இந்தியா உலகின் மாபெரும் சக்தியாக எப்படி உருவெடுக்க முடியும் என்று விளக்குகிறார் சத்குரு. 'பெரும் சக்தி' என்றால், அடக்கி ஆள்வதாலோ, ஆக்கிரமிப்பு செய்வதாலோ அல்ல... அனைவரையும் தன்னுள் ஒன்றாய் அரவணைப்பதால்...

சத்குரு:

1992 ஆம் ஆண்டு 'பாரத் ரத்னா' விருது பெற்ற போது, ஜேஆர்டி டாடா அவர்கள், "இந்தியா பொருளாதார வல்லரசாக உருவெடுப்பதை விட, ஒரு மகிழ்ச்சியான நாடாக இருப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்' என்றார்.

இங்கு காணப்படுவது போல் விழிப்புணர்வும், உள்ளார்ந்த ஞானமும் கொண்டவர்களை உலகில் வேறெங்கும் நீங்கள் காண முடியாது.

நம் உலகில் இன்று 'சக்தி'க்குத் தான் மரியாதை உள்ளது. இதற்கு முக்கிய காரணம், 'மென்மை'யை மதிக்கும் விதமான சமுதாயத்தை நாம் உருவாக்கவில்லை. 'சக்தி'க்கு இத்தனை மரியாதை கொடுத்து, செல்வத்தைக் குவிக்க இத்தனை முயற்சி எடுக்கிறோமே, அதனால் நமக்கு மகிழ்ச்சியாவது கிடைத்திருக்கிறதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்போது உலகின் கவனம் இந்தியாவின் மீது உள்ளது. அதனால் நம்மை நாம் எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறோம், இவ்வுலகிற்கு நம்மால் எதை வழங்கமுடியும் என்பதெல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது.

விழிப்புணர்வுள்ள மனிதர்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம்:

பல்லாயிரம் ஆண்டுகளாக பற்பல வழிகளில் தளைத்து வளர்ந்தாலும், நம் இந்தியக் கலாச்சாரத்தின் மையம், அதன் சாரம் மட்டும், மனிதன் 'முக்தி' பெறவேண்டும் என்பதுதான். இதை நாமே மறந்துபோனோம். வேறு எந்தக் கலாச்சாரமுமே, மனிதனை இந்த அளவிற்கு ஆழமாகப் பார்த்து, அவன் தன் முழுமையான வளர்ச்சியை, மலர்ச்சியை அடைய வழிகள் வகுத்துத் தரவில்லை. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால், 'விழிப்புணர்வுள்ள மனிதனை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம்' நம்மிடம் உள்ளது. மேற்கத்திய சமூகங்கள், அரசியல், சமூக மற்றும் உடல்-அளவிலான இன்பம், செயல் ஆகியவற்றில் இருந்து விடுதலை பற்றிப் பேசுவார்கள். ஆனால் நமக்கோ விடுதலை என்றால் அது எப்போதுமே 'முக்தி' மட்டும்தான்.

நம் இந்தியாவின் ஆன்மீக வழிமுறைகள், 'நம்பிக்கை'களையும், 'கொள்கை'களையும் வலியுறுத்தும் முறைகள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவை தெளிவாய் வகுக்கப்பட்ட, விஞ்ஞான அடிப்படை கொண்ட அறிவார்ந்த செயல்முறைகள். மிக அழகாக, நேர்த்தியாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வழக்கத்தில் இருக்கும் இம்முறைகளின் பயனால் தான், இந்த தொழில்நுட்ப யுகத்திலும் கூர்மையான அறிவோடு எவ்விதத் தடையுமின்றி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு தேசமாக, 'இந்தியா' மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இங்கிருக்கும் ஒரு தன்மை, இதன் ஆழத்தில் வேரூன்றியிருக்கும் பண்பாடு, இது போல் நீங்கள் வேறு எங்கும் காண முடியாது. நாம் இப்போது 'இந்தியா' அல்லது 'பாரத்' என்று குறிப்பிடும் இந்நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களுக்கு என்று, ஒரு தனி அம்சம், அடையாளம் இருந்தது. இங்கு காணப்படுவது போல் விழிப்புணர்வும், உள்ளார்ந்த ஞானமும் கொண்டவர்களை உலகில் வேறெங்கும் நீங்கள் காண முடியாது. அதனால் தான் 'உள்நிலையிலான நல்வாழ்வை' நாடும்போது, எல்லோரும் கிழக்கத்திய நாடுகளையே எதிர்நோக்கினர். இப்பேற்பட்ட பின்னணியைக் கொண்டுள்ள நாம், இவ்வுலகின் ஒவ்வொரு தேசத்தையும் தியான நிலைக்கு மாற்ற ஏன் விழையக் கூடாது?

அதனால் தான் "யோகா" என்று சொல்கிறேன். 'யோகா' என்று சொல்லும்போது, நான் உடலை நீட்டி, வளைத்து செய்யும் 'ஆசனங்கள்' பற்றிப் பேசவில்லை. 'யோகா'வை ஒரு செயல்முறையாக, முழுமையான ஒரு தொழில்நுட்பமாக குறிப்பிடுகிறேன். 'அனைத்தையும், அனைவரையும்' உங்களில் ஒரு அங்கமாக அரவணைத்து, இவ்வுலகை அது படைக்கப் பட்டிருக்கும் விதத்திலேயே உணரும் நிலைக்கு உங்களை நடத்திச் செல்லக்கூடிய ஒரு முழுமையான தொழில்நுட்பமாக யோகாவைக் குறிப்பிடுகிறேன்.

அடக்கி ஆள்வதா? அரவணைத்துக் கொள்வதா?

'அரவணைத்தல்', 'மென்மையாகக் கையாள்தல்' - இவற்றில் தான் உயிர்-வாழ்க்கையின் அடிப்படைகளே அடங்கியிருக்கிறது.

ஏதோ ஒன்றை, அல்லது யாரோ ஒருவரை 'உங்களுடையதாக' ஆக்கிக்கொள்ள இருவழிகள் உண்டு - ஒன்று அடக்கி ஆள்தல்; மற்றொன்று அரவணைத்து ஏற்றல். 'அரவணைப்பு' என்பது யோகாவின் வழி. ஆனால் துரதிருஷ்டவசமாக 'அடக்கி ஆள்தல்' என்பதே நவீன விஞ்ஞானத்தின் வழியாக இருக்கிறது.

'சாதனை' என்பதைப் பற்றி முற்றிலும் தவறான ஒரு கண்ணோட்டத்தை நாம் வளர்த்துக் கொண்டுவிட்டோம். அடக்கி ஆள்கிறேன் என்ற இறுமாப்பில் சுற்றியுள்ள உயிர்களை துன்புறுத்துவது சாதனையா? அல்லது அன்பால் அரவணைத்து, சுற்றியுள்ளவர்கள் உங்களின் மீது உண்மையான அன்புவயப்படச் செய்வது சாதனையா? 'சாதனை' பற்றிய நம் சிறுபிள்ளைத் தனமான கருத்துக்களை நாம் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மனதில் இந்த மாற்றம் நிகழ வழிசெய்ய வேண்டும். பலவந்தமாக பறித்துக்கொள்வது வேலை செய்தாலும், அது மிகவும் பக்குவமற்ற, முரட்டு வழி. 'அரவணைத்தல்', 'மென்மையாகக் கையாள்தல்' - இவற்றில் தான் உயிர்-வாழ்க்கையின் அடிப்படைகளே அடங்கியிருக்கிறது. இவ்வழியில் தான் வாழ்க்கை மலரமுடியும். அதனால் தெளிவான சிந்தனையோடு செயல்படும் ஒரு நாடாக, தனது நல்வாழ்வை அமைத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், முடிந்தால் இவ்வுலகிற்கும் நல்வாழ்வு வழங்கும் ஒரு நாடாக நாம் வளர்ந்திடுவதற்கு நாம் விழைய வேண்டும்.

துரதிருஷ்டவசமாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நம்மை வாட்டி வதைத்த வறுமையின் காரணமாக, நம் ஆன்மீக அடிப்படைகளின் வடிவம் சிறிது குலைந்து போயிருக்கிறது. அதை மீண்டும் சீரமைத்து, அதன் பழைய வடிவத்தை அதற்கு மீட்டுக் கொடுக்கவேண்டும். முக்திக்கு வழிவகுக்கும் கருவியாக, அது முன்போல் கம்பீரமாய் ஒளிவீசவேண்டும். இங்கு தோன்றும் ஒவ்வொரு தலைமுறையின் கடமை இது. இந்த ஆன்மீக வழிமுறையின் பிரம்மாண்டத்தை இவ்வுலகிற்கு நாம் வெளிச்சமிட்டுக் காண்பிக்கவேண்டும்.

இந்தக் கலாச்சாரத்தை மீண்டும் அதன் பழைய பொலிவில் ஒளிவீசச் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. படையெடுப்பு மற்றும் வறுமையின் காரணமாக அது நமக்கு சக்திப்பசி, பணப்பசியை உண்டுவித்திருந்தாலும், நம் அடிப்படையான ஆன்மீக வேரை அது அழித்து விடவில்லை. ஒரு தேசமாக நாம் இவ்வுலகிற்கே எடுத்துக்காட்டாய் மாறவேண்டும். சுதந்திரம், விடுதலை என்றால் அது எல்லாவற்றில் இருந்தும் விடுதலையாக இருக்கவேண்டும். பயம், முன்முடிவுகள்... ஏன் மரணத்தில் இருந்தும் கூட விடுபடுவதையே அது குறிக்கவேண்டும். விடுதலை என்று சொன்னால்... முக்திக்குக் குறைவாக அதைப்பற்றி யாரும் எண்ணக்கூடாது.

இந்த ஒரு நோக்கத்தை மக்கள் மனதில் நிலைநாட்டுவது இன்றைய உலகிற்கு மிக அத்தியாவசியமான ஒன்று. ஏனெனில் வெளிக்காரணிகளே மக்களை இன்று பெரிதளவும் ஆட்டுவிக்கின்றன. மனிதனின் சிந்திக்கும் திறனை பலவழிகளிலும் பயம் ஆட்கொண்டுவிடுகிறது. ஆனால் எப்போது ஒருவர் 'முக்தியை' தன் இலக்காகக் கொள்கிறாரோ, அவருக்கு வேறு எதுவுமே முக்கியமில்லை. அவர் வாழ்வை ஒரு ஆழமான புரிதலுடனும், பொறுப்புணர்வுடனும் அணுகுகிறார்.

ஒருவரை ஒருவர் அடித்துப்பிழைக்கும் இன்றைய உலக சூழ்நிலைக்கு ஒரு எதிர்-எடுத்துக்காட்டாய் நாம் வாழவேண்டும். செல்வச்செழிப்பு, படைபலம் போன்றவற்றால் இல்லாமல், வாழ்வை அணுகும் மதிநுட்பத்தால் மதிக்கப்படும் ஒரு சமூகமாக நாம் உருவாக வேண்டும். 'மென்மை'யை மதிக்கக் கற்றுக்கொள்ளும் வரை, பண்பட்ட, மேன்மையான சூழ்நிலைகளை இவ்வுலகம் அறிய வாய்ப்பில்லை.