சத்குரு:

பொறுப்பு என்று சொன்னவுடன் இன்னொரு கேள்வி வந்துவிடும். வாழ்க்கையின் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு விஷயங்களையும், வெவ்வேறு நபர்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்பொழுது எதற்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொள்வது?

பூகம்பத்தால், குஜராத்தில் பல வீடுகள் தரைமட்டமாயின. சுனாமியால் தமிழகக் கடலோரம் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போதெல்லாம் யாருக்கோ, என்னவோ நடக்கிறது என்று அலட்சியமாக இருப்பீர்களா? உங்களுக்குள்ளே இருக்கும் மனிதத் தன்மை ஒவ்வொரு நிகழ்வுக்கும் துடிப்புடன் பதில் கொடுக்கிறதல்லவா? இதற்குத்தானே பொறுப்புணர்வு என்று சொல்கிறோம்.

அன்றாட விஷயங்களில்கூட பொறுப்பேற்பது பற்றிய சர்ச்சைகள் நம்ப முடியாத அளவிற்கு நீண்டுகொண்டு போகின்றன. யார் லைட் ஸ்விட்ச் போடுவது? யார் தட்டைக் கழுவுவது? யார் தண்ணீர் பிடித்து வைப்பது?

இப்படித்தான் சங்கரன் பிள்ளைக்கும், அவர் மனைவிக்கும் வாசல் கதவை யார் பூட்டுவது என்று ஓர் இரவில் தகராறு வந்துவிட்டது. சச்சரவின் முடிவில் அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

‘யார் வாய் திறந்து முதல் வார்த்தையைப் பேசுகிறோமோ, அவர்கள் எழுந்து போய் கதவைப் பூட்ட வேண்டியது’

பல வருட வாழ்க்கையில் ஒருவரின் பலமும், பலவீனமும் மற்றவர்க்குத் தெரியாதா? சாப்பாடு போடு என்று சங்கரன் பிள்ளையோ, சாப்பிட வரலாம் என்று அவர் மனைவியோ வாயைத் திறந்தால் கதவைப் பூட்ட வேண்டிய பொறுப்பு வந்துவிடுமே என்று, பிடிவாதமாகப் பட்டினியாகவே மௌனம் சாதித்தார்கள்.

நள்ளிரவில் சில ரவுடிகளின் பார்வையில் திறந்து கிடந்த வீடு தென்பட்டது. உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்திருந்த தம்பதியைப் பார்த்து பயந்தார்கள். ஆனால், இருவரும் வாயைத் திறக்காமல் வேடிக்கை பார்ப்பதைக் கண்டு ரவுடிகளுக்கு ஆச்சரியம் தாளவில்லை. கைக்குக் கிடைத்த பொருட்களையெல்லாம் அள்ளிக்கொண்டார்கள். மேஜையிலிருந்த சாப்பாட்டைக்கூட சாப்பிட்டார்கள். என்ன செய்தாலும், இருவரிடமிருந்தும் குரலே இல்லை.

ஒருவன் தைரியமாகி சங்கரன் பிள்ளையின் மனைவியின் காதிலிருந்து தோட்டைக் கழற்றினான். அதற்குக்கூட அவள் குரல் கொடுக்கவில்லை.

அடுத்தவன் ஆச்சரியமாகி, அங்கிருந்த கத்தியை எடுத்து சங்கரன் பிள்ளையின் மீசையை மழிக்கப் பார்த்தான்.

இதுவரை கல்லுளி மங்கனாக அமர்ந்திருந்த சங்கரன் பிள்ளை வேறு வழியின்றி குரல் கொடுத்தார்: “சரி, சரி, நானே போய் கதவைப் பூட்டுகிறேன்”

சங்கரன்பிள்ளை போல கழுத்துக்கு கத்தி வந்த பின்தான் பொறுப்பு ஏற்க வேண்டுமா என்ன? அந்த புத்தியை முன்பே பயன்படுத்தி இருந்தால், வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்குமே!

பூகம்பத்தால், குஜராத்தில் பல வீடுகள் தரைமட்டமாயின. சுனாமியால் தமிழகக் கடலோரம் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போதெல்லாம் யாருக்கோ, என்னவோ நடக்கிறது என்று அலட்சியமாக இருப்பீர்களா?

உங்களுக்குள்ளே இருக்கும் மனிதத் தன்மை ஒவ்வொரு நிகழ்வுக்கும் துடிப்புடன் பதில் கொடுக்கிறதல்லவா? இதற்குத்தானே பொறுப்புணர்வு என்று சொல்கிறோம்.

உங்களுக்குள்ளும் ஒவ்வொருவருக்குள்ளும் இந்தப் பொறுப்புணர்வு இருக்கவே செய்கிறது. நீங்கள் பொறுப்பா, இல்லையா என்பது பற்றி கேள்வியே இல்லை.

நீங்கள் பொறுப்பானவர்தான். ஆனால் “நான் பொறுப்பு” என்ற உணர்வு உங்கள் கவனத்தில் இருக்கிறதா? என்பதே கேள்வி.

சிலர் தன்னுடைய வாழ்க்கைக்கு மட்டும் பொறுப்பேற்கிறார்கள். சிலர் தங்கள் குடும்பம், உறவினர், சுற்றத்தார் இவர்களுக்கு மட்டும் பொறுப்பென்று நினைக்கிறார்கள். சிலர் நாட்டுக்கும் பொறுப்பென்று எல்லையை சற்று அதிகரிக்கிறார்கள். சிலரோ தன் வாழ்க்கைக்கே கூட தான் பொறுப்பல்ல என்று தட்டிக் கழிக்கிறார்கள்.
உங்கள் பொறுப்புணர்வுக்கு எல்லை எங்கே வைத்திருக்கிறீர்கள்?

சரி, உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள்! அவர்கள் 1000 மைல்களுக்கு அப்பால் போய்விட்டாலும், நீங்கள் அவர்களுக்கு பொறுப்புதானே? இல்லை, இல்லை அவர்கள் ‘நாட் ரீச்சபிள்’ ஆகிவிட்டார்கள். சிக்னல் தொடர்பு எல்லையை தாண்டிவிட்டார்கள். நான் பொறுப்பு கிடையாது என்று கூறும் மனிதரா நீங்கள்? அப்படி ஒன்றும் இல்லையே, அவர்கள் எங்கிருந்தாலும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தானே உணர்கிறீர்கள். சொல்லப்போனால் அவர்களுக்கு “நான் பொறுப்பு” என்ற உணர்வினால்தான் அவர்களை உங்கள் குடும்பத்தவராக அங்கீகரிக்கிறீர்கள் அல்லவா?

இப்போது நீங்கள் இருக்கும் தெருவில் யாரோ ஒருவர் அடிபட்டு சாகக் கிடப்பதைப் பார்க்கிறீர்கள். அவருடைய நிலைக்கு நீங்கள் பொறுப்புதானே?

“என்னடா இது, நான் இதற்குக் காரணம் இல்லை” என்று சிலர் அலறி அடிப்பது புரிகிறது. நான் என்ன “நீங்கள்தான் அவரை காயப்படுத்தினீர்களா?” என்றா கேட்டேன். உங்களை அந்த நிலைமைக்கு பழியேற்கும்படி நான் கூறவில்லை, கவலைப்பட வேண்டாம். நான் கேட்பதெல்லாம் “சாகக் கிடக்கும் அவருக்கு நீங்கள் பொறுப்பா?” என்பதுதான். அப்படி கிடக்கும் ஒருவரை பார்க்கிறீர்கள், உங்களுக்குள் நிகழ்வது என்ன?

மருத்துவம் தெரிந்தவராக இருந்தால், அவருக்கு முதலுதவி அளிப்பீர்கள். இல்லை என்றால், உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி கிடைக்க முயற்சிப்பீர்கள். இல்லை நீங்கள் எதுவுமே முடியாதவராக இருந்தால், உங்கள் உணர்வில் கொஞ்சம் அக்கறையோடாவது அவரை நோக்குவீர்கள், இல்லையா? இவை யாவும் உங்களுடைய பொறுப்பின் வெளிப்பாடுதானே? நீங்கள் அறியாதவருக்கும் பொறுப்பெடுத்து அந்த சூழ்நிலையிலும் பதில் கொடுக்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொறுப்பற்றவன் இப்படி எல்லாம் உணர்வானா என்ன? “நான் பொறுப்பில்லை” என்று கூறுவது உங்கள் காரண அறிவு மட்டுமே. இதல்லவா துரதிர்ஷ்டமானது?

உங்களுக்குள் உள்ள மனிதத்தன்மை ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயல்பாகவே பதில் தருகிறது. உங்கள் அனுமதி கேட்டுக்கொண்டு ஒன்றும் அது பதிலளிப்பது இல்லையே? தடையின்றி வெளிப்படும் உங்கள் பொறுப்புணர்வுக்கு உங்கள் மனத்தளவில் தடை போட்டு வைத்திருப்பவர் நீங்கள்தான்.

சாகக் கிடந்த அந்த மனிதனைப் பார்த்து “யாரோ இறக்கட்டும், எனக்கு அவரை தெரியாது, அவருக்கு நான் பொறுப்பு கிடையாது” என்று அவரை கவனித்தும் கவனிக்காதது போல் கடந்து சென்றால், நீங்கள் இங்கு இருப்பது ஒரு மனிதராகக் கிடையாது. வெறும் பாறையாகத்தான், அப்படித்தானே?

அநேகமானவர்கள் இந்தமாதிரி கற்களைப் போல்தான் உலகில் நடமாடுகிறார்கள். எதற்கும் பதிலளிக்க விருப்பமின்றி, இறுகியவர்களாய் தெருவில் வலம் வருவார்கள். தங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் மட்டும் அந்த ஒன்றிரண்டு பேரிடம் திடீரென்று மனித உருவம் எடுத்துக் கொள்வார்கள். வெளியே வந்தால் மீண்டும் பழையபடி பாறைதான். இவர்கள் எல்லாம் பகுதிநேர (Part time) மனிதர்கள்.

எப்போது நீங்கள் ஒன்றை என்னுடையது, என்னுடையது கிடையாது என்று பகுத்துவிட்டீர்களோ, அப்போதே முடிந்துவிட்டது. உங்களால் ஒன்றிற்கு பதில் கொடுக்க முடிகிறது. ஒன்றிற்கு பதில் கொடுக்க முடியாமல் போகிறது.

நான் உங்களை நேரடியாகக் கேட்கிறேன். நீங்கள் பார்ட் டைம் மனிதராக இருக்க வேண்டுமா? இல்லை முழுநேர மனிதராக வேண்டுமா?

நீங்கள் முழுநேர மனிதராக இருக்க வேண்டும் என்றால் உங்கள் பதில் கொடுக்கும் திறன் எல்லைகள் அற்று இருக்க வேண்டும். உங்கள் பொறுப்புணர்வுக்கு போட்டு வைத்திருக்கும் தடைகளை, எல்லைகளை தகர்த்தெறிந்தால் மட்டுமே முழுநேர மனிதனாக வாழமுடியும்.

இப்போது இங்கு யாரோ ஒருவர் படுத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரை கூப்பிட்டீர்கள், எந்த பதிலும் இல்லை. அவரை அசைத்து உலுக்கினீர்கள், எந்த பதிலும் இல்லை. அவரை குத்திப் பார்த்தீர்கள், எந்த பதிலும் இல்லை. என்ன நினைப்பீர்கள்? இறந்துவிட்டார், பிணம்தான் என்பீர்கள் அல்லவா? அப்படி என்றால், தனது பதிலளிக்கும் திறனை இழந்துவிட்டார் என்றால், அவரை இறந்துவிட்டார், உயிரற்றது என்கிறீர்கள், இல்லையா? அப்படி என்றால் பாருங்கள், உயிர்த்தன்மை என்பது என்ன? உங்களுடைய பதில் கொடுக்கும் திறன்தானே, உயிர்தன்மை என்பது?

நீங்கள் உயிரோட்டம் என்று கூறுவது உங்களுடைய பதிலளிக்கும் திறனைத்தான். பதிலளிப்பது என்பது வாய் மூலமான வார்த்தையாகவோ, அல்லது மனதளவிலே பதிலளிப்பது என்று மட்டும் கிடையாது. இந்த உயிரே இப்போது பதில் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறது. அதனால்தானே நீங்கள் உயிரோட்டமாக உள்ளீர்கள்? இந்த உயிர்சக்தி ஒவ்வொன்றுக்கும் பதிலளித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் ஜீவிக்கிறீர்கள். இது பதிலளிக்காமல் நின்றுவிட்டால், நீங்கள் இறந்துவிட்டதாக அறிவிப்போம்.

இப்போது என் கேள்வி நீங்கள் எந்தளவுக்கு உயிரோட்டமாக இருக்க விரும்புகிறீர்கள். கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். நீங்கள் எந்தளவிற்கு உயிரோட்டமாக இருக்க வேண்டும்! 50% போதுமா? இல்லை 40% போதுமா? இல்லை உங்கள் லோக்கல் பாஸ்மார்க் என்ன? 35% மட்டுமா? அல்லது 100% உயிர் வாழ விரும்புகிறீர்களா, உயிர்ப்பை 50%, 40% என்று குறைத்துக் கொண்டு வாழ்ந்திடலாமா?

நீங்கள் 100% உயிராக வாழவேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய பதில் கொடுக்கும் திறனுக்கு எல்லைகள் போட்டுத் தடுத்தால், 100% உயிராக இருக்க முடியுமா?

உங்கள் உயிர்ப்பு என்பதே உங்கள் பதிலளிக்கும் திறன்தானே. பிறகு உங்களுடைய பதிலளிக்கும் திறனுக்கு எல்லைகள் வகுத்து பொறுப்புக்கு வரம்புகள் போட்டால், 100% உயிராக வாழமுடியவே முடியாது!

“என் பொறுப்புணர்வுக்கு எல்லைகள் கிடையாது” என்று அனுபவப் பூர்வமாக நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள் என்றால், இப்போதுதான் நீங்கள் 100% ஒரு முழு உயிராக ஜீவிக்கிறீர்கள்.

இல்லை என்றால், பலபேர் போல உலகில் நீங்களும் பாதி உயிராகவே வலம் வருவீர்கள்.

மனிதர்கள், பல விதங்களில் தங்கள் உயிர்தன்மைக்கு தடையிட்டு குறைத்துக் கொள்கிறார்கள். இதுதான் “தவணை முறையில் தற்கொலை” என்பது. மெதுவாக அவர்களின் உயிரோட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.

நீங்கள் 5 வயதாக இருந்தபோது எவ்வளவு உயிர்ப்போடு ஆனந்தமாக இருந்தீர்கள்! ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருப்பத்துடன் பதில் கொடுத்தீர்கள். ஒரு வண்ணத்துப் பூச்சியை பார்த்தபோது உங்கள் உயிர்தன்மை முழுவதுமே அந்த வண்ணத்துப் பூச்சியோடே பறந்து சென்றதல்லவா?

இப்போது நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறைக்குள் ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து வந்தால் கவனிப்பீர்களா என்ன? அநேகமானவர்கள் கவனிப்பதில்லை. கவனித்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இப்போது உங்கள் உயிர்தன்மை ஒன்றும் அந்த வண்ணத்துப்பூச்சியின் பின்னால் பறப்பதில்லையே ஏன்? காரணம், உங்கள் பதில் கொடுக்கும் திறனை சுருக்கி, இறுக்கமாக பிடித்து வைத்துவிட்டீர்கள்.

உங்கள் பதில் கொடுக்கும் திறனை நீங்கள் சுருக்கிக்கொள்வது எப்படி என்று தெரியுமா உங்களுக்கு?

எப்போது நீங்கள் ஒன்றை என்னுடையது, என்னுடையது கிடையாது என்று பகுத்துவிட்டீர்களோ, அப்போதே முடிந்துவிட்டது. உங்களால் ஒன்றிற்கு பதில் கொடுக்க முடிகிறது. ஒன்றிற்கு பதில் கொடுக்க முடியாமல் போகிறது. அது சரி? எப்படி ஏதோ ஒன்றை உங்களுடையதாகவே உணர்கிறீர்கள்? உதாரணமாக, நீங்கள் படிக்கும் இந்தப் புத்தகம் எங்கேயோ இருந்ததுதான்.

திடீரென்று உங்கள் கையில் எடுத்தவுடன் இது என் புத்தகம் என்கிறீர்களே, அது எப்படி உங்களுடையதானது? இது உங்களுடையதாவதற்கு அடிப்படை என்ன? என்னுடையது என்று உணர்ந்த உடனேயே இதைத் துடைத்து வைத்துக் கொள்வீர்கள். இது கசங்கி போகாமல் பார்ப்பீர்கள், அப்படித்தானே? அதற்கு பொறுப்பேற்றுவிட்டீர்கள், இல்லையா?
இது என் பொறுப்பு என்று உணர்ந்தவுடனேயே அது என்னுடையது என்று தோன்றுகிறது, இல்லையா? எதை எல்லாம் உங்கள் பொறுப்பாக உணர்கிறீர்களோ, அவை எல்லாமே உங்களுடையதாகிவிடுகிறது. எதையெல்லாம் உங்கள் பொறுப்பாக உணராமல் இருக்கிறீர்களோ, அவை எல்லாமே உங்களுடையது இல்லை என்றாகிவிடுகிறது. எதையெல்லாம் உங்களுடையது கிடையாது என்கிறீர்களோ, உங்களால் அதனுடன் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவே முடியாதல்லவா? எங்கெல்லாம் உங்களால் ஈடுபடமுடியாமல் போகிறதோ, அங்கெல்லாம் உங்களின் உயிர்ப்புடன் இருக்கும் தன்மை மங்கிவிடுகிறது.

வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து நீங்கள் பதில் கொடுக்க முடியும்தானே? அவை எங்கு, எப்படி இருக்கின்றன என்று தெரியாது. அவற்றில் பல இன்னும் வாழ்கின்றனவா என்றுகூட தெரியாது. இருந்தாலும் உங்களால் அதற்கு பதிலளிக்க முடியும்தானே?

அந்த இருண்ட வானத்திற்கும், மென்மையான காற்றுக்கும், பசுமையான வயலுக்கும் பதில் கொடுக்க முடிகிறதல்லவா?

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் இந்தப் பிரபஞ்சத்தின் நிகழ்வு ஒவ்வொன்றுக்குமே பதில் தந்து கொண்டுள்ளது. இன்று இதை நிரூபிக்க விஞ்ஞானமே உள்ளது.

உங்கள் உயிர்சக்தியும் இந்த உலகின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பதிலளித்துக் கொண்டுதான் உள்ளது. அந்த சூரியனுக்கும் பதில் கொடுக்கிறீர்களல்லவா? உங்கள் உடல், உயிர் எல்லாமே எந்தத் தடையுமின்றி பதில் தந்தே உள்ளது. அதனால் மனத்தளவில் மட்டும் நீங்கள் “நான் பொறுப்பல்ல” என்று தடையிட்டுக் கொண்டதால் உங்கள் பதில் கொடுக்கும் திறன் சுருங்கி, உயிர்ப்பற்றவர்களாகி விடுகிறீர்கள். இதனால்தான் உடலும் நோய்வாய்ப்படுகிறது, உணர்வும் சோர்வாகிறது. நான் கேட்பது, உங்கள் மனத்தளவிலும் உங்கள் முழு விழிப்புடனும், விருப்பத்துடனும் இந்தத் தடைகளை தகர்த்தெறிய விருப்பமா இல்லையா?

எப்படியும் உங்கள் அனுமதி கேட்டு உடலும், உயிரும் பதிலளிப்பதில்லை. பிரபஞ்ச நிகழ்வு முழுவதுமே ஒன்றுக்கொன்று ஏற்படும் பரிமாற்றம்தானே?

வாழ்வில் விருப்பமின்றி ஈடுபடும்போது, உடல், புத்தி, உணர்ச்சி, உயிர்சக்தி இவை எல்லாமே நரகமாகிப் போகிறது. இப்போது உடல் நோய்வாய்ப்படுகிறது, மனச்சோர்வு ஏற்படுகிறது, வாழ்க்கை கோணலாகிப் போகிறது.

எப்படியும் எல்லைகள் இன்றி பதில் கொடுக்கிறீர்கள்! உங்களிடம் உள்ள ஒரே வாய்ப்பு என்னவென்றால், அதை விருப்பத்துடன் நிகழ்த்துவதா? விருப்பமின்றி நிகழ்த்துவதா? என்பதே.

‘என் பொறுப்பிற்கு எல்லையில்லை’ என்று உணர்வுப்பூர்வமாக பார்த்தீர்கள் என்றால் இப்போது விருப்பத்துடன் பதிலளிக்க முடிகிறது.

உடலும், உயிரும், கோணலாக இருந்த மனமும் இப்போது ஒரே கோட்டிற்கு வருகிறது.

தன் ஒருவனுக்கு மட்டும்தான் பொறுப்பு என்று வாழ்பவன் ஒரு புழுவை போன்றவன். புழு அப்படித்தானே வாழ்கிறது. அதன் நோக்கம் வெறும் பிழைப்பு மட்டுமே. தன் பிழைப்புக்குக் கூட பொறுப்பேற்காதவன் புழுவைவிட கேவலமானவன்.

தன் பொறுப்பின் எல்லையை தனது ஊர், தனது நாடு என்று ஒரு சமூக வரம்புக்குள் நிறுத்தி வாழ்பவர்கள் ஒரு எறும்புபோல் பூச்சியின் வாழ்க்கையை வாழ்பவர்கள். எறும்புகள் தன் சமூகத்திற்கு மட்டுமே பொறுப்பேற்கின்றன.

இப்படி பரிணாம வளர்ச்சியின் உயர்ந்த பீடத்தில் வீற்றிருக்கும் மனிதனாக வாழ்வதென்றால், முழுமையான மனிதனாக வாழ்வதென்றால், எல்லைகளற்ற பொறுப்புடன் வாழ்வது மட்டுமே.

உங்கள் பொறுப்புகளுக்கு எல்லை வகுத்துக் கொள்ளும்போது, உங்கள் உயிர்தன்மைக்கும், மனிதனாக இயங்கும் தன்மைக்கும் எல்லை போட்டுக் கொள்ளும்போது, பரிணாமத்தில் ஏற்படுவது முன்னேற்றம் அல்ல, பின்னடைவுதான்.

எல்லையற்ற பொறுப்புணர்வில் நீங்கள் நிலைத்திருக்கும்போது, உங்களுக்குள் உள்ள மனிதத்தன்மை உச்சத்திற்கு வருகிறது, மலர்கிறது.

எப்போது உங்களுக்குள்ளே மனிதத்தன்மை நிரம்பி, பொங்கி வழிகிறதோ, அப்போது தெய்வீகம் என்பது உங்களுக்கு நிகழ்ந்துவிடும். அதன்பிறகு, தெய்வீகத்தை நீங்கள் மேல்நோக்கி வானத்தில் தேட தேவை இருக்காது.

உங்கள் பொறுப்புகளுக்கு எல்லைகள் வகுத்து அப்படி என்னதான் சாதித்துவிட்டீர்கள், பலரும் சேர்த்திருப்பது என்னவோ, டென்ஷன், சர்க்கரை, அல்சர், இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வைத்தான்.

உங்கள் பொறுப்புகள் எல்லையற்றவை என்பதை அறிவுப்பூர்வமான தத்துவமாக புரிந்துகொள்ளாமல், அனுபவப்பூர்வமாக உணர்ந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் விருப்பத்தோடு பங்கேற்க தொடங்குவீர்கள்.

இப்போது ஒவ்வொரு கணமும் சொர்க்கமாகிப் போகிறது. இது ஒன்றும் மனரீதியான உளவியல் தத்துவம் கிடையாது, அடிப்படையான உண்மை.

உங்கள் வாழ்வில் விருப்பத்தோடு பதிலளிக்கும்போது, உங்கள் உடல், புத்தி, உணர்ச்சி, உயிர்சக்தி இவை நான்குமே இனிமையாகவே நிலைத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது சும்மா உட்கார்ந்திருப்பதுக்கூட சொர்க்கம் போல் உணர்ந்திடுவீர்கள். வாழ்வில் விருப்பமின்றி ஈடுபடும்போது, உடல், புத்தி, உணர்ச்சி, உயிர்சக்தி இவை எல்லாமே நரகமாகிப் போகிறது. இப்போது உடல் நோய்வாய்ப்படுகிறது, மனச்சோர்வு ஏற்படுகிறது, வாழ்க்கை கோணலாகிப் போகிறது.

பொறுப்புக்கு எல்லைகள் வகுத்து மனப்பான்மையில் குறுகிப் போகும்போது, உள்ளிழுக்கும் ஒரு மூச்சுக்கூட ஒரு நோயாகிப் போகிறது. வாழ்க்கையே ஒரு குப்பைமேடாகிப் போகிறது. அதற்குப் பிறகு துர்நாற்றம் வருவதாக புலம்பி என்ன பயன்?

எல்லையற்ற பொறுப்புடன் விருப்பத்தோடு ஒரு மூச்சு எடுத்து விட்டாலும்கூட அது பரவசமாகிப் போகிறது. இதுவே நீங்கள் தியானத்திற்கு போகும் முன் எடுக்க வேண்டிய படியும்கூட.

பொறுப்புக்கு எல்லை இருக்கிறதா என்பது பற்றி கேள்வியே இல்லை. எப்படியும் நீங்கள் அனுபவப்பூர்வமாக பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் எல்லையின்றி பதில் தருகிறீர்கள் என்பது அசைக்கமுடியாத உண்மை. கேள்வி, “நீங்கள் உங்கள் பொறுப்பு எல்லையற்றது என்பதை உணர்ந்தீர்களா?” என்பது மட்டுமே. அதை உங்கள் மனத்தில் ஆழப் பதித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை உங்கள் முழு விருப்பத்துடனும், விழிப்புடனும் நிகழ்கிறது.