வாஸ்து பற்றி சத்குரு - பகுதி 2
இந்தத் தொடரின் முதல் பாகத்தில், பயம் நம்மை எப்படி ஆட்டுவிக்கிறது என்று உதாரணத்துடன் விளக்கிய சத்குரு, பயத்தை மூலதனமாகக் கொண்டு இயக்கப்படும் தொழிலைப் பற்றியும் விளக்கினார். இந்த வாரம் வாஸ்து சாஸ்திரம் உருவாக்கப்பட்ட அடிப்படையை நமக்கு தெளிவாக்குகிறார். விடை சொல்லும் இரண்டாம் பாகம் உங்களுக்காக...
 
 

இந்தத் தொடரின் முதல் பாகத்தில், பயம் நம்மை எப்படி ஆட்டுவிக்கிறது என்று உதாரணத்துடன் விளக்கிய சத்குரு, பயத்தை மூலதனமாகக் கொண்டு இயக்கப்படும் தொழிலைப் பற்றியும் விளக்கினார். இந்த வாரம் வாஸ்து சாஸ்திரம் உருவாக்கப்பட்ட அடிப்படையை நமக்கு தெளிவாக்குகிறார். விடை சொல்லும் இரண்டாம் பாகம் உங்களுக்காக...

சத்குரு:

நான் வாழும் வீட்டின் அளவும், வடிவமும்தான் நான் யாரென்பதை தீர்மானிக்கிறது என்றால் அது அவமானம் இல்லையா? உயிரற்ற பொருட்கள் மனிதனின் இயல்பை தீர்மானிக்க வேண்டுமா அல்லது மனித இயல்பு பொருட்களின் தரத்தை தீர்மானிக்க வேண்டுமா, சொல்லுங்கள். துரதிருஷ்டவசமாக உங்கள் இயல்பை உங்களைச் சுற்றி இருக்கும் பொருட்களின் வடிவத்துக்காக, உருவத்துக்காக தொலைத்து விட்டீர்கள். என்ன செய்வது, புத்திசாலித்தனம் இல்லை, பயம்தானே நம்மை ஆட்சி செய்கிறது. பயம் இருந்தால் நீங்கள் புத்திசாலிதனத்தை இழந்து விடுவீர்கள்.

உயிரற்ற பொருட்கள் மனிதனின் இயல்பை தீர்மானிக்க வேண்டுமா அல்லது மனித இயல்பு பொருட்களின் தரத்தை தீர்மானிக்க வேண்டுமா, சொல்லுங்கள்.

சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் வீடு கட்ட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். எந்த காலகட்டத்திலும், சுவர் எழுப்புவது பிரச்சனை இல்லை. கூரைதான் சவால். இப்பொழுது எஃகு, சிமெண்ட் போன்ற பல கட்டிட சாமான்கள் இருப்பதால், தேவையான வகையில் சௌகரியமாக அமைத்துக் கொள்வதற்கு தேவையான சுதந்திரம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் முற்காலத்தில் மரம் மட்டுமே மூலதனமாய் இருந்தது.

பண்ணையில் இருக்கும் மரத்தை வெட்டி பயன்படுத்தினால், அந்த குட்டையான மரத்தில் என்ன கட்ட முடியும்? அதன் தண்டு 8 அடிக்கு இருக்கும். அதை வைத்துக் கொண்டு, 8 அடி அகலத்தில் வீடு கட்ட முடியும். ஆனால் 10 குழந்தைகள் உள்ள வீட்டில், 100 அடி நீளத்தில், 8 அடி அகலத்தில் சுரங்க வழிபோலத்தான் ஒருவரால் வீடெழுப்ப முடியும்.

இதற்குத்தான் சில எளிய விதிமுறைகளை வகுத்து வைத்தார்கள். வீடு கட்டினால், சுவர் இந்த அளவில் இருக்க வேண்டும், ஜன்னல் இவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லிச் சென்றார்கள். எனவே கட்டிடக்கலை பொறியியலுக்கு என்று சில விதிகள் இருக்கிறது. சுயமாக யோசித்து செய்ய இயலாதவர்கள், இந்த விதிமுறைகளைப் பின்பற்றலாம். இத்தனை சதுர அடிக்கு இத்தனை ஜன்னல் என்ற விதியைப் பயன்படுத்தலாம். எனவே வாஸ்து என்று நீங்கள் குறிப்பிடுவது இந்த விதிமுறைகளைத்தான். இது இடத்திற்கு இடம் மாறுபடும்.

கடந்த சில வருடங்களில் சிலர் இதைப் பெரிய அளவில் வியாபாரமாக்க முடிவு செய்துவிட்டனர். நம்ப முடியாத விகிதாச்சாரத்தில் இது வளர்ந்து விட்டது. உங்கள் உடல்நலனை நிர்ணயிக்கிறது. உங்கள் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது.. இப்படி எல்லாம் செய்கிறது. மக்கள் வீடுகளை இடிக்க துவங்கினார்கள். சமையலறை இருக்கும் இடத்தில குளியலறை கட்டுவது, சமைக்கும் இடத்தில் தூங்குவது என்று முட்டாள்தனமாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்.

மக்களுக்கு இதற்காகும் செலவு பற்றி கவலை வரவும், வாஸ்து ஆலோசகர்கள் புதிய தீர்வுகளைத் தரத் துவங்கி விட்டார்கள். ஒரு கல்லை நடுங்கள், எல்லாம் சரியாகிவிடும், ஒரு கண்ணாடி வையுங்கள் அனைத்து துர்சக்திகளும் உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரரை நோக்கித் திரும்பி விடும் என்று புதிய முறைகளை கண்டுபிடித்தார்கள். அடிப்படையில், பயம்தானே மக்களை ஆள்கிறது?

உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்ல வேண்டும். நான் சென்னையில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். இரவு அலைபேசியில் பேச வேண்டி இருந்தது. 2 மணி வரை சாதாரணமாக என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் நீளும். பேசிக் கொண்டே இருந்ததில் பேட்டரி தீர்ந்துவிட்டது. என்னிடம் சார்ஜர் இல்லை. எனவே நான் தங்கி இருந்த வீட்டாரின் அலைபேசிக்காக அவரை எழுப்பலாம் என்று நினைத்தேன். 2 மணி என்றாலும் மிகவும் முக்கியமாக பேச வேண்டி இருந்தது. எனவே அவரை தேடி அவர் அறைக்கு சென்று கதவை தட்டினேன்.

பல முறை தட்டியும் திறக்கவில்லை. ஆனால் கைப்பிடியை அழுத்தியவுடன் கதவு திறந்தது. உள்ளே யாரும் இல்லை. வீடு முழுவதும் தேடியும் யாரும் இல்லை. நான் மட்டும் தனியாக இருக்கிறேன். தோட்டத்திலும் யாரும் இல்லை. எனவே வீட்டில் இருந்த தொலைபேசியில் நம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இந்த மனிதர் எங்கே என்று தெரியவில்லை, எனவே அவரது அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் அவரை அழைத்து, எங்கே இருக்கிறீர்கள், சத்குரு உங்களை வீடு முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.


உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பிய வகையில் வாழ பொறுப்பெடுத்துக் கொண்டால், எந்த இடத்தில வாழ்ந்தாலும் நல்ல விதமாக இருக்கலாம்.

பிறகு இவர் இறங்கி வருகிறார். எங்கே போனீர்கள் என்றேன். தலையைச் சொறிந்து கொண்டு தர்மசங்கடமாக நின்றார். என்ன என்றேன். ஒரு வாஸ்து ஆலோசகர் வந்தார். என் வியாபாரத்தில் உள்ள பிரச்சனை எல்லாம் தவறான இடத்தில் நாங்கள் உறங்குவதால்தான். நாங்கள் உறங்க சிறந்த இடம் குளியலறைதான் என்றார். அதனால் இந்த மனிதரும் அவர் மனைவியும் குளியலறையில் உறங்குகிறார்கள். நான் அவரிடம் சொன்னேன், இறந்தே போனாலும் படுக்கை அறையில் உறங்கி இறந்து விடுங்கள். அதில் ஒரு மதிப்பாவது இருக்கும். குளியலறையில் உறங்கி பல காலம் வாழ்வதில் என்ன பலன்?

உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்வதில்லை. உங்கள் கைகளில் இல்லாதவற்றை சரி செய்ய நினைக்கிறீர்கள். வாழ்க்கையில் இதுதான் பிரச்சனை. ஏதோ ஒரு வீட்டில் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை நல்ல விதமாக வாழ முடியாதா? உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பிய வகையில் வாழ பொறுப்பெடுத்துக் கொண்டால், எந்த இடத்தில வாழ்ந்தாலும் நல்ல விதமாக இருக்கலாம். வீடு கட்டும்பொழுது நீங்கள் விரும்பிய வகையில், உங்கள் சௌகரியத்துக்கு, உங்கள் நன்மைக்கு, கட்டுங்கள். யாரோ ஒருவர் நிர்ணயிப்பது போல அல்ல.

எதைப் பற்றியும் அறிந்திராத ஒரு மனிதர், உங்கள் வீட்டின் வடிவம், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறார். வாஸ்துவின் பெயரால் முட்டாள்தனமான செயல்கள் செய்த பலரை பார்த்து விட்டேன். தயவுசெய்து மதிப்பாக வாழுங்கள். எவ்வளவு நாள் வாழ்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. வாழும் வரை நன்றாக வாழ்வது முக்கியம் இல்லையா? நம் வாழ்க்கையை நல்ல விதமாக கையாளாமல், ஜன்னலின் வடிவம் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகிறது என்று நம்புகிறோம். இது சரியான அணுகுமுறையல்ல.

(முற்றும்)

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1