உடலில் உயிர் நுழையும் ரகசியம்!

ஒரு உயிர் எப்படி ஒரு கருவைத் தேர்வு செய்கிறது? அந்தக் கருவிற்குள் எப்படி இறங்குகிறது, போன்ற சுவாரஸ்ய கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது சத்குருவின் இந்த உரை.
உடலில் உயிர் நுழையும் ரகசியம்!, Uyir
 

கேள்வி: சத்குரு, எனக்கு உச்சந்தலையில் ஒரு அழுத்தம், மேல்நோக்கி இழுப்பது போல் உணர்கிறேன், அது யோகா சம்பந்தமானதா, அல்லது உடல் கோளாறா?

சத்குரு:

உடலில் உயிர் நுழையும் வழி

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மண்டையோட்டின் குறிப்பிட்ட பகுதி இன்னமும் சரியாக உருவாகாமல் இருப்பதை கவனிக்க முடியும். அந்தப்பகுதி இன்னமும் தோலாகத்தான் இருக்கிறது, எலும்பு உருவாகவில்லை. இந்தப் பகுதி யோகாவில் ‘பிரம்மரந்த்ரா’ அல்லது ‘ரந்த்ரா’ என அழைக்கப்படுகிறது. அதற்கு சிறிய துவாரம் அல்லது வழி என்று பொருள். கருவில் குழந்தை வளரும்போது இந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் அந்த குழந்தைக்குள் இறங்குகிறது. இறங்கிய உயிர் இந்த(குழந்தையின்) உடல் தன்னை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறது. அந்த அளவிற்கு அதற்கு விழிப்புணர்வு இருக்கிறது. தன் இருப்பிற்கு அந்த உடல் தகுதியானதல்ல என்று அது கருதினால் தான் வந்த வழியாகவே திரும்பிப் போய்விடும். எனவே கடைசிவரை அந்த இடத்தை தான் போவதற்கு வசதியாக அப்படியே வைத்திருக்கிறது. வேறு எந்த வழியாகவும் போவதற்கு அது விரும்புவதில்லை. ஒரு நல்ல விருந்தாளி எப்போதும் முன் வாசல் வழியாகத்தான் வருவார், முன் வாசல் வழியாகத்தான் போவார். முன் வாசல் வழியாக வந்து பின் வாசல் வழியாகப் போனால் உங்களை சுத்தமாக துடைத்து விட்டார் என்று பொருள். மருத்துவர்கள் அறிந்திருப்பார்கள், இறந்தே பிறக்கும் குழந்தை மிக நன்றாக, ஆரோக்கியமாகத்தான் இருக்கும், ஆனாலும் உயிர் இருக்காது. ஏனெனில் உயிருக்குத் தேர்ந்தேடுக்கும் வாய்ப்பு கடைசி வரைக்கும் இருக்கிறது.

இறங்கிய உயிர் இந்த(குழந்தையின்) உடல் தன்னை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறது. அந்த அளவிற்கு அதற்கு விழிப்புணர்வு இருக்கிறது. தன் இருப்பிற்கு அந்த உடல் தகுதியானதல்ல என்று அது கருதினால் தான் வந்த வழியாகவே திரும்பிப் போய்விடும்.

கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டியவை

 

 

உயிர் தனது கர்ம வினையைக் கொண்டிருக்கிறது. கருவில் வளரும் பிண்டமோ பெற்றோரின் கர்ம வினையைக் கொண்டிருக்கும். எனவே உயிர் தனது விருப்பப்படி தேர்ந்தெடுக்கிறது. 90 சதவீதம் சரியாகத் தேர்ந்தெடுத்து விடுகிறது. சில நேரங்களில் அதனுடைய தேர்வு தவறாகி விடுகிறது. எனவேதான் ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது அவருக்கு சரியான சூழ்நிலை உருவாக்க முயற்சிக்கின்றனர். இப்போது அப்படி யாரும் பார்ப்பதில்லை. ஏனெனில் பெண்கள் இப்போது வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். அது மட்டுமல்ல கர்ப்ப காலத்திலும் வேலைக்குச் செல்கின்றனர், சினிமா பார்க்கின்றனர், எல்லா இடத்திற்கும் செல்கின்றனர். தங்களை விட ஒரு நல்ல உயிர் அந்த கர்ப்பத்தில் தங்க வேண்டுமென்பதற்காக ஆணும் பெண்ணும் முன் காலத்தில் எல்லா முயற்சியும் எடுத்தனர். எனவே கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியைப் பார்க்க கணவன் கூட ஒரு காலகட்டத்திற்கு மேல் அனுமதிக்கப் படுவதில்லை. ஏனெனில் சுகமான சூழ்நிலையில், மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில், எண்ணங்கள் பாதிக்கப்படாத சூழ்நிலையில், எல்லா நிலையிலும் பாதுகாப்பாக கர்ப்பமுற்ற பெண் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். சரியான உயிரை வரவேற்க வசதியாக அப்பெண்ணின் தன்மை இருக்கும்படி, சரியான உணர்ச்சிகள், சரியான சப்தங்கள், சரியான மந்திரங்கள், சரியான உணவு ஆகியன அனைத்தும், இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். ஒரு வேளை இன்றைய உலகத்தில் இவையனைத்தும் பொருந்திவராமல் இருக்கலாம். எனவே ஒரு உயிர் குறிப்பிட்ட ஒரு கருவில் இறங்கி, நாளடைவில், தான் குழந்தையாக மாற அந்தக் கரு தகுதியானதல்ல என்று கருதினால், கருவை விட்டுப் போய்விடுகிறது. எனவேதான் அந்த வளரும் பிண்டத்தில் ஒரு வழி எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது.

 

உயிர் உடலை விட்டுச் செல்ல சிறந்த வழி

இந்த வழிதான் பிரம்மரந்திரா. உங்கள் வாழ்வின் இறுதியில் ஒரு நாள் நீங்கள் இந்த உடலை விட்டுப் போகும்போது எந்த வழியாக வேண்டுமானாலும் போகமுடியும், ஆனால் போவதற்கு சிறந்த வழி பிரம்மரந்திராதான். விழிப்புணர்வுடன் உடலின் எந்தப் பகுதி வழியாக வெளியேறினாலும் அது நல்லதே. ஆனால் பிரம்மரந்திரா வழியாக வெளியேறுவது மிகச் சிறந்தது. இந்த பெரிய வாய்ப்பைப் பற்றி நிறைய பேர் பேசியிருப்பதாலும், நிறைய புத்தகங்கள் இதைப் பற்றி சொல்லியிருப்பதாலும், மக்கள் தங்கள் உச்சந்தலையிலும், நெற்றியிலும் ஏதாவது கற்பனை செய்து கொள்கிறார்கள். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கே உங்கள் மனதை குவிக்கிறீர்களோ அங்கே சிறிது அரிப்பு உணர்வு தோன்றும். இப்போது வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வலது சுண்டு விரலை இப்படி வையுங்கள், அதன் முனையில் உங்கள் மனதை குவியுங்கள், சில நிமிடங்களில் அங்கே ஒரு அரிப்பு உணர்வு தோன்றும், ஏன்? உடலின் எந்த பகுதியில் மனதைக் குவித்தாலும், அங்கே சிறிது அரிப்பு உணர்வு தோன்றும். அதை வைத்து உங்களுக்குள் ஏதோ பெரிய செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் முடிவு செய்யக்கூடாது. அல்லது உடலிலேயே சில முறை அங்கங்கே அரிப்புகள் உணரலாம். எப்போதாவது உங்களுக்கு இப்படி நடக்கும். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்கள் உடலில் அங்கங்கே அரிப்பு உணர்வு தோன்றலாம், குறிப்பாக நீங்கள் மிகவும் பதட்டமாக இருக்கும்போது அப்படி அடிக்கடி நடக்கும். நீங்கள் தளர்வாக இருக்கும்போது அப்படி நடக்காது. நீங்கள் பதட்டமாக இருக்கும்போது அங்கங்கே அரிப்பு உணர்வு தோன்றுவதால் அதை நீங்கள் வேறுவிதமாக முடிவு செய்துவிடக்கூடாது.

பொருள்தன்மைக்கு அப்பால் உள்ள பரிமாணம்

 

நான் இதை சொல்லலாமா என்று தெரியவில்லை, ஏனெனில் சொல்லிவிட்டால் பிறகு நீங்கள் நிறைய கற்பனை செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால், நீங்கள் சாம்பவி பயிற்சியை செய்வதால், இப்போது கூட நீங்கள் அதை பரிசோதித்துப் பார்க்கலாம். நான் எப்போதும் இது போன்ற விஷயங்களை தவிர்த்தே வந்திருக்கிறேன், ஏனெனில் மக்கள் பிறகு அது போன்ற விஷயங்களில் மிகவும் கற்பனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இதை நீங்கள் செய்து பார்க்க வேண்டாம், அது தேவையில்லாதது. நான் எனது பிரம்மரந்திராவின் மேல் கைவைத்தால், நான்கு அடிக்கும் மேல் வைத்தால் கூட, கை 8 போன்ற அமைப்பில் இருப்பதை உணர முடிகிறது. சக்தி நிலைகளை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைக்கும்போது எப்போதும் அப்படி நடக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் நடக்க முடியும். ஆனால் அது உள்ளுக்குள் நடக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது என்றால் நம்மில் உள்ள 114 சக்கரங்களில் 2 சக்கரங்கள் உடலுக்கு வெளியே இருக்கிறது. பொருள்தன்மைக்கும் அப்பால் உள்ள பரிமாணம் நிலையான செயல்முறையாக மாறினால், சில ஷணங்களுக்கு உங்களையும் தாண்டிய சில விஷயங்கள் நடப்பதை உணரமுடியும். எனவே உங்கள் பொருள்தன்மையைத் தாண்டிய பரிமாணம் தொடர்ந்த செயல்முறையாக மாறும்போது, உடலுக்கு வெளியே செயலற்ற நிலையில் உள்ள 2 சக்கரங்கள் செயல்படத் துவங்குகின்றன. அவை அப்படி செயல்படத் துவங்கும்போது, உங்கள் தலையில் ஒரு ஆன்டெனாவை நீங்கள் பெறுகிறீர்கள். உயிர்த்தன்மை குறித்த சில புரிதல்களை அது வழங்குகிறது.

விரும்பும் நேரத்தில் விழிப்புணர்வுடன் உடலை விடும் யோகிகள்

இதில் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. மேலும் அது எப்போதும் உங்களை வாழ்வு மற்றும் அதற்கும் அப்பால் உள்ளவற்றின் விளிம்பில் நிறுத்திவிடுகிறது. ஒரு யோகியின் நோக்கமும் எப்போதும் அப்படித்தான் இருக்கிறது, ஏனெனில் விரும்பும் ஷணத்தில் விழிப்புணர்வுடன் உடலை விட முடியும். குறிப்பாக, கார் ஓட்டுகிற, வானில் பறக்கிற, கால்பந்து விளையாடுகிற என்னைப் போல் சுறுசுறுப்பாக உள்ள ஒரு யோகி அது போன்ற விளிம்பில் எப்போதும் இருப்பது மிக முக்கியம். எல்லா யோகிகளும் இப்படித்தான் இருப்பார்கள். ஆனால் நான் அதிகமாக அப்படி இருக்கிறேன். ஏனெனில் ஒரு வேளை விமானம் விபத்துக்குள்ளாகி விட்டால் நான் விழிப்புணர்வின்றி இறக்க விரும்பவில்லை. எனவே எப்போதும் விளிம்பில் இருக்கிறேன். அப்படி இருப்பது யோகிக்கு பாதுகாப்பானது. நீங்கள் சமநிலையில் இருக்கத் தெரிந்தவராக இருந்தால் கயிற்றின் மீது நடப்பது கூட பாதுகாப்பானதுதான், இல்லையா? அப்படி இருக்கத் தெரியாதவருக்கு அது அபாயமான விளையாட்டாகத் தெரிகிறது. சென்னை தெருக்களில் கார் ஓட்டுவதை விட அது மிகவும் பாதுகாப்பானதுதான், இல்லையா? எல்லாம் உங்களைப் பொறுத்ததுதான், சென்னை தெருக்கள் உங்கள் கையில் இல்லை, ஆனால் கயிற்றின் மீது நடப்பது உங்கள் கையில் இருக்கிறது, இல்லையா? எப்படி நடப்பது என்று தெரிந்து கொண்டால் அது பாதுகாப்பானதுதான். எனவே நீங்கள் சமநிலையில் இருந்து விட்டால் விளிம்பில் இருப்பதும் பாதுகாப்பானதுதான். அதில் அபாயம் ஏதும் இல்லை. தவறி கீழே விழும் வாய்ப்பு கிடையாது. ஆனால் அது உங்களுக்கு விடுதலையை தருகிறது. ஏதாவது தவறாகி விடும் பட்சத்தில் நீங்களாகவே வெளியேறிவிடலாம். விழிப்புணர்வின்றி போகத் தேவையில்லை. இப்போது அது போல எதுவும் நடக்கவில்லை. நீங்கள் விளிம்பில் இல்லை.ஒன்று நீங்கள் உங்கள் ஆத்ம சாதனையைத் தொடரலாம். அல்லது அந்த சக்திநிலையை பெரியதொரு வாய்ப்பாக மாற்ற நினைத்தால் நீங்கள் என்னிடம் வரவேண்டும்.

கேள்வி:  சத்குரு, எனக்கு பிறப்பைப்பற்றி ஒரு கேள்வி. நீங்கள் முன்பு சொன்னீர்கள், ஒரு கரு தனது கர்மவினை மற்றும் தன்னை ஒத்த குணங்கள் மற்றும் மனோபாவம் உள்ளவர்களின் கர்ப்பப்பையில்தான் உருவாகிறது என்று. அப்படியென்றால் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரண்டு குழந்தைகள் எப்படி வெவ்வேறாக இருக்கின்றன?

 

சத்குரு:

கர்மா என்றால் என்ன?

நாம் கர்மா என்னும் சொல்லைப் பயன்படுத்தும்போது நீங்கள் செய்த செயல்களுக்காக தண்டனை பெறுவது என்றோ, நல்ல காரியங்களுக்கு பரிசளிக்கப்படுவது என்றோ பேசுவதில்லை. இது தவறான கருத்து. “கர்மா” என்னும் சொல், செயல் என்று பொருள்படும். நாம் கடந்தகால செயல்களைக் குறிப்பிடுகிறோம்.

நீங்கள் எந்தவிதமான செயல்களைச் செய்ய முடியும்? உடல் சம்பந்தமான செயல், மூளை சம்பந்தமான செயல், உணர்வு சம்பந்தமான செயல், சக்தி சம்பந்தமான செயல் ஆகியவை உண்டு. இந்த நான்கு மட்டத்திலும் நீங்கள் செயல்படுகிறீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் - உடல், மனம், உணர்வு மற்றும் சக்திநிலை ஆகிய எது தொடர்புடையதானாலும் இவை அனைத்துமே ஒரு மிச்சத்தை விட்டுச் செல்லும், அதாவது அதைப்பற்றிய ஒரு பதிவு.

“இது என்னுடைய செயல். வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கு என்ன நடந்தாலும் அது என்னுடைய கர்மாவாகத்தான் இருக்க முடியும்.”

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பதிவுகள் இல்லாமல், சேர்த்து வைக்கப்பட்ட தகவல்கள் இல்லாமல், உங்களுக்கென்று ஒரு தனி குணாதிசயத்தைப் பெறமுடியாது. அப்படி இல்லை என்றால் நீங்கள் குணாதிசயம் அற்றவராக இருப்பீர்கள். நீங்கள் எத்தகைய மனிதர் என்பதைப்பற்றி உங்களுக்கு ஒரு கருத்தும் இருக்காது. உங்களுக்கு ஆளுமை என்பதே இருக்காது. சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடங்கிய வங்கி ஒன்று இருப்பதால்தான், ஆளுமை என்பது இருக்கிறது. எனவே இது சேகரிக்கப்பட்ட தகவல்கள்தான். உங்களை அறியாமல் நீங்கள் உருவாக்கிய மென்பொருள் உங்களிடம் உள்ளது.

கர்மா என்பது செயல் என்றால், அது யாருடைய செயலைக் குறிப்பிடுகிறது? அதன் பொருள் இவ்வளவுதான். “இது என்னுடைய செயல். வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கு என்ன நடந்தாலும் அது என்னுடைய கர்மாவாகத்தான் இருக்க முடியும்.” அதாவது உங்கள் விழிப்புணர்வுக்கு அப்பால் நடந்த செயல் இப்போது விளைவுகளைத் தருகிறது.

காரணம் மற்றும் விளைவு

வாழ்க்கை என்பது எப்போதும் காரணம் மற்றும் விளைவு என்பதால் நடக்கிறது. இப்போது நீங்கள் அந்த விளைவை அனுபவிக்கிறீர்கள் அல்லது அவதிப்படுகிறீர்கள். ஆனால் காரணம் இல்லாமல் விளைவுகள் இருக்குமா? ஒரு வேளை நீங்கள் மிகவும் குறுகிய பார்வையுடன் பார்ப்பதால், காரணத்தை உங்களால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு காரணம் இல்லாமல் ஒரு விளைவு இருக்கமுடியாது. இந்தக் காரணத்தைத்தான் கர்மா என்று கூறுகிறோம்.

கர்மா என்பது உங்களுடைய தற்போதைய புரிதலுக்கும் மிகவும் அப்பாற்பட்டது. அதற்குள்ளே நாம் இப்போது போகவேண்டாம். ஆனால் நீங்கள் பிறந்தது முதல் இந்த கணம் வரையில் நீங்கள் செய்த எல்லா விதமான செயல்பாடுகள் - உடலால், மனதால், உணர்வால், சக்தியால் செய்தவை - இப்போது உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்ல வில்லையா?

நீங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கும் விதம், உணரும் விதம், புரிந்துகொள்ளும் விதம் இவை எல்லாம் உங்கள் கர்மாவைப் பொறுத்திருக்கிறது. இப்போது நான் பேசும் வார்த்தைகளை நீங்கள் புரிந்துகொள்ளும் விதம் உங்கள் கர்மாவைப் பொறுத்தது. நான் இப்போது சொல்வதை உங்கள் கர்மாவுக்கு ஏற்றபடித்தான் ஒரு குறிப்பிட்ட விதமாகப் புரிந்துகொள்கிறீர்கள். எனவே எல்லாவற்றையும் உங்கள் கர்மா முடிவு செய்கிறது.

உடலில், உயிர் சக்தியில் தகவல் சேமிப்பு

கர்மாவின் செயல்பாடு உயிர்ப்புடன் இருக்கிறது, அது வெவ்வேறு மட்டங்களில் உங்களுள் சேமிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஞாபக சக்தியில், உடலில், உணர்வுகளில், வாழ்க்கையின் சக்தியில் சேமிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய உயிர் சக்தியே இந்த தகவலைச் சுமந்து கொண்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் என்பது கல்லால் செய்த சாதனத்திலிருந்து இப்போது உள்ள கணிப்பொறியின் ப்ளூ ச்சிப் (blue chip) வரையில் வளர்ந்துள்ளது. ஒருகாலத்தில் எல்லாவற்றையும் கல்லில் செதுக்கி சேமித்து வைக்க வேண்டியிருந்தது. ஆனால் லட்சக்கணக்கான கற்களில் சேமித்து வைக்கக்கூடிய தகவல்களை கணிப்பொறியின் ஒரு சிறிய சில்லில் தற்போது சேமிக்க முடியும்.

 

இப்போது நினைத்தால் வெகுதூரத்தில் இருப்பதுபோலத் தோன்றும், அதே போல் தகவல்களை சக்திநிலையிலும் சேமித்து வைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நான் இப்போது சொல்வது நம்ப முடியாததாகத் தோன்றலாம். ஆனால் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இப்படித்தான் என் உடல் இருக்கிறது. இப்படித்தான் என்னுள்ளே வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. உயிர் சக்தி தகவல்களை சுமந்து கொண்டிருக்கிறது.

பலரை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தீட்சை செயல்முறைக்கு நாம் உட்படுத்தும்போது, ஒவ்வொரு மனிதரின் சக்தியும் வெவ்வேறு விதமாக தூண்டப்படுவதை நீங்கள் பார்க்க முடியும். ஒரே விதமான தீட்சைக்கு வெவ்வேறு விதமான விளைவுகள் ஏன் என்றால் அது ஒவ்வொருவரின் சக்திநிலையும் எப்படி கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து நிகழ்கிறது.

வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமான வழியில் செல்வார்கள். ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நபரும் அவரவருடைய சக்திக் கட்டமைப்புக்கேற்றவாறு தத்தம் வழியில் செல்வார்.

இறப்புக்குப்பின் கர்மா எப்படி செயல்படுகிறது?

எனவே கர்மா என்பது விழிப்புணர்வின்றி உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் நீங்கள் உருவாக்கிய மென்பொருள். நீங்கள் உங்கள் உடலை இழந்த பிறகும் உங்கள் கர்மாவை இழக்க மாட்டீர்கள். உங்கள் மனம் என்பதை இழந்தாலும் உங்கள் கர்மாவை இழக்கமாட்டீர்கள். பெரும்பாலான மக்களுக்கு என்ன நடந்தாலும் அவர்கள் தங்களுடைய கர்மாவை இழக்கமாட்டார்கள்.

ஒருவர் இறக்கும்போது அவர் தனது உடலை இழக்கலாம், தனது விழிப்புணர்வான மனம் என்பதை இழக்கலாம். எனினும் கர்ம உடல் அதன் வழியிலேயே செல்லும். அந்தக் கர்ம உடல் பகுத்தறியும் தன்மையை மட்டும் இழந்திருக்கும். பகுத்தறியும் தன்மையை இழந்துவிடுவதால் அந்த உயிர் இப்போது தனது மனப்பாங்குக்கு ஏற்றவாறு மட்டும் இயங்கும்.

சேர்ந்திருக்கும் மனேபாவங்கள் பொறுத்து, அந்த உயிரில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் பொறுத்து அல்லது அந்தக் கர்மவினைகள் பொறுத்து அந்த உயிர் தனது வழியில் செல்லும். அந்த உயிரில் இனிமையான தகவல்கள் இருந்தால், இப்போது அந்த உயிருக்கு பகுத்தறியும் தன்மை இல்லாதிருப்பதால், அந்த இனிமை மேலும் அதிகமாகும்.

தகவல் பதிவு உங்கள்மீது ஏற்படுத்தும் தாக்கம்

உதாரணமாக, நேற்று நீங்கள் ஒரு தேர்வில் வெற்றி பெற்றீர்கள் அல்லது திருமணம் செய்துகொண்டீர்கள் என்று வைத்த்துக் கொள்ளுங்கள். இந்த தகவல் உங்களுக்கு உள்ளேயே இருக்கும். இது உங்கள் ஞாபகசக்தியைச் சேர்ந்தது. உங்களுடைய ஞாபக சக்தியை நான் அழித்துவிட்டால், உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்று தெரியாது.

நீங்கள் நேற்றுதான் திருமணம் செய்துகொண்டீர்கள், இந்த தகவல் உங்கள் மனதில் பசுமையாக இருக்கும். இந்த முழு சமூகமும் உங்களைப் பார்த்து ஏற்கனவே சொல்லியிருக்கிறது, “நீங்கள் திருமணம் செய்துகொண்டால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” என்று. எனவே திருமணம் செய்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். சில காலம் கழித்து வேறு விதமாக சொல்வார்கள். அது வேறு விஷயம். ஆனால் திருமணம் ஆன புதிதில் நீங்கள் பேரானந்தமாக இருப்பீர்கள் என்ற தகவல் உங்களுக்குள் பதிந்திருக்கிறது. அதனால்தான், திருமணம் முடிந்தவுடன் நீங்களும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறீர்கள். இந்த தகவலை உங்களிடமிருந்து எடுத்து விட்டால் திருமணம் என்பது மகிழ்ச்சியைத் தருமா இல்லையா என்பது உங்களுக்கு தெரியவே தெரியாது.

எனவே இந்தத் தகவல் தற்போது உங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உங்களை இப்போது மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. ஆனால் நீங்கள் திருமணம் செய்துகொண்டவர் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உங்களுக்குள் பதிந்துவிட்ட அந்த தகவல் காரணமாக (“எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நான் மகிழ்ச்சியாக இருந்தாக வேண்டும்”) அந்த சிறிய தவறு பெரிய அளவில் பெரிதாக்கப்படுகிறது.

திருமணம் என்பது பேரானந்தம் என்று உங்களிடம் சொல்லாமலிருந்தால், அல்லது திருமணம் ஆன முதல் நாளிலேயே திருமணம் என்பது சோகமானது என்று சொல்லியிருந்தால், உங்களுடைய துணைவர் ஏதாவது பிடிக்காத ஒன்றைச் செய்தால், நீங்கள் இவ்வாறு நினைப்பீர்கள், “எப்படி இருந்தாலும், இது இப்படித்தான் இருக்கும். எனவே பரவாயில்லை. இருந்தாலும் அவர் அவ்வளவு மோசமானவர் அல்ல” (சிரிக்கிறார்).

நீங்கள் உங்கள் உடலை இழந்த பிறகும் உங்கள் கர்மாவை இழக்க மாட்டீர்கள். உங்கள் மனம் என்பதை இழந்தாலும் உங்கள் கர்மாவை இழக்கமாட்டீர்கள்.

சில சமுதாயங்களில் மக்கள் இதற்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் முதலிலேயே சொல்லியிருக்கிறார்கள், 'உங்களுக்குத் திருமணம் முடித்துவிட்டால், பல கொடுமையான நிகழ்வுகள் நடக்கும், கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாகிவிடும்' என்று. அத்தகைய மக்கள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை, ஆனால் திருமணம் என்பது பேரானந்தமாக இருக்கும் என்று சொல்லப்பட்டவர்களிடம் எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கும். பேரானந்தம் என்பது நிகழாவிட்டால், அவர்கள் நொறுங்கிப் போவார்கள். சோகம் பன்மடங்காகும்.

பகுத்தாயும் மனம் இல்லாதபோது...

பகுத்தாயும் மனம் இருந்தால், என்ன நடந்தாலும், உங்களுடைய பகுத்தறிவைப் பயன்படுத்தி மேலே போகலாம். ஆனால் உங்கள் உடல் உதிரும்போது, பகுத்தாயும் மனம் அங்கு இல்லாதபோது, மனோபாவம் ஆட்சி புரியும். பரம்பரையாக நாம் இவற்றை வாசனா என்கிறோம். “வாசனா” என்றால் நறுமணம் அல்லது மணம் என்று சொல்லலாம். உங்களுக்கு உள்ளே எத்தகைய குப்பைகள் இருக்கிறதோ - மன்னிக்கவும் - எத்தகைய பூக்கள் உங்களுக்குள்ளே இருக்கிறதோ (சிரிக்கிறார்), எத்தகைய நறுமணத்துடன் அவை இருக்கிறதோ, அத்தகைய வாழ்க்கையே உங்களைக் கவர்ந்து இழுக்கும். அத்தகைய இடத்தை நோக்கியே நீங்கள் போவீர்கள்.

நீங்கள் விழிப்புணர்வு இல்லாமல் இயங்கினால், உங்களுடைய கர்மா முழுமையாக ஆட்சி புரியும். உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வைக் கொண்டுவந்தால், உங்கள் வாழ்க்கையின் மீது கர்மாவின் பலம் குறையும். ஆனால் உங்கள் உடல் உதிர்ந்து போனவுடன் பகுத்தறியும் தன்மை அங்கே இருக்காது. எனவே இந்த கட்டத்தில் கர்மா முழுதும் ஆட்சி புரியும்.

உங்களுக்கு உள்ளே மகிழ்வைத் தரும் கர்மா இருந்தால், அது பலமடங்கு பெரிதாகி நீங்களும் மிக மகிழ்ச்சியை அடைவீர்கள். இதையே நாம் மோட்சம் என்று சொல்கிறோம். மோட்சம் என்பது ஒர் இடத்தைக் குறிப்பது அல்ல. அது இங்கேயே இருக்கிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். இந்த உலகத்தில் சிலர் மோட்சத்திலும் சிலர் நரகத்திலும் இருக்கிறார்கள். அப்படித்தானே?

நாம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறோம். ஆனால் ஒருவர் சொர்க்கத்தையும் இன்னொருவர் நரகத்தையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். எனவே அது ஒரு இடத்தைக் குறிப்பிடுவது அல்ல, அது உங்கள் உள் மனதைக் குறிக்கிறது. அதேபோல துன்பமும் துயரமும் இருந்தால், பகுத்தறியும் தன்மை இல்லாத காரணத்தால் அவை பெரிதாகிறது.

நீங்கள் இப்போது உடலோடு இருக்கும்போது, உங்களுக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்தால், மிகவும் வருந்துவீர்கள். ஆனால் பகுத்தறியும் மனதைப் பயன்படுத்தி, “இது போதும். இந்த முட்டாள்தனத்திலிருந்து வெளிவரப் போகிறேன்” என்று சொல்வீர்கள். அப்போது உங்களால் வெளிவர முடியும். ஒருவேளை உங்களிடத்தில் விவேகம் இல்லை என்றால், இந்த துன்பம் பல லட்சம் மடங்கு பெரிதாக்கப்பட்டுவிடும். அதுவே நரகம் ஆகிவிடும்.

நீங்கள் ஒரு கருப்பையைத் தேடும்போது உங்களுடைய மனோபாவத்திற்கு ஏற்றபடி நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்திலான கருப்பையைத் தேடுகிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் ஒரு கருப்பையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள், ஆனால் விழிப்புணர்வு இல்லாமல் தேர்ந்தெடுக்கிறீர்கள். நீங்கள் விழிப்புணர்வுடனும் தேர்ந்தெடுக்கலாம். இந்தியாவில் இது சாதாரணமாக நடக்கிறது. (உலகில் எல்லா பகுதிகளிலும் இது ஓரளவு நடக்கிறது)

வாழ்வின் கடைசி தருணத்தை அணுகுவது எப்படி?

ஒருவர் இறக்கும் சமயத்தில் கீதையைப் படிக்க வேண்டும் அல்லது “ராம், ராம்” என்று சொல்லவேண்டும். அதுவரையில் அவர் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார் என்பதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் இறக்கும்போது ஓரளவு இனிமையை அவரிடம் உண்டாக்க வேண்டும். வாழ்வு என்பதிலிருந்து மரணம் என்னும் நிலைக்குப் போகும் தருணத்திலாவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும். நீங்கள் அப்போது மகிழ்ச்சியைத் தோற்றுவித்தால், இறந்த பிறகு, அந்த உயிருக்கு மகிழ்ச்சி என்பது முக்கிய குணமாக இருக்கும்.

அதேசமயத்தில், இன்னொரு சாத்தியக்கூறும் இருக்கிறது. கடந்த காலத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. சில அரசர்கள் தங்கள் எதிரிகளைக் கொல்ல நினைத்தால், பல்வேறு அனுபவங்களுக்கும் அவர்களை உட்படுத்துவார்கள். ஆசையைத் தூண்டுவதே அவர்கள் நோக்கம். அவர்கள் முன்னிலையில் பெண்களை ஆடைகளின்றி நிறுத்தி, அவர்களுக்கு பாலுணர்வைத் தூண்டி பிறகு கொல்வார்கள்.

காரணம் என்னவென்றால், எதிரிகள் மோகம் என்னும் நிலையில் சாகவேண்டும், அப்போதுதான் அவர்கள் நீண்டகாலம் நரகத்தில் அவதிப்படுவார்கள். இந்த நாட்டில் நமக்கு அத்தகைய தொழில்நுட்பம் எல்லாம் தெரியும் (சிரிக்கிறார்). உண்மையில் மக்கள் இவ்வாறு செய்தார்கள். எல்லா இடங்களிலும் ஓரளவு இதைப்பற்றி தெரிந்து வைத்திருந்து அதை தங்களுக்கு உரித்தான வழிகளில் செய்தார்கள். இந்திய கலாச்சாரத்தில் இவை அனைத்தும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.

ஒரு உயிர் ஒரு கருப்பையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

எனவே ஒரு உயிர் ஒரு கருப்பையைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அது மனோபாவத்தைப் பொறுத்து இயங்குகிறது. விழிப்புணர்வுடன் இருக்கும் உயிர்கள் தவிர்த்து மற்ற உயிர்களுக்கு இப்படித்தான் நடக்கிறது. விழிப்புணர்வுடன் கருவைத்தேடும் உயிர்கள் மிக அரிது.

அந்த அளவுக்கு விழிப்புணர்வு இருந்தால் அவர் ஏற்கனவே முழுதும் கரைந்து போயிருப்பார். அப்படி ஒரு விழிப்புணர்வு நிலையை அடைந்து இன்னும் ஒரு கருப்பையைத் தேர்ந்தெடுக்கிறார் என்றால் அது மிக மிக அரிது எனச் சொல்லலாம். இவர்களைத் தவிர, மற்றவர்கள் மனோபாவ அடிப்படையிலேயே தேர்ந்தெடுப்பார்கள்.