Question: நல்ல செயல்களை செய்வதுதான் ஆன்மீகம் என்று நினைக்கிறேன். உலக விஷயங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஏதோ ஓரிடத்தில் உட்கார்ந்துகொள்வது எப்படி ஆன்மீகமாகும்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலக விஷயங்கள் என்று எதைச் சொல்கிறீர்கள்? நான் ஒரு தென்னை மரத்தை கவனித்துக் கொள்கிறேன். இது உலகம் சம்பந்தப்பட்ட விஷயமா? இல்லையா? இது உலகம் சம்பந்தப்பட்ட விஷயம்தான். என் உணவை நான் சமைத்துக் கொள்கிறேன். என் உடைகளை நானே துவைத்துக் கொள்கிறேன். இதுவும் கூட உலகியல் விஷயங்கள் தான். இவ்வுலகில் வாழவேண்டும் என்றால், இதையெல்லாம் செய்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் இவ்வுலகில் வாழமுடியாது. எப்படிப்பட்ட உலக விஷயங்களில் நீங்கள் ஈடுபட விரும்புகிறீர்கள் என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம். இங்கு எல்லோருமே அரசியலில் இறங்க வேண்டும் என்று கட்டாயமில்லை. சமூகத்தில், சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் சாதாரண அலுவலக குமாஸ்தாவாக இருக்கிறார்கள். சிலர் தொழிற்சாலைகளை நடத்துகிறார்கள். சிலர் துப்புரவுத் தொழில் செய்கிறார்கள். எல்லோரும் ஏதோ ஒன்றைச் செய்கிறார்கள். அவர்களால் செயலில் இருந்து தப்ப முடிவதில்லை.

தேர்வு உங்கள் கையில்

ஆனால் உங்கள் வாழ்வில் எவ்விதமான செயல்களில் ஈடுபட வேண்டும், எந்த அளவிற்கு அதில் ஈடுபட வேண்டும் என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் விரும்பியதை நீங்கள் செய்வது போல், அடுத்தவர், அவரின் விருப்பம் போல் செயல்படக்கூடாதா? இந்த தேர்வு அனைவருக்கும் இருக்கிறதல்லவா? உலகில் உள்ள ஒவ்வொருவருக்குமே இந்த உரிமை கண்டிப்பாக உண்டு. 'நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், ஏன் செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு என்ன வேண்டும்' என்ற தெளிவான சிந்தனையின்றி, அதை முடிவு செய்வதற்குத் தேவையான அறிவும், விழிப்புணர்வும் இன்றி, மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே வாழ்பவர்கள்தான், ஆன்மீகத்தில் இருப்பவர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டை சொல்வார்கள்.

வாழ்வின் சூழ்நிலைகளுக்கு அடிமையாகி, தனக்கு வேண்டியது போல் வாழ முடியாதவர்கள், வாழ்வை தங்களுக்கு வேண்டியதுபோல் திறம்பட நிர்வகிப்பவர்களைப் பார்த்து, பொறாமை கொள்கிறார்கள்.

"ஓ! இவர்கள் உலக விஷயங்களில் ஈடுபடுவதில்லை. பொறுப்பாக இருப்பதில்லை. தங்களுக்குத் தேவையானதை மட்டும் செய்துகொள்கிறார்கள்" என்றெல்லாம் சாடுவார்கள். ஒருவர் தன் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ வேலை செய்யும்பொழுது கூட, அதை அவர் தனக்காகத்தான் செய்து கொள்கிறார். உலக நன்மையில் எல்லாம் அவருக்கு ஆர்வம் இல்லை. தன் தேவைகளுக்காக மட்டுமே அவர் அங்கு இருக்கிறார். என்ன ஒன்று, தன் உண்மையான தேவை என்னவென்று புரியாமல் இதில் ஈடுபட்டு, தற்போது மீண்டுவர முடியாத அளவிற்கு சிக்கலில் மாட்டித் தத்தளிக்கிறார். 'மீளமுடியாமல் திணறுகிறேன்' என்பதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல், செய்யும் செயல்களை விரும்பி செய்வதாக தன்னையே அவர் நம்பவைத்துக் கொள்கிறார். இப்படி அவர் நெளிந்து கொண்டிருக்கும் போது, வேறொருவர் தனக்கு வேண்டியவாறு தன் வாழ்க்கையை திறம்பட அமைத்துக் கொள்வதை ஏற்க முடியாமல், அவர் தவறான பாதையில் செல்வதாக இவர் கற்பனை செய்துகொள்கிறார்.

தவறான பேருந்து

ஒரு சமயம் இப்படி நடந்தது. ஒரு பேருந்தில் குடிகாரன் ஒருவன் போதையில் ஏறி, அதிலிருந்த பயணிகள் எல்லோரையும் இடித்துக் கொண்டு, ஒருவழியாக மூதாட்டியின் அருகே இருந்த இருக்கையில் அமரும்போது, அவர்மீது விழுந்துவிட்டான். கோபம் கொண்ட அவர், இவனைத் தள்ளி விட்டுவிட்டு, ‘நீ நேராக நரகத்திற்குத்தான் போவாய்’ எனக் கடிந்து கொண்டார். அதற்கு குடிகாரன், ‘அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேனா’ என்று கேட்டானாம்.

குடிகாரர்களுக்கு யார் தவறான பேருந்தில் இருக்கிறார் என்று புரிவதில்லை. இதே போல் தான், வாழ்வின் சூழ்நிலைகளுக்கு அடிமையாகி, தனக்கு வேண்டியது போல் வாழ முடியாதவர்கள், வாழ்வை தங்களுக்கு வேண்டியதுபோல் திறம்பட நிர்வகிப்பவர்களைப் பார்த்து, பொறாமை கொள்கிறார்கள். இயலாமையில், 'ஆன்மீகத்தில் இருப்பவர்கள் லௌகீகத்தில் இருந்து விலகி ஓடுவதாக' குறைகூறுகிறார்கள்.

இன்று மிகத் தீவிரமாக பெரும்பான்மையான மக்கள் செயல் செய்வதைப் பார்த்தால், அடுத்த பத்தாண்டுகளுக்குக்கூட இந்த பூமிக்கிரகம் நிலைக்காது போலிருக்கிறது. இதில் 50 சதவிகித மக்கள் உலகை அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்க, அதிர்ஷ்டவசமாக 50 சதவீத மக்கள் சோம்பேறிகளாக இருப்பதினால், இவ்வுலகம் பிழைத்து வருகிறது. இவர்களில் வெறும் 0.1 சதவீத மக்கள்தான் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதை மாற்றி, குறைந்தபட்சம் 50 சதவீத மக்களையாவது ஆன்மீகத்தில் ஈடுபடவைக்க விரும்புகிறோம். அப்பொழுதுதான் இவ்வுலகைக் காக்க முடியும்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களின் செயல்பாடு

ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து, தீவிரமான செயல்பாட்டில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டவர்கள், அவர்களுக்கோ, இந்த சமூகத்திற்கோ, உலகத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ, இந்த கிரகத்திற்கோ எவ்விதத் தீங்கையும் விளைவிப்பதில்லை. தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள கடினமாக உழைக்கிறேன் என்று, விழிப்புணர்வே இன்றி தீவிரமான செயலில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் இந்த உலகை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு என்ன வேண்டும் என்பதைக் கூட தெளிவாக உணராமல், மற்றவரைப் பார்த்து அவர்போல் செயல் செய்து, எல்லோரையும் மிஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தில், மிகத்தீவிரமாக செயலில் இறங்கியிருக்கிறார்கள். மனித இனத்தை தற்கொலை நோக்கி நடத்திச் செல்கிறது அவர்களின் தீவிரமான உழைப்பு.

'செயல்' என்பதை இன்று நாம் புரிந்து வைத்திருக்கும் நிலையில், நாம் செயல்புரிவதிலிருந்து விலகியிருப்பது தான் மிகவும் பொறுப்பான செயலாக இருக்கிறது. செயல் புரிவதிலிருந்து விலகியிருப்பதை சாதாரணமென எண்ணிவிட வேண்டாம். சும்மா அமைதியாக அமர்ந்திருப்பதற்கு, மிக அதிகமான மன முதிர்ச்சி தேவை. செயலில் இருந்து விலகியிருந்தால், அவர்கள் சோம்பேறி, பொறுப்பற்றவர் என்று அர்த்தமல்ல. செயலிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்றால் அதற்கு மிக அதிகமான விழிப்புணர்வும், புத்திக்கூர்மையும் தேவைப்படும்.