சத்குரு:

“12 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த பாரம்பரியம் கொண்டது நமது தேசம் மட்டும்தான். தென்னிந்தியாவில், அதிலும் தமிழகத்தில், இதே நிலத்தை நாம் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உழுதிருக்கிறோம். அமெரிக்காவில் மண்ணை அழுக்கு என்கிறார்கள். நாம் 'தாய்மண் என்கிறோம். ஏனென்றால் மண்ணுடன் நமக்கு ஆழமான உறவு உண்டு.” - சத்குரு

விவசாயத்தை நாம் ஒரு தொழில் என்று அழைப்பதே மிகவும் முற்போக்கானது. விவசாயம் செய்யும் மனித ஆற்றல்தான் நமது நாகரிகத்தின் அடிப்படையே. நாம் வேட்டையாடி உணவு சேர்ப்பவர்களாக இருந்திருந்தால், நாகரிகம் வளர்வதற்கு அனுமதித்து இருக்கமாட்டோம், மண்ணிலிருந்து உணவை எடுக்கும் திறனால்தான் நாம் நகரங்களையும், ஊர்களையும் கட்டமைத்து நிலை பெற்றோம், கலைகளிலும், அறிவியலிலும் வளர்ந்தோம்.

தனிச்சிறப்புமிக்க விவசாய பாரம்பரியம்!

விவசாயம் ஒருவித மாயாஜாலம் போன்றது. நீங்கள் கால்வைத்து நடக்கும் மண்ணை உணவாக மாற்றுகிறீர்கள். நான் சொல்வது புரியவில்லையா? இன்று இரவு உணவின்போது எப்போதும்போல் எல்லா உணவையும் சாப்பிடுங்கள். ஆனால் ஊறுகாய்க்கு பதிலாக ஒரு சிட்டிகை கைமண்ணை வைத்துக்கொண்டு அதைத் தொட்டு உணவை உண்ணுங்கள். மண்ணை உண்பது எவ்வளவு கடினம் என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள். இந்த மண்ணைத்தான் நாம் அற்புதமான உணவாக மாற்றுகிறோம்.

மண்ணை உணவாக மாற்றுவதே விவசாயம். செடி கொடிகளின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்து அதை நமக்கு பலனளிக்கும் விதமாக உபயோகப்படுத்தி இந்த அபாரமான செயல் முறையை மனிதர்கள் கண்டுபிடித்தனர்.

எனக்குத் தெரிந்தவரை, தென் அமெரிக்காவின் சில பகுதிகளைத் தவிர, 12 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த பாரம்பரியம் கொண்டது நமது தேசம் மட்டும்தான். தென்னிந்தியாவில், அதிலும் தமிழகத்தில், இதே நிலத்தை நாம் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உழுதிருக்கிறோம். அமெரிக்காவில் மண்ணை அழுக்கு என்கிறார்கள். நாம் 'தாய்மண்' என்கிறோம். ஏனென்றால் மண்ணுடன் நமக்கு ஆழமான உறவு உண்டு.

உழவும் நெசவும்! – ஒரு வரலாற்று பின்னணி!

170, 180 வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் நெசவுத்தொழில் கொடிகட்டிப் பறந்தது. உலகம் முழுவதிற்குமான ஜவுளித் தேவைகளில், 60 சதவீதம் இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐவுளிகளை வாங்குவதற்காக மட்டுமே பெருந்தொகை ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை வந்தடைந்தது என்பதை ஆங்கிலேயர்கள் அறிந்தனர். இதன்பின்பு அவர்கள் இந்தியா வந்தபோது நெசவுத்தொழிலில் எந்திரத்தை புகுத்தினார்கள்.

அடுத்த 60 ஆண்டு காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஜவுளிகளின் 98 சதவீதம் குறைந்தது. ஏனென்றால் ஜவுளிகளை ஏற்றுமதி செய்ய அதிகப்படியான வரி விதித்தனர். மிகவும் நேர்த்தியான நெசவுகளைத் தயாரித்த சில இடங்களில், நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டி தரிகளை அழித்தனர்.

நெசவுத்தொழில் அழிக்கப்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர், பெரும்பாலான மக்கள் விவசாயத்திற்கு மாறினார்கள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் கொஞ்சம் உணவு உற்பத்தி செய்வதற்காக நிலத்தை உழுதார்கள். இதன்காரணமாக 1947-ல் இந்திய மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இன்று விவசாயம் 60 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், 20 பேர் உண்பதற்கு 6 பேர் சமைக்கிறார்கள்.

வீழும் இன்றைய விவசாயத்தின் நிலை…

60 சதவீத மக்கள் மட்டுமே விவசாயத்தில் இருப்பது சரியல்ல. இதை மாற்ற வேண்டும். மாற்ற வேண்டும் என்றால் மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களுக்குச் செல்ல வேண்டாம், ஆனால் அவர்கள் பிற வர்த்தகத்திற்கும் கைவினைக்கும் தொழில்களுக்கும் மாற வேண்டும், இதற்கு உறுதியான, ஒருங்கிணைந்த முயற்சி இன்னும் எடுக்கப்படவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

நம்மிடம் இருக்கும் வளமே மனிதவளம்தான், அதனை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும், தோராயமாக 45, 50 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் பிழைப்பதற்காக செய்யும் விவசாயத்திலிருந்து, பணத்திற்காகவும், பொருளாதாரத்திற்காகவும் செய்யும் விவசாயத்திற்கு மாறியபோதுதான் விவசாயத்தில் பெரும் பிரச்சனை உருவெடுத்தது.

நீங்கள் கவனிக்கக்கூடிய இன்னொரு விஷயம், கிராமப்புறங்களில் மக்கள் மிகுந்த ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஏதாவது கிராமத்திற்குச் சென்றால், அவர்கள் கிழிந்த துணிகளை அணிந்திருந்தாலும், குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லாதிருந்தாலும் (கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் அதே குட்டையில்தான் அவர்களும் தண்ணீர் குடிப்பார்கள்) ஆண்களும், பெண்களும் உடல் பலத்துடன் இருந்தார்கள்.

ஆனால் இன்று ஏதாவது கிராமத்திற்கு சென்றீர்கள் என்றால், 60 சதவீத மக்களுக்கு, அவர்களுடைய எலும்புகள் கூட முழுமையாக வளர்ச்சியடையவில்லை, பிழைப்பிற்காக செய்த விவசாயத்திலிருந்து பணப்பயிர்களுக்கு மாறியதால் அவர்கள் உடற்கட்டே சுருங்கிவிட்டது. பிழைப்பிற்காக விவசாயம் செய்தபோது, அவர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் பல வகையான உணவு உண்டனர்.

சமூகத்தில் குன்றும் ஊட்டச்சத்து!

இன்று தென்னிந்தியாவில் பிரதான உணவு அரிசி, புளி, வெங்காயம், மிளகாய் என்றாகி விட்டது. இதை வைத்தே ருசியாக சமைப்பது எப்படி என்று அவர்களுக்குத்தெரியும், அதனால் ரசம் சாதமே போதும் என்றாகிவிட்டது. வடக்கில் கோதுமையும், மிளகாயும், வெங்காயமும் இருந்தால் போதும் என்றாகி விட்டது. இதனால் ஊட்டச்சத்தில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது நாம் கவனிக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை, ஏனென்றால், வளர்ச்சி குன்றிய ஒரு மனித குலத்தை நாம் உருவாக்குகிறோம்.

இந்த தேசத்தின் பெருவாரியான மக்கள் தங்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் சரியாக சாப்பிடாமல் வளர்ச்சி குன்றியவர்களாய் வளர்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர்களால் ஈடுகட்ட முடியாது. உடல் மற்றும் மூளையின் வளர்ச்சி அந்த கட்டத்தில் நிறைவடைந்திருக்கும்.

விவசாயத்தை முன்னேற்றி சிறப்பாக்க…

விவசாயத்தை ஒருங்கிணைக்க நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, தொழில் நுட்பத்தை விவசாய முறைக்குள் எடுத்துவர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார லாபத்திற்கு இது பெரிதாகவேண்டும். தற்போது ஒரு தனிமனிதர் வைத்திருக்கும் சராசரி நிலத்தைப் பார்த்தால், அது 1 முதல் 2.5 ஏக்கராக இருக்கிறது. இதை வைத்து லாபகரமான எதையும் செய்ய முடியாது.

இவ்வளவு சிறிய நிலத்தை வைத்து மகத்துவமான எதையும் செய்ய முடியாது. எனவே விவசாயிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கும் விவசாயி உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மற்றும் தேவையான இன்னும் பல விஷயங்களை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். பயிர் செய்யவும், நீர்ப்பாசனத்திற்கும், விளைபொருளை சந்தைப்படுத்தவும் அளவு பெரிதாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் விளைபொருளின் அளவும் குறைவாக இருப்பதால் இதற்கு வேறு தீர்வே கிடையாது.

சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், ஐந்து முதல் ஆறு வருட காலத்தில் வருமானத்தை நம்மால் சில மடங்காக பெருக்க முடியும்.

நீர்ப்பாசனத்தை ஒருங்கிணைப்பது இதற்கு மிகவும் முக்கியம், அதோடு நீர்வளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதும், விவசாய நிலங்கள் கால்நடைகளை மீண்டும் எடுத்து வருவதும் அவசியம், ஒரு டிராக்டர் நிலத்தை உழுதிட மட்டுமே செய்யும். அதனால் நிலத்திற்கு உரம் தர இயலாது. உரத்திற்கு கால்நடைகள் தேவை. வருங்காலத்தில் கால்நடைகள் இல்லாவிட்டால் விவசாயமே செய்ய முடியாத நிலை வந்துவிடும்.

இது மிகப்பெரிய தேசம், வேற்றுமைகள் நிறைந்த தேசம். எனவே மாற்றம் எதுவாயினும், நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும், அது எதிர்ப்பும் இடர்ப்பாடும் இல்லாமல் நடக்கமுடியாது. ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயத்திற்கும் போராட்டம் ஏற்படுகிறது. ஆனால் இதை நாம் இப்போது செய்யாவிட்டால், இந்தியாவில் விவசாயமே அழியும் ஆபத்தில் இருக்கிறது. உங்கள் குழந்தைகள் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமென நீங்கள் விரும்புறீர்களா? என விவசாயிகளிடம் கேளுங்கள். அதில் விரும்புகிறேன் என்று 2 முதல் 5 சதவீத பதில்தான் வரும். இது நாட்டிற்கு நல்லதல்ல, விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்கவேண்டும்.

குறிப்பு: இக்கட்டுரை தேசிய விவசாயிகள் தினத்தை (டிச.23) முன்னிட்டு பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியாகியது.

WhatsApp Image 2018-12-22 at 09.52.54