உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?

எனக்கு நெருக்கமான என் குடும்பத்தினரே எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். எதிலும் என்னோடு, என் சிந்தனையோடு அவர்கள் ஒத்துப் போவதில்லை. இவர்கள் எனக்கு உண்டுசெய்யும் இந்த மன உழைச்சலில் இருந்து நான் எப்படி விடுபடுவது?
 

Question:எனக்கு நெருக்கமான என் குடும்பத்தினரே எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். எதிலும் என்னோடு, என் சிந்தனையோடு அவர்கள் ஒத்துப் போவதில்லை. இவர்கள் எனக்கு உண்டுசெய்யும் இந்த மன உழைச்சலில் இருந்து நான் எப்படி விடுபடுவது?

சத்குரு:

அவர்களை ஏன் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்கிறீர்கள்? உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், அல்லது உண்மையிலேயே அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படி உங்களுக்கு நெருக்கமானவராக இருக்கமுடியும்? அப்படி நீங்கள் சொல்வது பொய். வேண்டுமானால் நீங்கள் ஒரே வீட்டில் வசிக்கலாம். ஆனால், அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் இல்லை. இல்லையா?

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள் என்பதை முதலில் பாருங்கள்.

இப்போது, இவரை எப்படித் தவிர்ப்பது, அது என்னை பாதிக்காமல் எப்படிப் பார்த்துக் கொள்வது, என்பதை எல்லாம் சொல்வதற்காக நான் இங்கு இல்லை. நான் முன்பிருந்தே சொன்னது போல், நீங்கள் ஏதோ ஒன்றை விட்டுவிலகுவதாலோ, அல்லது விட்டுக்கொடுப்பதாலோ அதிலிருந்து விடுதலை பெற்றிட முடியாது. நீங்கள் உங்கள் வீட்டை விட்டுச் சென்றாலும், வேறு எதை விடுத்தாலுமே உங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்காது.

உங்கள் வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் அவ்வாறு இருக்கிறார்கள் என்பதை முதலில் பாருங்கள். இதற்கு நீங்களே ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

கேள்வி: இல்லை, அவர்களே அப்படித்தான்.

சத்குரு: உங்களுக்கு அவர்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், அதைப்பற்றி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிராகவே இருக்கிறீர்கள் என்றால், ஏன் சேர்ந்து வசிக்கிறீர்கள்?

கேள்வி: அப்படி என்றால் நான் அவரை விட்டுவிட்டுச் சென்றிடலாமா?

சத்குரு: அவரை விட்டுச் செல்லுங்கள் என்று நான் உங்களிடம் சொல்லவில்லை! மற்றவர்கள் எப்படி நடந்து கொண்டாலும், அதற்கு முன், உங்கள் உள்தன்மை இன்னும் தேவையான அளவிற்கு ஸ்திரமாக இல்லை என்பதை பாருங்கள். அதனால் தான், உங்களிடம் யார் எதைக் கூறினாலும், நீங்கள் அதுவாகவே ஆகிவிடுகிறீர்கள். ஆம், நான்கு பேர் உங்களை முட்டாள் என்று கூறினால், நீங்கள் அப்படியே ஆகிவிடுவீர்கள்.

நான்கு பேர் உங்களை முட்டாள் என்று கூறினால், நீங்கள் அப்படியே ஆகிவிடுவீர்கள்.

ஒரு கூட்டத்தில் இதை ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். "அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் என்னை முட்டாள் என்று அழைத்து விட்டார். வழக்கமாக அமைதியாக இருக்கும் நான், கடந்த ஒருவாரமாக நொறுங்கிப் போய்விட்டேன். நான் அவருக்கு எதிராக வழக்குப்போட திட்டமிட்டு இருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், சுவாமிஜி", என்று கேட்டார். யாரோ சொன்ன அந்த ஒரு வார்த்தை, உங்களுடைய அமைதியை ஒருவாரத்திற்கு சீர்குலைத்து இருக்கிறது! இதற்கு என்ன அர்த்தம்? அப்படியென்றால் அவர் என்ன கூறினாரோ அது உண்மைதானே?

உங்கள் உள்தன்மை இன்னும் உறுதியாகவில்லை. அதனால் தான், யார் எதைக் கூறினாலும் நீங்கள் அதனால் பாதிப்பிற்கு உள்ளாகிறீர்கள். உண்மையில், யாராலும் உங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது. அவருக்கு என்ன தெரியுமோ, அதைத்தான் அவர் சொல்கிறார், செய்கிறார். வாழக்கையை அவர் எப்படி புரிந்து கொண்டிருக்கிறாரோ, அப்படியே அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

நீங்கள் புத்திசாலியாக இருந்தால், அவர்கள் என்ன சொன்னாலும் அதனால் அவதியுறாமல், என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகப் பார்த்து, நீங்கள் செயல்பட முடியும். இல்லையா? நீங்கள் உங்களுக்குள் உறுதியாக இல்லாததால் தான், காற்றடிக்கும் திசைகளில் எல்லாம் செல்கிறீர்கள். இந்தப் போராட்டங்கள் எல்லாமே இதனால்தான்.

நீங்கள் உங்கள் வீட்டைவிட்டு வேறெங்கோ சென்றாலும், அங்கும் வேறு யாரேனும் உங்களுக்கு எதிராக பேசவோ, செயல்படவோ முடியும். இந்த உலகில் யாரும் உங்களைத் தனியே விடப்போவதில்லை. நீங்கள் எங்கே சென்றாலும், அங்கும் உங்களைப் பிடித்துக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கையை எந்த அளவிற்கு புரிந்து கொண்டிருக்கிறாரோ, அதன் அடிப்படையில்தான் எல்லாவற்றையும் செய்கிறார். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாது. அதை நல்லது, எதிரானது என்று வகுத்து, நீங்கள் தானே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள்?