Question: சத்குரு, வைகுண்ட ஏகாதசியன்று இறந்தால் சொர்க்கத்திற்குப் போகலாம் என்கிறார்கள். மேலும், அன்று பெருமாள் கோவில்களில்கூட சொர்க்க வாசல் திறந்திருப்பார்கள். இதைப் பற்றி சிறிது விளக்குங்கள்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எங்கோ ஆகாயத்தில் சொர்க்கமோ நரகமோ இருப்பதாக அவர்கள் சொல்லவில்லை. சொர்க்கம், நரகம் என்பது ஒரு இடமல்ல, ஆனால் அனுபவ ரீதியாக அவை உண்மை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் இவற்றை அனுபவ ரீதியாக உணர்கிறார்கள். இந்த உடல் மற்றும் மனம் சேர்ந்த கட்டமைப்பின் தன்மையானது கிரகங்களின் சுழற்சியை ஒட்டி அவ்வப்போது மாறுகிறது.

குறிப்பிட்ட சில நாட்கள் நமது ஆன்மிக சாத்தியத்திற்கு மிகவும் ஏற்ற வாய்ப்பாக இருக்கின்றன. ஏகாதசி நாட்கள் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி அப்படிப்பட்ட ஒருநாள்.

நீங்கள் உடல் என்று அழைப்பதுகூட இந்த பூமியின் ஒரு பகுதிதான். இறந்தவுடன் இந்த உடல் மீண்டும் பூமியில்தான் போய்ச் சேர்கிறது. எனவே, இந்த கிரகத்தின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக நம் கட்டமைப்பிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்கின்றன. அவ்வாறு ஏற்படும் சில மாற்றங்கள் நமது உள்நோக்கிய பாதைக்கும் நமது உடல், மன மேம்பாட்டிற்கும் மிக உதவுவதாக இருக்கின்றன.

எனவே கிரகங்களின் சுழற்சியைத் தொடர்ச்சியாகக் கவனித்து நமது ஆன்மிக மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தி வந்தார்கள். அப்படிப் பார்க்கும்போது குறிப்பிட்ட சில நாட்கள் நமது ஆன்மிக சாத்தியத்திற்கு மிகவும் ஏற்ற வாய்ப்பாக இருக்கின்றன. ஏகாதசி நாட்கள் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி அப்படிப்பட்ட ஒருநாள்.

ஆனால் பொருள் தன்மையைத் தாண்டிய ஒரு மனிதருக்கு இந்த கிரகங்களின் சுழற்சி எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. எனவே தனிப்பட்ட முறையில் எனக்கு ராகு காலம், நல்ல நேரம் என்பதெல்லாம் கிடையாது. எனக்கு ஒவ்வொரு க்ஷணமும் நல்ல நேரம்தான்.

ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு இது உண்மையில்லை. அவர்கள் கட்டமைப்பு, நிச்சயமாக, அவர்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பொருத்தே அமைகிறது. ஆனால் அதைத் தாண்டி அவர்கள் வர முடியும். அந்த வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. இருப்பினும் இப்போதைக்கு அவர்கள் அப்படி இல்லை. எனவே கிரகங்களின் சுழற்சியில் அவ்வப்போது ஏற்படும் தன்மைகளை அவர்கள் இப்போதைக்குப் புறக்கணிக்க முடியாது.

எனவே, இந்த நாளில் இறப்பதால் நீங்கள் சொர்க்கத்திற்குப் போக முடியாது. ஆனால் இந்த நாள் நீங்கள் உங்கள் கட்டமைப்பைப் புனிதப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது. எனவேதான் எப்போதும் ஏகாதசியன்று விரதமும், சில ஆன்மிகப் பயிற்சிகளும் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள். அன்று ஆன்மிகப் பயிற்சிகளைச் செய்வது அவசியம். உங்களால் முழு நாளும் விரதம் இருக்க முடியவில்லை என்றால் பழ உணவு மட்டும் சாப்பிடலாம். அன்று உங்கள் உடலை இலகுவாக வைத்துக் கொண்டால் உங்கள் விழிப்புணர்வு உள்முகமாகத் திரும்பும். அப்போது உங்களுக்குள் உள்ள சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும்.