"நான் ரொம்ப பிஸி எனக்கு யோகா செய்யறதுக்கெல்லாம் நேரமில்ல, எங்களைப்போல வொர்க்லோடு அதிகமா இருக்கிறவங்களுக்கெல்லாம் யோகா செய்ய ஏது நேரம். ஏற்கனவே நேரம் இல்லாதபோது இன்னும் ஒன்று புதிதாகத் தேவையா..?"

சத்குரு:

நீங்கள் மிக அவசரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உண்மை தான். ஆனால் இந்த அவசரத்தில் ஓடும்போது, எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்கிறீர்களா அல்லது எப்பொழுதாவது தான் சந்தோஷமாக இருக்கிறீர்களா? எப்போதாவது சந்தோஷமாக இருக்கும் நிலையிலிருந்து எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்கும் நிலைக்கு செல்ல நீங்கள் விரும்புகிறீர்களா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதற்கு வெளிசூழ்நிலையில் சிறிது கூட மாற்றம் செய்யத் தேவையில்லை. உள்நிலையில் மட்டும்தான் மாற்றம் தேவை.

நீங்கள் ஒரு தொழில் நிறுவனத்தை நிர்வகித்தாலும் சந்தோஷமாக இருக்கத்தானே விரும்புகிறீர்கள்? அல்லது தொழில் என்று வந்துவிட்டால் டென்ஷனாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமா? நீங்கள் தொழில் செய்தால் அதில் பணிபுரிபவர்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தால், அது எப்போதுமே நல்ல நிலையில் நடக்கும். இது மிகவும் முக்கியமான அம்சம்.

உங்கள் மனதை உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் நூறு பேரை எப்படி நிர்வகிக்கப் போகிறீர்கள்?
நூற்றுக்கணக்கான மனிதர்களுடன் இணைந்து தினமும் செயல்படும்போது நீங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது மிகமிக முக்கியமானது. இல்லாவிட்டால் உங்களோடு இணைந்து பணிபுரிவதை யாரும் விரும்ப மாட்டார்கள். உங்களோடு பணிபுரிவது அவர்களுக்கு மகிழ்ச்சியாய் இல்லாதபோது அவர்கள் மிகச் சிறப்பாக வேலை செய்ய வாய்ப்பில்லை. உங்களுக்காக வேலை செய்பவர்கள் சிறிதும் விருப்பமே இன்றி, 'அய்யோ! செய்ய வேண்டுமே...' என்று சலித்துக் கொண்டு வேலை செய்தால், உங்கள் வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கப்போகிறது.

உங்கள் தொழில் மிகச்சரியாக நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் உங்களுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். இந்த உள்நிலை என்பது மிகச்சரியாக நடைபெறவேண்டும். உங்கள் மனதை உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் நூறு பேரை எப்படி நிர்வகிக்கப் போகிறீர்கள்?

அவசரமாக உற்பத்தி செய்தாக வேண்டும் என்று முழுவதுமாய் ஃபிட் செய்யப்படாத மெஷினில் வேலை துவங்கினால் அடிக்கடி பிரச்சனை. அதில் அடிக்கடி நேரம் வீண். இதுவே அந்த மெஷின் சரியான நிலையில் இருந்தால், மேற்கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக, நிறைவாக நமது வேலை நடக்கும்.

யோகப் பயிற்சிகள் உங்களுக்கு இதைதான் செய்கிறது. உங்களுக்குள் ஒரு ஆழ்ந்த ஓய்வு நிலையில் இருக்கும் நிதானம் வரும். நிதானத்தோடு வேலை செய்யும் பொழுது, தவறுகள் இன்றி, கவனப் பிசகின்றி தெளிவாக வேலை செய்ய முடியும். இதனால் வேலை செய்யும் நேரம் குறையும்.

வேலையும் முடியும், அதற்குத் தேவையான நேரமும் குறையும், டென்ஷனும் இல்லை... அப்படியென்றால் சந்தோஷத்திற்கு தடை ஏது?

Life Mental Health @ flickr