ரெடி, ஒன், டூ, த்ரி... விளையாடலாம் வாங்க!
தனது வாழ்வில் விளையாட்டு என்பது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதையும், விளையாடும்போது ஒருவரின் உடல் மற்றும் மன நிலைகளில் நிகழும் அற்புத மாற்றங்களையும் சத்குரு இந்தப் பதிவில் சில சுவாரஸ்ய நிகழ்வுகளைக் கூறி விளக்குகிறார்!
 
 

சத்குரு:

உடல் நலத்துக்கு மிக முக்கியமான ஓர் அம்சம் விளையாட்டு. என்னுடைய பள்ளிப் பருவத்தில், நான் விளையாடாத விளையாட்டே இல்லை எனலாம். கயிற்றைப் பிடித்து மேலே ஏறுவது, உடலை வளைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ், குத்துச் சண்டை, கபடி, பாட்மின்ட்டன் என்று எதையும் விட்டுவைக்கவில்லை.

சிறுவனாயிருந்தபோது யார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாலும் போய் கலந்துகொள்வேன். பேட் செய்ய விடமாட்டார்கள். ஆனால், ஃபீல்டு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதிலேயே சந்தோஷம்கொள்வேன்.

இன்றைக்குக்கூட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், நானாகவே போய் அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்துகொள்வேன்.

கல்லூரி வந்த பிறகு, ஹாக்கி குழுவில் இடம் பெற்றேன். அந்த வயதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்துவதிலும், பறப்பதிலும் இருந்த ஆர்வம் மற்ற விளையாட்டுகளில் இருந்த ஆர்வத்தைவிட அதிகமாயிருந்தது. சில நிமிடங்கள் காற்றில் பறப்பதற்கு பலமணி நேரங்கள் தயார் செய்துகொள்ள வேண்டும்.

எனக்கு இருபத்தியிரண்டு வயது இருக்கும். ஒருமுறை நீலகிரி மலைகளிலிருந்து கிளைடரில் பறந்தேன். எங்கோ வெகுதொலைவில் தரை இறங்கினேன். சூரியனை வைத்து திசையை அனுமானித்து அங்கிருந்து நடந்தேன், நடந்தேன். இரவு பகலாகக் காடுகளில் பல கிலோமீட்டர்கள் நடந்தேன்.

கையோடு எடுத்துப் போயிருந்த ஒரே ஒரு சாண்ட்விச்சைப் புசித்தேன். பசி அடங்கவில்லை. அங்கங்கே ஒன்றிரண்டு கிராமங்கள் தட்டுப்பட்டன. அங்கே இருந்தவர்கள் தமிழைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை. எனக்கோ அப்போது தமிழ் தெரியாது.

எப்படியோ ஒரு டீ கடையைக் கண்டுபிடித்தேன். அங்கே சுடச் சுட இட்லிகள் தயாராகிக்கொண்டிருந்தன. எனக்கு இருந்த பசிக்கு இருபத்தைந்து இட்லிகள் உள்ளே போகும் போலிருந்தது. என் கையிருப்பைப் பார்த்தேன். நான் கண்டுபிடிக்கப்பட எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாத நிலையில் எல்லாப் பணத்தையும் செலவு செய்ய முடியாது என்று ஒன்றரை ரூபாய் கொடுத்து இரண்டே இரண்டு இட்லி வாங்கிச் சாப்பிட்டேன்.

என் குழுவினர் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் கழித்துத்தான் என்னைக் கண்டுபிடித்தார்கள். ஆனாலும், என் பறக்கும் ஆசை குறையவில்லை.

இறுகிப்போன இதயங்களோடு இருக்கும் கடினமான சிறைக் கைதிகளைக்கூட விளையாட்டு இயல்பு நிலைக்குக் கொண்டுவந்ததைக் கண்கூடாகப் பார்த்தவன் நான்.

முதன்முறை கைதிகளைச் சந்திக்க அனுமதி கிடைத்து, சிறைக்குள் காலெடுத்து வைத்தபோதே காற்றில் ஒரு தீராத வேதனை கனமாகத் தொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். கிட்டத்தட்ட இருநூறு கைதிகளை விளையாட்டு மைதானத்துக்கு வரச் சொன்னேன்.

"வகுப்பு எடுக்க வரவில்லை. உங்களுடன் பந்து விளையாட வந்திருக்கிறேன்" என்றேன். அவர்கள் முகங்களில் மாற்றம் தெரிந்தது. விளையாட்டு துவங்கியது. முதலில் தயக்கத்துடன் கலந்துகொண்டவர்கள்கூட பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே தங்களை மறந்தார்கள். விளையாட்டில் முழுமையாக ஈடுபட்டு, இரைச்சலிட்டுக்கொண்டும், குதித்துக்கொண்டும் குழந்தைகள் போல் ஆகிவிட்டார்கள். விளையாட்டு முடிந்து நான் புறப்படத் தயாரானபோது, "போகாதீர்கள்" என்று பலர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் உகுத்தார்கள். விளையாட்டின் மேன்மை அது.

சங்கரன்பிள்ளை தன் நண்பர் வீட்டுக்குப் போனார். அங்கே நண்பர் தன் நாயுடன் அமர்ந்து செஸ் விளையாடிக்கொண்டிருந்தார்.

"அட, இவ்வளவு புத்திசாலித்தனமான நாயை நான் பார்த்ததேயில்லை"என்றார், சங்கரன்பிள்ளை திகைத்துப்போய்.

"நீ நினைப்பது போல் இது ஒன்றும் அவ்வளவு புத்திசாலி அல்ல. பத்து முறை விளையாடியதில் என்னிடம் மூன்று முறை தோற்றுவிட்டது.." என்றார், நண்பர்.

வேடிக்கைக் கதையாக இருக்கலாம். ஆனால், விளையாட்டில் சிலமுறை தோற்றாலும் தொடர்ந்து விளையாடும் உறுதி தேவை என்பதை அந்த நாயிடமோ, நண்பரிடமோ கற்றுக்கொள்ளலாம்.

விளையாட்டில் அதுதான் முக்கியமான அம்சம். வெற்றி பெற வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், தோல்வியையும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டிருந்தால்தான் விளையாட்டு முழுமையாக இருக்கும். விளையாடும்போது, முழுமையான கவனம் விளையாட்டில் இருக்க வேண்டுமே அன்றி அதன் முடிவில் இருக்கக்கூடாது.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், முழுமையாக உங்களை அதில் ஆழ்த்தித் தீவிரமாக ஈடுபட்டால் அன்றி, அது உங்களுக்கு நிறைவைக் கொண்டுவராது. வேலை செய்யும் இடம் என்று மட்டுமல்ல, உங்கள் பெற்றோரிடத்தில், மனைவியிடத்தில், கணவரிடத்தில், குழந்தைகளிடத்தில் முழுமையான ஈடுபாடு வைக்கவில்லை என்றால், வாழ்க்கையே நீங்கள் தெரியாமல் சிக்கிக்கொண்ட ஒரு பொறியாகிவிடும். ஈடுபாடு வைத்தால், அது சொர்க்கம். ஈடுபாடு இல்லையென்றால், அதுவே நரகம்.

முழுமையான ஈடுபாடு இல்லாமல் நீங்கள் ரசித்த அம்சம் ஒன்றே ஒன்று இருக்கிறதா சொல்லுங்கள். உங்கள் மனதையும் உடலையும் முழுமையாக ஈடுபடுத்தாமல், நீங்கள் பெற்ற வெற்றிகள் ஏதாவது இருக்கிறதா என்று யோசியுங்கள்.

நீங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், உங்கள் வெற்றியைப் பெரும்பாலும் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம் என்ன? உங்கள் உடலையும் மனதையும் எந்த அளவுக்கு உங்களால் ஆளுமையில் வைத்திருக்க முடிகிறது என்பதுதான் மிக அவசியமான அம்சம். விளையாட்டும் அப்படித்தான்.

ஒரு தலைவனுக்கு உரிய அம்சங்கள் என்னென்ன? செய்வதில் முழுமையாக ஈடுபட வேண்டும். குறைவின்றி தன் பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும் தோல்வியால் துவண்டு போகாமல், மறுவாய்ப்பு கிடைத்ததாக நினைத்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை வேண்டும்.

வாழ்க்கையின் மிக எளிதான அம்சம் அதுதான். உங்கள் அகம் முழுமையாக அமைதி அடைந்துவிட்டால், வெற்றியோ, தோல்வியோ வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் எளிதாகத் தோன்றும். வாழ்க்கையே போராட்டமின்றி எளிமையாக நடக்கும். உள்ளே அமைதியாக இல்லையென்றால், ஒவ்வொன்றும் கடினமாகத் தோன்றும். சிறு சிறு விஷயம்கூட சிக்கலாகத் தோன்றும். இவை எல்லாமே விளையாட்டிலும் காணப்படும் அம்சங்கள்தாம்.

ஈஷா நடத்திய கிராமோத்சவ விளையாட்டுக்களில் இதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. கிராமோத்சவத்தில் கிட்டத்தட்ட முன்னூறு குழுக்கள் விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள். மூன்று லட்சம் மக்களுக்கு மேல் பங்குகொண்டனர்.

கிராமத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவே தயங்கிக்கொண்டிருந்த பலர் விளையாட்டுக்களில் ஈடுபட்டபோது, தங்கள் அணியை வழிநடத்த தாங்களாகவே முன்வந்தார்கள். அவர்களுக்குள் புதைந்து கிடந்த திறமை வெளிப்பட்டது.

இன்னொரு விஷயம், விளையாட்டில் மற்றவரை உங்களுடன் சேர்த்துக்கொண்டு உள்ளடக்கிக்கொள்ளும் தன்மை இருக்கிறது. உங்கள் அணியினர் என்று அடுத்தவரை விருப்பு வெறுப்புகளைக் கடந்து சேர்த்துக்கொள்கிறீர்கள். அனைவரும் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒரே நோக்கமாக ஒரே இலக்கை மனதில் இருத்திச் செயல்படுகிறீர்கள். மற்றவரை உங்களுடன் சேர்த்துக்கொள்ளும் தன்மையே ஒரு நல்ல சமூகம் அமைவதற்கான அடிப்படை அல்லவா?

ஆயிரம் மணி நேரங்கள் ஆன்மிக போதனைகள் செய்வதைவிட, பல கடவுள்கள் பெயர் சொல்லி மதப் பிரச்சாரம் செய்வதைவிட, ஒரு மணி நேரம் விளையாட்டில் ஈடுபடுத்தினால், ஒரு சமூகம் இன்னும் தங்களை அழுத்தமாகப் பிணைத்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
விளையாட்டின் மிகப் பெரிய அம்சம் என்ன? அதில் அரைமனதாக ஈடுபட முடியாது. உடலையும் மனதையும் கூர்மையாகப் பயன்படுத்த விளையாட்டு ஒரு வாய்ப்பு.
மைதானத்தில் விளையாடும் எந்த விளையாட்டானாலும், உங்கள் உடலும், மனமும் முழுமையாக அதில் ஆழ்ந்திருந்தால்தான் ஒழுங்கான விளையாட்டு நேரும். இல்லையென்றால், நரகமாகிவிடும்.

ஒரு பந்தைத் தூக்கி எறிய வேண்டுமானாலும்கூட அதில் முழுமையான ஈடுபாடு இல்லாவிட்டால், அது எளிதாக நேராது. நீங்கள் விரும்பிய இடத்துக்கு விரும்பிய வேகத்தில் அது போய்ச் சேர வேண்டுமானால், அதை எறிவதன் பின்னே ஒரு விஞ்ஞானம் இருக்கிறது.

வாழ்க்கையும் விளையாட்டு போல்தான். தீவிரமும், ஈடுபாடும்தான் ஒரு வாழ்க்கையை முழுமையாக்கத் தேவை. அரைகுறையாக வாழ்ந்தால், அது சித்திரவதை.

உடலையும் மனதையும் கூர்மையாக வைத்துக்கொள்வதற்கும், செய்வதில் முழுமையான ஈடுபாடுகொள்வதற்கும் ஆதாரமாக இருப்பதால்தான், பொதுவாகவே விளையாட்டு என்னை மிகவும் வசீகரிக்கிறது.

ஆரோக்கியத்துக்கு ஆதரவான விஷயங்களைத் தெரிந்துகொண்டது போல், உடல்நலத்துக்குக் கேடான சில விஷயங்கள் பற்றியும் நீங்கள் அறிவது நலம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1