வானத்தைப் பற்றி நான் தெரிந்து கொண்டது - சத்குரு
வானத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டி, தன் வாழ்வில் பல நாட்களைக் கழித்தது, அதன்பின் வானத்தைப் பற்றி புலப்படாத பல விஷயங்கள் தெரிய வந்தது... இப்படி வானத்தைப் பற்றிய தேடுதலில் தான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் சத்குரு
 
 

வானத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டி, தன் வாழ்வில் பல நாட்களைக் கழித்தது, அதன்பின் வானத்தைப் பற்றி புலப்படாத பல விஷயங்கள் தெரிய வந்தது... இப்படி வானத்தைப் பற்றிய தேடுதலில் தான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் சத்குரு

சத்குரு:

என்னால் புரிந்து கொள்ள முடியாமல் மர்மமாக இருப்பவை எல்லாம் என்னை வசீரிக்கும். அந்த விதத்தில், என்னை மிகச் சிறு வயது முதலே வசீகரித்து வந்தது வானம்.

பறக்கும் முயற்சியில் உயிர் போனாலும் பரவாயில்லை. வானை நெருக்கத்தில் பார்த்துவிட வேண்டும் என்ற தாகம் என்னுள் உயிரோடு இருந்து கொண்டே இருந்தது.

பல பகல்கள், பல இரவுகள் இடைவிடாமல் வானத்தை வெறித்துக் கொண்டே இருந்திருக்கிறேன். 'விழிகளைத் திறந்து வைத்து சூரியனை வெறிக்கிறாய். பார்வையே பறிபோய்விடும்' என்று, மருத்துவராக இருந்த என் தந்தை கத்துவார். இரவு நேரங்களிலும் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்து, வானத்து நட்சத்திரங்களை வெறித்துக் கொண்டிருப்பேன். அங்கே என்ன இருக்க முடியும் என்று எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பேன்.

ஏதாவது ஒரு பதில் வராதா என்ற ஏக்கத்துடன் எத்தனையோ முறை வானத்தைப் பார்த்து 'ஹாலோ' என்று கத்தியிருக்கிறேன். வானத்தைப் புரிந்து கொள்ள முடியாத நிலையே எனக்கு ஒருவித போதை தந்திருக்கிறது.

எது பறந்தாலும், அது என்னைவிட வானத்துக்கு அருகில் இருக்கிறது என்று எனக்குத் தோன்றும். அதனாலேயே சிறகடித்துப் பறப்பது எதுவாக இருந்தாலும், அதன் மீது எனக்கு ஆர்வம் வந்தது. பறவைகளும், பூச்சிகளும் பல மணி நேரங்களுக்குப் எப்படிச் சிறகடிக்கின்றன என்பதைக் கவனமாக வேடிக்கை பார்ப்பேன்.

இகாரஸின் கதை...

எனக்கு ஆறு வயது இருக்கும்போது, ஒரு கிரேக்கக் கதை படித்தேன்.

தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய டேடாலஸ் என்பவரின் மகனாகப் பிறந்தவன், இகாரஸ். ஒருமுறை டேடாலஸ் தன் மகனுக்குச் சிறகுகள் அமைத்துக் கொடுத்தான். நீண்ட கைகளில் மெழுகு பூசி, அவற்றில் பறவையின் இறகுகளை ஒட்டி அமைக்கப்பட்ட அந்தச் சிறகுகளை வீசி, வானில் பறக்க இகாரஸ் தயாரானான்.

'எக்காரணம் கொண்டும் சூரியனுக்கு நெருக்கத்தில் பறக்காதே' என்று டேடாலஸ் எச்சரித்தான். ஆனால், காற்றில் எழும்பிப் பறக்க முடிந்ததும், இகாரஸ் தன்னிலை இழந்தான். எச்சரிக்கையை மறந்து சூரியனுக்கு நெருக்கமாகப் பறக்க முனைந்தான்.

வெப்பம் தாளாமல் மெழுகு உருக உருக, அவற்றில் ஒட்டிய இறகுகள் உதிர்ந்து இகாரஸ் பரிதாபமாக விழுந்து மரித்தான்.

பொதுவாக நடந்தேற முடியாத கனவுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, இகாரஸுடன் தொடர்புபடுத்தி ஒப்பிடுவார்கள்.

ஆனால், எனக்கென்னவோ இகாரஸ் நடக்க முடியாத கனவைக் கண்டுவிட்டதாகத் தோன்றவில்லை. சூரியனுக்கு அருகில் போனது முட்டாள்தனமாக இருக்கலாமே தவிர, அவனால் சிறகடித்து வானில் எழும்ப முடிந்தது என்பதே எனக்குப் போதுமான ஊக்கம் தந்தது.

க்ளைடரில் பறந்த அனுபவம்

வானத்தைப் பற்றி நான் தெரிந்து கொண்டது - சத்குரு, Vaanathai patri naan therinthu kondathu - Sadhguru

பறக்கும் முயற்சியில் உயிர் போனாலும் பரவாயில்லை. வானை நெருக்கத்தில் பார்த்துவிட வேண்டும் என்ற தாகம் என்னுள் உயிரோடு இருந்து கொண்டே இருந்தது.

17 வயதிருக்கும்போது, வானில் பறப்பதற்காக ஒரு க்ளைடரை நானே தயார் செய்தேன். அதில் பறக்கப் பார்த்து என் கணுக்காலை முறித்துக் கொண்டேன். ஆனாலும் ஆர்வம் விலகவில்லை. 21 வயதில் மறுபடி முயற்சி செய்தேன். பிற்பாடு விலை கொடுத்து க்ளைடர் ஒன்றை வாங்கினேன். இப்போது கூட என்னிடம் அந்தப் பறக்கும் விசை இருக்கிறது.

விமானத்தில் பறக்கையில் சிறைப்பட்டிருக்கும் உணர்வு வரும். விமான இயந்திரங்களின் உதவி இல்லாமல், அந்த இரைச்சல் இல்லாமல், வானத்தை எட்டிவிட முடியுமா என்பதில்தான் எனக்கு ஆர்வம் அதனால், பாராசூட்டில் குதிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். அப்படிப் பறக்க இயன்றபோதெல்லாம் அது தியானத்திக்கு மிக நெருக்கமான நிலை என்பதை உணர்ந்தேன்.

பண்ணையில் தங்கிய நாட்கள் அற்புதமானவை. மின்சாரம் கிடையாது. வெகு சீக்கிரம் இருட்டிவிடும். மாலையிலேயே புல் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்வேன். வானை வெறித்துக் கொண்டு இரவு நெடுநேரம் விழித்திருப்பேன்.

ஸ்பெயின் தேசத்தில் ஒரு மதுக்கடை வாசலில் அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம் இது.

'எல்லா விடைகளையும் அறிந்து கொண்டுவிட்டதாக நான் நினைத்த நேரம், கேள்விகளே மாறிப் போய் விட்டன'

வானமும் அப்படித்தான்.

எந்தக் கட்டத்திலும் வானத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. ஏதோ தெரிந்து கொண்டுவிட்டதாக நினைக்கும்போது இன்னும் தெரியாத பல கோடி அம்சங்களைப் பொத்தி வைத்திருப்பதாக அது பழிப்புக் காட்டும்.

வானத்தைப் புரிந்து கொள்ளப் போதுமான மூளை நம்மிடம் இல்லை என்பதுதான் நான் விளங்கிக் கொண்ட உண்மை. ஆகாயம் என்பது ஓர் இடம் அல்ல. சூரியனைப் போலவோ, நட்சத்திரங்களைப் போலவோ, மேகங்களைப் போலவோ வானுக்கு உண்மையில் பொருள்தன்மை எதுவும் இல்லை.

நகர மக்கள் கவனிக்காத வானம்

இன்றைய நகரத்து வாழ்க்கையில், வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட எவ்வளவு பேருக்கு நேரம் இருக்கிறது என்று தெரியவில்லை.

நீங்கள் என்னிடம் ஏதோ பேசுகிறீர்கள். அதைக் கவனிக்காமல், நான் வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தால், உங்களை அவமானம் செய்வதாக நினைப்பீர்கள். நீங்கள் சொல்வது வானத்தைவிட பிரமாண்டமானது என்ற நினைப்பு உங்களுக்கு. உங்களின் உணரும் ஆற்றல் அந்த அளவுக்குத் திரிந்து போயிருக்கிறது.

உண்மையில் நீங்கள் பேசுவதைவிட வானம் வெகு வெகு பெரிது. வானத்தைக் கவனித்தால்தான் படைப்பின் அற்புதமான, அளவிட முடியாத பிரமாண்டம் புலப்படும். படைத்தவனைப் பற்றி உஙகள் கலாச்சாரத்தில் இதுவரை கற்றுக் கொடுத்த விஷயங்கள் வானத்தைப் பார்க்கையில், நேரடியாக வாழ்க்கையின் அனுபவமாகப் புலப்படும்.

வானம் என்பது, ஆன்மீகம் போல் முடிவில்லாத வாய்ப்பு. எல்லையற்ற தன்மை. தொட்டுவிட இயலாத கூரை. நினைத்துப் பார்க்க முடியாத அளவு விசித்திரமானது. நம்புவதற்கு அரியது. முற்றிலும் மர்மமானது.

இதை உணர, மின்சார விளக்குகளை அணைத்துவிட்டுக் கொஞ்சம் நேரம் வானத்தைப் புரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் முழுமையான ஈடுபாட்டுடன் வெறித்துப் பாருங்கள். அது ஆன்மீகப் பயிற்சிக்கு இணையானது!

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1