ஒருவர் தன் நண்பர்களின் திருமணங்களுக்கு செல்வதற்கு பைக்கில் புறப்படும்போதெல்லாம் சாலை விபத்தில் சிக்கிக்கொள்கிறார். ஒருமுறை அல்ல, மூன்று முறை இப்படி நடந்துவிட்டது அவருக்கு. இதை கெட்ட சகுனம் என்று எடுத்துக்கொள்ளலாமா? இதோ அவரே சத்குருவிடம் இதுபற்றி கேட்டபோது...

சத்குரு:

"சிகரெட் பாக்கெட்டுகளில் 'புகைப்பது உடலுக்குத் தீங்கானது' என்று போட்டுவைப்பதுபோல, 'நண்பர்கள் திருமணம் ஆபத்தானது' என்று ஓர் எச்சரிக்கை போர்டு வேண்டுமானால் எழுதி உங்கள் வாகனத்தில் மாட்டிக்கொள்ளுங்கள். நண்பர்கள் திருமணமே ஆபத்து என்றால், உங்கள் திருமணம்..? நினைத்தாலே பதறுகிறது இல்லையா?

12 ராசிகள் எப்படி அமைகிறதோ, அந்தந்த நேரத்தில் அவற்றின் முடிவுகளின்படி என்னென்ன நடக்க வேண்டுமோ, அவை எல்லாம் அப்படியே நடக்கும் என்றால், மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியே நமக்கு இல்லை என்று அர்த்தம்.

நீங்கள் படித்தவர்தானே? வயதளவில், பைக் லைசென்ஸ் வைத்திருக்கும் அளவு வளர்ந்தவர்தானே? அப்புறம் எப்படி இப்படி ஒரு கேள்வி உங்கள் மனதில் முளைத்தது?

18ஆம் நூற்றாண்டில், பிரான்ஸில் வாழ்ந்த ஃபான்ட்டனல் (Fontenelle) நவீன சிந்தனாவாதி. ஒருசமயம் அவர் அணைக்காத தீக்குச்சியைத் தவறுதலாகப் படுக்கையில் போட்டுவிட, மெத்தையில் ஆரம்பித்த நெருப்புப் பரவி, அந்த அறையே தீக்கிரையானது.

அவருடைய மருமகன் கோபமாகி, நெருப்பை எப்படிக் கையாள வேண்டும் என்று அவரிடம் அறிவுரைக்குமேல் அறிவுரையாகக் கொடுத்துக்கொண்டே போனான். ஃபான்ட்டனல் அவனைக் கையமர்த்திச் சொன்னார்... அடுத்தமுறை வீட்டைக் கொளுத்தும்போது, இதைக் கவனத்தில் கொள்கிறேன்.

இப்படி அல்லவா இருக்கிறது நீங்கள் தீர்வு கேட்பது,

இந்தியாவின் எந்த நகரத்தை எடுத்துக்கொண்டாலும், வாகனங்கள் அதிகரித்துவிட்டன. அதற்கேற்ற வேகத்தில் சாலைகள் அகலப்படுத்தப்படவில்லை. சென்னையில் உள்ள போக்குவரத்தில் யார் எந்தப்பக்கம் திரும்பப் போகிறார்கள், வேறு யார் எப்படிக் குறுக்கிடுவார்கள் என்பதே புரிவது இல்லை. இதில் பத்திரமாக வீடு வந்து சேர்வதே அரிதாக இருக்கிறது. நம் வாகனத்தில் எந்த மோதலும் இல்லாமல், எந்தக் கீறலும் இல்லாமல், பயணம் செய்து மீள்வதே ஓர் அதிசயமிக்க தற்செயலாகத் தெரிகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நண்பர் திருமணம் என்றில்லை, நார்த்தங்காய் வாங்கப் போனால்கூட சாலை விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக, ஆபத்து என்று பயந்து எதைச் செய்யாமல் விடமுடியும்?

மொத்தப் போக்குவரத்தையே சரிசெய்வதுதான் தீர்வு. ஆனால், அது உங்கள் கையில் மட்டும் இல்லை. அதனால், உங்கள் பங்குக்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. நகரப் போக்குவரத்தில் வண்டி ஓட்டும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். முதலில் வாகனத்தைச் சாலையில் செலுத்தும்முன், அதைத் திறமையாகக் கையாள்கிறீர்களா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சாலை விதிகளை மீறாமல், போக்குவரத்தை மதியுங்கள்.

நீங்கள் பைக் ஓட்டும்போது, வேறு எதிலும் சிந்தனை போகாமல், செல்போனில் பேசிக்கொண்டு போகாமல், போக்குவரத்தில் முழுக்கவனம் வைத்து ஓட்டிப்பாருங்கள். முழுக் கவனத்தோடு வாகனத்தைச் செலுத்தினால், விபத்து ஏன் நேரப்போகிறது? உடலும் மனமும் சேர்ந்து இயங்கும்போது திறன் கூடுகிறது. உங்களுடைய உள்ளார்ந்த சக்தியையும் இவற்றுடன் இணைத்துப் பலப்படுத்தினால், உங்கள் புத்திசாலித்தனம் வேறுவிதப் பரிமாணத்திற்குப் போகும். விபத்துக்கள் மிகக் குறையும்.

சங்கரன்பிள்ளை நெடுஞ்சாலையில் கார் ஓட்டிக்கொண்டு இருந்தார். ஒரு திருப்பத்தில் எதிரில் வந்த காருடன் அவருடைய கார் மிக மோசமாக மோதியது. இரண்டு கார்களும் கவிழ்ந்தன. சங்கரன்பிள்ளை தவழ்ந்து வெளியே வந்தார். மோதிய காரில் இருந்து ஓர் அழகான பெண் வெளியே தவழ்ந்து வந்தாள்.

அவள் சண்டையிடப்போகிறாள் என்று சங்கரன்பிள்ளை நினைத்திருக்க, அவள் புன்னகைத்தாள். 'நாம் சந்தித்து இனிய நண்பர்களாக வேண்டும் என்பதற்காகக் கடவுள் ஏற்பாடு செய்த விபத்து இது. இல்லை என்றால், கார்கள் தகரமாக நசுங்கிய பின்னும் நாம் இருவர் மட்டும் அடிபடாமல் எப்படித் தப்பித்திருப்போம்?' என்றாள்.

அவளுடைய அழகு சங்கரன் பிள்ளையை அசத்தியது.

'உண்மைதான்' என்று இளித்தார்.

'இதைப்போன்ற சந்திப்புகளைக் கொண்டாடுவதற்காகவே இதை என் பையில் வைத்திருப்பேன்' என்று அவள் தன் கைப்பையில் இருந்து ஒரு ஒயின் பாட்டிலை எடுத்தாள். திறந்தாள், சங்கரன் பிள்ளையிடம் நீட்டினாள்.

'உங்களுக்கு வேண்டியதை நீங்கள் அருந்திவிட்டு மிச்சத்தை எனக்குத் தாருங்கள்' என்றாள்.

சங்கரன் பிள்ளைக்குப் பெருமை பிடிபடவில்லை. பாதி பாட்டிலுக்குமேல் காலிசெய்துவிட்டு, அவளிடம் நீட்டினார்.

அவள் அதை வாங்கிக்கொண்டு, போனை எடுத்து டயல் செய்தாள்.

'யாருக்கு போன்?' என்றார் சங்கரன்பிள்ளை

'போலீஸூக்கு'

'எதற்கு?'

'குடித்துவிட்டு வந்து என் கார்மீது மோதிய உங்களை விசாரிப்பதற்கு' என்று சொல்லிவிட்டு அவள் அந்த ஒயின்பாட்டிலை அவருடைய காருக்குள் எறிந்தாள்.

விபத்து நேர்ந்த நிலையிலும் கூர்மையாகச் சந்திக்கத் தெரிந்த அந்தப் பெண் எங்கே? விபத்துக்கு சகுனத்தை அதன் போக்குக்குத் தற்செயலாக நடக்காமல், உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால், நீங்கள் உங்களுடைய மனம், உடல், உள்சக்தி இவற்றை உங்கள் ஆளுமைக்குள் கொண்டுவரவேண்டும். இதைத்தான் ஆன்மீகம் என்பேன்.

12 ராசிகள் எப்படி அமைகிறதோ, அந்தந்த நேரத்தில் அவற்றின் முடிவுகளின்படி என்னென்ன நடக்க வேண்டுமோ, அவை எல்லாம் அப்படியே நடக்கும் என்றால், மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியே நமக்கு இல்லை என்று அர்த்தம்.

எங்கோ இருக்கும் கிரகங்களின் அசைவுகளாலோ, வெளியில் உள்ள சூழ்நிலையினாலோ, நம் வாழ்க்கை தீர்மானிக்கப்படக் கூடாது. அதற்காகத்தான் யோகாவில் பலவிதமான பயிற்சிகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்தில் 12 நிலைகள் இருக்கின்றன. 12 ராசிகளின் கட்டுப்பாட்டில் இருந்து நம்மை விடுவிக்கும் பயிற்சி இது. கிரகங்கள் உயிரற்றவை. நம் உயிருக்கு அடிப்படையான படைத்தலின் மூலமே நமக்குள் இருக்கையில், நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியை உயிரற்றப் பொருட்களுக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்?

நாம் நிர்ணயிக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைப்பதற்கான அடிப்படையை உருவாக்குவதுதான் ஆன்மீகத்தின் முக்கிய நோக்கம். வாழ்க்கையை நடத்துவதில் மட்டுமல்ல, என் பிறப்பு, என் இறப்பு எல்லாவற்றையும் என் கையில் எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்ற உறுதி உங்களுக்கு வந்துவிட்டால், அதற்கான கருவி யோகாவில் இருக்கிறது.

அதைப் பயன்படுத்தினீர்களானால், எத்தனை நண்பர்களின் திருமணங்களுக்கு வேண்டுமானாலும் நீங்கள் விபத்து இல்லாமல் போய்வர முடியும்".