உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காணும் வழி!
புதிய மாதம் ஒன்று துவங்கும் வேளையில் சத்குருவின் ஆசிகள் கிடைப்பது நமக்கு பக்கபலமாய் இருக்குமல்லவா?! நமது பிரச்சனைகளுக்கு காரணம் என்ன என்பதை மட்டுமல்லாமல், அதற்கான ஒரே தீர்வு என்ன என்பதையும் சொல்லி இங்கே ஆசி வழங்குகிறார் சத்குரு!
 
 

புதிய மாதம் ஒன்று துவங்கும் வேளையில் சத்குருவின் ஆசிகள் கிடைப்பது நமக்கு பக்கபலமாய் இருக்குமல்லவா?! நமது பிரச்சனைகளுக்கு காரணம் என்ன என்பதை மட்டுமல்லாமல், அதற்கான ஒரே தீர்வு என்ன என்பதையும் சொல்லி இங்கே ஆசி வழங்குகிறார் சத்குரு!

சத்குரு:

ஒவ்வோர் உயிரையும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்க்கிறேன். எதையும் புழு என்றோ, பூச்சி என்றோ, தாவரம் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ, இந்தியன் என்றோ, அமெரிக்கன் என்றோ நான் பார்ப்பதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வோர் உயிருக்கும் அதற்கென்று ஓர் இடம் இருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஆனால், எப்போதும் நாம் எதைவிட எது பெரியது என்ற ஆராய்ச்சியிலேயே இருக்கிறோம்.

நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரிடத்தில் உள்ள கசப்புகள் மற்றும் முட்டாள்தனங்களை ஆராய்வதை விட்டு விட்டு, ஓர் இடத்தில் ஒரு வினாடியாவது அமைதியாக அமர்ந்து உங்கள் உண்மையான விருப்பம் எது என்று கவனியுங்கள். ஆனந்தம் அறியவேண்டும், தன் உச்சபட்சச் சாத்தியத்தை உணரவேண்டும் என்பது மட்டுமே ஒவ்வொருவருக்கும் விருப்பமாக இருக்கிறது.

எதுவும் எதைவிடவும் பெரியது இல்லை. அனைவரும் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு இயங்கும்போது, பிரபஞ்சம் தானே நகர்கிறது. இந்தப் பிரபஞ்சத்தை வேறு வகையில் இயக்குவதற்கு இங்கு உள்ள எந்த மனிதருக்காவது தெரியுமா? மனிதன், தனது உடலைப் பற்றிய உண்மைகளைக்கூட இன்னமும் முழுதாக அறியவில்லை. எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரிடத்தில் உள்ள கசப்புகள் மற்றும் முட்டாள்தனங்களை ஆராய்வதை விட்டு விட்டு, ஓர் இடத்தில் ஒரு வினாடியாவது அமைதியாக அமர்ந்து உங்கள் உண்மையான விருப்பம் எது என்று கவனியுங்கள். ஆனந்தம் அறியவேண்டும், தன் உச்சபட்சச் சாத்தியத்தை உணரவேண்டும் என்பது மட்டுமே ஒவ்வொருவருக்கும் விருப்பமாக இருக்கிறது.

தனது உண்மையான விருப்பத்தை அறிந்தவர்கள், பிறகு அடையாளங்களையும் ஆராய்ச்சிகளையும் விட்டு விட்டு ஓர் உயிரை வெறும் உயிராக மட்டுமே பார்க்கத் துவங்குவார்கள். இதைத்தான் நாமும் தியானம் என்று சொல்கிறோம். இந்த தியானத்தன்மையை, நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களும், எப்போது அடைகிறீர்களோ, அப்போது உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டுகொள்வீர்கள். ஏனெனில், இந்தப் பிரச்சனைகள் தானாக முளைக்கவில்லை. நீங்கள் உருவாக்கியவைதான். எனவே, நீங்கள் உருவாக்கிய பிரச்சனைக்கு நீங்களே தீர்வு காண தியானம்தான் சிறந்த வழி. நீங்கள் ஒவ்வொருவரும் விரைவில் தியானத் தன்மையை அடைய எனது ஆசிகள்!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1