டம்ளர், தட்டு, தண்ணீர் பாட்டில், பாலித்தீன் பை... இன்னும் சொல்வதென்றால் அணியும் ஆடைகள் முதற்கொண்டு 'யூஸ் & த்ரோ' என்ற பெயரில் கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்திவிட்டுக் குப்பையில் எறிந்து விடலாம். ஆனால், இயற்கை 'யூஸ் & த்ரோ' செய்கிறதா?! இங்கே 'யூஸ் & த்ரோ' கலாச்சாரம் பற்றி சத்குரு பேசுகிறார்.


சத்குரு:

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் ஒரு குறிபிட்ட வகையில் இயங்குகிறது. அதே நேரத்தில் ஒரு புதிய சக்தியின் ஆதிக்கம் அதன் மீது செலுத்தப்பட்டால், உடனடியாக அது தன் பழைய முறைகளை விட்டுவிட்டு, எந்தவித தயக்கமும் இன்றி புதிய முறைகளுக்கு மாறிவிடுகிறது. இதுதான் படைப்பின் ஆதாரம்.

இது தத்துவம் அல்ல, இயற்பியல் உண்மை.!

மேம்போக்காய் உள்ளவர்களுக்கு பிரபஞ்ச ரகசியங்கள் புலப்படுவதில்லை. அதற்கு ஒரு காதலனிடம் இருக்கும் அளவு கவனம் தேவை.

இயற்பியலை சரியான விதத்தில் எடுத்துரைத்தால், அதுவே மனிதர்களுக்கு நல்லதொரு ஆன்மீக செயல்பாடாக இருக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு துகளும், எப்படிச் செயல்படுகின்றது என்று புரிந்து கொண்டு, அவற்றின் வழியில் நடந்தால், நீங்களும் ஆன்மீகத் தன்மையில் தான் இருப்பீர்கள். நுட்பமாக கவனித்தால், ஒவ்வொரு அணுவும் ஆன்மீகப்பாதைக்கான வாயிற்கதவு தான். ஆனால் அதைத் திறப்பதற்கு மனிதர்களுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேம்போக்காய் உள்ளவர்களுக்கு பிரபஞ்ச ரகசியங்கள் புலப்படுவதில்லை. அதற்கு ஒரு காதலனிடம் இருக்கும் அளவு கவனம் தேவை. அப்படியில்லையென்றால் பிரபஞ்சம் உங்களுக்கு திறக்காது. தன் மனதை அங்கும் இங்கும் அலைபாய விட்டுக்கொண்டு இருப்பவருக்கு எதுவுமே கிடைக்காது.

அவரிடம் வெறும் நினைவுகள் மட்டும்தான் மிஞ்சியிருக்கும். அது வெறும் ஒரு நூலகத்தைப் போல, தகவல்களை சேகரித்து வைப்பதற்குத்தான் பயன்படும். முதலில் இத்தகைய மனதை, சேகரிக்கும் தன்மையிலிருந்து பெற்றுக்கொள்ளும் தன்மைக்கு மாற்றவேண்டும்.

அப்படியானால் அதை மேம்போக்கானத் தனத்திலிருந்து, கவனமும் அர்ப்பணிப்பும் கொண்டதாக மாற்ற வேண்டும். அதனால்தான் காலம்காலமாக பக்தியின் முக்கியத்துவம் பற்றி அதிகமாக சொல்லி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு நேர்மாறாக, இன்றைய சமுதாயத்தில் ஒன்றைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் கலாச்சாரம் அதிகமாக காணப்படுகிறது. எதையும் மீண்டும், மீண்டும் பயன்படுத்த வேண்டுமே தவிர, பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடாது. பயன்படுத்திவிட்டு, தூக்கி எறிவது மிகச் சுலபம். ஆனால் தூக்கி எறியும் இந்த மனோநிலை கண்டிப்பாக ஆன்மீக செயல்பாட்டை அழித்துவிடும்.

நான் சொல்வது உங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றலாம். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்கள் (USE AND THROW) அதிகம் கிடையாது. மளிகைப் பொருட்களை ஒரு காகிதப் பையில் போட்டு, அதை ஒரு சணல்கயிற்றால் கட்டித் தருவார்கள்.

நாங்கள் ஓரளவு வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், ஒவ்வொரு சணல் கயிற்றையும் என் அம்மா எடுத்து, அதை நன்றாகச் சுற்றி, ஓரிடத்தில் பத்திரமாக வைப்பார். அந்த காகிதப் பைகளும் துடைக்கப்பட்டு, கச்சிதமாக மடிக்கப்பட்டு, இன்னோரிடத்தில் பத்திரமாக வைக்கப்படும். அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம்.

இந்த பூமி இறந்தவர்களை ஆகாய வெளியில் எறிவதில்லை. அனைத்தையுமே அது மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது.

நாங்கள் சணல்கயிற்றை விலைக்கு வாங்கியதே இல்லை; வீட்டில் இருக்கும் பழைய கயிற்றையே பயன்படுத்திக் கொள்வோம். இது கயிறை மிச்சப்படுத்துவது பற்றியல்ல. பணத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் அல்ல. உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்திற்கும் மதிப்பு கொடுத்து வாழ்வது. இதுதான் இயற்கையின் வழியும் கூட.

நம் பூமித்தாய் எதையுமே தூக்கி எறிவதில்லை. அனைத்தையும் அவள் உள்ளிழுத்துக் கொள்கிறாள். இந்த பூமி இறந்தவர்களை ஆகாய வெளியில் எறிவதில்லை. அனைத்தையுமே அது மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது. பிரபஞ்சம் எந்த முறையில் செயல்படுகிறதோ, அந்த முறையில்தான் நம் கைகளும், மனமும், உணர்ச்சிகளும், உடலும் செயல்படுகின்றன.

மனித மனம் உடைந்து பைத்தியக்காரத்தனமான நிலைக்குப் போனதற்குக் காரணம், நாம் இயற்கையின் செயல்பாட்டிலிருந்து விலகிப் போனதுதான். இங்கு இயற்கை என்று நான் சொல்வது சுற்றுச்சூழல் குறித்து அல்ல. இதை ஒரு ஆன்மீக செயல்பாடாகச் சொல்கிறேன். நீங்கள் தியானத்தன்மையில் இருக்கும்போது, இயல்பாகவே இயற்கையின் செயல்முறைகளோடு இயைந்து இருப்பீர்கள். ஆனால் இப்போது இதை நாம் விழிப்புணர்வோடும் செய்ய முடியும்.

இந்த பூமியில் நீங்கள் மிகவும் குறுகிய காலம் மட்டுமே தங்கியிருக்கிறீர்கள். நாம் நூறு வருடங்கள் இருந்தாலும், பிரபஞ்சத்தின் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இது குறுகிய காலம்தான். பிரபஞ்சத்தின் காலஅளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உங்கள் வாழ்நாள் ஒரு கணம்தான்.

எனவே நீங்கள் என்ன வேலை செய்தாலும் சரி, அங்கு எவையெல்லாம் பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுகின்றதோ, அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது கலாச்சாரமாகிவிட்டால், அது காகிதத்தில் ஆரம்பித்து, பிறகு பேனா, பிறகு சில பொருட்கள் என்று கடைசியில் மனிதர்கள் என்று முடியும். இது ஏற்கனவே உலகில் சில இடங்களில் நடக்கிறது. இல்லையா? மனிதர்களையும் பயன்படுத்திவிட்டு, தூக்கி விட்டெறிந்து விடுகிறார்கள், இல்லையா? இதனால் மனிதர்களின் பாதுகாப்புணர்வு பெரிதும் அச்சுறுத்தப்படுகிறது.

இது போன்ற சிறிய விஷயங்களை நாம் கவனித்துச் செய்யாவிட்டால் பின் வளர்ச்சி என்பது நிகழாது. நம் கைகளும், மனங்களும் படைத்தவனின் கைகள் போல், படைத்தவனின் மனம் போல் வேலை செய்ய வேண்டும். இது குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்போம், விழிப்புடன் செயல்படுவோம்!

Photo Courtesy : the hills are alive @ flickr