மதம் என்ற பெயரில் உலகில் நடக்கும் பிரிவினைகளையும், பூசல்களையும் சாடும் சத்குரு அவர்கள், இதைப் போக்க ஒரு இயேசுவும், ஒரு புத்தரும் பத்தாது என்பதையும் இக்கட்டுரையில் முன்வைக்கிறார்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

மதம் என்பது உள்நோக்கிய பயணம். ஆனால் அது ஏதாவது ஒரு குழுவைச் சார்ந்திருப்பதாக மாறிப்போகுமேயானால் அது துரதிருஷ்டவசமானது. மதம் மனிதர்கள் மத்தியில் வெறுப்பையும், மோதலையும், பிரிவினையையுமே ஏற்படுத்தியிருக்கிறது. இன்று ஒன்றாக இருக்கிற மனிதர்கள் ஏதேனும் ஒரு மதத்தோடு அடையாளப்படுத்தப்பட்டால் பிரிந்து போய் விடுகிறார்கள். அடுத்த நாள் ஒருவர் வீட்டை ஒருவர் எரிக்கிறார்கள். பத்து நிமிடங்களுக்கு முன்பாக அப்படி ஒரு விஷயத்தையே அவர்கள் நினைத்துப் பார்த்ததில்லை. ஏதாவது ஒரு மதக்குழுவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டால் அவர்கள் சண்டை போடத் தயாராகிவிடுகிறார்கள். இந்த அடையாளம் இல்லாமல் இருந்தாலாவது அவர்களுக்கு சண்டை போடுவதற்கான காரணம் வராது. தனிப்பட்ட முறையில் அவர்கள் சண்டை போட்டுக் கொள்ளலாம். ஆனால் குழுவாக சண்டை போட அவர்களுக்கு காரணங்கள் இருக்காது. மிருகத்தனமான மோதல் மதங்களின் பேரால் தான் நடக்கிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சயமாக அமைதிதான் தேவைப்படுகிறது. யாரும் மோதலை விரும்புவதில்லை.

ஏனென்றால் இன்றைய நிலையில் மதம் என்பது ஏதாவது ஒரு குழுவைச் சார்ந்திருப்பதாக ஆகிவிட்டது. இன்றைய மனிதர்களுக்கு மதம் அதைத்தான் செய்கிறது. மதம் அவர்களைப் புனிதமானவர்களாகச் செய்திருக்கவேண்டும், ஆனால் அது அவர்களை மனிதர்களாகக்கூடச் செய்யவில்லை. அவர்கள் விலங்குகள் போல் ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால் ஏதாவது ஒரு குழுவை நீங்கள் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டால் அந்தக் குழுவைக் காப்பாற்ற வேண்டும் என்கிற வேகம் உங்களுக்கு வருகிறது. எனவே விலங்கு நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள். இது உங்களுக்குள் இயல்பாக நிகழுகிற மாற்றம். உங்களுக்குள் இருக்கிற உள்ளுணர்வே இதுதான். நீங்கள் ஒரு குழு அடையாளத்தைப் பெற்றுக் கொண்டீர்களேயானால் இன்னொரு குழுவிற்கு அச்சுறுத்தலாகிவிடுகிறீர்கள். இன்னொரு குழுவிற்கு நீங்கள் எதிரானவராகிவிடுகிறீர்கள். ஒருவருக்கொருவர் சகோதரர் என பேசிக்கொள்ளலாம், வெளியே பாசாங்காக நடந்து கொள்ளலாம். ஆனால் ஒர் எல்லையைக் கடந்து விட்டால் யுத்தம் தான்.

ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சயமாக அமைதிதான் தேவைப்படுகிறது. யாரும் மோதலை விரும்புவதில்லை. ஆனால் ஒரு குழுவைச் சார்ந்த மாத்திரத்தில் அவன் சண்டைபோடத் தொடங்குகிறான். தனிப்பட்ட முறையில் நீங்கள் அவருடன் பேசிப்பார்த்தால் இந்த அபத்தங்கள் அவர்களுக்கு அவசியமில்லை. ஆனால் ஒரு குழுவோடு சேர்ந்து இயங்குகிறபோது உங்கள் தனிப்பட்ட அடையாளங்களை இழந்து வேறுவிதமான உணர்வு அவர்களைப் பற்றிக்கொள்கிறது.

எனவே இந்த நூற்றாண்டில் நாம் அமைதி பற்றிப் பேசத் தொடங்கினால் அடுத்த நூற்றாண்டிலாவது இந்த சூழ்நிலையில் ஒரு மாற்றம் ஏற்படமுடியும். அது பற்றிப் பேசுகிற துணிச்சல் உங்களுக்கு இல்லை என்றால், இந்த உலகம் இப்போது போகிற திசையிலேயே இன்னும் வேகமாகத் தள்ளப்படும். அமைதி பற்றிப் பேசத் தொடங்கியதனாலேயே இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்.

மீண்டும் மனிதர்களுக்கு அதுதான் நிகழ்கிறது. ஒருமுறை அதை சீர்செய்துவிட்டால் எப்போதுமே அது சீராகிவிடும் என்று அல்ல. தொடர்ந்து திருத்திக் கொண்டே இருக்கவேண்டும். ஒரே ஒரு இயேசு போதாது, ஒரே ஒரு புத்தர் போதாது, அப்படி பலர் தேவைப்படுகிறார்கள். அப்போதுதான் இந்த உலகில் சமநிலை ஏற்படும்.