வாழ்க்கையும் மரணமும் எதன் அடிப்படையில் அமைகிறது?
 
வாழ்க்கையும் மரணமும் எதன் அடிப்படையில் அமைகிறது?, Vazhkaiyum maranamum ethan adippadaiyil amaigirathu?
 

வாழ்க்கையைக் கையிலெடுப்ப்பதே பெரிய போராட்டமாக இருக்கையில், வாழ்க்கையை மட்டுமல்லாது மரணத்தையும் கையிலெடுத்துக்கொள்ளும் சாத்தியம் இருப்பது குறித்து அறிவியல்பூர்வமாக விளக்குகிறார் சத்குரு.

சத்குரு:

ஒரு மனிதர் பிறக்கும்போதே, அவருக்குள் ஒரு மென்பொருள் நிறுவப்பட்டு வருகிறார். அந்த மென்பொருள், காலம், சக்தி, அவருக்குள் சுமக்கும் தகவல்கள், இவற்றின் கலவையாக இருக்கிறது. இம்மூன்றும் சேர்ந்து வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை நிர்ணயிக்கிறது. இம்மூன்றும் சேர்ந்துதான் ஒரு மனிதர் எவ்வளவு காலம் வாழ்கிறார் என்பதையும் எப்படி வாழ்கிறார் என்பதையும் நிர்ணயிக்கிறது. அப்படியானால் எல்லாம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டதா? தகவல்கள் நிச்சயமாக முன்பே முடிவு செய்யப்பட்டவை. ஆனால் புதிய தகவல்களை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியாமலில்லை. உங்களுக்குள் நீங்கள் தற்போது சுமக்கும் தகவல்கள், குறிப்பிட்ட சில விஷயங்களை நோக்கி உங்களை தள்ளவோ ஈர்க்கவோ செய்கிறது. ஆனால் நிச்சயமாக அவை புதிய தகவல்களை இன்று, இந்தக் கணத்தில் எடுத்துக்கொள்வதை தடுப்பதில்லை.

சக்தியை உற்பத்தி செய்து விரும்பும் விதத்தில் பயன்படுத்துவது, உங்கள் கர்மவினை உங்கள் சிந்தனையையும் உணர்வையும் செயலையும் பாதிக்க அனுமதிக்காமல் இருப்பது, இவை இரண்டும், காலத்தை கையிலெடுப்பதை விட மிகவும் சுலபமானவை.

இந்த தகவல்களின் குவியலை சஞ்சித கர்மா என்கிறோம். இத்தகவல்களின் தன்மையைப் பொறுத்து, வாழ்வின் பல்வேறு அம்சங்களுக்கு சக்தி ஒதுக்கப்படுகிறது. இந்த கர்மப் பதிவுகள் பொருள்தன்மையை நோக்கி உந்தப்பட்டால், உங்கள் சக்திகள் இயல்பாகவே உடல்சார்ந்த தன்மைகளுக்கென ஒதுக்கப்படும். இத்தகவல்கள் உங்கள் சிந்தனையை நோக்கி இருந்தால், அதற்கேற்ப சக்தி மனதின் செயல்பாட்டிற்கென ஒதுக்கப்படும். இத்தகவல்கள் உணர்ச்சி சார்ந்ததாக இருந்தால், அந்த பரிமாணத்திற்கு சக்தி ஒதுக்கப்படும். ஆன்மீக பரிமாணம் நோக்கி அத்தகவல்கள் இருந்தால், அந்த திசையில் சக்தி ஒதுக்கப்படும். இப்படி ஒதுக்கப்படுவது அவருள் இருக்கும் கர்மப்பதிவுகளின்படி நிகழ்கிறது, அப்படியானால் இதை மாற்றி ஒதுக்கீடு செய்யமுடியாது என்று கிடையாது. இதை மாற்றமுடியும், ஆனால் உங்கள் கர்மப்பதிவுகளின்படி நீங்கள் இயங்கினால், வாழ்க்கை முன்கூட்டியே முடிவுசெய்யப்பட்டது. உங்கள் கர்மப்பதிவின் கட்டாயங்களுக்கு நீங்கள் 100% அடிமையாக இருந்தால், வாழ்க்கை முன்பே முடிவுசெய்யப்பட்டது, நடக்கப்போவதை நாம் சுலபமாக கணித்துவிடலாம்.

காலம் எவருக்கும் காத்திருக்காது

சக்தியை மாற்றி ஒதுக்கீடு செய்வது, நம் சக்திகளை நாம் கையாளும் விதம், நம் சக்திகளை நாம் எந்த திசைநோக்கி வைத்திருக்கிறோம், நம் சக்தியை நாம் அதிகப்படுத்துகிறோமா அல்லது விரயமாக்குகிறோமா, இவை அனைத்தும் நம் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் இந்த மூன்றாவது பரிமாணம், ஒருவர் வாழ்வின் மிகவும் முக்கியமான அங்கம், அதுதான் காலம். காலம் எப்போதும் கடந்துசென்று கொண்டே இருக்கிறது, அதனை நீங்கள் மெதுவாகச் செல்ல வைக்கமுடியாது, அதனை வேகமாக ஓடவைக்க முடியாது. உங்கள் சக்தியை நீங்கள் சேமித்து வைக்க முடியும், சுற்றியும் வீசமுடியும், மேம்படுத்த முடியும், பிரம்மாண்டமான அளவு பெரியதாக மாற்றமுடியும், அல்லது மந்தமாக மாற்றிடமுடியும், ஆனால் காலம் கடந்தோடிக் கொண்டே செல்கிறது.

காலத்திற்கு அதற்கென ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது, கர்மப்பதிவுகளின் சில தன்மைகளின்படியும், சக்தி ஒருவருக்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பொறுத்தும் அது ஓடுகிறது. அதை நாம் மாற்றமுடியாதா? முடியும். ஆனால் மற்ற இரண்டு பரிமாணங்களுடன் ஒப்பிடும்போது, இது நாம் கையகப்படுத்த முடியாத பரிமாணமாக இருக்கிறது. மற்ற இரண்டும் நம் வாழ்க்கையில் சுலபமாக நிர்வகித்து மாற்றக்கூடிய பரிமாணங்கள். சக்தியை உற்பத்தி செய்து விரும்பும் விதத்தில் பயன்படுத்துவது, உங்கள் கர்மவினை உங்கள் சிந்தனையையும் உணர்வையும் செயலையும் பாதிக்க அனுமதிக்காமல் இருப்பது, இவை இரண்டும், காலத்தை கையிலெடுப்பதை விட மிகவும் சுலபமானவை. ஆதியோகி கூட குறிப்பிட்ட சில நிலைகளில் இருந்தபோது மட்டுமே காலத்தை கையிலெடுத்தார். அவர் அப்படிப்பட்ட நிலைகளில் இருக்கும்போது அவரை காலபைரவர் என்று குறிக்கிறோம்.

காலம் ஒருவரின் வாழ்நாள் அல்லது வாழ்க்கையின் தன்மையையும், மரணத்தையும் நிர்ணயிக்கிறது. வாழ்வு சாவு, இரண்டுமே காலத்தின் வரையறைக்குள் இருக்கின்றன. காலத்தின்மேல் ஆளுமை இருக்கும் ஒருவருக்கு வாழ்வு சாவு மீதும் ஆளுமை இருக்கிறது. அவர் வாழவேண்டுமா சாகவேண்டுமா என்பதை அவர் முடிவு செய்யமுடியும். தன் சக்திகள் மீது ஆளுமை இருக்கும் ஒருவர், தன் செயலின் தன்மையையும், அவர் எப்படி வாழ்கிறார் என்பதையும் தீர்மானிக்கமுடியும். அவர் வாழ்க்கை மீது அவருக்கு முழுமையான ஆளுமை இருக்கலாம், ஆனால் காலத்தின்மீது ஆளுமை இருக்காது. தனக்குள் இருக்கும் இத்தகவல்கள்மீது ஆளுமை கொண்டிருந்தால், அல்லது இத்தகவல்கள் தன்னை இயக்கும் விதத்தின் மீது ஆளுமை கொண்டிருந்தால், அல்லது கர்மப் பதிவுகள் தன்னை ஆட்கொள்ள முடியாது அதிலிருந்து விடுபட்டிருந்தால், அவருக்கு தன் வாழ்க்கையின் தன்மை மீது ஆளுமை இருக்கும், அதாவது தனக்குள் தன்னை இனிமையாக வைத்துக்கொள்ள முடியும்.

இம்மூன்றும் சேர்ந்துதான் வாழ்க்கையை உருவாக்குகிறது. இம்மூன்றும் சேர்ந்ததுதான் நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்கள் என்பதும். ஒருவர் தனக்குள் காலம், சக்தி மற்றும் தகவல்கள், இம்மூன்றையும் தன்வசப்படுத்திவிட்டால், இம்மூன்றையும் விழிப்புணர்வாக உங்களால் நடத்திக்கொள்ள முடியும் என்றால், எல்லா விதங்களிலும் நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள், 100% சுதந்திரமாக இருப்பீர்கள். அதுதான் விடுதலை, அதுதான் முக்தி.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1