சத்குரு:

மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அற்புதமான திறன்களெல்லாம் பார்த்தால், இவ்வுலகிலேயே ஒற்றுமையான, அமைதியான, ஆனந்தமான இனம் நம் மனித இனம் என்றே நினைப்பீர்கள். ஆனால், நம் வரலாற்றைப் பார்த்தாலோ, இவ்வுலகம் என்றுமே அமைதியாக இருந்ததில்லை. உணவுக்காகச் சண்டை, செல்வத்திற்காகச் சண்டை, மத நம்பிக்கைகளுக்கான சண்டை, எல்லைகளை விரிவாக்கிக் கொள்வதற்குச் சண்டை என சண்டை போடுவதற்கான காரணங்களைத் தேடித் தேடி நாம் சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம். இன்று மனிதர்கள் இருக்கும் நிலையில், ஒரு பிரச்சனையை அகற்றினால் நிச்சயம் மற்றொன்று அவ்விடத்தைப் பிடித்துவிடும்.

உலகம் என்பது வெறும் பூகோள உருண்டையல்ல. ‘உலகம்’ என்பது இங்கு வாழும் மக்கள்தான். அதனால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாற்றத்தை மலரச் செய்யாவிட்டால், இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அமைதியான வாழ்க்கையைச் சாத்தியமாக்க நாம் முயற்சி செய்யாவிட்டால், ‘உலக அமைதி’ என்பது வெறும் கற்பனைக் கூற்றாக, பொழுதுபோக்குக்காகப் பேசப்படும் மற்றுமோர் வஸ்துவாக மட்டுமே இருக்கும். தனிப்பட்ட மனிதர்களின் மீது கவனம் செலுத்தாமல், ஒட்டுமொத்த உலகையும் மாற்ற நினைத்து எடுக்கும் முயற்சிகள், மேன்மேலும் பிரச்சினைகளையே உருவாக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இவ்வுலகில் இன்று நாம் உருவாக்கியிருக்கும் சூழ்நிலையைப் பார்த்தால், என்றைக்குமே இங்கு அமைதி நிலவக் கூடாது என்பதற்கான அஸ்திவாரத்தை, நாம் நன்றாகவே அமைத்திருக்கிறோம். இதற்குப் பல அம்சங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று, மனிதனின் வாழ்வில் பொருளாதாரத்தை மிக முக்கியமான அங்கமாக மாற்றிக் கொண்டிருப்பது.

போருக்குக் காரணம் என்ன?

இன்றைய உலகில், அன்பு, காதல், சந்தோஷம், சுதந்திரம், இசை, நடனம் என எதற்குமே முக்கியத்துவம் இல்லை. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, பொருளாதாரம். பொருளாதாரமே மிக முக்கியம் என்றாகிவிட்டால், சண்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். இந்த பூமியின் வளம் ஒரு அளவிற்குள் உட்பட்டது என்பதால், ‘பொருளாதார எந்திரம்’ நம் வாழ்வைச் செலுத்தினால், போர் தவிர்க்க முடியாததும், அமைதி நடக்க முடியாததுமாக ஆகிவிடும்.

பொருளாதார நல்வாழ்வை அடையும் நோக்கில், இன்றைய சமுதாயங்களில் வன்முறை பெருகி வருகிறது. நம் வாழ்வேகூட வன்முறைச் சாயம் பூசிக்கொள்கிறது. கூர்ந்து பார்த்தால், நம் இசை, நடனம், கலாச்சாரம் என அனைத்தும் முரட்டுத்தனம் நிறைந்ததாக உள்ளது. அவ்வளவு ஏன், நாம் நடக்கும் விதம், செயல்களைச் செய்யும் விதம் என நாம் செய்யும் அனைத்துமே முரட்டுத்தனமாக இருக்கிறது. இதுவே தெருவிலும், வெளியிலும் வியாபிப்பதில் என்ன ஆச்சரியம்?

ஒரு தனிமனிதனாக உங்களை நீங்களே கவனியுங்கள். ஒரு நாளில் எத்தனை கணங்கள் உங்கள் அருகில் இருப்பவரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் உங்களுக்குள் மறுகுகிறீர்கள்? உங்களைக் கட்டுப்படுத்தி அதை வெளிக்காட்டாமல் இருப்பது சில காலம்தான் சாத்தியம். எப்படியும் பொறுக்க முடியாமல் ஒரு நாள் அது வெடித்து வெளிப்படும்.

அபாயகரமான அஸ்திவாரம்!

தற்சமயம் இவ்வுலகம் அபாயகரமான அஸ்திவாரத்தின் மீது அமர்ந்திருக்கிறது. ‘அமைதி’ என்பதை அவர்களுக்குள்கூட யாரும் ருசித்ததில்லை. பிறகு அதை எப்படி சமூக, உலகச் சூழலில் எதிர்பார்க்க முடியும்? எதை அஸ்திவாரமாகக் கொண்டு இவ்வுலகை நாம் கட்டியிருக்கிறோமோ, அந்த அஸ்திவாரத்தை மாற்றுவதற்கு நாம் தயாராகாவிட்டால், இவ்வுலகில் அமைதி உண்டாக வாய்ப்பில்லை.

அறிக்கைகளாலும், கோஷங்களாலும் இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த முடியாது. அமைதியான மனிதர்களை உருவாக்குவதற்கு அயராது உழைத்தால் மட்டுமே உலகில் அமைதி சாத்தியப்படும். நம் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலையிலும் அமைதியான மனிதர்களை உருவாக்க நாம் வேலை செய்யவேண்டும். அதிலும் குறிப்பாக தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள், அது தொழிலோ, அரசியலோ, பெரும் ஸ்தாபனங்களோ, அதிகாரிகளோ... இப்படி உயர்நிலைகளில் இருப்பவர்கள் தங்களுக்குள் உண்மையிலேயே அமைதியான மனிதர்களாக ஆகிவிட்டால், அவர்களுக்குள் ஒரு முழுமையை அவர்கள் உணர்ந்துவிட்டால், பெரும் பகுதியான மக்களுக்கு அமைதி கிடைக்க இவர்கள் வழி செய்வர். போர்களைத் தவிர்ப்பதால் உருவாகும் அமைதி மட்டுமல்ல, இவ்வுலகில் அமைதி உருவாக்கும் கலாச்சாரத்தை பரவச் செய்து, மக்கள் அமைதியாக வாழ இவர்கள் வழி செய்வர்.