உங்கள் குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்?
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது 2008 உலகப் பொருளாதார மாநாட்டில் தான் பேசிய கருத்துக்களை இங்கே சுட்டிக்காட்டும் சத்குரு, நமது குறிக்கோள் குறுகியதாக அல்லாமல் விசாலமானதாக இருக்கவேண்டிய அவசியத்தை விரிவாகப் பேசுகிறார்! ஜாடி கடலைகளை எடுக்க ஆசைப்பட்ட குரங்குகளின் கதை மூலமாக அத்தனைக்கும் ஆசைப்படுவதன் மகத்துவத்தை உணர்த்துகிறார்!
 
 

ஒரு மனிதன், தான் தற்போது இருப்பதைவிட இன்னும் சிறிது உயர்ந்த நிலையை அடையவே எப்போதும் பேராவல் கொள்கிறான். அதையே இந்த சமூகம் குறிக்கோள் என்கிறது. ஒரு மனிதர் பொருள்ரீதியாகவோ, சமூகரீதியாகவோ அல்லது வாழ்வில் முக்கியமானதாக அவர் கருதும் ஏதோ ஒன்றிலோ, இன்று தான் இருக்கும் நிலையைவிட சிறிதாவது உயர்ந்த நிலைக்கு செல்வதையே விரும்புகிறார். இன்று பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஒருவரின் குறிக்கோள், இனி வாழ்க்கை முழுவதும் ஒரு நாளிற்கு ஒரு வேளையாவது உணவைப் பெறுவதாகவே இருக்கும். இல்லை, தினம் ஒருவேளைதான் உணவு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அவரின் குறிக்கோள் இரு வேளை உணவைப் பெறுவதாக இருக்கலாம். இருவேளை உணவு இருந்தால், அடுத்து வீடு வேண்டும். வீடு இருந்தால், வேறு ஏதோ ஒன்று வேண்டும்.

வாழ்வில் ஒரு குறிப்பிட்ட வெற்றி நிலையை அடைந்த வெகு சிலரது ஆசைகளே பிறரால் குறிக்கோளாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் அளவிலே, அவரவர் சிந்திக்கும் திறனுக்கு ஏற்ப ஏதேனும் குறிக்கோளுடன்தான் வாழ்கிறார். ஒரு பிச்சைக்காரர் கூட குறிக்கோளுடன்தான் இருக்கிறார், ரிக்ஷா ஓட்டி வாழ்பவரும் குறிக்கோளுடன்தான் இருக்கிறார். ரிக்ஷா ஓட்டுபவர் இன்று வேறு ஒருவரது ரிக்ஷாவை ஓட்டிக் கொண்டிருந்தால், ஒரு நாள் தன் சொந்த ரிக்ஷாவை ஓட்ட வேண்டும் என்று எண்ணுகிறார். இது ஒன்றும் அவரளவில் சாதாரண விஷயமல்ல. அவருக்கு இது மிகப் பெரிய படிதான். என்றாலும், அதை அவர் குறிக்கோள் என்று எண்ணுவதில்லை. அவரைப் பொறுத்தவரை தான் தனது அன்றாடத் தேவைபற்றி சிந்திப்பதாகவே நினைக்கிறார். அவர் இன்னும் சற்றுவளமாக வாழ்பவர்களைப் பார்த்து அவர்கள்தான் குறிக்கோளுடன் வாழ்பவர்கள் என்று நினைக்கிறார். ஆனால் அது உண்மையல்ல. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, தனது குறிக்கோள் மிகச் சிறியதாக இருப்பதால் அது குறிக்கோள் அல்ல, வேறேதோ என்று அவர் நினைக்கலாம், ஆனால் அதுவும் குறிக்கோள்தான்.

அடிப்படையில் பார்த்தால், குறிக்கோள் என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஏக்கம். எப்படியாவது இன்னும் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் அது. இந்த ஏக்கத்தின் பிடியில் இருந்து தப்பியவர் யாரும் இல்லை. என்ன, ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வித்தியாசப்படுவதால், சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ள ஒருவருக்கு பணம் தேவையானதாகத் தெரியலாம், ஒருவருக்கு பதவி, மற்றொருவருக்கு புத்தகஞானம், இன்னொருவருக்கு காதல், வேறொருவருக்கு லஞ்சம் வாங்குவது... ஆம், இனிமேலும் இந்த லஞ்சத்தை நாம் புறக்கணிக்க முடியாது, இவ்வழியில் சிந்திப்போரும் இப்போது கணிசமாகவே உள்ளனர்.

ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் எது சிறப்பாகத் தெரிகிறதோ, அவ்வழியில் தங்களை உயர்த்திக் கொள்ள அவர்கள் முனைகிறார்கள். விருப்பம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் இப்போது இருக்கும் நிலையில் இருந்து இன்னும் சற்று உயர்ந்திட வேண்டும் என்று எண்ணாத மனிதனே கிடையாது. குறிக்கோள் வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை, ஏனெனில் இப்போதிருப்பதை விட சிறிது சிறப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது இயல்புதான். அந்த குறிக்கோளின் அளவுதான் பிரச்சினையாக இருக்கிறது.

இன்று பெரும்பான்மையான மக்களின் குறிக்கோள் ‘என் அளவில், என் வாழ்க்கைத் தரத்தை நான் சிறிதேனும் உயர்த்திக் கொள்ள வேண்டும்’ என்பதாகவே இருக்கிறது. உலகின் பல பகுதிகளிலும் மக்கள் ஒரு சாதாரண அமெரிக்க குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையே அளவுகோலாக வைத்து, அதை நோக்கியே பயணிக்கிறார்கள். ஒவ்வொரு நாடும் கூட தனது குடிகனுக்கு இத்தகைய வாழ்க்கைத் தரத்தை வழங்கவே எண்ணுகிறது. ‘தி லிவிங் ப்ளானெட்’ (வாழும் கிரகம்) என்ற தலைப்பில் சமீபத்தில் சுற்றுப்புறச்சூழல் பற்றிய அதிகாரப் பூர்வமான புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் அவர்கள் வெளியிட்டிருக்கும் கருத்துப்படி, உலகில் உள்ள 700 கோடி மக்களும் ஒரு சாதாரண அமெரிக்க பிரஜையின் வாழ்க்கைத் தரத்தை பின்பற்ற முயன்றால், நமக்கு இந்த ஒரு பூமியின் வளம் போதாதென்றும், நமக்கு 4.5 பூமிகள் தேவைப்படும் என்றும் அறிகிறோம். ஆனால் நம்மிடம் இருப்பது இந்த ஒரு பூமிதானே. அதனால் இது போன்ற வாழ்க்கைத் தரத்தை குறிக்கோளாக வைத்துக் கொண்டால், அது நம் அழிவிற்கு வழிவகுத்து விடும். இதுபோன்ற குறிக்கோளுடன் எல்லோரும் இருந்தால், குறைந்தபட்சமாக மக்களில் பாதி பேராவது தங்கள் குறிக்கோள்களில் தோல்வியடைய வேண்டும் என்றுதான் நாம் விரும்ப வேண்டியிருக்கும். யாரேனும் நம்மிடம் வந்தால், சிறிதும் யோசிக்காது, ‘உன் குறிக்கோள்களில் நீ வெற்றியடைவாயாக’ என்றுதான் நாம் வாழ்த்தவேண்டும். ஆனால் இப்போதைய நடப்பைப் பார்க்கும்போது, வாழ்த்துவதை விடுத்து, ‘அவர்கள் தோல்வியடைய வேண்டும்’ என்று நாம் வேண்டிக் கொள்ளும் நிலைக்கு வந்துவிடுவோம் போலிருக்கிறது.

2008ல் உலக பொருளாதாரமன்றத்திற்கு (World Economic Forum) நான் சென்றபோது, அங்கிருந்த பலரும் மிகச் சோர்வாக இருந்தனர். ஏனெனில் அது மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவு நிகழ்ந்திருந்த நேரம். எல்லோரின் முகங்களும் வாட்டத்தில் நீண்டு, தரையைத் தொட்டுவிடும் போல் இருந்தது. நான் பேசுவதற்கு எனக்கு கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு, ‘பொருளாதாரப் பின்னடைவும், மனச்சோர்வும்’. அன்று அந்த ஹால் முழுவதுமாக நிரம்பியிருந்தது. அங்கிருந்த அனைவரும் தங்கள் மனச்சோர்விலிருந்து விடுபட வழி எதிர்பார்த்துக் காத்திருந்தனர். நான் சொன்னேன், “பொருளாதாரப் பின்னடைவே மோசமான நிலை. அந்த இழப்புடன் மனச்சோர்வையும் வேறு நீங்கள் சுமந்து திரிய வேண்டுமா?” என்று.

நம் பொருளாதார முறையை இன்று நாம் வடிவமைத்திருக்கும் நிலையைப் பார்க்கும்போது, பொருளாதார வெற்றிக்காக இந்த பூமியில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் வழிகளைப் பார்க்கும்போது, நம் முயற்சிகளில் நமக்கு வெற்றிகிடைக்கவில்லை என்றால், நமக்கு அதீத மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆனால் நமக்கு வெற்றி கிடைத்துவிட்டாலோ, இந்த உலகம் நாசமாகி விடும். அதனால் நான் பேசும்போது சொன்னேன், “நீங்கள் மனச்சோர்வில் இருப்பதே நல்லது”. ஆம், இந்த உலகம் ஒரு நரகமாக மாறுவதைவிட நீங்கள் மனச்சோர்வு அடைவதே சரிதான். ஏனெனில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் இந்த உலகம் நிச்சயமாக அழிவுக்குச் சென்றுவிடும்.

வேறொருவரை பின்பற்றாமல், குறிக்கோள்களை நம் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் நாம் தேர்வு செய்வது மிக அவசியம். இன்று நம் குறிக்கோள்களைப் பார்த்தால், அவர் அவ்வளவு சாதித்துவிட்டார், எனவே நான் இவ்வளவு சாதிக்கவேண்டும் என்பதாகவே இருக்கிறது. அவர் அவ்வளவு செய்தால் நான் இவ்வளவு செய்யவேண்டும். இப்படியே போனால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. இது போன்ற சுய அழிவிற்கு வழிவகுக்கும் குறிக்கோள்கள் நல்லதல்ல.

மக்கள் இதுபோன்ற குறுகிய குறிக்கோளுடன் வாழ்வது தான் இவ்வுலகிற்கு சாபக்கேடாக இருக்கிறது. இப்படிப்பட்ட குறுகிய குறிக்கோளுடன் வாழ்வதற்குப்பதிலாக ஒரு தொலைநோக்குப் பார்வையோடு வாழ்ந்தால், தனக்கும் தன்னை சுற்றியுள்ளவர்களின் நல்வாழ்வுக்கும் சேர்த்து வாழ்வைப்பற்றிய ஒரு ஆழ்ந்த புரிதலோடு குறிக்கோள் ஏற்று வாழ்ந்தால், அது யாருக்கும் எதிராக இருக்காது. ஏனெனில், இங்கு அனைவருமே மனித நல்வாழ்வைதான் விரும்புகிறார்கள். ஆனால் எது ‘மனித நல்வாழ்வு’ என்பதற்கு வெவ்வேறு மக்கள் வெவ்வேறு அளவுகோள்கள் வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு அது ‘தன்’ நலனை மட்டும் குறிக்கலாம். ஒருவருக்கு அது தன் குடும்பநலனாக இருக்கலாம். மற்றொருவருக்கு அது தன் சமூகமாக இருக்கலாம், தன் நாடாக இருக்கலாம், ஏன் ஒருவருக்கு அது இம்மனிதகுலம் முழுவதின் நலனாகவும் இருக்கலாம். மனித நல்வாழ்வை விரும்பாமல் ஒருவர் கூட இவ்வுலகில் கிடையாது. அது வெவ்வேறு அளவில் வெளிப்படுகிறது, அவ்வளவுதான்.

ஒவ்வொரு மனிதரும் தனிப்பட்ட குறிக்கோளை வைத்து வாழ்வதற்கு பதிலாக - தனிப்பட்ட குறிக்கோள்கள் எப்போதுமே அடுத்தவரின் குறிக்கோள்களோடு உராய்வதாகத்தான் இருக்கும் - விரிந்த தொலைநோக்குடன் வாழ்ந்தால், குறிக்கோளின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. உங்களுக்கு எப்படியும் நல்வாழ்வுதான் வேண்டும், இல்லையா? நான் கேட்பதெல்லாம், அந்த ஆசையிலும் ஏன் கஞ்சத்தனத்தை கடைப்பிடிக்கிறீர்கள்? அதிலே பெருந்தன்மையுடன் இருங்களேன்! உங்கள் ஆசையை எல்லையில்லாமல் மாற்றிக்கொள்ளுங்கள். ‘நான் நன்றாக இருக்க வேண்டும்’ என்று ஏன் அளவை குறைக்கிறீர்கள்? ‘இவ்வுலகமே நன்றாக இருக்க வேண்டும், இப்பிரபஞ்சமே நன்றாக இருக்க வேண்டும். வாழும் எல்லா உயிருமே நன்றாக இருக்க வேண்டும்’ என்று ஆசைப்படுங்கள். உங்கள் குறிக்கோளை பேராசையின் உருவாய் வைத்திருங்கள். அதில் இப்பிரபஞ்சத்தையும், இங்கு வாழும் எல்லா உயிர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், உங்கள் ஆசையை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏன் குறைக்க வேண்டும், அதை எல்லையின்றி விஸ்தரித்து விடுங்கள் என்றே நான் சொல்வேன். இப்போது பிரச்சினையே, அதை நீங்கள் சுருக்கிக் கொண்டதுதான்.

குறிக்கோள் என்றாலே இன்று என்ன இருக்கிறதோ அதைவிட சற்று அதிகமானது. ஆனால் தொலைநோக்கு என்பது இன்று இல்லாத புதியதோர் நிலைக்கான வாய்ப்பு. குறிக்கோள் என்பது நம்மால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு தனக்காக எடுத்துக் கொள்வது. தொலைநோக்கு என்பது எல்லாவற்றையுமே எல்லோரையுமே உங்களுடையதாக ஆக்கிக் கொள்வது. இதில் ஒன்று ஆக்கிரமிப்பு, மற்றொன்று அரவணைப்பு. உலகிலிருந்து கொஞ்சத்தை எடுத்துக் கொள்வதும், இவ்வுலகே மனமுவந்து உங்கள் அரவணைப்பிற்குள் வருவதும் வாழ்வின் இரண்டு மாறுபட்ட பரிமாணங்கள்.

இந்த தத்துவம் எல்லாம் ஒரு வியாபாரிக்கு சரிப்பட்டு வருமா? வரும். சரிப்பட்டு வருவது மட்டுமல்ல, இன்றைய வியாபாரிகளுக்கு இது அதிமுக்கியமும் கூட. ஏனெனில் வியாபாரம் என்றாலே விஸ்தரிப்பு. விஸ்தரிக்க வேண்டுமெனில், அதற்கு அடித்துப் பிடுங்குவது உதவுமா அல்லது சேர்த்து அணைத்துக்கொள்வது வழிசெய்யுமா? அடித்துப் பிடுங்கினால், உங்கள் முழு திறனுக்கு உங்களால் விஸ்தரிக்க முடியாது. ஆனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்கு இந்த உலகின் சம்மதத்தைப் பெற நீங்கள் கற்றுக்கொண்டால் பிறகு நீங்கள் விரும்பும் அனைத்தையுமே பெற முடியும். குறிக்கோள் என்பது இப்போதிருப்பதை விட இன்னும் சற்று அதிகம் பெறுவது. தொலைநோக்கோ, அனைவரையும் அனைத்தையும் பற்றியது.

இந்தியக் கலாச்சாரத்தில் ஒரு அழகிய கதை உண்டு. ஒரு குரங்கு ஒரு வீட்டிற்குள் சென்று, ஜாடி நிறைய வேர்க்கடலை இருப்பதைக் கண்டது. அதனுள் தன் கையை நுழைத்து கைநிறைய வேர்க்கடலையை அள்ளிக்கொண்டு, கையை வெளியெடுக்க முற்பட்டது. ஆனால் ஜாடியின் கழுத்து குறுகி இருந்ததால், அதனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. ஒன்றிரண்டு கடலையை கையில் இருந்து குறைத்துவிட்டால், தன் கையை அது வெளியே எடுத்திருக்க முடியும். ஆனால் அக்குரங்கிற்கோ தன் கையில் இருப்பது எல்லாமே வேண்டும். எதையும் குறைத்துக் கொண்டு, தன் குறிக்கோளில் பின்செல்ல அதற்கு இஷ்டமில்லை. எனவே கடலையை இறுகப் பிடித்துக் கொண்டு, கையை வெளியெடுக்க அது மீண்டும் மீண்டும் முயற்சித்தது. ஆனால் கை வெளிவரவில்லை. இந்நேரத்தில் அங்கு வந்த வேறு ஒரு புத்திசாலிக் குரங்கு, குரங்கிலும் சில புத்திசாலிகள் இருப்பதுண்டு, ‘இது வேலை செய்யாது, கடலைகளை விட்டுவிடு’ என்று புத்தி சொன்னது. அதன்பின் இரண்டுமாக சேர்ந்து அந்த ஜாடியை தலைகீழாக கவிழ்த்தன. எல்லா கடலையும் வெளிக்கொட்டின. ஆக, ‘கொஞ்சம் அதிகம்’ என்பதில் இருந்து ‘எல்லாமே’ என்பதற்கு நாம் மாறவேண்டும். ‘கொஞ்சம் அதிகம்’ என்பதில் இருந்து ‘எல்லாமே’ என்பதற்கு நகர்ந்தால், நீங்கள் ‘ஆவலிலிருந்து அறிவுக்கு’ தாவிவிட்டீர்கள் என்று அர்த்தம், ‘குறிக்கோளில் இருந்து தொலைநோக்கிற்கு’ பயணித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1