Question: நம் வாழ்வில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், சிலர் வெகு சுலபமாக நம்மைத் தாண்டிச் சென்றுவிடுகின்றனர். அவர்களுக்கு மட்டும் புதுப்புது யுக்திகளும் அசாதாரண சிந்தனையும் எப்படி சாத்தியமாகிறது? ஏன் இந்த வித்தியாசம்? இதை சமன் செய்ய முடியுமா?

சத்குரு:

எந்த செயலும் வெற்றியடைய வேண்டுமெனில், அதிலும் குறிப்பாக, பலநாட்கள் நீடிக்கக்கூடிய, பலர் பங்குபெறும் செயல்களாக இருக்கும்போது, அதற்கு முறையான செயல்முறைகளைக் கடைபிடிப்பது நல்லது. நடக்கும் செயல்களை கண்காணிக்கவும், முன்னேற்றத்தைக் கணிக்கவும் இது அவசியம். ஆனால், வெற்றிகரமாய் செயல்பட செயல்முறைகளும், முறையான அணுகுமுறையும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு மேதைமையும் அவசியம்.

வாழ்வின் ஒவ்வோர் அம்சத்தை நடத்திக் கொள்வதற்கும் மக்கள் இன்று செயல்முறைகளை உருவாக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

மேதைமையை விளக்க முடியாவிட்டாலும், தாங்கள் பிரயோகிக்கும் வழிகளை அவர்கள் விளக்கமுடியும். வெற்றிகரமான தொழிலதிபர்களின் வாழ்க்கை, மேதைமையின் முக்கியத்துவத்தை பல வகைகளில் உணர்த்துகின்றன. கச்சிதமாய் வேலைசெய்யும் செயல்முறைகள் உங்களிடம் இருக்கலாம், ஆனால் மேதைமையின் துணையில்லை என்றால், உங்கள் வாழ்க்கை சராசரி நிலையிலேயே இருக்கவேண்டியது தான். முறையான அணுகுமுறைகள் நல்ல காப்பீடாய் அமையலாமே தவிர்த்து, விர்ரென்று வேகமாகச் செல்ல அவை உதவமுடியாது. இந்த மேதைமை என்பது நம் பிறப்பிலேயே இருக்கவேண்டிய ஒன்றா? அல்லது அதை நாம் வளர்த்துக் கொள்ளமுடியுமா? அதை வளர்த்துக் கொள்ள வழிகள் இருக்கிறதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஹென்ரி ஃபோர்டு சொன்ன விளக்கம்

இது எனக்கு அழகான கதை ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. இது ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் நிறுவனர் ஹென்ரி ஃபோர்டின் வாழ்விலே நடந்தது. தன் நிறுவனத்தில் பல விஷயங்கள் திறம்பட நடக்கவில்லை என்று பார்த்த ஹென்ரி ஃபோர்டு, ஒரு செயல்திறன் ஆய்வாளரை நியமித்து, எல்லாவற்றையும் சீரமைக்கச் சொன்னார். இந்த ஆய்வாளரும் அலுவலகம் அலுவலகமாய் சென்று, முக்கியப் பணிகளில் இருந்தவர்களைக் கவனித்தார். பின் அவரவருக்குத் தேவையான வகையில் அவர்களின் செயல்திறன் அதிகரிக்க, யோசனைகளும், கருவிகளும் அளித்து வந்தார். இப்படிப் பலரையும் சரிசெய்து வந்தபோது, அதில் ஒருவர் மட்டும் இவர் சொல்வதை சரியாகப் பின்பற்றுவதில்லை என்றும் கவனித்தார்.

அதனால் இவர் ஹென்ரி ஃபோர்டிடம் சென்று புகார் வாசித்தார். 'நானும் இங்கு ஒவ்வொருவராய் சரிசெய்து கொண்டே வருகிறேன். ஆனால் இவர்களில் ஒருவர் மட்டும் நான் என்ன சொன்னாலும் அதை சட்டை செய்வதில்லை. சில நேரங்களில் மேஜையின் மீது கால்களை நீட்டிக்கொண்டு, புகை வேறு பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனத்தில் மிக அதிகமாக சம்பளம் பெறுபவர்களில் இவரும் ஒருவர். இருந்தும் ஒரு வேலையும் செய்யமாட்டேன் என்கிறார். அதனால் அவரை நீங்கள் வேலையை விட்டு நீக்கிவிடுங்கள்' என்றார். ஹென்ரி ஃபோர்டும், 'யாரது?' என்று வினவினார். ஆய்வாளர் அந்த நபரின் பெயரைக் குறிப்பிட, ஹென்ரி ஃபோர்டோ, 'சென்ற முறை மேஜை மீது கால்நீட்டி அவன் புகை பிடித்தபோது, நூறு கோடி பெறுமானமுள்ள ஒரு யோசனை அவனுக்குத் தோன்றிற்று. அதனால் அவனைத் தொந்தரவு செய்யாமல் அவன் போக்கில் விட்டுவிடு' என்றுவிட்டார்!

வெற்றிகரமாய் செயல்பட என்ன தேவை?

வெற்றிகரமாய் செயல்பட, முறையான அணுகுமுறையும் வேண்டும், மேதைமையும் வேண்டும். முறையான அணுகுமுறை என்பது எப்போதுமே நம்மைத் தாங்கிப்பிடிக்கும் காப்பீடு, ஏனெனில் 'மேதைமை' இடைவிடாது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வேலை செய்யும் என்று சொல்லமுடியாது. இருப்பினும், இந்த முறையான செயல்முறைகளைத் தாண்டிய 'மேதைமை பொறிகள்' தோன்றுவதற்கு நாம் வழிசெய்யவில்லை என்றால், நம் வாழ்க்கை சராசரி அளவுகளைத் தாண்டி நிகழ வாய்ப்பில்லை. 'மேதைமை' இல்லாத மனிதர்களே கிடையாது. என்ன ஒன்று, அது செயற்படுகிறதா, அல்லது நாம் கட்டிக்கொண்டுவிட்ட பல செயல்முறைகளின் பாரம் தாங்காமல் அதனடியில் புதையுண்டு விட்டதா என்பது தான் கேள்வியே.

உங்களுக்குள் பேணிவளர்த்து, மேதைமையை செயற்படச்செய்ய ஒரு வழி இருக்கிறது. வழி என்றவுடன், நீங்கள் பின்பற்றும் பல தொழில் செயல்முறைகள் போல், நாம் பின்பற்றவேண்டிய பத்து குறிப்புகள் என்று எண்ண வேண்டாம். வாழ்வின் ஒவ்வோர் அம்சத்தை நடத்திக் கொள்வதற்கும் மக்கள் இன்று செயல்முறைகளை உருவாக்கிக் கொள்ள முயல்கின்றனர். இப்படி கணக்கில்லா செயல்முறைகளின் கீழ், மேதைமை புதைந்து விடுகிறது.

மேதைமை செயல்பட என்ன செய்வது?

உங்களின் மேதைமை செயல்பட வேண்டுமெனில், அதற்கு ஏதுவான ஒரு உள்சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கான ஒரு முக்கிய படி, இவ்வாழ்வை வாழ நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் கருவிகளான உடலையும், மனதையும் நீங்கள் சற்றே கவனிக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வாழ்வின் வெற்றி என்பது, உங்கள் உடலையும், மனதையும் நீங்கள் எந்த அளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து அமைகிறது. ஆம், சூழ்நிலை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அது நேரம், தொழில்நுட்பம், என இன்னும் பற்பலவற்றை சார்ந்து இருக்கிறது. என்றாலும் நீங்கள் முழுமையாய் செயல்பட்டால், சூழ்நிலை எப்படி இருந்தாலும், அதில் நீங்கள் தொய்வடைய மாட்டீர்கள். 'மோசமான நிலை' என்று வகுக்கப்பட்ட, பொருளாதார வாய்ப்புகள் நலிந்திருந்த நேரங்களில் கூட, சிலர் பிரமாதமாக தொழில் செய்துகொண்டு தான் இருந்தனர். இதற்குக் காரணம், அப்போதும் அவர்களின் மேதைமை தக்க வகையில் வேலை செய்து கொண்டிருந்தது என்பதால்.

உடலையும் மனதையும் கவனிப்பது என்றால், அதில் நீங்கள் தனியாக 'கவனம்' செலுத்த வேண்டும் என்றில்லை. மனம் என்பதே கவனம் தான். கவனம் என்பது நீங்கள் செய்வது அல்ல. நீங்களே 'கவனம்' என்றாக வேண்டும். ஏதோ ஒன்று உங்கள் கவனத்தை ஈர்க்கும்போது, வெளிசூழ்நிலை சார்ந்தே உங்கள் உள்நிலை இருக்கும். ஆனால் உங்கள் மனதிற்கு முறையாக பயிற்சி கொடுத்தால், அது கவனத்தின் முழுமையான சாரமாய் ஆகிடும். மனதை ஞாபகக்கிடங்காய் பாவித்தால், அது நடந்து முடிந்தவற்றை அசைபோட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் உங்கள் மனம் முழுமையான கவனமாகி விட்டால், எவையெல்லாம் கவனிக்க வேண்டியவையோ, அவை எல்லாவற்றையுமே அது கவனித்திடும்.