திருநீறு என்று அழைக்கப்படும் விபூதியானது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதன் மகத்துவம் என்ன, இதை உடலில் எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானப்பூர்வமாக எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை...

சத்குரு:

விபூதியை நாம் பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம். அதுமட்டுமல்லாமல், நம் உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும் நாம் விபூதியை பயன்படுத்த முடியும். இது தவிர, இதை நம் உடலில் வைத்துக் கொள்வது, நம் நிலையற்ற தன்மையை நமக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாகவும் இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் நாம் இறக்க நேரிடும். இறந்துவிட்டால், இந்தச் சாம்பல் தான் மிஞ்சும் என்று தொடர்ந்து நம் நினைவில் இருக்கச் செய்யும்.

யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள்.

யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள். அப்படிப் பயன்படுத்த முடியாது என்றால், அதற்கு ஒரு மாற்றாக பசுவின் சாணத்தை உபயோகிக்கலாம். அத்துடன் வேறு சிலவற்றையும் கலந்து தான் விபூதி செய்வோம் என்றாலும், அடிப்படைப் பொருள் பசுவின் சாணம் தான். இந்த சாம்பலையும் உபயோகிக்க முடியவில்லை என்றால், அடுத்ததாக அரிசியின் உமியைக் கொண்டு தயாரித்த விபூதியை பயன்படுத்தலாம். இது, உடல் என்பது பிரதானம் அல்ல, அது வெறும் உமி என்பதை குறிக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாம் ஏன் விபூதி பயன்படுத்த வேண்டும்?

துரதிருஷ்டவசமாக, பல இடங்களில் போலியான விபூதி வியாபாரம் தலைதூக்கிவிட்டது. விபூதியை சரியாகத் தயாரிக்காமல், ஏதோ வெள்ளைக் கல்லை பொடியாக அரைத்து, அதை விபூதி என்ற பெயரில் வியாபாரம் செய்கிறார்கள். விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இதை உங்கள் உடலில் நீங்கள் எங்கு வைக்கிறீர்களோ, அவ்விடத்தின் கிரகிக்கும் திறன் அதிகரித்து, நீங்கள் உயர்ந்த பரிமாணத்தை நோக்கிச் செல்ல வழிசெய்கிறது. அதனால், காலையில் நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன், விபூதியை உங்கள் உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் பூசிக் கொண்டால், அது, உங்களை சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை நீங்கள் உள்வாங்கக் கை கொடுக்கும்; தீயவற்றை அல்ல.

விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும்.

வாழ்வை நாம் ஏழு பரிமாணங்களில் உணர முடியும். இந்த ஏழு பரிமாணங்களைக் குறிக்கும் விதத்தில் நம் உடலின் சக்திநிலையில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. இந்த சக்கரங்கள், நம் சக்தி உடலின் சந்திப்பு மையங்கள். இவை மிகவும் சூட்சுமமானவை. இவை கண்களுக்கு புலப்படாது. அனுபவப்பூர்வமாக இந்தச் சக்கரங்களை நாம் உணர முடியுமே தவிர, உடலை இரண்டாக வெட்டி பார்த்தால் இவற்றைப் பார்க்க முடியாது. உங்கள் சக்தி மேன்மேலும் தீவிரமாகும் போது, இயற்கையாகவே உங்கள் சக்தி ஒரு சக்கரத்திலிருந்து அடுத்த சக்கரத்திற்கு உயரும். சக்தியின் தீவிரத்தைப் பொறுத்து தான் நாம் வாழ்வை உணரும் விதம் அமைகிறது. உயர்நிலை சக்கரங்கள் வழியே நாம் வாழ்வை உணர்வதற்கும், அடிநிலை சக்கரம் வழியே வாழ்வை உணர்வதற்கும், சூழ்நிலை ஒன்றாகவே இருந்தாலும், நம் அனுபவம் பெரிதும் வித்தியாசப்படும்.

விபூதியை எப்படி பூசிக்கொள்வது?

விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், உங்கள் உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி என்று சொன்னால், அது உங்கள் மோதிர விரல்தான். அதிகபட்ச நன்மைகளைப் பெற, விபூதியை நீங்கள் உங்கள் உடலில் இட்டுக்கொள்ள வேண்டிய இடங்கள், புருவமத்தி, தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதி. இவ்விடங்களில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் என்பதை காலம்காலமாக இந்தியாவில் அறிந்திருக்கிறார்கள். இவ்விடங்களில் விபூதி இட்டால், இவ்விடங்களின் உள்வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் கிடைக்கும் பலன்கள்:

1. அனாஹத சக்கரம் (விலா எலும்புகள் சேருமிடத்தில், நெஞ்சுக்குழியில்) - இவ்விடத்தில் விபூதி அணிந்தால், வாழ்வை அன்பாக உணர முடியும்.

2. விசுத்தி சக்கரம்
(தொண்டைக் குழி) - இவ்விடத்தில் விபூதியை பூசுவது உங்களை சக்திமிக்கவராக மாற்றும். சக்தி என்றால் உடலளவிலோ, யோசிக்கும் திறத்திலோ அல்ல. பல்வேறு வழிகளில் ஒரு மனிதன் சக்திசாலியாக இருக்க முடியும். உங்கள் சக்தி உறுதி பெறும்போது, மிக வலிமையாக இருக்கும்போது, நீங்கள் இருப்பதே ஒரு சூழ்நிலையை மாற்றும் வல்லமை கொண்டிருக்கும். நீங்கள் ஏதும் செய்யவோ பேசவோ கூடத் தேவையிராது. நீங்கள் சும்மா அமர்ந்திருந்தாலே அந்த சூழ்நிலை மாறிவிடும். இதுபோன்ற சக்தியாய் நீங்கள் வாழ்வை உணர, தொண்டைக்குழியில் விபூதி வைக்க வேண்டும்.

3. ஆக்ஞா சக்கரம்
(புருவமத்தி): - வாழ்வை ஞானமாகப் பெறுவதற்கு ஆக்ஞா சக்கரத்தில் விபூதி இட வேண்டும்.

4. இது தவிர, இரண்டு காதுமடல்களுக்குப் பின்னும் உள்ள எலும்பின் கீழ் இருக்கும், சிறு குழியிலும் விபூதி வைக்கலாம்.

5. ஆண்கள் விபூதியை உங்கள் வலது கால் பெருவிரலிலும் வைக்கலாம்.

பெண்கள் விபூதியை உங்கள் இடது கால் பெருவிரலில் வைக்கலாம்.

விபூதியைப் பயன்படுத்துவது ஒரு ஆழமான விஞ்ஞானம். ஆனால் இன்றோ, அதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல், நெற்றியில் வெறுமனே பட்டையிட்டுக் கொள்கிறோம். இது போதாதென்று, ஒரு வகையில் பூசிக் கொள்பவன், வேறு விதத்தில் பூசிக் கொள்பவனுடன் ஒத்துப்போக மாட்டான். இது முட்டாள்த்தனம். விபூதியை சிவனோ, இந்தக் கடவுளோ, அந்தக் கடவுளோ கொடுத்ததல்ல. இது மூடநம்பிக்கையும் அல்ல. நம் இந்தியக் கலாச்சாரத்தில், ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதியை ஒரு கருவியாகப் பார்த்தார்கள். இந்த விஞ்ஞானத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து, நாம் பயன்பெறுவோமாக.