விரும்பியவற்றைச் செய்யும் ஆற்றல் தரும் மூலாதார சக்கரம்!
இந்தப் புது யுகத்தில் அனஹதா, சஹஸ்ராரம், ஆக்ஞா சக்கரங்களைப் பற்றி மக்கள் அதிகம் பேசுகிறார்கள். ஆனால், எல்லா சக்கரங்களுக்கும் கீழே உள்ள மூலாதாரம் பற்றி பேச்சுக்கள் அடிபடுவதில்லை. கவனிக்காமல் விடுபடும் இந்தச் சக்கரம் ஒரு சாதகரின் மேல் ஏற்படுத்தும் தாக்கமென்ன என்பது பற்றி சத்குரு இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.
 
 

இந்தப் புது யுகத்தில் அனஹதா, சஹஸ்ராரம், ஆக்ஞா சக்கரங்களைப் பற்றி மக்கள் அதிகம் பேசுகிறார்கள். ஆனால், எல்லா சக்கரங்களுக்கும் கீழே உள்ள மூலாதாரம் பற்றி பேச்சுக்கள் அடிபடுவதில்லை. கவனிக்காமல் விடுபடும் இந்தச் சக்கரம் ஒரு சாதகரின் மேல் ஏற்படுத்தும் தாக்கமென்ன என்பது பற்றி சத்குரு இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.

சத்குரு:

கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பின் கருவில் இருக்கும் மனித உடலை பார்த்தால், சின்னஞ்சிறிய சதைப்பிண்டமாகத்தான் இருக்கிறது. அந்தச் சிறிய சதைப்பிண்டம் இன்று நாம் வளர்ந்திருக்கும் அளவுக்கு தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. குறிப்பாக, தன்னை இதுபோல் ஆக்கிக் கொள்ளும், குறிப்பிட்ட மென்பொருளை பிராணமய கோஷம் அல்லது சக்தி உடல் என்று அழைக்கலாம்.

கருவுற்ற பெண் அதிர்வுமிக்க, முழுமையான சக்தி உடலை கொண்டிருந்தால், திறமைசாலியான மனித உயிரை அவள் ஈன்றெடுப்பாள்.

சக்தி உடல் உருவான பிறகு, அதன் அடிப்படையில் சரீர உடல் உருவாகிறது. சக்தி உடலில் ஏதேனும் திரிபு இருந்தால் அது சரீரத்திலும் வெளிப்படும். அதனால்தான், இந்தக் கலாசாரத்தில் ஒரு பெண் கருவுறும்பொழுது, அவளுடைய சக்தி உடலின் மீது தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அவள் கோவிலுக்கு செல்வது, பெரியவர்களிடம் ஆசி பெறுவது போன்ற செய்கைகளில் ஈடுபடுத்தப்பட்டாள். கருவுற்ற பெண் அதிர்வுமிக்க, முழுமையான சக்தி உடலை கொண்டிருந்தால், திறமைசாலியான மனித உயிரை அவள் ஈன்றெடுப்பாள்.

மூலாதாரம் - அஸ்திவாரம் அவசியம்

சக்தி உடலின் அஸ்திவாரம் மூலாதாரம். இது கீழ்நிலையிலான சக்கரம், அதனால் அதனை குறித்து எதுவும் செய்யத் தேவையில்லை என்று மக்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். அஸ்திவாரத்தை கவனிக்க வேண்டாம் என்று நினைப்பவர் நிச்சயம் முட்டாள்தான். அஸ்திவாரம் மிக முக்கியமான ஒன்று. யோகா செய்யும்பொழுது மூலாதாரத்தில் நாம் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். இதை உறுதிப்படுத்தினால், பிறவற்றை உருவாக்குவது எளிது.

அஸ்திவாரம் உறுதியாக இல்லாத கட்டிடத்தை நிலைநிறுத்த முயற்சி செய்வது, தினசரி சர்க்கஸ் செய்வதைப் போல் இருக்கும். பெரும்பாலான மனிதர்களின் வாழ்விலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவிலான சமநிலையில், நல்வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது பலருக்கும் சர்க்கஸ் செய்வது போலத்தான் ஆகிவிட்டது. ஆனால், உங்கள் மூலாதாரம் நிலையாக இருந்தால் வாழ்வோ, சாவோ நீங்கள் சமநிலையுடன் இருப்பீர்கள். காரணம், உங்கள் அஸ்திவாரம் வலுவாக இருக்கிறது, பிறவற்றை பின்னர் சரி செய்து கொள்ளலாம். ஆனால், உங்கள் அஸ்திவாரம் உறுதியாக இல்லாதபோது, கவலையே மிஞ்சி நிற்கும்.

அனுபவ வேட்டையில் ஏற்படும் ஆபத்துகள்

அருள் தன்னை நமக்கு வழங்க வேண்டுமென்றால், அதற்கு உகந்த உடல் உங்களிடம் இருப்பது அவசியம். தகுந்த உடல் இல்லாத பட்சத்தில், அருள் உங்கள் மீது பொழிந்தால், நீங்கள் ப்யூஸ் (fuse) போய் விடுவீர்கள். ஆழமான அனுபவங்கள் வேண்டும் என்று பலபேர் விரும்பினாலும், தன் உடலையும் அந்த நிலைக்கு உகந்தாற் போல் மாற்றிக் கொள்ள அவர்கள் முயல்வதில்லை. இந்த அனுபவ வேட்டையில், தன் உடல் நொந்து, புத்தி பேதலித்து போன பலரையும் இவ்வுலகில் நம்மால் காண முடிகிறது.

யோகாவில் நீங்கள் அனுபவத்தின் பின் போவதில்லை, மாறாக அனுபவத்திற்கு உங்களைத் தயார் செய்வது அவசியம்.

யோகாவில் நீங்கள் அனுபவத்தின் பின் போவதில்லை, மாறாக அனுபவத்திற்கு உங்களைத் தயார் செய்வது அவசியம். ஆதியோகியின் முதல் ஏழு சீடர்களான சப்தரிஷிகளும் இப்படித்தான் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். 84 வருடங்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டே இருந்தனர். அவர்கள் எதையும் யாசிக்கவில்லை. அவர்கள் நிலையைக் கண்ட ஆதியோகி, தன் அருளை முழுமையாக அவர்களுக்கு வாரி வழங்கினார். ஆனால், இன்றைய உலகம் எப்படி இருக்கிறது தெரியுமா? "சத்குரு 2 நாட்கள் நான் இங்கு இருக்கப் போகிறேன், எனக்கு ஞானோதயம் வழங்க முடியுமா?" எனக் கேட்கிறார்கள்.

யோக முறைகள் எப்பொழுதும் மூலாதார சக்கரத்தில் கவனம் செலுத்துகின்றன. சமீப காலமாகத்தான், பயிற்சியே இல்லாத யோகிகள் தங்கள் புத்தகங்களில், மேலே உள்ள சக்கரங்களில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லி வருகின்றனர். இந்த மேலே கீழே விஷயம் புத்தகம் படிக்கும் மனங்களில் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால், வாழ்க்கை இவ்விதத்தில் வேலை செய்வதில்லை. சில வருடங்களுக்கு முன் நான் 2 அல்லது 3 நாள் ஹடயோகா வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன். வெறுமனே ஆசனங்கள் செய்வதன் மூலமே, மக்கள் வெடித்து பரவச நிலையில் சிரிப்பார்கள், அழுவார்கள். பல யோகிகள் தங்கள் தடைகளை உடைக்க, சில எளிய ஆசன நிலைகளைப் பயன்படுத்துவார்கள். ஹடயோகா வேலை செய்வது இப்படித்தான்.

யோகா என்றால் சமநிலை. சமநிலை என்றால் தெளிந்த புத்தி என்று அர்த்தமில்லை. உங்கள் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டுமென்றால், உங்களுக்குள் கொஞ்சம் பித்துநிலை இருப்பது அவசியம். ஆனால், பலவந்தத்தினால் நீங்கள் பைத்தியமனால், வாழ்க்கையை முழுமையாக தொலைத்து விடுவீர்கள்.

நான் சமநிலை பற்றி பேசும்பொழுது தெளிந்த புத்திநிலையைப் பற்றிப் பேசவில்லை. தெளிந்த புத்திநிலைக்கும், பைத்தியக்காரத்தனத்துக்கும் இடையே உள்ள அந்த நிலையைக் கண்டறிந்து அதில் நுழைந்து, சாகசம் செய்வதைப் பற்றி பேசுகிறேன். பித்துநிலை என்பது ஒரு சாகசம். கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பித்துநிலை என்பது ஒரு அற்புதமான விஷயம். கட்டுப்பாட்டினை இழந்தாலோ அது அசிங்கமாகிவிடும். அதுபோல, தெளிந்த புத்தியும் அழகான விஷயம்தான், ஆனால் முழுமையான நிதானத்துடன் இருந்தால், இறந்து போனவருக்கும் உங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருக்காது. நீங்கள் விரும்பியவற்றில், நீங்கள் விரும்பிய போதெல்லாம் நுழைந்து, சாகசம் செய்யும் ஆற்றல் உங்களுக்கு கிட்ட, உங்கள் மூலாதாரம் உறுதியுடன் இருப்பது அவசியம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1