும் இங்கே விளக்கும் சத்குரு, ‘ஈஷா யோகா’ எனும் யாகம் குறித்தும் குறிப்பிடுகிறார்!

சத்குரு:

யாகம் என்றால் ஒரு குறிப்பிட்ட ஒழுக்கத்துடன் செய்யப்படும் செயல் என்று அர்த்தம். இதைச் செய்வதன் மூலம் அனைவரும் பலன் பெறுகின்றனர். நீங்கள் இங்கு அமர்ந்து தியானம் செய்கிறீர்கள், தியானத்தின் பரவசம் உங்களை ஆட்கொள்ளவே, எழுந்து ஆனந்த தாண்டவம் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தியானத்தால் அத்தனை பேருக்கும் பலன் உண்டு. யாகமும் அதுபோலத்தான்.

ஈஷா யோகா வகுப்புகளில் நெருப்பில்லை, மந்திரமில்லை, ஒருவரின் புத்திக்கூர்மையை பயன்படுத்தி நாம் அதனை யாகமாகச் செய்கிறோம்.

சரி, யாகத்தை எப்படிச் செய்வது? இதனைச் செய்ய பலவழிகள் உண்டு. இன்று புழக்கத்தில் இருக்கும் யாகங்கள் எல்லாம் நம் தொன்மையான கலாச்சாரம், விட்டுச் சென்றுள்ள மீதமே. ஆனால் இன்றோ இவை வணிக நோக்கம் கொண்ட மக்களால் பாதுகாக்கப்படுகிறது, அதனால் மிகக் குறைந்த தன்மையுடைய செயல்முறைகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. யாகங்களை நாம் மந்திரங்களைப் பயன்படுத்திச் செய்யலாம் அல்லது சக்தியைப் பயன்படுத்தியும் செய்யலாம். இன்றுகூட சொற்ப எண்ணிக்கையில், சக்திவாய்ந்த சில யாகங்கள் செய்யப்படுகின்றன. பெருவாரியான யாகங்கள் வணிக நோக்கம் கொண்டதாக மாறிவிட்டது, அதன் சாரத்தை இழந்துவிட்டது.

அதனால் யாகங்கள் செய்யப்படும் விதத்தைப் பார்த்தால் நாம் அதனை அளவுடன் செய்து கொள்வது நல்லது என்றே சொல்லத் தோன்றுகிறது. அதனால் நாம் யாகங்களை அறிவுசார்ந்த செயல்முறையாக மாற்றியமைக்க வேண்டும். நாம் நடத்தும் ஈஷா யோகா வகுப்புகளும் ஒரு யாகத்தைப் போலத்தான். யாகங்களை எப்படிக் கடுமையான விதிமுறைகளுடன் நடத்த வேண்டுமோ அப்படியொரு கட்டுப்பாட்டுடன் ஈஷா யோகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நீங்கள் ஈஷா யோகா வகுப்பு செய்திருந்தால் நீங்கள் எங்கு உட்கார வேண்டும், எப்படி உட்கார வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்போது எழும்ப வேண்டும்... என அத்தனையும் உங்களுக்கு சொல்லப்படுவதைக் கவனிக்க முடியும். ஏன் நீங்கள் கழிவறையைப் பயன்படுத்தக்கூட நாம் அனுமதிப்பதில்லை. யாகத்திற்கு நடுவே எப்படி உங்களை கழிவறைக்குச் செல்ல அனுமதிப்பது? ஆனால் ஈஷா யோகா வகுப்புகளில் நெருப்பில்லை, மந்திரமில்லை, ஒருவரின் புத்திக்கூர்மையை பயன்படுத்தி நாம் அதனை யாகமாகச் செய்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

அதனால் நீங்கள் உடலைப் பயன்படுத்தியும் யாகங்கள் செய்யலாம். உங்களைச் சுற்றியுள்ள பஞ்சபூதங்களைப் பயன்படுத்தி உங்கள் உடலால் யாகம் செய்யலாம், உங்கள் மனதால் செய்யலாம், உங்கள் உணர்வால் செய்யலாம். லிங்கபைரவி சந்நிதிக்குச் சென்றால் அங்கு உணர்வை அதிகப்படியாகப் பயன்படுத்தி செய்யப்படும் யாகங்களைப் பார்க்க முடியும்.

எந்தவொரு முன்முடிவும் இல்லாமல், நம்பிக்கையின்மைக்கு உட்படாமல், நம்பிக்கையும் கொள்ளாமல் தேவியின் ஆலயத்திற்குள் நுழைந்து பாருங்கள். அவளுடைய சக்தி உங்களுடைய முகத்தில் அடிப்பதுபோல் தீவிரமாக இருப்பதை நீங்கள் உணர முடியும்.

நீங்கள் இந்தக் கட்டுக்கதைகள் எதையும் நம்ப வேண்டாம். வகுப்பு, லிங்கபைரவி எதையும் நம்ப வேண்டாம். ஆனால் எந்தவொரு முன்முடிவும் இல்லாமல், நம்பிக்கையின்மைக்கு உட்படாமல், நம்பிக்கையும் கொள்ளாமல் தேவியின் ஆலயத்திற்குள் நுழைந்து பாருங்கள். அவளுடைய சக்தி உங்களுடைய முகத்தில் அடிப்பதுபோல் தீவிரமாக இருப்பதை நீங்கள் உணர முடியும். அதனை யாரும் தவறவிட இயலாது. நீங்கள் முடிவுகளுடன் செல்லும்போது, உங்களுக்கு சாதகமான கற்பனைகளுடன் செல்வீர்கள். உங்களுக்கு பிடிக்காதவாறு எண்ணங்களை வளர்த்துக் கொண்டு அதன்படி முடிவுகள் செய்து போனால் அங்கு என்ன நடக்கிறதோ அதனை முழுமையாக உணராமல் போய்விடுவீர்கள். முடிவுகள் இல்லாத, திறந்த மனதுடன் நீங்கள் தேவியின் சந்நிதிக்குள் செல்லும்போது, அவளை நீங்கள் தவறவிட இயலாது. ஒரு விலங்கு அவ்விடத்திற்குள் நுழைந்தால் கூட அவ்விடத்தின் சக்தியை உணராமல் போக இயலாது.

லிங்கபைரவி சந்நிதியும் ஒருவகை யாகம்தான். உங்கள் உயிர் சக்தியை பயன்படுத்தி யாகம் செய்ய முடியும், ஆத்ம யோகமும் செய்ய முடியும். யாகங்கள் செய்ய பலவழிகள் இருக்கின்றன. இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில், மக்கள் இருக்கும் மனோநிலையில், அவர்கள் கல்வி கற்கும் விதத்தில் அறிவைப் பயன்படுத்தி செய்யும் யாகங்களில் இருந்துதான் நாம் துவங்க வேண்டும். அதுவே இன்றைய காலகட்டத்திற்கு உகந்த, மிகச் சிறந்த கருவியும் கூட. அவர்களுக்கு அது வேலை செய்து, அவர்கள் மனம் சற்று திறந்தால், அவர்களுக்கு இதயம் இருப்பதை நாம் உணர்ந்தால், அதன்பின் நாம் உணர்ச்சி ரீதியில் செய்யும் யாகங்களைப் பற்றிச் சிந்திக்கலாம். உணர்ச்சிரீதியில் செய்யும் யாகங்களுக்கும் அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகிவிட்டால் அதன்பின் சக்திநிலையில் யாகங்கள் செய்யலாம். பின்னர், ஏதோ ஒரு நாள் நாம் ஆத்ம யாகங்களையும் அவர்களுக்கு வழங்கலாம். யாகங்கள் செய்வதற்கு நெருப்பும் தேவையில்லை, புகையும் கக்க வேண்டியதில்லை.