கேள்வியாளர்: நாங்கள் அடிக்கடி குழப்பமான சூழ்நிலைகளில் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட சூழல்களில் எப்படி நாங்கள் அமைதியாக இருப்பது?

சத்குரு: நமது வாழ்க்கையில், அனைவருக்கும் அமைதி தேவைப்படுகிறது. நீங்கள் அமைதியாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் மனமோ அமைதியிழந்து தவிக்கிறது. ஆகவே மனதளவில் நீங்கள் இப்போது அமைதி இல்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் அமைதி இழந்துவிட்டால், இயற்கையாகவே முதலில் உங்களது கணவர் அல்லது மனைவியுடன் நீங்கள் சண்டையிடுவீர்கள். அதற்கடுத்த நிலையில் அக்கம்பக்கத்து வீட்டினருடன் சண்டைக்குப் போவீர்கள். இன்னும் அதற்கடுத்த நிலையில், உங்களது மேலதிகாரியிடம் சண்டைக்குப் போவீர்கள். உங்களது மேலதிகாரியைப் பார்த்து என்றைக்குக் குரல் உயர்த்துகிறீர்களோ, அன்றைக்கு, உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதை அனைவரும் அறிந்துகொள்கிறார்கள்! உங்களது கணவர், மனைவி அல்லது அண்டை அயலார் இவர்களைப் பார்த்துக் கத்துவது சாதாரணமானதாக இருக்கலாம். ஏனெனில் ஒவ்வொருவருமே அதைச் செய்கின்றனர். ஆனால் உங்களது உயரதிகாரியிடம் சண்டையிடுவது சற்று அதிகம்தான். எனவே இப்போது, மருத்துவரிடம் செல்ல வேண்டிய ஒரு சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள்.

அமைதி என்பது, உடலுக்குள் இருக்கும் ஒருவித இரசாயனம்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மருத்துவர் உங்களுக்கு ஒரு மாத்திரை தருகிறார். உங்கள் உடலுக்குள் அந்த மாத்திரை சென்றதும் நீங்கள் அமைதி பெறுகிறீர்கள், குறைந்தபட்சம் சில மணி நேரங்களுக்காவது அமைதியாக இருக்கிறீர்கள். ஏதோ ஒரு இரசாயனம் உங்கள் உடலுக்குள் செலுத்தப்படும்போது, உடல் மற்றும் மனதின் நிலையில் இருந்த தவிப்பு விலகி அங்கு ஓரளவுக்கு அமைதி திரும்புகிறது. ஆகவே, அமைதி என்பது, உடலுக்குள் இருக்கும் ஒருவித இரசாயனம்தான். அதேபோல, ஒவ்வொரு உணர்ச்சியும், ஒருவிதமான இரசாயனத்தைக் கொண்டுள்ளது. எந்த உணர்ச்சியாக இருந்தாலும், உடலுக்குள் அதற்கேற்ற ஒரு இரசாயனம் இருக்கிறது. நாம் அமைதியாக இருந்தால், நமக்குள் அமைதிக்கான இரசாயனம் நிலவுகிறது. அல்லது அந்தவிதமான இரசாயனத்தை நம்மால் உருவாக்க முடிந்தால், அதன் விளைவாக அமைதி நமக்குள் நிறைகிறது. யோகாவில் இரண்டு வழிகளிலும் நாம் அதை அணுகுகிறோம்.

யோகா என்பது உடலுக்குள் சரியான விதத்தில் இரசாயனத்தை உருவாக்கும் அறிவியலாக இருக்கிறது.

சரியான பயிற்சிகளால், நமது உள்நிலை இரசாயனத்தில் தேவையான அளவிற்கு நம்மால் ஒரு மாற்றம் கொண்டுவர முடியும். இதனால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், நம்மால் அமைதியாக இருக்கமுடியும். தற்போது உங்கள் அமைதியானது வெளிச் சூழ்நிலைக்கு அடிமையாக இருக்கிறது. சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக இருந்தால், நீங்கள் அமைதியுடன் இருக்கிறீர்கள். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லையென்றால், பிரச்சனை எழுகிறது. உங்கள் அமைதியானது வெளிச் சூழ்நிலைகளுக்கு அடிமைப்படாமல் இருந்தால், வெளிச் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் உங்கள் உள்நிலை மாறாமல் இருக்கிறது என்றால், அப்போது அதை யோக நிலை என்கிறோம். இதை நாம் வேறுவிதமாகவும் கூறமுடியும். அதாவது, யோகா என்பது உடலுக்குள் சரியான விதத்தில் இரசாயனத்தை உருவாக்கும் அறிவியலாக இருக்கிறது.

 

உங்களுக்குள் சரியான விதத்தில் இரசாயனம் இருந்தால், நீங்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும்தான் இருப்பீர்கள். வேறு எந்தவிதமாகவும் இருக்க முடியாது. அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதென்பது வாழ்க்கையின் இறுதி கட்டமல்ல; அது வாழ்வின் தொடக்கம். நீங்கள் அமைதியுடன் கூட இல்லாமலிருந்தால், உங்களின் உளவியல் முட்டாள்தனங்களில் பீடிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இன்னமும் வாழவே தொடங்கவில்லை என்றுதான் அர்த்தம். அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பது மிகவும் அடிப்படைத் தேவை. உங்களுடைய காலை உணவையோ அல்லது இரவு உணவையோ அனுபவிப்பதற்குக்கூட நீங்கள் அமைதியாக இருந்தாக வேண்டும். நீங்கள் குழப்பத்தில் இருந்தால், உங்களது இரவு உணவை உங்களால் அனுபவிக்க முடியுமா? முடியாது. அமைதியாக இருப்பது என்பது மிகவும் ஆரம்ப கட்டமானது. ஆனால் இன்றைக்கு, மன அமைதி கொள்வதுதான் ஒருவரது வாழ்க்கையின் உச்சகட்ட பரிமாணம் என்று மக்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக உலகில் பெரும்பாலான மக்கள் தொகையினர், இந்தத் தொடக்க நிலையைக்கூட அடைந்திருக்காத காரணத்தால், ‘அமைதி என்பதுதான் வாழ்வின் உச்சபட்ச இலக்கு’ என்று மக்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஆன்மீகவாதிகள் என்று அழைக்கப்படும் சிலர், ‘அமைதியுடன் இருப்பதுதான் உச்சநிலை’ என்று மக்களிடம் கூறிக் கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அமைதியாக இருப்பதென்பது மிகமிக அடிப்படையான விஷயம். இது ஞானோதயமோ அல்லது கடவுளோ பற்றி அல்ல. அமைதி என்பது வாழ்க்கையின் தொடக்கப்புள்ளி, முற்றுப்புள்ளி அல்ல. அது மிகவும் ஆரம்பக் கட்டமானது.

 

ஆசிரியர் குறிப்பு : நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

sg tam app