இந்தத் தேர்தல் என்றும் இல்லாத வகையில் மக்கள் மனதில் பெரிய அலையை எழுப்பி ஓய்ந்துள்ளது. வரும் 5 ஆண்டு காலத்திலாவது சாதாரண குடிமகனாகிய எனக்கு நன்மை விளையாதா, நான் மாற்றத்தின் மடியில் அமர மாட்டேனா என்று ஏங்கித் தவிப்போரை வெகுவாக காண முடிகிறது. புதிய மாற்றத்தை தொட்டிருக்கும் நம் தேசம் ஜெயிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? இதோ சத்குருவின் கருத்தாழமிக்க பேட்டி இது...

Question: தேர்தல்களை சந்தித்து களைத்துப் போயிருக்கும் இந்தியர்களை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

சத்குரு:

2006, 2007 ஆம் வருடம் நான் உலக பொருளாதார மாநாட்டிற்குச் சென்றபோது "எங்கெங்கும் இந்தியா" எனும் கோஷம் CII ஆல் ஜெனீவாவில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தியாவிலிருந்து வந்திருந்த 300 அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்களும் இதே ஸ்ருதியை மீட்டிக் கொண்டிருந்தனர். எனக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது, "நாம் மகத்தான பொருளாதார வாய்ப்பின் முன் நின்று கொண்டிருக்கிறோம். நம் கைகளில் அருமையான வாய்ப்புள்ளது, ஆனால் விஷயங்களைச் சொதப்புவதிலும் நாம் கில்லாடிகளாய் செயல்பட்ட வரலாறு நம்மிடம் உள்ளது," என்று சொன்னேன்.

இந்தியர்கள் மாருதியிலிருந்து மெர்சிடஸ் காரில் செல்வதை நான் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கவில்லை. 60 கோடி மக்கள் இந்நாட்டில் மனித நிலையில் வாழாமல் மிக தாழ்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களை ஒரே தலைமுறையில் மேலெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் நம் கைகளில் உள்ளன. அவர்களுக்கு நல்வாழ்வு, கல்வி, ஊட்டச்சத்து வழங்கி அவர்களது வாழ்வை மாற்றியமைக்க முடியும். இந்தியர்களுக்கு வளர்ச்சிக்கான சாத்தியம் உள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: நீங்கள் சொல்லும் இலக்கை அடைய நமக்கிருக்கும் தலைமையின் பங்கு என்ன? அடுத்த 10-15 வருடங்களில் இந்தியாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சத்குரு:

பொறுப்பான பதவிகளில் இருப்போர், இந்த வாய்ப்பினை உபயோகப்படுத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது மிக மிக அவசியம். 10-15 வருடங்களுக்குள் 60 கோடி மக்களை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு கத்தியில்லாமல், இரத்தமில்லாமல், கொலையில்லாமல், புரட்சியில்லாமல் எடுத்துச் செல்லும் அற்புதத்தை இதுவரை எந்த தேசமும் செய்திருக்க முடியாது. அதுபோன்ற ஒரு பேரதிசயமான சாத்தியம் நம் கைகளில் உள்ளது. நாம் எப்போதுமே பிழை செய்தவர்கள் அல்ல, இருந்தும் நம் பழைய பக்கங்களைச் சற்றே புரட்டிப் பார்த்தால், இதுபோன்ற சாத்தியங்களின் போது நாம் பிழை செய்த வரலாறு நமக்கிருக்கிறது.

பொருளாதாரம் மட்டுமே ஒரு தேசத்தை நிர்ணயித்துவிட முடியாது, ஆனால் கலாச்சார ரீதியாகப் பார்த்தால், நம் தேசத்தை உயர்ந்த தேசமாக மாற்றுவதற்கு நம் கைகளில் வரும் 15-25 வருடங்கள் மட்டுமே உள்ளன. கடந்த 65 வருடங்களாக நாம் "வளர்ந்து வரும் தேசமாக" மட்டுமே இருந்து வந்திருக்கிறோம். இத்தனை வருடங்களில் பெருவாரியான மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. 2, 3 தலைமுறைகள் கடந்துவிட்டன பெரிதாக ஒன்றும் நிகழவில்லை. இதனை நாம் துரதிருஷ்டம் என்று சொல்லிவிட முடியாது, நாம் பல விஷயங்களை தவறாக கையாண்டதன் விளைவே இது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு நம் கண்முன் உள்ள சாத்தியங்கள் பிரம்மாண்டமாய் உள்ளது, நம் கைகளில் அசாத்தியமான திறனுள்ளது. இதற்கு நாம் சரியாக கடிவாளம் கட்டி திசை திருப்பாத பட்சத்தில், நம் கைகளில் கடிவாளம் இடுவதற்கு எதுவும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். 100 கோடி மக்களுக்கு நம்மிடம் போதுமான இயற்கை வளம் இல்லை, காற்று இல்லை, நிலம் இல்லை, நீர் இல்லை. எதுவுமே போதுமான அளவுக்கு இல்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் மக்கள் மட்டுமே, அதுவும் நம் கைகளில் இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இந்த மக்கள் தொகையை திறனுள்ள, கல்வியறிவுள்ள, ஒரு நோக்கத்துடன் செயல்படக்கூடிய, நெஞ்சில் மிகுந்த உயிரோட்டமுடைய, உற்சாகமான மக்கள் தொகையாக மாற்றினால் அது பேரதிசயங்களை நிகழ்த்தும். கடந்த 7, 8 வருடங்களாய் நம் வளர்ச்சி தேங்கிப் போயுள்ளது. நாம் சரியான தடத்தில் இருந்தாலும், ஒரே இடத்தில் வெகு காலமாய் உட்கார்ந்திருந்தால் வெற்றிபெற முடியாது. அதுபோன்ற ஒரு சூழ்நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

இந்தியாவின் உருவாக்கத்திற்கு, அடுத்த 5 ஆண்டுகள் மிக மிக நெருக்கடியான ஒரு காலகட்டம். அடுத்த 5, 10 வருடங்களில் நாம் சரியானவற்றை செய்யாது போனால், ஆப்பிரிக்க நாடுகளைப் போல் ஆகிவிடுவோம். தேசத்தை ஒன்றாக பிணைத்து வைத்திருப்பதே பெரும் போராட்டமாகிவிடும். நான் இதனை சிலரிடம் சொன்னபோது, "சத்குரு, நீங்கள் எப்படி இவற்றையெல்லாம் சொல்லலாம், நீங்கள் மக்களை உற்சாகப்படுத்த வேண்டுமல்லவா?" என்று கேட்டனர். நான் தோல்வி மனப்பான்மையில் இதனைச் சொல்லவில்லை, இன்னும் சொல்லப் போனால் நான் இந்த தேசத்தின் வேர்வரை கவனித்து வருகிறேன். மக்கள் எதை விரும்புகிறார்கள், அவர்கள் எதற்காக ஆசைப்படுகின்றனர் என்பதை உணர்ந்திருக்கிறேன். இவ்வளவு மக்களைக் கொண்ட இந்த தேசத்திற்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதை இப்போது செய்யாவிட்டால், கொஞ்சம் காலம் கழித்து ஒரு போர்படையோ அல்லது கப்பற்படையோ கூட நம் மக்களை கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை உருவாகிவிடும். இன்றும்கூட நம் தேசத்தின் 25 சதம் ஆயுதப்படையின் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது.

Question: போராட்டங்கள், புரட்சிகள் உலகெங்கிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, இந்தியாவில் மட்டும் எப்படி அது வித்தியாசப்படுகிறது? எதுபோன்ற தலைமை இந்தப் பிரச்சனையை தீர்கக முடியும்?

சத்குரு:

நான் பலவிதமான மக்கள் முன்னிலையில் பேசியிருக்கிறேன். பிற நாடுகளில் மக்களின் அறிவுத்திறன் ஒருவிதத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயற்கையான அறிவுத்திறனைப் பற்றிப் பார்த்தால், நம் தேசத்தின் அறிவுத்திறன் உயர்ந்ததாய் இருக்கிறது. இந்தியாவின் இனம் சார்ந்த குணம் சற்றே சிக்கலானது, நம் மரபணு குணங்களும் தனிகுணமுடைய மக்களை உருவாக்கியிருக்கிறது.

ஒவ்வொரு இந்தியனும் ஒரு குறிப்பிட்ட விதமான ஒருங்கிணைவற்ற சூழ்நிலையை கையாள்கிறான், ஆனால் அது அவனை பெரிதும் பாதிப்படையச் செய்யவில்லை. இதுபோன்ற ஒருங்கிணைவற்ற, நேர்த்தியற்ற சூழ்நிலையில் பல வெளிநாட்டினரால் இருக்க இயலாது. இந்த குணம் இந்தக் கலாச்சாரம் நமக்கு வழங்கியுள்ள பரிசு, கலாச்சாரம் நமக்குள் ஆழமாய் வேரூன்றியுள்ளது. அதனால் வெளிச்சூழ்நிலை நம்மை அதிகம் தாக்காதவாறு நமக்குள் நாம் பண்பட்டிருக்கிறோம். இது அசாத்தியமான ஒரு குணம். ஆனால் அதே குணம் நமக்கு எதிராக, திசை மாறத் துவங்கிவிட்டது.

இச்சமயத்தில் பிரச்சனைகளை சற்றே ஆராயத் தேவையிருக்கிறது. நாம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும், நாம் இந்த 100 கோடி மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். கோபமே பிரச்சனைக்கு தீர்வுகொடுக்கும் என்று உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் நம்புகின்றனர். அது தவறு, மனிதனின் புத்திசாலித்தனம் பிரச்சனையை தீர்த்து வைக்கும். அன்பு பிரச்சனைகளை தீர்க்கும், கருணை பிரச்சனைகளை தீர்க்கும், எல்லாவற்றிற்கும் மேலாக அறிவுத்திறன் பிரச்சனைகளை தீர்த்துவைக்கும். மனிதசீற்றம் வளர நாம் அனுமதி கொடுத்தால் ஏற்படும் பிரச்சனை, பிரச்சனையை விட பெரிய பிரச்சனை ஆகிவிடும். இதோ பெருத்த மாற்றத்தின் மடியில், அதன் நுழைவாயிலில் நாம் அமர்ந்து கொண்டிருக்கிறோம். நம்மால் இதனை வன்முறையில்லாமல் நிகழ்த்த இயலும். நமக்கிருக்கும் குறைபாடெல்லாம் நோக்கமில்லாத தலைமை மட்டுமே.

நெடுங்காலமாய் சரியான தலைமையில்லாமல் நாம் இருந்திருக்கிறோம். ஒரு தலைவருக்கு தேவைப்படுவதெல்லாம் தலைவர் வழிபாடு அல்ல, தன் தலைமையை செயல் வல்லமையுடையதாய் செய்வதற்கு பல நிலைகளில் அவருக்கு தேவை உறுதுணை. இந்தச் சமூகம் சிறப்பாய் செயல்பட, 11 அடுக்குகளில் நமக்கு தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு முதலமைச்சரோ, ஒரு பிரதம மந்திரியோ மட்டும் இதற்கு போதாது. பல நிலைகளில் தலைமை தேவை. ஜனநாயகம் என்றால், மக்களே தலைவர்கள் என்று அர்த்தம். பத்து பேரின் வாழ்க்கையை தொடக் கூடியவருக்கு, மாற்றம் விளைவிக்கக்கூடிய திறன் இருக்கிறது. அவர் ஒரு கிராம பஞ்சாயத்து தலைவராக இருக்கலாம் அல்லது மளிகைக் கடை வியாபாரியாய் இருக்கலாம், ஒரு குடும்பத் தலைவியாகக் கூட இருக்கலாம்.