அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கண்ணீர் உங்கள் கன்னங்களை இதுவரை கழுவவில்லையென்றால், வாழ்வை நீங்கள் உணர்ந்ததில்லை என்று அர்த்தம்.

கண்ணீர் கூடப் பெரும்பாலும் வலியோடும் வருத்தத்தோடுமே தொடர்புபடுத்தப்படுகிறது. அழுகை என்பது வேறு. கண்ணீர் என்பது வேறு. எந்த ஓர் உணர்வு தீவிரமடைந்தாலும் கண்ணீர் வரும். ஆனந்தம் தீவிரப்பட்டாலும் கண்ணீராக வெளிவரும். அமைதி தீவிரப்பட்டாலும் கண்ணீராக வெளிவரும். ஆனால் கண்ணீர் என்றாலே அது வலியோடு சம்பந்தப்பட்டதாகத்தான் பலரும் கருதுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் வாழ்வில் அனுபவித்த அதிகபட்சமான ஆழ்ந்த அனுபவமே வலி மட்டும்தான். வலியை உணர்ந்த அளவு அமைதியை, ஆனந்தத்தை அவர்கள் உணர்ந்ததில்லை. அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கண்ணீர் உங்கள் கன்னங்களை இதுவரை கழுவவில்லையென்றால், வாழ்வை நீங்கள் உணர்ந்ததில்லை என்று அர்த்தம். நீங்கள் நிறையக் கண்ணீர் விடவேண்டும். அந்தக் கண்ணீர் அன்பு, அமைதி, ஆனந்தம் காரணமாய் வருகிற கண்ணீராக இருக்க வேண்டும் என்று உங்களை நான் ஆசீர்வதிக்கிறேன். தியானத்தின் ஆழ்ந்த நிலைகளுக்குச் செல்கிறபோது, இரண்டுமணி நேரங்கள் நீங்கள் அமர்ந்திருந்தால் இரண்டு மணி நேரமும், கண்ணீர் பெருக்கெடுக்கும். உங்களுக்குள் அமைதி பிரவாகமெடுத்ததால், நீங்கள் உருகி வழிவதன் அடையாளம் அது.

அப்படி நேர்ந்தால் அதை நீங்கள் தடுக்கக் கூடாது. தினந்தோறும் இத்தகைய கண்ணீர் உங்கள் கன்னங்களில் வழிந்தோடினால் நீங்கள் பாக்கியம் செய்தவர்கள் என்று அர்த்தம். வெகுசிலர்தான் இப்படி வாழ்கிறார்கள்.

நான் தொழிலில் ஈடுபட்டிருந்த காலங்களில் எதைத் தொட்டாலும் நன்றாக நடக்கும். இதுபற்றி என் அன்னை ஒரு சம்பவத்தை நினைவு கூர்வார். நான் பிறந்தபோது என் ஜாதகத்தைக் கணிக்க ஒருவரை அழைத்தார்களாம். அவர், வெறுமனே என்னைப் பார்த்துவிட்டு "இந்தக் குழந்தை அதிர்ஷ்டம் மிக்க வாழ்வை நடத்தும்" என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டாராம். எனக்கு ஜாதகங்களில் நம்பிக்கை கிடையாது. என்னைப் பொறுத்தவரையில் அவை பலிக்காது. ஆனால், தினந்தோறும் என்னைச் சுற்றி, பல்லாயிரக்கணக்கானவர்கள் அன்பால், அமைதியால், ஆனந்தத்தால் கண்ணீர் வடிப்பதைப் பார்க்கிறபோது நான் அதிர்ஷ்டமானவனென்றே கருதுகிறேன்.

அமைதியில்லாமல் வாழ்ந்த அலெக்ஸாண்டரைத்தான் சரித்திரம் மாவீரனென்று கொண்டாடுகிறது. சரித்திரப் புத்தகங்களில் பார்த்தால் புத்தரைப் பற்றி இரண்டு வரிகள்தான் இருக்கும். அதுகூட அவர் ஆரம்பத்தில் அரசகுமாரராக இருந்தார் என்பதால்தான்.

ஒரு கிராமத்திற்கு வெளியில், மரத்தடியொன்றில் புதிதாக ஒரு துறவி வந்து தங்கியிருந்தார். மறுநாள் காலை, அந்த கிராமத்திலிருந்து ஒரு மனிதன் அவரிடம் ஓடிவந்தான். "எங்கே அந்த வைரம்?" எங்கே அந்த வைரம்" என்று பதறினான். "எந்த வைரம்?" என்றார் அவர். "என் கனவில் சிவபெருமான் தோன்றி, உங்களிடம் வைரத்தைப் பெறச் சொன்னார்" என்றதும், "ஓ" அந்த வைரமா!" என்று பைக்குள் கையை விட்டு ஒரு பெரிய வைரத்தை எடுத்துக் கொடுத்தார். இந்த மனிதன் மகிழ்ச்சியிலும் கற்பனையிலும் மிதக்கத் தொடங்கினான். வைரத்தை மறைத்து வீட்டுக்குக் கொண்டு சென்றான். யாரிடம் சொல்வது, யாரிடம் சொல்லக்கூடாது என்றெல்லாம் யோசித்தான். மனைவியிடம் சொல்லலாமா கூடாதா என்று குழம்பினான். எங்கே வைப்பதென்று தவித்தான். தலையணைக்குக் கீழ் வைத்துக் கொண்டு படுத்தான். உள்ளங்கை அளவு பெரிய வைரத்தைத் தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டு தூங்க முடியுமா என்ன? இரவு முழுவதும் தூங்காமல் தவித்தான். மறுநாள் நேராக அந்தத் துறவியிடம் போனான். "இவ்வளவு பெரிய வைரத்தையே அலட்சியமாகத் தூக்கிக் கொடுத்து விட்டீர்களென்றால், இதைவிட உயர்ந்த ஒன்று உங்களுக்குள் இருக்கிறதென்று அர்த்தம். அது என்ன?" என்றார். துறவி அவனை அமரச்சொல்லி, தனக்குள் இருக்கும் விலைமதிப்பில்லாத அம்சத்தைக் காணக் கற்றுக் கொடுத்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏதாவதொன்றை வெளியே தேடிக்கொண்டு போவதிலேயே வாழ்க்கை கழிந்து விடுகிறது. மரணம் வரைக்கும் இந்தப் போராட்டமே தொடர்கிறது. பாதி உலகத்தை ஜெயித்த பிறகும் அலெக்ஸாண்டருக்கு அமைதி கிடைக்கவில்லை. பதினாறாண்டு காலம் போரிலேயே கழிந்த பிறகும், மீதமுள்ள உலகத்தை வெல்லும் வெறியிலேயே வாழ்ந்தான். முப்பத்தி இரண்டாவது வயதில் மரணத்தைச் சந்தித்தான்

இன்று பெரும்பாலானவர்கள், அலெக்ஸாண்டர் போல ஆசைவயப்பட்டு வாழ்கிறார்கள். அவனுக்கிருந்த துணிச்சலும் தகுதியும் இல்லாததால் சராசரியாக வாழ்கிறார்கள். அமைதியில்லாமல் வாழ்ந்த அலெக்ஸாண்டரைத்தான் சரித்திரம் மாவீரனென்று கொண்டாடுகிறது. சரித்திரப் புத்தகங்களில் பார்த்தால் புத்தரைப் பற்றி இரண்டு வரிகள்தான் இருக்கும். அதுகூட அவர் ஆரம்பத்தில் அரசகுமாரராக இருந்தார் என்பதால்தான். காலங்காலமாகவே பலருடைய அணுகுமுறை இப்படித்தான் இருந்திருக்கிறது.

24 மணிநேரமும் அற்புதமான மனிதர்களாக இருக்கக் கூடியவர்கள் இங்கே இல்லை. ஒரு விநாடி மிக நல்ல மனிதராகவும் மறு விநாடி மிக மோசமான மனிதராகவும் மாறிக்கொண்டே இருக்கிறீர்கள். எப்போதெல்லாம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் மிக அற்புதமான மனிதராக இருக்கிறீர்கள். அப்படியென்றால், அந்த உள்தன்மையை சீர்படுத்தி உங்களை அமைதியான ஆனந்தமான மனிதராக உருவாக்கிக் கொள்வதுதான் உங்கள் முதல் கடமை.

தன் மனதையும், உணர்வுகளையும் கையாளத் தெரியாத மனிதனால் இந்த உலகத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? இந்த உலகத்தில் எத்தனையோ புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப்புரட்சி, சீனப்புரட்சி இவையெல்லாமே, மற்றவர்களை மாற்றும் முயற்சிதான். ஆனால், தன்னைத்தானே மாற்றிக் கொள்வதுதான் உண்மையான புரட்சி. இன்னொரு மனிதரை மாற்ற முயலும்போது அங்கே மோதல் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால், மனிதன் தன்னைத்தானே மாற்றிக் கொள்கிறபோது, உலகத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே அமைதியாக்கிவிட்டதாகத்தான் அர்த்தம்.

இந்த அமைதி ஏற்பட வேண்டுமென்றால், எல்லோருக்குள்ளும் ஆன்மீகத்தின் அம்சத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியம். ஆன்மீகம் என்றதுமே பலர் அஞ்சுகிறார்கள். என்ன காரணமென்றால், ஆன்மீகத் தேடலுக்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் காட்டுக்குப் போக வேண்டும் என்று அவர்களுக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள். இப்போது நீங்கள் போக நினைத்தால் கூடப் போதிய அளவு காடுகள் இல்லை. எனவே உங்கள் வீட்டில், அலுவலகத்தில், வீதிகளில் ஆன்மீகத்தன்மையுடன் இருக்கப் பழகுங்கள். ஏனெனில் ஆன்மீகம் என்பதே உள்தன்மை சார்ந்ததுதானே தவிர வெளியுலகுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

உள்நோக்கிப் பார்ப்பதற்கான அவசியம் என்னவென்று உங்களுக்குள் ஒருகேள்வி எழலாம். உடல், மனம் ஆகிய எல்லைகளோடு உங்கள் பார்வை நின்றுவிட்டது. இந்த உடலும் மனமும் உங்களுடையதல்ல. உடல் என்பது உங்கள் பெற்றோர் தந்தது. பிறகு அதையும் இதையும் உண்டு உடலை வளர்த்துக் கொண்டீர்கள். போகும்போது இந்த உடலின் சிறு அணு கூட உங்களுடன் வராது. எனவே உடல் என்பது உலகிலிருந்து நீங்கள் பெற்றிருக்கிற கடன்.

அடுத்து உங்கள் மனம். இது பெரும்பாலும் சமூகத்தின் குப்பைத் தொட்டியாகத்தான் இருக்கிறது. கடந்து போனவர்களெல்லாம் அதில் தங்களால் ஆன குப்பைகளை எறிந்திருக்கிறார்கள். தாயோ தந்தையோ ஆசிரியரோ நண்பரோ பகைவரோ நீங்கள் பார்த்த படமோ படித்த புத்தகமோ எல்லாமே உங்களுக்குள் பல குப்பைகளைப் போட்டிருப்பதால் உங்கள் மனம் சமூகத்தின் குப்பைத் தொட்டியாகத் தான் திகழ்கிறது.

எனவே உடல், மனம் ஆகிய எல்லைகள் கடந்து எதையும் உணராமல் போய்விட்டால் இந்த மனித வடிவம் வீணானதாகத்தான் அர்த்தம். நீங்கள் கௌதம புத்தரின் வாழ்வையோ இயேசுநாதரின் வாழ்வையோ எண்ணிப் பார்த்தால் அவர்கள் நிறைய வேலைகள் எதுவும் செய்யவில்லை. நீங்கள் செய்கிற அளவுக்குக்கூட அவர்கள் வேலை செய்ததில்லை. ஆனால் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் உள்நிலை சார்ந்து அவர்கள் இயங்கியிருக்கிறார்கள். உடலும் மனமும் சார்ந்து நீங்கள் இன்று செய்கிற வேலைகள் எல்லாம் மிக முக்கியமானவையாகத் தோன்றும். ஆனால்அடுத்த தலைமுறைக்கு அது எந்த அர்த்தத்தையும் தராது.

நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்கள் தந்தை உங்கள் கண்களுக்கு உலகத்தின் மகத்தான மனிதராகத் தோற்றமளித்தார். ஆனால் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு அவர் மிகச் சாமான்யமானவராக உங்களுக்குத் தெரிகிறார். ஒன்பதாண்டுகள் வித்தியாசத்திலேயே இந்த மாற்றம் தெரியுமானால் உங்களின் இன்றைய வேலைகள் பல அடுத்த தலைமுறைக்கு மிகச் சாதாரணமானதாகத் தெரியும். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் முன்பிருந்ததை விட இந்த உலகத்தை மேலும் ஆனந்தமானதாக ஆக்கினால் மட்டுமே உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் அமையும். பலருக்கும் அமைதி என்றால் என்னவென்றே தெரியவில்லை. வருத்தமில்லாத மனநிலைதான் அமைதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல, முழுமையான அமைதியில் நீங்கள் அமர்ந்திருந்தால் அதுவே மகத்தான ஆனந்தமாக அமைய முடியும்.

மற்றவர்கள் வாழ்க்கையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக நீங்கள் இருந்தால் உங்கள் பார்வை இன்னும் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு உள்நிலையில் உங்களுக்குத் தெளிவு வேண்டும். செயல்படுகிற திறனில் இருவரிடம் ஒரே மாதிரியான திறமை இருக்க வாய்ப்பில்லை. ஆனால் உள்தன்மையைப் பொறுத்தவரை அனைவருக்கும் சமமான தகுதிகளும் வாய்ப்புகளும் உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை மனிதவளம் அதன் முக்கியமான பலம். ஒரு கோடி பேர் முழு ஆற்றலும் ஒருமுகப்படுத்தப்பட்ட சக்தியும் கொண்டு விளங்கினால் அவர்களால் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். எல்லோரும் தங்கள் பதட்டங்களுக்கும் சிக்கல்களுக்கும் வெளியே காரணங்களைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பதட்டங்கள் அனைத்துமே அவர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றுக்கான தீர்வு அவர்களின் உள்தன்மையை சீர்செய்வதிலேயே இருக்கிறது. எனவே, மனிதர்கள் இந்த சாத்தியத்தை உணர்ந்து அதைநோக்கி செயல்பட்டால் அவர்களின் எல்லாப் பணிகளும் மிக எளிதாகிவிடும்.

ஒருவர் என்னிடம் கேட்டார் "நான் யோகா வகுப்புகளுக்கு வருகிறபோது அமைதியை உணர்கிறேன். ஆனால் மறுபடியும் வீதிகளில் செல்லும்போதும் மனிதர்களை சந்திக்கிறபோதும் எதார்த்த உலகம் என்னை கொந்தளிக்கச் செய்கிறது. சுற்றியிருப்பவர்கள் அமைதியாக இல்லாதபோது நான் எப்படி அமைதியாக இருக்க முடியும்" என்று.

நான் அவருக்கு பதில் சொன்னேன். "நான் மட்டும் இமயமலை குகைகளில் இருந்தா வருகிறேன். எல்லோரைச் சுற்றியும் இலட்சக்கணக்கான மக்கள் இயங்குகிறார்கள். வெளிச்சூழல் கொந்தளிப்பாக மாறிவிட்டால் அதனை உள்தன்மையிலும் அனுமதிப்பது புத்திசாலித்தனமான வேலையல்ல. வெளிச்சூழல் என்பதே உள்ளுக்குள் நிகழ்வதன் பிரதிபலிப்புத்தான். மனிதர்கள்தான் சூழ்நிலைகளை உருவாக்குகிறார்கள். சூழ்நிலைகள் மனிதர்களை உருவாக்குவதில்லை. சமூகம் என்பதே தனிமனிதர்களின் தொகுப்புதான். தனிமனிதர்களை கூட்டாகச் சந்திக்கிறபோது அதை சமூகம் என்கிறீர்கள். தனிமனிதர்களிடம் அமைதி இல்லையென்றால் சமூகத்திலும் அமைதி இருக்காது" என்று சொன்னேன்.

வெளிச்சூழலைக் குற்றம் சாட்டுகிறீர்களே என்ன காரணம்? உங்கள் கவனம் முழுக்க வெளியில் இருப்பதுதான் காரணம். ஏனெனில் உங்கள் ஐம்புலன்களும் இயல்பாகவே உங்கள் கவனத்தை வெளியே திசை திருப்புகின்றன. ஒரு சிறு ஊசி விழுந்தால் உங்கள் காதில் விழுகிறதே, உங்கள் உடம்புக்குள் எத்தனை அசைவுகள் நிகழ்கின்றன! அவை உங்கள் காதில் விழுகிறதா? உங்கள் கைகளின் மேல் ஓர் எறும்பு ஊர்ந்தால் உடனே உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் உங்கள் நரம்புகளில் வினாடிக்கு வினாடி இரத்தம் பாய்கிறதே அதை உங்களால் உணர முடிகிறதா? உடலும் மனமும் கடந்த அனுபவத்தை நீங்கள் பெறுவீர்களேயானால் எனக்கென்ன நேருமோ என்கிற அச்சத்திலிருந்து விடுபடுவீர்கள். அச்சம் அகல்கிறபோது உங்கள் வாழ்க்கை எல்லையற்ற தன்மையை அடைகிறது. உங்களால் ஆனந்தத்தையும் அமைதியையும் எக்காலத்திலும் இழக்கவே முடியாது. எனவே எண்ணியதையெல்லாம் செய்திட முடியும். இப்படி வாழ்கிற வாய்ப்பு எல்லோருக்குமே இருக்கிறது. இந்த வாய்ப்பைத்தான் எல்லோருக்குமே வழங்க வேண்டும்.

ஈஷாவில் கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் பலருக்கு மருந்து தருகிறோம். உணவு தருகிறோம். பல காரியங்களைச் செய்கிறோம். அவற்றை மகத்தான சேவை என்று மக்கள் புகழ்கிறார்கள். அவை அவசியமான காரியங்கள்தான். ஆனால் அதைவிட முக்கியம் மக்கள் அமைதியாக வாழக் கற்றுத் தருவது. அதை யாரும் சேவை என்று கருதவில்லை.

மனிதர்கள் வெளிச்சூழலில் பெரிய நிலைகளுக்கு வளர்கிறபோதுதான் தங்கள் உள்நிலையை மிக எச்சரிக்கையாகக் கையாள வேண்டும். அதிகாரம் பெருகுகிறபோதுதான் பொறுப்புணர்வும் பெருக வேண்டும். நீங்கள் ஓர் எறும்பாக இருந்தால் யார்மீது வேண்டுமானாலும் ஊர்ந்து செல்லலாம். அதே நேரம் நீங்கள் ஒரு டைனோசராக வளர்ந்தால் அடுத்த அடியை எங்கே எடுத்து வைப்பது என்பதில் எச்சரிக்கை வேண்டும். தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதென்பது எல்லா உயிர்களுக்கும் இருக்கிற இயல்புதான். ஆனால் மனிதன் அதையும் கடந்த ஒரு பார்வையில் மற்றவர்கள் நலனுக்காகவும் சிந்திக்க வேண்டியவனாகிறான்.

https://www.ishashoppe.com/downloads/portfolio/amaidhi-un-pirappurimai/