Question: அன்றைய காலத்தில் தேவதாசிகள், இன்றோ ஒவ்வொரு மாநகரிலும் இதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்கள். சினிமா, டிவி, பத்திரிக்கை எனப் பார்க்கும் இடமெங்கும் காமம் சார்ந்த விஷயங்கள் பரவிக் கிடக்கின்றன. காமம் மகத்தான மனித உணர்வென ஒரு சாரார் உரக்க பேசுகிறார்கள். பலரது வாழ்க்கை திசை மாற இது காரணமாய் மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட காமம் எதற்கு சத்குரு?

சத்குரு:

இயற்கை காம இச்சையை தூண்டுவதற்கான முக்கிய காரணம் இனப்பெருக்கம். ஆனால், இன்று உடலுறவு கொண்டாலும் பிள்ளை பெறாமல் இருக்க பல சாதனங்கள் வந்தாயிற்று. அதனால், உடலுறவு என்பது பிள்ளை பெறுவதற்காக என்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு இதை சற்றே ஆராய்வோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சிலருக்கு உடலுறவு வைத்துக் கொள்வது, தங்கள் அன்பை ஆழமாக்கிக் கொள்வது போல.

உடலுறவு எதற்கு என்று பார்த்தால், அதில் கிடைக்கும் இன்பம் ஒரு காரணம், இரு மனிதர்களுக்கு இடையேயான பந்தத்தின் வெளிப்பாடாக அது இருப்பது இரண்டாவது காரணம், தத்தமது எல்லைகளை நிலைநாட்டுவது போல் தன் உரிமையை மனிதர்கள் பதிப்பது மூன்றாவது காரணம். இந்த மூன்றாவது காரணம், பிழைப்பை சரியாய் நிகழ்த்திக் கொள்வதற்கான ஒரு அமைப்பு. இனப்பெருக்கம் செய்வதற்கான அமைப்பு. இது இல்லையென்றால், உங்கள் குழந்தைகள் மற்ற உயிரினங்கள் போல் திறனோடு ஸ்திரமாக வளர்வது இயலாமல் போய்விடும்.

மனிதன் எல்லை வகுப்பது ஏன்?

ஒரு நாய், குட்டி போட்டால், மூன்றே நாட்களில் அவை ஓடி விளையாடத் துவங்கிவிடும். பதினைந்தே நாட்களில், அந்தக் குட்டிகள் தன் உணவைத் தேடிக் கொண்டு, தன் வாழ்வை நடத்திக் கொள்ள ஆரம்பித்துவிடும். ஆனால், மனிதக் குழந்தைகள் அவ்வாறல்ல. அவர்கள் வளர்ந்து தம் வாழ்வை பார்த்துக் கொள்வதற்கு பல காலம் பிடிக்கும். அதுவரை அவர்கள் வளர ஒரு பாதுகாப்பான சூழல் தேவைப்படும். இதனால்தான் மனிதர்கள் எல்லைகளை வகுத்துக் கொள்வது அத்தியாவசியமாகிறது.

“யாருடன் நான் உடலுறவு கொள்கிறேனோ, அவன் அல்லது அவள் எனக்குச் சொந்தம்.” இப்படிப்பட்ட மனநிலை ஒரு குழந்தை வளர்வதற்கு பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுக்க முடியும். ஆனால், இன்றைய “தனிமனித சுதந்திரம்” போன்ற எண்ணங்களால், இந்த பாதுகாப்புச் சுவர் உடைக்கப்படுவதால், நம் குழந்தைகள் அவதியுறுகின்றனர். இப்படி ஒரு நிலையற்ற, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் குழந்தைகள் வளர்வது ஆரோக்கியமான விஷயம் அல்ல. ஆனால், அதுவே இன்று சகஜமான நிலையாய் மாறிக் கொண்டிருப்பதால், இன்னும் சிறிது காலத்தில் இதற்கு நாம் பெரிய அளவில் விலை கொடுக்க நேரிடும். நிலையான, பாதுகாப்பான சூழலில் வளராத குழந்தைகள், பெரியவர்களாகும் போது, சமுதாய சீர்கேடுகள் நிகழ்வது உறுதி. அதுவே சமுதாயத்திற்கு பேரழிவையும் உண்டாக்கும்.

அதனால் உடலுறவு கொள்வது, நம் எல்லையை நிர்ணயித்துக் கொள்வது போல. “இது என் எல்லை” என்று வெறும் வாய் வார்த்தையில் சொன்னால் போதாது. உடலளவில் பதித்து, இதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்யாணமே செய்து கொண்டாலும், உடலுறவு கொண்டால் மட்டுமே அந்த உறவு முழுமை பெறும். அப்போதுதான் அது உண்மையான திருமணம். நமக்குத்தான் திருமணம் நடந்துவிட்டதே, நாம் சும்மா கைகோர்த்து சந்தோஷமாக வாழ்வை வாழ்வோம் என்றால் ஆகாது. அப்படிப்பட்ட எண்ணத்தை மடமை, நிறைவில்லா வாழ்க்கை, இயற்கைக்கு விரோதமானது எனச் சொல்கிறார்கள். எனவே, இந்த உறவிற்கு பாதுகாப்பாய், எல்லைகளை தெளிவாகக் காட்டும் வண்ணம் உடலுறவு என்னும் விஷயம் நம் சமுதாயத்தில் அணுகப்பட்டது. திருமண வாழ்வில் இந்தப் பாதுகாப்பை நிலைநிறுத்த பல கலாச்சாரங்கள் பல நிலைகளில் உறவுமுறையை புனிதப்படுத்தின. இயற்கை ஏற்படுத்தும் உந்துதலை, கலாச்சார வாயிலாக அங்கீகரித்தன.

உடல் மட்டும் சம்பந்தப்படாவிட்டால் ஆயிரமாயிரம் மனிதர்களோடு அற்புதமான உறவுகளை ஒருவர் வைத்துக் கொள்ளலாம்.

சிலருக்கு உடலுறவு வைத்துக் கொள்வது, தங்கள் அன்பை ஆழமாக்கிக் கொள்வது போல. உடலுறவு வைத்துக் கொள்ளாவிட்டால், ஒருவரை விட்டு ஒருவர் விலகிச் சென்றுவிட்டதாக மக்கள் எண்ணுகிறார்கள், இது உண்மையல்ல. ஆனால் உடலுறவு எனும் அம்சம் இல்லாவிட்டால், மனதளவிலும் விரிசல் ஏற்படும் என்று பரவலாகப் பேசப்படுவதால், மக்களை பயம் பீடித்துக் கொண்டுவிடுகிறது. உடலளவில் எவ்வித தொடர்புமே இல்லாமல் உங்களால் ஒருவரிடத்தில் மிக ஆழமான உறவை வைத்துக் கொள்ளமுடியும் தானே? வேடிக்கை பாருங்கள், உடலுறவு இல்லாவிட்டால், உண்மையில் அங்கு நிலவுவது உறவே அல்ல என்று மேற்கத்திய கலாச்சாரங்கள் அறிவிக்கின்றன.

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்

உடலுறவு இல்லாவிட்டால் ‘உறவு’ என்பது சாத்தியமில்லை என்பது அவர்கள் வாதம். உண்மையில் உங்கள் உடலோடு எவ்வித தொடர்புமே இல்லாமல், என்னால் உங்களுடன் ஒரு ஆழமான உறவை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். உங்கள் உடலால் எவ்வகையிலும் ஈர்க்கப்படாமல், அதேநேரத்தில் உங்களோடு ஒரு ஆழமான உறவை வைத்துக் கொள்ளமுடியும். ஆனால், இந்தச் சாத்தியங்களை மேற்கத்தியர்கள் அறவே தகர்த்து விட்டனர். உறவு என்றாலே அது உடல் சம்பந்தப்பட்டது என்று அடித்துப் பேசுகின்றனர். உடலிற்கு மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து, நம் அடையாளத்தை உடலளவில் வைத்துக் கொள்வதால் வந்திருக்கும் வினை இது.

ஒருகாலத்தில் இந்தியாவில் குடும்பம் என்றால், அது 300-400 பேரைக் கொண்டதாக இருக்கும். இன்றும்கூட வடஇந்தியாவில் இதுபோன்ற சில குடும்பங்கள் இருக்கின்றன. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா அவர்கள் பிள்ளைகள், ஒண்ணுவிட்ட தாத்தா, ஒண்ணுவிட்ட பாட்டி என அனைவரும் ஒன்றாக வாழ்ந்தனர். இவர் நெருங்கிய சொந்தம், அவர் தூரத்து சொந்தம் என்ற பிரிவினையெல்லாம் இருக்காது. எல்லாரும் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் வாழ்ந்தார்கள்.

பிறகு, மேற்கத்திய கலாச்சாரத்தின் வாடை வீசியது. குடும்பம் என்றால் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம் பிள்ளைகள் மட்டும் என்றானது. அதன்பின், பெண்வீட்டார் நம்மவர் இல்லை, அவர்கள் வேற்று மனிதர்கள் என ஒதுக்கினர். விடுவார்களா பெண்கள்? கொஞ்ச காலம் சென்றவுடன், கணவனின் பெற்றோர்களையும் வெளியாளாக்கினர். ஆக, இப்போது குடும்பம் என்றால், கணவன், மனைவி, பிள்ளைகள் என்றாகிவிட்டது. இதிலும், இன்று குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதாக மக்கள் நினைப்பதால், வளர்ந்ததும் அவர்களையும் வெளியனுப்பிவிட்டு, நீயும் நானும் மட்டும்தான் குடும்பம் என்னும் நிலைமை மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவும் பிரச்சினையாகி, வாரம் முழுவதும் தனித்தனியாக இருப்போம். சனி ஞாயிறு மட்டும் சந்திப்போம் என்று சொல்லி உறவினை காப்பாற்றி வருகிறார்கள். ஏழு நாளும் ஒன்றாக இருப்பது சாத்தியமில்லையே!

எதனால் இப்படியொரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது?

“நான்” என்ற எண்ணம், கர்வம் சற்றே அதிகமாகி வருகிறது. இதுபோன்ற “தனித்துவமயமான” எண்ணங்கள் உங்களை, உங்கள் உடல்சார்ந்த நிலையில் செயல்பட தூண்டுகிறது. உடலுடனான அடையாளம் மிக ஆழமாக இருப்பதால், உடல்சார்ந்த உறவுகள் மட்டுமே உயரியது என்று எண்ணுகிறீர்கள். இதனால் இழப்பது என்ன என்று பலருக்கும் புரிவதில்லை. உடல் மட்டும் சம்பந்தப்படாவிட்டால் ஆயிரமாயிரம் மனிதர்களோடு அற்புதமான உறவுகளை ஒருவர் வைத்துக் கொள்ளலாம். உறவினுள் உடல் புகுந்துவிட்டால், மிக சிலரோடு மட்டுமே உங்களால் உறவு கொள்ள முடியும். எவ்வளவுதான் உங்களுக்கு மோகம் இருந்தாலும், காமம் இருந்தாலும் எண்ணிக்கையில் சொற்ப அளவிலான மனிதர்களுடன் மட்டுமே உறவு கொள்ள முடியும். இதுவே, உடல் சம்பந்தப்படாத பட்சத்தில், எண்ணிலடங்கா மனிதர்களுடன் மிக அழகான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்!

எனவே, உடலுறவு அத்தியாவசியம் என்றல்ல. தனிமனிதருக்கு இருக்கும் தேவையை அனுசரித்து அதை அணுகலாம்.