உடலும் உயிரும் எங்கு பிணைந்துள்ளது? எப்படி அறிவது?

நம் வாழ்க்கையில் 24 மணிநேரமும் நம்மை அறியாமலேயே செய்யும் செயல்தான் சுவாசிப்பது! இந்த சுவாசத்தை குறிப்பிட்ட விதமாக கவனிக்கும்போது நமக்கு கிடைக்கும் அற்புத சாத்தியங்கள் பற்றி சத்குரு பேசுகிறார்.
women-doing-isha-hatha-yoga-asana
 

“நீங்கள் சுவாசத்தின் மூலமாக உங்களுக்குள் ஆழமாகப் பயணித்தால், இந்த உடலுடன் நீங்கள் எந்தப் புள்ளியில் கட்டப்பட்டிருக்கிறீர்களோ அந்தப் புள்ளிக்கே உங்களை அது அழைத்துச் செல்லும்.”

dividerdesign

கேள்வியாளர்: சுவாசிப்பது குறித்த ஒரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். “சுவாசம் என்பது ஒரு தன்னிச்சையான செயல். இயல்பாக சுவாசித்தால் போதுமானது”, என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். யோகப் பாதையில் இருப்பவர்கள், “ஆழமாக சுவாசியுங்கள், நீங்கள் ஆற்றல் பெறுவதற்கு அது உதவுகிறது” என்கின்றனர். சுவாசம் என்பதன் உண்மையான முக்கியத்துவம் என்ன?

சத்குரு: எனக்கான நல்வாழ்வில் சுவாசம் எந்த விதத்தில் முக்கியத்தவம் வகிக்கிறது என்பதுதானே உங்கள் கேள்வி? சுவாசம் என்பது ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு இவற்றின் பரிமாற்றம் மட்டுமல்ல. நீங்கள் எப்படி சுவாசிக்கிறீர்கள் என்பதே இந்த க்ஷணத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை பல விதங்களில் நிர்ணயிக்கிறது. உங்களுக்குள் ஏற்படுகின்ற எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல், உங்களது சுவாசமும் வெவ்வேறு விதமாக மாறுபடுவதை நீங்கள் கவனித்ததுண்டா?

நீங்கள் கோபமாக இருந்தால் ஒருவிதமாக சுவாசிக்கிறீர்கள். அமைதியாக இருந்தால் இன்னொரு விதமாக சுவாசிக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால், அப்போது சுவாசம் வேறுவிதமாக நடக்கிறது. வருத்தமாக இருந்தால் மற்றொரு விதமாக சுவாசிக்கிறீர்கள். உங்கள் எண்ணத்திற்கேற்றபடி நீங்கள் சுவாசிக்கும் விதமும் மாறுகிறது. அதேபோல் நீங்கள் எந்த விதமாக சுவாசிக்கிறீர்களோ, அதற்கேற்றபடி உங்கள் எண்ணப்போக்கு இருக்கிறது.

பிராணாயாமம் என்கிற அறிவியல்பூர்வமான பயிற்சியின் மூலம், விழிப்புணர்வுடன் ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பதனால், உங்களது எண்ணம், உணர்வு, புரிதல் மற்றும் வாழ்வை உணரும் தன்மை ஆகியவற்றையே மாற்றிவிட முடியும்.

உடல் மற்றும் மனம் இவற்றின் தொடர்பாக பல செயல்களைச் செய்வதற்கு, சுவாசத்தை ஒரு கருவியாக பல வழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். ஷாம்பவி பயிற்சியில் (ஈஷாவில் கற்றுத்தரப்படும் ஒரு பயிற்சி வகுப்பு), சுவாசத்தின் மிக எளிமையான ஒரு செயல்முறையை நாம் உபயோகிக்கிறோம். ஆனால் அது சுவாசத்தைப் பற்றியது அல்ல. சுவாசம் ஒரு கருவியாக மட்டுமே உள்ளது; அங்கு சுவாசம் ஒரு தூண்டல் மட்டும்தான். அங்கு நிகழ்வதும் சுவாசம் குறித்ததல்ல. பிராணாயாமம் என்கிற அறிவியல்பூர்வமான பயிற்சியின் மூலம், விழிப்புணர்வுடன் ஒரு குறிப்பிட்ட விதமாக சுவாசிப்பதனால், உங்களது எண்ணம், உணர்வு, புரிதல் மற்றும் வாழ்வை உணரும் தன்மை ஆகியவற்றையே மாற்றிவிட முடியும்.

நான் உங்களிடம், மூச்சைக் கவனியுங்கள் என்றால் - இப்போது மூச்சைக் கவனிப்பது என்பது பல இடங்களிலும் பரவலான ஒரு பயிற்சியாக இருக்கிறது - நீங்களும் மூச்சைக் கவனிப்பதாகத்தான் எண்ணுகிறீர்கள். ஆனால் நீங்கள் கவனிப்பது மூச்சை அல்ல. மூச்சுக் காற்று வந்து போவதால் நாசியில் ஏற்படும் புலன் உணர்வைத்தான் உங்களால் கவனிக்க முடிகிறது. இது எப்படியென்றால், யாராவது உங்கள் கையைத் தொட்டால், அவரையே தொட்டுவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில், அவரைத் தொட்டதால் உங்கள் புலன்களில் ஏற்பட்ட உணர்வைத்தான் நீங்கள் உணர்ந்தீர்கள்.

உடலும் உயிரும் என்று இரண்டு உண்டு, இரண்டும் நேர் எதிரிடையான ஒன்று, ஆனால் ஒன்றாக இருப்பது போல அவை பாசாங்கு செய்கின்றன.

சுவாசம் என்பது தெய்வீகத்தின் கைகள் போன்றது. சுவாசத்தை நீங்கள் எப்போதும் உணர்வது கிடையாது. உங்கள் அனுபவத்திற்குள் வராத அந்த சுவாசமே கூர்ம நாடி என்று குறிக்கப்படுகிறது. ஏற்கனவே சொன்னதுபோல சுவாசக்காற்றின் மூலம் உண்டாகும் புலன் உணர்வை நான் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிடுவது சுவாசத்தை மட்டுமே. கூர்ம நாடி என்பது உங்களை இந்த உடலுடன் கட்டி வைத்திருக்கும் ஒரு மெல்லிய கயிறு என்று குறிக்கப்படுகிறது. இந்த சுவாசம் எனப்படும் மெல்லிய கயிறு, இழை அறுபடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. உங்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சுவாசத்தை நான் எடுத்துவிட்டால், நீங்கள் என்பதும், உங்களது உடலும் பிரிந்து விழுந்துவிடும். ஏனென்றால் உயிரும், உடலும் கூர்ம நாடியினால் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய ஏமாற்று வேலை போல தோன்றுகிறது. அங்கே உயிர், உடல் என இரண்டு இருக்கிறது, ஆனால் அவை ஒன்று போல பாசாங்கு செய்கின்றன. இது திருமணம் போன்றது. அவர்கள் இருவர். ஆனால் வெளிப்பார்வைக்கு அவர்கள் ஒருவராக இருப்பது போன்று பாவனை செய்கின்றனர். இங்கே, உடலும் உயிரும் என்று இரண்டு உண்டு, இரண்டும் நேர் எதிரிடையான ஒன்று, ஆனால் ஒன்றாக இருப்பது போல அவை பாசாங்கு செய்கின்றன.

நீங்கள் மிக மிக ஆழமான சுவாசத்தின் மூலம், உங்களுக்குள் ஆழமாகப் பயணித்தால், நீங்கள் உடலுடன் உண்மையில் எங்கே கட்டப்பட்டிருக்கிறீர்களோ, அந்தப் புள்ளிக்கு, அது உங்களை அழைத்துச் செல்லும். நீங்கள் எங்கே கட்டப்பட்டிருக்கிறீர்கள் மற்றும் எப்படிக் கட்டப் பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துவிட்டால், உங்களது விருப்பம்போல் அதைக் கட்டவிழ்த்துவிட முடியும். விழிப்புணர்வுடன், உங்களது உடைகளைக் களைவது போல மிகவும் மென்மையாக நீங்கள் உங்களது உடலை உதிர்க்க முடியும்.

நீங்கள் எங்கே கட்டப்பட்டிருக்கிறீர்கள் மற்றும் எப்படிக் கட்டப் பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துவிட்டால், உங்களது விருப்பம்போல் அதைக் கட்டவிழ்த்துவிட முடியும். விழிப்புணர்வுடன், உங்களது உடைகளைக் களைவது போல மிகவும் மென்மையாக நீங்கள் உங்களது உடலை உதிர்க்க முடியும்.

உங்கள் உடைகள் எங்கே இறுக்கிக் கட்டப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறியும்போது, அவற்றைக் களைவது எளிது. அது எங்கே கட்டப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியாதபோது, எந்தவிதமாக இழுத்தாலும், அதை அவிழ்க்க வராது. கடைசியில் உடைகளை நீங்கள் கிழித்தெறியத்தான் வேண்டியிருக்கும். இதுவே உடலுக்கும் பொருந்தும். உங்கள் உடல், உங்களுடன் எங்கே கட்டப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியவில்லை என்றால், உடலை விட்டுவிடுவதற்கு நீங்கள் விரும்பினால், வேறு ஏதாவதொரு விதத்தில் உடலை நீங்கள் சிதைத்தோ அல்லது உடைத்தோதான் உடலை விட வேண்டியுள்ளது. ஆனால் உடலும், உயிரும் எங்கே கட்டப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்தால், உங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில், உடலை, மிகுந்த தெளிவுடன் உங்களால் நிறுத்தி வைக்கமுடியும். நீங்கள் உடலைக் களைய விரும்பும்போது, விழிப்புணர்வோடு அதை செய்ய முடியும்.

ஒருவர் விருப்பத்துடன் உடலை முழுமையாகக் களையும்போது, நாம் இதை மஹாசமாதி என்கிறோம். பொதுவாக, இதுவே முக்தி அல்லது விடுதலை என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த உடலுக்கு உள்ளே இருப்பது என்னவோ, அதற்கும், உடலுக்கு வெளியே இருப்பது என்னவோ, அதற்கும், வித்தியாசமே இல்லை என்கிற மகத்தான சமபாவ உணர்வினை நீங்கள் அடைந்துள்ளீர்கள். அவ்வளவுதான், விளையாட்டு முடிந்துவிட்டது.

ஒவ்வொரு யோகியும் இதற்காகத்தான் ஏங்குகிறார், ஒவ்வொரு மனித உயிரும் இதை நோக்கிய தேடலில்தான் இருக்கிறது. விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வில்லாமலோ அனைவரும் இதைத்தான் தேடுகின்றனர். ஏதோ ஒரு வழியில் விரிவடைய விரும்புகின்றனர். அது, இந்த உச்சபட்ச எல்லையின்மைதான். இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லையற்றதை நோக்கி அனைவரும் தவணை முறைகளில் செல்கின்றனர். இது ஒரு மிக நீண்ட அசாத்தியமான வழிமுறை. நீங்கள் 1, 2, 3, 4 என்று எண்ணத் துவங்கினால், முடிவில்லாமல் எண்ணிக்கொண்டே இருப்பீர்கள். அந்த எண்ணிலியை (infinite) அல்லது எல்லையற்றதை அடையவே மாட்டீர்கள். இதன் பயனற்ற தன்மையை ஒருவர் உணரும்போது, அவர் இயல்பாகவே உள்முகமாகத் திரும்பி உயிரின் செயல்பாட்டை உடலிலிருந்து கட்டவிழ்ப்பதற்கான செயல்களை மேற்கொள்கிறார்.

sg app

 

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1