4 நாட்களுக்கு முன் தேசிய ஊடகங்கள் சத்குருவை ஜல்லிக்கட்டு குறித்து பேட்டியெடுத்தன. அவற்றை தொகுத்து தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம்...

Question: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதை எதிர்த்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமிழ்நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தங்கள் கருத்து என்ன?

சத்குரு:

இதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பை நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது காளைகளை மோதவிட்டுப் பார்க்கும் சண்டை கிடையாது. காளைகளை கொண்டாடும் திருவிழா. விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற ஒரே திருவிழா.

பிற மாநிலங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில் பொங்கல் என அழைக்கப்படுகிறது. மாட்டுப் பொங்கல், நிலத்தில் உழுது நிலத்திற்காக உழைக்கும் விலங்குகளுக்காக கொண்டாடப்படுகிறது. விவசாய சமுதாயங்களில், விலங்குகள் உடல் உழைப்பினை நல்கும் கூட்டாளிகளாகவே இருக்கிறார்கள். விலங்குகளும் மனிதர்களுடன் சேர்ந்தே உழைக்கின்றன, அறுவடையின் ஒரு பகுதி பல விதங்களில் அவற்றையும் சென்றடைகின்றன.

நாம் விவசாயம் சார்ந்த ஒரு சமூகமாய் இருப்பதால், நமக்கும் நிலத்தில் உழைக்கும் விலங்குகளுக்கும் மிகத் தொன்மையான உறவு உள்ளது. இன்றும் 65 சதவிகித மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நேரத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழங்காலத்தில் முரட்டுத்தனமான காளைகளை அடக்கும் வீரவிளையாட்டாக இருந்த ஜல்லிக்கட்டு, இன்றைய சூழ்நிலையில் அதுபோன்ற காளைகள் இல்லாததால் சற்று மென்மையான வடிவத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரே நாளில் ஒரு டஜன் காளை மாடுகள் கொல்லப்படும் ஸ்பெயின் நாட்டின் காளை சண்டையைப் போன்றதல்ல இது.

இதன் தொன்மையை பரைசாற்று விதமாய், நீலகிரிப் பகுதியிலுள்ள குகைகளில் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு சித்திரங்கள் உள்ளன. 5000 ஆண்டு பழமையான சிற்பங்கள் உள்ளன.

Question: ஆனால், நீதிமன்றத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஆதாரத்தை வைத்துப் பார்க்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு விதிமுறைகளை மீறி, சூழ்நிலைகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. கண்களிலும் மலவாயிலும் மிளகாய்த்தூள் தேய்க்கப்பட்டு, கூர்மையான பொருட்களால் குத்தப்பட்டு காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்கிறார்களே...

சத்குரு:

ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நன்மைக்காக வழங்கப்படுவதை தவறாகப் பயன்படுத்துவது நடக்கத்தான் செய்கிறது. இதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தொன்மையான இந்த வழக்கத்தை முறையாக நடத்துவதற்கு விதிமுறைகள் உள்ளன, அவை பின்பற்றப்பட்டால் போதும்.

சிலர் செய்த குற்றத்துக்காக 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கலாச்சாரத்தை அப்படியே வேருடன் அழித்துவிட முடியாது. நம் நாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு பாதுகாக்கிறது.

ஜல்லிக்கட்டில் ஜெயிக்கும் காளைகளே இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தப்பட்டன. இன்றும் இது வழக்கத்தில் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான காளைகள் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அவற்றுடன் விளையாடுவது தவறு, வெட்டிக்கொல்வது மட்டும் மனிதாபிமானமா?

மிளகாய்த்தூள் தேய்ப்பது, குத்துவது போன்ற செயல்களில் ஒரு சிலர் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது. அதனை கட்டுப்படுத்துவது அவசியம், அதே சமயத்தில், சில இடங்களில் இந்த தவறு நடந்திருப்பதால் எல்லா இடங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என்ற முடிவுக்கு வருவது சரியல்ல.

Question: கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களின் படி, பல மனிதர்கள் இறந்துள்ளார்கள், காயமடைந்துள்ளார்கள். காளைகளுக்கும் காயம் ஏற்படுகிறது, இறப்பும் நேர்ந்திருக்கிறதே...?

சத்குரு:

விலங்குகளுக்கு யாரோ ஒருசிலர் கொடுமைகள் செய்வதை மிகச் சுலபமாக தடுத்துவிடலாம். நான் பல ஜல்லிக்கட்டுகளை நேரில் பார்த்திருக்கிறேன், பெரும்பாலான கிராமங்களில் கொடுமைகள் இல்லை. சில இடங்களில் போட்டி மனப்பான்மை மிகுந்துவிட்டதால், ஒருசிலர் மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டாயம் இதனை நெறிப்படுத்த வேண்டும். ஆனால், கசாப்புக் கடைகள் மனிதாபிமானம் மிகுந்த இடமல்ல. அனைத்திற்கும் மேலாக, நமது வாழ்க்கையையும், நமது பயிர்களையும், நமது உணவையும் உருவாக்குவதில் நமக்கு கூட்டாளியாக இருக்கும் விலங்குகளை கட்டாயம் இப்படி நடத்தக்கூடாது.

Question: விலங்குகளை, ஒன்று வீரவிளையாட்டு எனும் பெயரில் கொடுமைப்படுத்துகிறோம், அல்லது கசாப்புக் கடைக்கு அனுப்புகிறோம், இது அந்த விலங்கின் பரிதாபமான நிலையை அல்லவா குறிக்கிறது?

சத்குரு:

ஏதோவொன்றிற்கு சமுதாய நிலையிலோ, பொருளாதார ரீதியிலோ, கலாச்சார அமைப்பிலோ மதிப்பு இல்லாவிட்டால் அதை பாதுகாக்க முடியாது என்பதுதான் நம் நாட்டில் நிலவிவரும் யதார்த்தமான உண்மை. இப்படியொரு மதிப்பு ஏற்படுத்தப்படாத பட்சத்தில், அந்த இனத்தையே அழித்துவிடுவீர்கள்.

100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 120 நாட்டு மாடு வகைகள், இப்போது 37 ஆக குறைந்துவிட்டது. இதுவும் மறைந்துவிடுவதற்கு எவ்வளவு காலமாகும் என்று நினைக்கிறீர்கள்? வெகு சீக்கிரத்தில் காணாமல் போய்விடும். ஜல்லிக்கட்டு நடக்கும் ஒரு காரணத்திற்காகவாவது, நாட்டு மாடுகளை பாதுகாத்து வருகிறார்கள்.

மனிதர்கள் இதயத்தில் இடம் பிடித்திருப்பதை நினைத்த மாத்திரத்தில் அழித்துவிட முடியாது. கிராம இளைஞர்களுக்கு கால்பந்து விளையாட மைதானங்களும், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் அரங்கங்களும் முறையாக வழங்கப்படும் வரை, ஒரு இளைஞரின் துடிப்புக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படுவதை நீங்கள் வழங்கும்வரை, தயவுசெய்து ஜல்லிக்கட்டை அவர்களிடமிருந்து அபகரித்துவிடாதீர்கள். கிராம இளைஞர்கள் என்னதான் செய்வார்கள்? கிராமத்து இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டுதான்.

Question: அப்படியானால் விதிகளை மீறி காளைகளை காயப்படுத்தி இறக்கும் நிலைக்குத் தள்ளுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? பாரம்பரிய விளையாட்டு என்று சொல்லி விலங்குகள் மீது கொடுமைகள் புரிபவர்களை காவலர்களும் விட்டுவிடுகிறார்கள்.

சத்குரு:

ஊர் பஞ்சாயத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் இதில் ஈடுபடுத்தி, சில விதிமுறைகள் பின்பற்றப்படும் விதமாக பார்த்துக்கொண்டால் போதும். இதற்கு புதிய விதிமுறைகள் தேவையில்லை. தெளிவான விதிகள் வகுத்து, அரசு நிர்வாகம் இதில் ஈடுபட்டு விலங்குகள் கொடுமைப்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்வது நல்ல தீர்வாக இருக்கமுடியும். நடைமுறையில் இது சாத்தியம்தான்.

பாரம்பரிய விளையாட்டில் காளை மீது மிகுந்த அக்கறை இருக்கும், ஏனென்றால் ஜல்லிக்கட்டுக்குப் பிறகு காளைமாடு வணங்கப்படுகிறது. இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது, உழுது உழைக்கிறது, கிராமத்தில் வெற்றிவாகை சூடிய வீரனாகுகிறது. காளை இறப்பதை எவரும் விரும்புவதில்லை. காளையை வளர்ப்பவர் அதன்மீது முதலீடு செய்திருக்கிறார்.

இளைஞர்களுக்கு சில சமயம் காயம் ஏற்பட்டிருக்கலாம், ஒருசில சமயம் மரணம் சம்பவித்திருக்கலாம். இளைஞர்களிடமிருந்து சாகசங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டால், கடைசியில் அவர்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கப் போகிறீர்களா? பாதுகாப்பாக இருப்பதால் மட்டுமே ஒரு மனிதர் ஆளாகுவதில்லை. வாழ்க்கையில் ஏதாவது சாகசம் தேவைப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: விலங்குகள் அநியாயமாக நடத்தப்படுவதை நீதிமன்றம் பார்த்ததால்தான் இந்த தீர்ப்பை தந்துள்ளது...

சத்குரு:

சமூக ஆர்வலர்களும் போராட்டங்கள் நடத்துபவர்களும் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதில் கைதேர்ந்தவர்களாக, அனுபவம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். தங்கள் தரப்பை சரியாக பதிவுசெய்திருக்கிறார்கள். மாடுகள் குறித்து விண்ணப்பம் செய்யும் விவசாயிகளுக்கு வாதிட தெரிவதில்லை. அவர்களுக்கு தங்கள் தரப்பு நியாயத்தை விளக்க மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Question: வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், நீதிமன்றத்தில் தங்கள் தரப்பை சரியாக வாதாடாதது மட்டுமே காரணமாக எப்படி நீங்கள் சொல்லமுடியும்?

சத்குரு:

மாநிலம் முழுதும் நடக்கும் ஜல்லிக்கட்டுகளை வீடியோ எடுத்து ஆதாரங்களை சமர்ப்பித்தால், இப்படிப்பட்ட சம்பவங்கள் பிற இடங்களில் நடப்பதில்லை என்பது கண்கூடாக தெரிந்துவிடும்.

சில இடங்களில் போட்டி மனப்பான்மை மிகுந்துவிட்டதால், ஒருசிலர் மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். கட்டாயம் இதனை நெறிப்படுத்த வேண்டும். ஆனால், கசாப்புக் கடைகள் மனிதாபிமானம் மிகுந்த இடங்களல்ல. அனைத்திற்கும் மேலாக, நமது வாழ்க்கையையும், நமது பயிர்களையும், நமது உணவையும் உருவாக்குவதில் நமக்கு கூட்டாளியாக இருக்கும் விலங்குகளை கட்டாயம் இப்படி நடத்தக்கூடாது.

பாரம்பரிய வழக்கத்தைப் போல், காளைகளைக் கொண்டாடும் விழாவாக இதனை நெறிப்படுத்த வேண்டும். பெருவாரியான இடங்களில், ஜல்லிக்கட்டு என்பது காளைகளைக் கொண்டாடும் விழவாகத்தான் இன்றும் இருக்கிறது. அதிக அளவில் பணம் வைத்து பந்தயம் கட்டியதால் சில ஒழுக்க மீறல்கள் நடைபெற துவங்கியிருக்கின்றன.

Question: இந்த விவாதமும் பிரச்சனையும் சில வருடங்களாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், எதனால் திடீரென இளைஞர்களும் பொதுமக்களும் தெருக்களில் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள் என நினைக்கிறீர்கள்?

MarinaProtests1

சத்குரு:

சென்னையில் இதற்காக நமது இளைஞர்கள் கூடியிருப்பதை பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அவர்கள் இந்த விளையாட்டினை விளையாடுவது கிடையாது, கிராம இளைஞர்களுக்காக அவர்கள் ஒன்றுமையுடன் களம் இறங்கியிருப்பதை காணும்போது மிகப் பெருமையாக இருக்கிறது.

திடீரென நடந்த விஷயமல்ல இது. ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டை காண லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இந்த வீரவிளையாட்டும், இதில் ஈடுபடுவதற்கு தேவையான உடல் உறுதியும் வீரமும் பாராட்டுதலுக்கு உரியதாய் இருக்கிறது. திடீரென அதற்கு தடைவிதித்தால், மக்கள் வெகுண்டு எழத்தான் செய்வார்கள்.

மாட்டுப் பொங்கலுக்கான திருவிழாவை ஜல்லிக்கட்டு இல்லாமல் கொண்டாடுவது எப்படி என்று மக்களுக்கு தெரியவில்லை. கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாய் ஜல்லிக்கட்டு இருக்கிறது. இயல்பான, மிக இயற்கையான வெளிப்பாடுதான் இது. திட்டமிடப்பட்ட போராட்டமல்ல.

நீங்கள் சொன்னதுபோல இதை நடத்துவது அரசியல் கட்சிகள் அல்ல, சமூக ஆர்வலர்கள் அல்ல, வாடிக்கையாக போராட்டங்களில் ஈடுபடும் ஏதொவொரு கூட்டமல்ல, இதில் ஈடுபடுவது பொதுமக்கள். லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். நம் கலாச்சாரத்தின் ஆணிவேர்களையே நாம் அறுத்துவிடக்கூடாது.

Question: அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இது அவசரச் சட்டம் மூலம் அனுமதிக்கப்பட வேண்டுமா?

சத்குரு:

உச்சநீதிமன்றம், ஜல்லிகட்டிற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மக்களுக்கு, தங்கள் தரப்பினை சரியாக வாதிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சட்டரீதியாக இதை எப்படி நடத்துவது குறித்த நுட்பங்கள் எனக்கு தெரியவில்லை.

எப்படியும் பொங்கல் முடிந்துவிட்டது. அடுத்த பொங்கலுக்குள் இதற்கு முறையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். 12 மாதங்கள், போதுமான நேரம் என்று நான் நினைக்கிறேன். எப்படியும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் யாரும் ஜல்லிக்கட்டு நடத்தப் போவதில்லை. அடுத்த ஜனவரி மாதத்தில்தான் நடைபெறும் என நினைக்கிறேன். அதற்குள், இதை தடைசெய்யக் கூடாது என்பது தெளிவாக்கப் படட்டும். இப்படிப்பட்ட தீர்ப்பு வழங்கினால், உச்சநீதிமன்றம் ஆணையிட்டாலும், அதை பொருட்படுத்தாமல் நாம் விரும்புவதைச் செய்வதற்கான வழியை, நாமே நம் நாட்டிற்கு வகுத்துக் கொடுப்பது போலாகிவிடும். இது நாட்டிற்கு நல்ல முன்மாதிரியல்ல.

Question: அப்படியானால், மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டும் என்கிறீர்களா?

சத்குரு:

சட்டரீதியாக எனக்கு இதன் நுட்பங்கள் தெரியாது. அரசு அல்லது நீதிமன்றம் இதை முடிவுசெய்யலாம். ஆனால், ஒரு தீர்வு கொண்டுவர 12 மாதங்கள் போதுமான நேரம் என்று நினைக்கிறேன்.

Question: சிலபல நூற்றாண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தை மறுப்பதற்காக சில அமைப்புகள் திட்டமிட்டு சதி செய்கிறது என்று கிசுகிசுக்கப்படுகிறது. நம்புகிறீர்களா?

சத்குரு:

ஒரு கலாச்சாரத்தின் உறுதியும் பெருமையும் மக்கள் மத்தியில் சில விஷயங்களை பேணிக்காத்து வருகிறது. கலாச்சாரத்தில் இந்த உறுதி இல்லாமல் அழித்துவிட்டால் அதனால் இலாபமடையக்கூடிய சில கூட்டத்தினர் இருக்கிறார்கள். இது எல்லாப் பக்கமும் இருக்கிறது, இது என் கருத்து கிடையாது. கலாச்சாரத்தின் பலம் பாதுகாக்கப்படுவது மிக முக்கியம். கிராமத்து இளைஞர்களுக்கு கலாச்சாரத்தின் பலம் இல்லாமல் நெஞ்சுரம் இருக்காது. ஒரு சமுதாயத்தின் கலாச்சார பலத்தை அழித்துவிட்டால், எல்லாம் உடைந்துவிடும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜனவரி மாதத்தில் மகர சங்கராந்தி அன்று ஜல்லிக்கட்டு விளையாட விரும்புகிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட தன்னை தயார்படுத்திக் கொள்ள தேவையிருப்பதால், இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அந்த இரு மாதங்களுக்கு குறைந்துவிடும். உடல் உறுதியுடன் இருப்பதற்காக ஓடத் துவங்குகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள். இளைஞர்கள் குடியைவிட்டு, விளையாட்டு வீரர்களாக மாற, மாதாமாதம் ஜல்லிக்கட்டு நடத்த நான் பரிந்துரைப்பேன்.

திட்டமிட்டு நடத்தப்பட்டால் கட்டாயம் இந்த விளையாட்டினை முறையாக நடத்தலாம். மக்கள் தங்களுடன் உழைக்கும் விலங்குகளுடன் விளையாடுவதில் என்ன தவறு இருக்கமுடியும். விவசாய சமுதாயங்களில் விலங்குகளை விலங்குகளாக பார்ப்பதில்லை, கூட்டாளிகளாகவே பார்க்கிறார்கள்.

Question: இதை தடை செய்வதால் இலாபமடையக் கூடியவர்கள் யார்?

சத்குரு:

நகரங்களில் வாழ்பவர்கள் காரிலும் பைக்கிலும் பயணம் செய்வதால், காளை சவாரி குறித்து அறிந்திருப்பதில்லை. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான உறவு என்னவென்பதை விவசாய சமுதாயங்களில் வாழாதவர்கள் புரிந்துகொள்வதில்லை. பெரும்பாலான வீடுகளில் மக்கள் வாழும் அதே வீட்டில் கால்நடையும் வாழ்கிறது.

ஒரு உயிரோட்டமான் உறவுமுறை நிலவுவதை புரிந்துகொள்ளாமல் இருப்பது, மேற்கத்திய சிந்தனையும் கண்ணோட்டமும் நம் மீது திணிக்கப்படுவதையே குறிக்கிறது. யதார்த்தத்தை உணராமல் இறக்குமதியாகும் மேற்கத்திய கருத்துக்களால் இவை யாவும் அரங்கேறுகின்றன.

Question: இதனை எதிர்க்கும் அமைப்புகள் வேறு பெரிய திட்டத்தின் அங்கமாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

சத்குரு:

மிகப்பெரிய சதித்திட்டம் என்று எனக்குத் தோன்றவில்லை, ஆனால் நிச்சயம் இவர்களின் போராட்டத்திற்கு நிதி எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு, சீனாவில் நடந்த ஒரு திருவிழாவில் அம்மக்கள் நாய்களை உண்டபோது, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்வலர்கள், "நாய்கள் எங்களுக்கு பிரியமானவை," என எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

நம் நாட்டினருக்கு பசுக்கள் மீது பிரியம். பசுக்களை உண்ணாதீர்கள் என்று நாம் சொன்னால் அவர்கள் கேட்பார்களா? இப்படி ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் அதற்கே உரிய நுட்பங்கள் உள்ளன. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

"பழங்காலத்தில் நாம் விலங்குகளை கொடுமைப்படுத்தினோம், இப்போதுதான் அவற்றை மதிக்கக் கற்றிருக்கிறோம்," என்ற எண்ணம் கொண்டிருக்கிறோம். அது முற்றிலும் தவறான ஒரு கருத்து. பழங்கால மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தில் விலங்குகள் சமமான பங்குவகித்தன என்பதை தெளிவாக புரிந்துகொண்டனர். எவரும் அவற்றை தவறாக நடத்தியது கிடையாது. இப்போதுதான் விலங்குகள் உண்பதற்கு மட்டுமே என நினைத்து அவற்றை காலணிகளாகவும் கைப்பைகளாகவும் மாற்றிவிட்டோம்.

நாம் எல்லாவற்றையும் விளைபொருளாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால், ஒருபோதும் நம் கலாச்சாரம் விலங்குகளை விளைபொருட்களாகப் பார்க்கவில்லை. அவற்றை நம் தினசரி வாழ்க்கையின் அங்கமாகவும், பொருளாதாரத்தில் கூட்டாளியாகவும், உணர்ச்சிநிலையில் உறவு பாராட்டியும் வாழ்ந்து வந்தோம். இந்த காளைகளை எவ்வளவு அன்பாக அக்கறையாக கவனித்துக் கொள்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். தமிழக கிராம இளைஞர்களுக்கு, ஃபார்முலா ஒன் போட்டிகளுக்கு சமமான ஒரு விளையாட்டு ஜல்லிக்கட்டு.

pongal_fest_isha-7

Question: காளைகள் வதைசெய்யப்படுவதை தடுக்கவேண்டும் என்று சொல்லும் அதே சமயத்தில் அவற்றை சித்தரவதை செய்யும் விளையாட்டு மட்டும் வேண்டுமா?

சத்குரு:

நான் மீண்டும் சொல்கிறேன், காளைகளுக்கு பெரிய அளவில் கொடுமை இழைக்கப்படுவதில்லை. ஏதோ சில இடங்களில் மட்டுமே அப்படி நடந்துள்ளது, அதை நாம் நிறுத்தவேண்டும். காளை வதையைப் பொருத்தவரை, நம் நாட்டில், 120, 130 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வது பெருஞ்சாதனை என்பதை நாம் அறியவேண்டும்.

மிக மோசமான வசதிகளுடன், தொழில்நுட்பத்தின் உதவியின்றி நம் விவசாயிகள் இதைச் செய்துள்ளார்கள். இதில் விலங்கின் பங்கு மிகப் பெரிது. ஆனால், டிராக்டர்களை கொண்டே உணவு உற்பத்தி செய்துவிடலாம் என நினைப்பது சரியல்ல. டிராக்டர்களால் மண்ணை வளப்படுத்த முடியாது. மண் வளத்தை நாம் அழிக்கிறோம்.

மண்ணில் அதிக விலங்குகள் இருப்பது மண்வளம் காப்பதற்கும், தேசம் காப்பதற்கும் மிக முக்கியம். நிலத்தில் விலங்குகள் இல்லாமல் போய்விட்டால், நம் மண்வளம் அழிந்துவிடும். இதற்கு சில முயற்சிகளை நான் எடுத்து வருகிறேன். நம்மை ஊட்டி வளர்க்கும் பூமியை "தாய்மண்" என்கிறோம், மண் நம் தாயைப் போல. ஆனால், அந்த மண்ணின் வளம் விலங்குகளின் பங்களிப்பு இல்லாமல் நலிவுறுவதால் அதில் விளையும் உணவிலுள்ள சத்தும் குறைகிறது.

இந்தியாவில் வெட்டப்படும் விலங்குகளை இங்கிருப்பவர்கள் உண்பதில்லை. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நம் தேசம் முதலிடம் வகிக்கிறது. இது வெட்கக்கேடான ஒரு விஷயம். நம் மண்ணை வளமாக்கியிருக்க வேண்டிய உயிர்களை நீங்கள் வேற்று தேசத்திற்கு வெட்டி அனுப்புகிறீர்கள். மிகப்பெரிய குற்றம் இது. இதற்கு தடையிட வேண்டும்.

ஜல்லிக்கட்டு பற்றி சத்குரு பேசிய வீடியோ பதிவுகள்:

ஜல்லிக்கட்டு பற்றி சத்குருவின் Tweets: