வெள்ளிக்கிழமை பெண்ணுக்குரிய நாளா?

வெள்ளிக்கிழமைகளில் விசேஷங்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள், சிறப்பு வழிபாடு என்று வெள்ளிக்கும் நாம் உருவாக்கி இருக்கும் சடங்குகளுக்கும் ஆழமான தொடர்புகள் உள்ளன. சமீபத்தில் நடந்த தரிசன நேரத்தில் வெள்ளிக்கிழமைக்கும், பெண்ணுக்கும், தேவி வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஒருவர் கேட்க, அதன் பின்னணியில் உள்ள மறை விஞ்ஞானத்தை விளக்குகிறார் சத்குரு...
 

வெள்ளிக்கிழமைகளில் விசேஷங்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள், சிறப்பு வழிபாடு என்று வெள்ளிக்கும் நாம் உருவாக்கி இருக்கும் சடங்குகளுக்கும் ஆழமான தொடர்புகள் உள்ளன. சமீபத்தில் நடந்த தரிசன நேரத்தில் வெள்ளிக்கிழமைக்கும், பெண்ணுக்கும், தேவி வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஒருவர் கேட்க, அதன் பின்னணியில் உள்ள மறை விஞ்ஞானத்தை விளக்குகிறார் சத்குரு...

Question:அதிதி (கேள்வியாளர்): சத்குரு பொதுவாக ஒவ்வொரு வெள்ளியும் தேவி கோவிலில் தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. சம்ஸ்கிருதி குழந்தைகள் தேவிக்கு பாடல்கள் அர்ப்பணிக்கிறார்கள், கோலங்கள் வரையப்படுகிறது, புடவை மாற்றப்படுகிறது. இவற்றைச் செய்ய, வெள்ளிக்கிழமையை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கு ஏதாவது காரணம் உள்ளதா? மேலும் தியானலிங்கத்திலும் வெள்ளிக்கிழமையை ஆகாய தத்துவத்திற்கான நாள் என்று சொன்னீர்கள். தேவிக்கும் ஆகாய தத்துவத்திற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா? வெள்ளி என்ற வார்த்தை சில மொழிகளில் "வீனஸ்" என்ற வார்த்தையில் இருந்து வருகிறதே! தேவி, வெள்ளி, ஆகாயம், வீனஸ் அனைத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று சொல்லுங்கள்?

சத்குரு:

வெள்ளிக்கிழமை சுக்கிரனுடையது. சுக்கிரன் பெண் தன்மையைக் குறிக்கிறது. வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளி மிகுந்த பெண்தன்மை உடைய நாள். பெண் தன்மையை, பெண் என புரிந்துகொள்ள வேண்டாம். நாம் பெண்களைப் பற்றி பேசவில்லை. பெண்தன்மையைப் பற்றி பேசுகிறோம். எனவே தெய்வீகத்தின் பெண்தன்மை என்னும் பரிமாணத்தின் சில விஷயங்களை இந்த நாளில் எளிதாக மேம்படுத்தலாம்.

பஞ்சபூதம் ஆகாயம், நீர், நெருப்பு என்று வேறுபட்டிருந்தாலும், படைப்பை பார்த்தால் ஆண்தன்மை, பெண்தன்மை என்ற பிரிவினை எதுவும் கிடையாது. ஆண்தன்மையும் பெண்தன்மையும் படைப்பின் வெளிப்பாட்டில் மட்டுமே உள்ளது. படைப்பில் ஆண்தன்மை, பெண்தன்மை என்பது இல்லை.

இந்தப் படைப்பு, தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்தில் ஆண்தன்மை, பெண்தன்மை என்பது நிச்சயம் உள்ளது. வெள்ளி ஆங்கிலத்தில் வீனஸ் என்றழைக்கப்படும் சுக்கிர கிரகத்திற்கு உரிய நாள். பெண்தன்மை சம்பந்தப்பட்ட எதுவும், குறிப்பாக பருவ வயதுக்கு கீழே இருக்கும் சிறுமிகளை இந்நாளில் பலவகையான செயல்களில் ஈடுபடுத்துகிறோம்.

இதன் மூலம் அவர்கள் தன்னுள் ஒரு பெண் தன்மையை உருவாக்கிக் கொள்ளமுடியும். இதுபோன்ற சூழலில் அவர்கள் வளராவிட்டால் எளிதில் ஆண்மைத்தனமான சில விஷயங்களை கிரகித்துக் கொள்வார்கள். ஒரு பெண்ணாய் வசீகரமற்று போய்விடுவார்கள்.

நான் வசீகரம் என்று சொல்லும்போது, ஆணை வசீகரிக்கும் பெண் என்ற கண்ணோட்டத்தில மட்டும் சொல்லவில்லை, அவளுக்குள் பெண்மை இல்லை என்றால், அவளுக்குள் ஒரு குறிப்பிட்ட பரிமாணம் வீணாய் போய்விடும். இதனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு கீழே உள்ள சிறுமிகள் வெள்ளிக்கிழமைகளில் பல செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த செயல்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் பெண்மையின் சாரத்தை அவர்கள் தங்களுக்கு தாங்களே விழிப்புணர்வுடன் வளர்த்துக் கொள்வார்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன் - பெண்தன்மையை பெண்கள் என்று புரிந்துகொள்ள வேண்டாம். சிவா ஆண்தன்மைக்கான உச்சபட்ச அடையாளம் அவரின் ஒரு பாதி பெண்ணாக இருப்பது அவர் ஆண்மை, பெண்மை இரண்டின் சரிபாதி கலவை என்பதைக் குறிக்கிறது. ஒருபாதி ஆண் மற்றொரு பாதி பெண் என்று அவர் உடலை சித்தரித்திருப்பது ஒரு முழுமையான மனிதன், அந்த இரண்டு அம்சத்தையும் சரிபாதியாய் உடையவன் என்பதை நிலைநிறுத்தத்தான்.

அவர் உச்சபட்ச ஆண். ஆனால் அவரில் பாதி பெண். எனவே ஒரு இளம் சிறுமி தனக்குள் பெண்தன்மையை உருவாக்குவது மிக முக்கியம். ஏனென்றால் இன்றைய உலகில் ஆண்தன்மை மேலோங்கி இருக்கிறது. ஆண்மை மேலோங்கிய கலாச்சாரத்தில் அவளை பண்படுத்தினால் அவளிடம் பெண்மையைவிட ஆண்தன்மை நிறைந்து இருக்கும். இதுதானே இன்று பரவலாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

உலகில் வெற்றிகரமாக இருப்பதற்கு ஒரே வழி, ஆண்தன்மையுடன் இருப்பதுதான். பெண்தன்மையுடன் இருந்து வெற்றியடையக் கூடிய பாதைகளை நாம் உருவாக்கவில்லை, உலகம் அதுபோல அமைக்கபட்டுவிட்டது. சமூக சூழ்நிலைகள் அதுபோல உருவாக்கபட்டுவிட்டன. இதுபோன்ற சூழ்நிலை இருக்கும்போது, தன்னுள் பெண்தன்மை உடலளவில் வெளிப்படாத சிறுமியர், தன்னுள் பெண்தன்மையை ஒரு கலாச்சாரமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் அவர்களுக்குள் பெண்மை மலரும். ஆண்தன்மையும் பெண்தன்மையும் சமநிலையில் ஒரு சமூகத்தில் செயல்படவில்லை என்றால் அந்த சமூகம் மென்மையற்ற ஒரு சமூகமாக மாறிவிடும் என்பதை இந்த கலாச்சாரத்தில் உணர்ந்திருந்தனர்.

ஆண்தன்மை அதிகமானால் அது மென்மையற்று, பக்குவப்படாத, பிழைப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட சமூகமாகிவிடும். பெண்தன்மை மேலோங்கினால் எல்லோரும் பார்பி பொம்மைகள் போலாகிவிடுவார்கள். இரண்டுக்கும் இடையே சமநிலை இருந்தால்தான் முழுத்திறனுள்ள மனிதர்கள் இருப்பார்கள். அப்பொழுதுதான் சமநிலையுடைய, வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்கும் திறன் கொண்ட, மனிதர்கள் இருப்பார்கள்.

அப்படி இல்லாதபோது, சிலர் அழுதுகொண்டே இருப்பார்கள், வேறு சிலரோ தடைபட்டு போய்விடுவார்கள். சிரித்துகொண்டே காரியங்கள் செய்யும் பெண்களைப் பார்க்கவேண்டும் என்பது நம் விருப்பம். அதுபோல கண்களில் நீர் சுரக்கும் ஆண்களைப் பார்க்கவும் நமக்கு விருப்பம். நீங்கள் ஏதோ ஓரு வழியில் தேங்கிபோய் விடக்கூடாது. அப்படி சிக்குண்டால் அது அரைகுறை வாழ்க்கை. முழுமையான வாழ்க்கை இல்லை.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

நீங்கள் இரண்டாம் முறை பிறக்க வேண்டும் சத்குரு,