உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி - யோகா தினம்!

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாக, ஜாதி-மத, இன பேதங்கள் கடந்து அனைவருக்கும் உபயோகமான ஒரு கருவியாக, இன்று உலக மேடையில் உயர்ந்து நிற்கிறது யோகா. பிரதமர் மோடி அவர்கள் ஐ.நா சபையிலும், அமெரிக்காவிலும், "இந்தியா உலகிற்கு அளித்த கொடை - யோகா," என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார். இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி, நம் தொன்மைக்கு கிடைத்த சான்று! இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் சிலர் சத்குரு அவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்ததன் தொகுப்பு இங்கே உங்களுக்காக...
உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி - யோகா தினம்!, Ulaga arangil indiavirku kidaitha vetri yoga dinam
 

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாக, ஜாதி-மத, இன பேதங்கள் கடந்து அனைவருக்கும் உபயோகமான ஒரு கருவியாக, இன்று உலக மேடையில் உயர்ந்து நிற்கிறது யோகா. பிரதமர் மோடி அவர்கள் ஐ.நா சபையிலும், அமெரிக்காவிலும், "இந்தியா உலகிற்கு அளித்த கொடை - யோகா," என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார். இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி, நம் தொன்மைக்கு கிடைத்த சான்று! இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் சிலர் சத்குரு அவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்ததன் தொகுப்பு இங்கே உங்களுக்காக...

Question:சத்குரு இந்த வருட உலக யோகா தினத்தில் ஈஷா யோக மையத்தின் நோக்கம் என்ன?

சத்குரு:

யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும், உள் நன்மைக்கும் தேவையான அடிப்படை தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் என் கைகளிலோ, ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் கைகளிலோ இருக்கக்கூடாது. தனிமனிதனின் நன்மைக்காக பயன்படும் இந்தக் கருவி, ஒவ்வொரு மனிதரின் கைகளிலும் இருக்க வேண்டும்.

பல் தேய்ப்பதற்கு தேவையான பிரஷ் நம் கைகளில் இருந்தால் தானே பல்துலக்குவோம். அதே போல, ஒரு மனிதருடைய நன்மைக்கு தேவையான கருவிகள் அவரது கைகளில் இருக்கவேண்டும். இதனால்தான் உலக யோகா தினம். இவ்வருடம், நம்முடைய கவனம் குழந்தைகளின் மீது உள்ளது.

Question:குழந்தைகளுக்கு யோகா அவசியமா?

சத்குரு:

நிச்சயமாக. நம் நாட்டில், 13 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் 1700 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் 9000 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் நான்கு மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டேன். குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டால், நாம் வாழும் சூழ்நிலை எப்படி உள்ளது என்று கற்பனை செய்து பாருங்கள்.

எப்போது நம் சமூகத்தில் குழந்தைகள் தற்கொலை செய்துகொளள துவங்கினார்களோ, நம் வாழ்க்கையின் அடிப்படையே சரியாக இல்லை என்று அர்த்தம். நம் வீட்டில் இருக்கும் ஒரு குழந்தை தன் உயிரை தானே பறித்துக் கொண்டால், நாம் அடிப்படையான ஏதோ ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம். அதனால், இவ்வருட உலக யோகா தினத்தில், குழந்தைகள் மீது கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்தோம்.

Question:குழந்தைகளிடம் இதனை எப்படி கொண்டு சேர்க்கப் போகிறீர்கள்?

சத்குரு:

நான் கிட்டதட்ட 9 மாநிலங்களுக்கு பயணம் செய்து, அந்த மாநிலத்து முதல்வர்களையும் கல்வி அமைச்சர்களையும் சந்தித்தேன். குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, அத்தனை பேரும் உற்சாகமாக இதற்கு தங்கள் முழு ஆதரவினை தெரிவித்தனர். அவர்களின் ஆதரவினால், 40,000 பள்ளிக்கூடங்கள் வரை நம்மால் யோகா சொல்லிக் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம். 45,000 பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா வகுப்பெடுக்க ஈஷா அறக்கட்டளை பயிற்சி அளித்துள்ளது. பள்ளி ஆசிரியர்களே குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுப்பதால், தினசரி, 20 நிமிடங்களுக்கு குழந்தைகளால் யோகா செய்ய முடியும். நிறைய இடங்களில் பெற்றோருக்கு கூட யோகா சொல்லிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
முக்கியமாக, இவ்வருட உலக யோகா தினத்தில், தோராயமாய் 2 கோடி குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். ஐ.நா சபையிலும் கூட யோகாவை எடுத்துச் சென்றிருக்கிறோம். இம்மாதம் நான் ஆப்பிரிக்கா சென்றபோது கூட பெரியளவில் யோக வகுப்புகள் அங்கு நிகழ்ந்தன. யோகா என்பது ஒரு கலாச்சாரம் சம்பந்தப்பட்டது அல்ல, ஒரு நாட்டின் தனியுடைமை அல்ல. எந்த மதத்தையும் சேர்ந்தது அல்ல. மனிதனுடைய உள்நன்மைக்கு, ஆரோக்கியத்திற்கு தேவையான இந்த தொழில்நுட்பம் உலகிற்கு போய் சேரவேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

Question:நீங்கள் வழங்கும் யோக வகுப்புகள் ஏழை மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் போய் சேருமா?

சத்குரு:

இந்த யோக வகுப்புகள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களை சென்றடைவதை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஈஷா அறக்கட்டளை நேரடியாக சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் வகுப்பு எடுப்பதில்லை, ஒவ்வொரு பள்ளியிலும் 3 ஆசிரியர்களுக்கு யோகா வகுப்பெடுக்க பயிற்சி அளிக்கிறோம். இதனால், பள்ளிகளில் வருடம் முழுக்க யோக வகுப்புகள் நடைபெறும். குழந்தைகள் வாழ்வில் யோகா என்பது ஒரு அங்கமாக மாறிவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஒரே ஒரு நாள் யோகா அல்ல இது.
வெளிநாடுகளிலேயும் இது தொடர்ந்து நடைபெறுகிறது. உலக யோகா தினத்தன்று, அமெரிக்காவில் 50,000 இடங்களில் யோகா நடைபெறுகிறது. அங்கு நாம் பள்ளிகளில் யோகா வழங்கவில்லை, பொது மக்களுக்கு மட்டும்தான்.

Question:யோகா என்பது உயர்தட்டு மக்கள் செய்யக்கூடியது. எளிய மக்களையும் ஏழைகளிடமும் யோகா சென்றடைய எந்த மாதிரி திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

சத்குரு:

நான் ஏற்கனவே சொன்னதைப் போல, நாம் 2 சதவிகிதம் தனியார் பள்ளிகளை மட்டுமே அணுகுகிறோம், மற்றவை எல்லாம் அரசுப் பள்ளிகள். அரசுப் பள்ளிகள் மூலம் ஏழைக் குழந்தைகள் தானே பயன்பெறுகிறார்கள்? அது மட்டுமல்ல, யோகா கற்றுக்கொண்டு, 3 மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தபின், அந்தக் குழந்தைக்கு யோகா சொல்லிக் கொடுக்கவும் நாம் கற்றுக் கொடுக்கிறோம்.

இவ்வருடம், 200 குழந்தைகள் தங்கள் கோடை விடுமுறையில் மற்றவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்தனர். இதில், சண்டிகரைச் சேர்ந்த 11 வயது பெண் குழந்தை ஒன்று ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இரண்டே மாதத்தில் யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறாள். இதைப் போல, நன்றாக யோகா செய்யும் குழந்தைகளுக்கு நாம் பயிற்சி அளித்து, கிராமங்களில், அவர்களுடைய வீடுகளுக்கே சென்று சொல்லித் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

Question:யோகா இந்தியாவில் தோன்றிய ஒரு கலை. ஆனால், இந்தியாவை விட வெளிநாடுகளில் இது அதிகமாக பயிற்சி செய்யப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வந்தால்தான் இந்தியாவில் பிரபலம் அடைகிறது. இதற்கு என்ன காரணம்?

சத்குரு:

மேற்கத்திய நாடுகளில் எது நடந்தாலும் அதுதான் சிறந்தது என எண்ணும் நோய் நம் நாட்டை பீடித்திருக்கிறது. நாம் உடுத்துகின்ற உடையிலிருந்து அனைத்திலும் வெளிநாட்டின் தாக்கம்தான் இருக்கிறது. இங்குள்ளவர்களில் நான் மட்டுமே இந்திய உடை உடுத்தி இருக்கிறேன் என்பதை கவனித்தீர்களா!

Question:2 கோடி குழந்தைகள் என்று சொல்கிறீர்கள், தமிழகத்தில் எத்தனை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்?

சத்குரு:

6000 பள்ளிகளை அடைந்திருக்கிறோம். தோராயமாக, ஒவ்வொரு பள்ளியிலும் முன்னூற்றிலிருந்து நானூறு குழந்தைகள் வரை உள்ளனர். பத்து வயதிலிருந்து 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும்தான் இந்த வகுப்புகளில் சேர்த்துக் கொள்கிறோம்.

Question:ஒரு சொட்டு ஆன்மீகம் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்கள் திட்டம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?

சத்குரு:

15 வருடத்துக்கு முன்னர் தமிழ்நாட்டு கிராமங்களில் யோகா என்கிற வார்த்தை அத்தனை பரிச்சயமான வார்த்தையாய் இருக்கவில்லை. இன்று எல்லோருக்கும் தெரிகிறதே!

Question:குழந்தைகளுக்கு மட்டும்தான் யோகாவா? பெரியவர்களுக்கு கிடையாதா?

சத்குரு:

இந்த யோக வகுப்புகள் பள்ளிக்கூடங்களில் மட்டும் நடைபெறவில்லை, பெரு வணிக நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், இரயில்வே துறை, அரசு நிறுவனங்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஆந்திரா, இராஜஸ்தான் அமைச்சரவை என பல தரப்பட்ட மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமானதால், மனது கேளாமல், குழந்தைகள் மீது சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்கிறோம்.

Question:எந்த மாதிரியான யோகா கற்றுத் தருகிறீர்கள்?

சத்குரு:

நாம் உப-யோகா சொல்லிக் கொடுக்கிறோம். உப-யோகா என்றால் துணை யோகா. அல்லது யோகா கற்பதற்கு முன் கற்பது எனலாம். ஒவ்வொரு எளிமையான யோகப் பயிற்சியிலும் ஒரு ஆன்மீகத்தன்மை உண்டு. இத்தனை லட்சம் மக்களை சென்றடையும்போது ஆன்மீக தன்மை சொல்லிக் கொடுப்பது சிறந்ததல்ல, அதனால் நாம் உப-யோகா சொல்லிக் கொடுக்கின்றோம். இதனால், உடல் ஆரோக்கியமும் மனநலமும் ஏற்படுகிறது. உப-யோகாவை நாம் எல்லோருக்கும் எளிமையாய் சொல்லித்தர முடியும்.

Question:இன்று நிறைய மையங்கள் யோகா சொல்லிக் கொடுக்கின்றன. இதற்கு ஒழுங்குமுறைகள் இல்லாமல் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசனத்தை செய்யவும் ஒரு மாற்றுமுறை இருக்கிறது. நிறைய பேர் தவறாக யோகா செய்கிறார்கள். இதனை ஓழுங்குப்படுத்த முடியாதா?

சத்குரு:

ஓரளவுக்கு ஒழுங்குமுறை தேவைதான். அதற்காக கட்டுப்பாடு தேவையில்லை. மத்திய அரசு சான்றளிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். யோகாவை எப்போதுமே யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை, ஆண்டாண்டு காலமாய் சூத்திரங்களை மட்டுமே வகுத்து வைத்திருந்தனர். ஒரு மாலை செய்ய கயிறு வேண்டும். ஆனால், கயிற்றிற்காக யாரும் மாலை அணிவதில்லை. இந்த மாலையில் வைரங்களை கோர்த்துக் கொள்வதும், பூக்களை பின்னிக் கொள்வதும் அவரவர் விருப்பம். ஒவ்வொரு குருவும் அனுபவப்பூர்வமாய் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதைப் பொருத்து அந்த மாலையில் தனக்கு வேண்டியதை இணைத்துக் கொள்கிறார். ஆனால், மாலைக்கு அடிப்படையான அந்த நூலினை மாற்ற முடியாது. இப்படியொரு தன்மை யோகத்திற்கு இருப்பதால், இதில் அதிகப்படியான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் அதன் உயிர்தன்மையே போய்விடும். தற்சமயம் நிலவும் இந்த சான்றிதழ் முறை நல்லதுதான்.

Question:ஒவ்வொரு துறையிலும் upgradation இருக்கிறது. யோகாவை upgradation செய்ய நீங்கள் திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

சத்குரு:

உடலில் புது உறுப்புகள் இணைந்திருந்தால் நீங்கள் சொல்வது போல் upgradation செய்யலாம். அதுபோல் எதுவும் நிகழவில்லையே! உடலில் ஒரு உறுப்பு சேர்ந்துவிட்டால் இன்னொரு விதமான யோகா, upgradation பற்றியெல்லாம் யோசிக்கலாம். இந்த மனித உடலுக்கு தேவையான அனைத்தையும் யோக அறிவியல் புரிந்து, அதற்கு ஏற்றாற்போல் யோகக் கலையை வடிவமைத்திருக்கிறது. யோகாவிற்கு அடிப்படையாக இருக்கும் சூத்திரங்களை வைத்து நாம் என்ன வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால், அது புதிய யோகமுறையாக இருக்காது, யோகத்தின் புதிய வெளிப்பாடாக மட்டுமே இருக்கும்.

Question:பாபா ராம்தேவ் மாதிரி, ஆன்மீகவாதிகள் பலரும் வியாபாரம் செய்கிறார்கள். ஆன்மீகத்தை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துவது சரியா?

சத்குரு:

ஒரு நாடு முன்னேற தொழில் சிறந்த முறையில் நடப்பது மிக மிக அவசியம். தொழில் சிறப்பாய் நடக்காதபோது, தேசம் கீழ்நோக்கி சென்றுவிடும். யாரோ ஒருவர் தன் தொழிலை சிறப்பாக நடத்துவதில் நமக்கென்ன பிரச்சனை? இதில் சுயநலம் எங்கிருக்கிறது?

Question:ஆனால், ஆன்மீகம் என்றால் துறவுதானே, அவர்கள் தொழில் செய்யலாமா?

சத்குரு:

ஆன்மீகம் என்றால் துறவு இல்லை. துறவு பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் மட்டும் துறவறம் பூணுகிறார்கள். துறவியாய் இருந்தாலுமே அந்தத் துறவியும் இந்த நாட்டினுடைய குடிமகன் அல்லவா? அவர் தொழில் செய்வதால் யாருக்கு என்ன பிரச்சனை? அவர் தவறு செய்தால் அதனைக் கையாள சட்டம் இருக்கிறது. சட்டப்படி, முறையாக தொழில் செய்யும்போது யாருக்கென்ன பிரச்சனை என கேட்கிறேன்.

Question:ஆனால், தொழிலுக்கு தன்னுடைய ஆன்மீகத்தை முதலீடாக அல்லவா பயன்படுத்துகிறார்கள்?

சத்குரு:

அப்படியில்லை. பல்தேய்க்க வேண்டும். உலகமே அதைச் செய்கிறது. ஒருவர் இராசயன பேஸ்ட் விற்கிறார், இன்னொருவர் இயற்கையாய் தயாரித்ததை விற்கிறார். இதிலென்ன ஆன்மீகம்? இயற்கை பொருளை விற்பவர் சந்நியாசியாய் இருக்கிறார். அவர் தனக்கென்று அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளவில்லையே!

Question:அவருடைய ஒரு வருட வருமானம் ஐயாயிரம் கோடி...

சத்குரு:

வருமானம் அல்ல, விற்றுமுதல்தான் ஐயாயிரம். இந்தப் பணம் அவருடைய அறக்கட்டளைக்கு செல்கிறது. அதனால், தன் வியாபாரத்தை இன்னும் பெரிதாக்குவார். ராம்தேவ் தன் வயிற்றுக்கு மட்டும்தானே உண்கிறார். அவர் நன்றாக வியாபாரம் செய்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம். இப்படி தொழில் செய்கிறாரே என அங்கலாய்க்க வேண்டாம், தொழிலை நன்றாக செய்தால், கைதட்டலாம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு இது மிக முக்கியம். அவர் தன் தொழிலை கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்கிறார் எனக் கேள்வி. கிராமங்களும் வளரும் அல்லவா?

Question:கிராமங்களில் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் யோகாவை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?

சத்குரு:

20 நிமிடங்கள்.

Question:யோகா சொல்லிக் கொடுக்க எத்தனை நேர பயிற்சி தேவை?

சத்குரு:

ஒரு நாள் பயிற்சிதான். வகுப்பு முழுக்க முழுக்க வீடியோவில் இருக்கிறது. அதனால் யாருமே தப்பாக யோக வகுப்பு எடுக்க முடியாது. அதே போல், ஈஷாவில் சொல்லிக் கொடுக்கப்படும் இந்த உப-யோகா பயிற்சியை உங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே செய்யலாம், அத்தனை எளிமையான யோகா இது.

இதனால், நாற்காலிகளிலேயே தன் வாழ்வின் பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு பெரிய அளவில் உப-யோகா வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதனைச் செய்ய எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. எந்நேரத்திலும், வெறும் 5 நிமிடங்களுக்குள் இந்தப் பயிற்சிகளை செய்து முடித்துவிடலாம். தனக்கு சௌகரியமான நேரத்தில் செய்யமுடியும். இதன்மூலம் நிறைவான உடல், மன நலத்தினை ஒருவர் பெறலாம்.

அதனால், உப-யோகாவினை பெரும்பான்மையான மக்களுக்கு எடுத்துச் செல்வதே இவ்வருட உலக யோகா தினத்திற்கான ஈஷாவின் திட்டம். மேலும், ஜுன் 21ம் தேதி, நான் ஐ.நா சபையில் நிகழவிருக்கும் உலக யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு தலைமையேற்று, உரையாற்றவிருக்கிறேன். உலகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு பலத்த வரவேற்பு கிடைக்கிறது. நாம் எந்த தேசத்திற்கு சென்றாலும் நமக்கு கதவுகள் திறக்கின்றன. இது மகத்தான ஒரு விஷயம். மனித நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட யோகா எனும் கருவி இந்த உலகம் முழுவதற்கும் சென்று சேரவேண்டும்.

இலவச உப-யோகா பயிற்சிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ள: AnandaAlai.com/YogaDay

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1