வாழ்க்கையில் எது உச்சபட்ச குறிக்கோள்?!
"குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, என்ன வாழ்க்கை?! வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும்!" இப்படிச் சொல்வதில் உண்மையிருந்தாலும், நமது குறிக்கோள் எப்படியிருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது. நீங்கள் உங்கள் குறிக்கோளை தீர்மானிக்கும் முன், சத்குருவின் இந்த உரையைப் படித்தால் சிறப்பாகும்!
 
 

"குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, என்ன வாழ்க்கை?! வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும்!" இப்படிச் சொல்வதில் உண்மையிருந்தாலும், நமது குறிக்கோள் எப்படியிருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது. நீங்கள் உங்கள் குறிக்கோளை தீர்மானிக்கும் முன், சத்குருவின் இந்த உரையைப் படித்தால் சிறப்பாகும்!

சத்குரு:

எதற்காக ஒரு "குறிக்கோள்"?

வாழ்க்கையை முழுமையாக தங்கள் அனுபவத்தில் உணராதவர்கள்தான் எப்போதும் வாழ்க்கையின் குறிக்கோளைப்பற்றியே பேசி வருகின்றனர். தற்போது ஆனந்தக் களிப்புடன் இருந்தீர்கள் என்றால், நீங்கள் வாழ்க்கையின் குறிக்கோளில் அக்கறை கொள்ளமாட்டீர்கள்.

எல்லா எல்லைகளையும், எல்லாக் கட்டுப்பாடுகளையும் கடந்து, நான் யார்? இந்த வாழ்க்கை எதற்காக? என்பதைப்பற்றி உணர்வதுதான் வாழ்க்கையின் இறுதி லட்சியம்.

வாழ்க்கையைப் பல்வேறு விதங்களில் துன்பமாக உணர்வதால்தான், மனிதர்கள் வாழ்க்கையின் குறிக்கோள்தான் என்ன என்று கேட்கிறார்கள். இதெல்லாம் தேவைதானா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்ந்து வந்திருந்தால், வாழ்க்கையின் குறிக்கோளைப்பற்றி நினைக்கமாட்டீர்கள். ஏனெனில், வாழ்க்கை என்பதே உங்களை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்ளும் வகையிலான பிரம்மாண்டமான ஒன்றுதான். உங்களுக்கு வேறு ஒரு லட்சியம் தேவை இல்லை.

நீங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. தற்போது நீங்கள் உங்களை எத்தனையோ விதமாக நினைத்துக்கொண்டு இருக்கலாம். ஒரு பத்திரிக்கையாளராகவோ, வேறு ஏதாவதாகவோ தற்போது உங்களை நீங்கள் நினைக்கலாம். அது நீங்கள் செய்துவரும் ஒரு வேலை அவ்வளவுதான். அடிப்படையில் நீங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே, உங்களின் லட்சியமாக இருக்க வேண்டியது இந்த வாழ்க்கையை அதன் உச்சகட்ட சாத்தியத்திற்கு எடுத்துச் செல்வதுதான்.

எல்லா எல்லைகளையும், எல்லாக் கட்டுப்பாடுகளையும் கடந்து, நான் யார்? இந்த வாழ்க்கை எதற்காக? என்பதைப்பற்றி உணர்வதுதான் வாழ்க்கையின் இறுதி லட்சியம். இதுவே ஆன்மீகச் செயல்முறை. இதைத்தான் அனைவருமே செய்கின்றனர். ஆனால், தங்களுக்குத் தெரிந்த வழிகளில் வெவ்வேறு விதமாகச் செய்கின்றனர்.

இன்னும் கொஞ்சம்..!

பணத்தைப் பற்றி அறிந்திருந்தால், அதை இன்னும் சிறிது அதிகமாகச் சம்பாதிக்க நினைக்கின்றனர். அதிகாரம் அறிந்திருந்தால், மேலும் அதிக அதிகாரம் பெற நினைக்கின்றனர். எதை நன்றாக அறிவார்களோ, அதில் தற்போது இருப்பதைவிட மேலும் சிறிது அதிகம் பெற முயற்சிக்கின்றனர். அப்படியானால், ஒவ்வொருவருக்குமே ஆவல் இருக்கிறது. இந்த ஆவல் எந்நிலையிலும் நின்று போகாது. இது விரிவடைய வேண்டும் என்பதற்கான முடிவில்லாத ஏக்கம். எல்லையில்லாத நிலைக்குப் போக உங்களை அறியாமலேயே முயற்சிக்கிறீர்கள். அதுதான் ஆன்மீக லட்சியம். ஆன்மீக லட்சியம் என்பதே எல்லையில்லாத நிலையை அடைவதுதான்.

அந்த எல்லையில்லாத நிலையை அடைய இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று, விழிப்பு உணர்வுடன் அடையலாம் அல்லது விழிப்பு உணர்வில்லாமல் அடையலாம். அந்த எல்லையில்லாத நிலையை அடைய 1, 2, 3, 4 என்று எண்ணிக்கொண்டே சென்றால், அங்கு சென்றடைய முடியுமா? ஆனால் நீங்கள் விழிப்பு உணர்வில்லாமல் அதை அடைய நினைக்கும்போது இப்படித்தான் எண்ணிக்கொண்டே செல்கிறீர்கள். இப்படிச் செல்லும்போது ஒரு காலத்திலும் நீங்கள் அங்கு சென்றடைய முடியாது.

ஆன்மீகப் பாதையில் யாரெல்லாம் இல்லை?

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொருவரும் அந்த எல்லையில்லாத நிலையை அடையவே முயற்சிக்கின்றனர். ஆனால் விழிப்பு உணர்வில்லாமல் முயற்சிக்கின்றனர். விழிப்பு உணர்வின்றி எதை எல்லாம் செய்கிறீர்களோ, அதை எல்லாம் விழிப்பு உணர்வோடும் செய்யமுடியும். விழிப்பு உணர்வோடு செய்தால், அதை அடையக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். இதிலுள்ள வேறுபாடு இதுதான்.

ஆன்மீகப் பாதையில் இல்லாதவர் என்று யாரும் கிடையாது. ஒவ்வொருவரும் ஆன்மீகப் பாதையில்தான் இருக்கின்றனர். ஆனால் விழிப்பு உணர்வின்றி முயற்சிக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வு தங்களுக்குத் தெரிந்த வகையில் விரிவடையவே விரும்புகின்றனர். எவ்வளவு விரிவடைய வேண்டும்? அவர்கள் எதிர்நோக்குவது, உண்மையில் எல்லையின்றி விரிவடைவதையே! ஆன்மீகம் என்பது கூட அதுதான்!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1