புரட்சியால் உலகை மாற்றுவது எப்படி என்பதற்காக கார்ல் மார்க்ஸ், சேகுவேரா போன்ற புரட்சியாளர்களின் சரித்திரங்களைத் தேடித்தேடிப் படித்த சத்குரு, வன்முறைக்கு எதிராக மேற்கொண்ட புரட்சி என்ன? இதைப் பற்றி அவரது வார்த்தைகளிலேயே தெரிந்து கொள்வோம்.

சத்குரு:

பத்தாம் வகுப்பில் இருந்தபோது, எனக்கு ஓர் ஆசிரியர் இருந்தார். அவருடைய பொறி தெறிக்கும் பேச்சு, என் ரத்தத்தில் துடிப்பேற்றும். அந்த வேகத்தில், சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், அக்கிரமங்கள் இவற்றைக் களைய இரு நண்பர்களுடன் சேர்ந்து மரத்தடியில் திட்டங்கள் போடுவேன். புரட்சியால் உலகை மாற்றுவது எப்படி என்று மணிக்கணக்கில் பேசுவோம்.

புரட்சி பற்றி சிந்தித்தபோதும் சரி, செயல்பட்டபோதும் சரி, வன்முறையில் ஈடுபடும் விருப்பம் எனக்கு வந்ததே இல்லை.

ஒருபுறம் கார்ல் மார்க்ஸ், சேகுவேரா போன்ற புரட்சியாளர்களின் சரித்திரங்களைத் தேடித்தேடிப் படித்தேன். பல்கலைக்கழகத்தில், ஒரு மாணவியிடம் பேராசிரியர் ஒருவர் சற்று மோசமாக நடந்து கொள்ள முயற்சிக்க.. புரட்சி வெடிப்பதற்கு அது அருமையான சந்தர்ப்பம் என்று கூட நினைத்ததுண்டு.

உண்மையான புரட்சி எது?

ஆனால், ஆர்ப்பாட்டங்களும் கூக்குரல்களும் மட்டுமே நிறைந்த புரட்சி அர்த்தமற்றது என்பதை விரைவிலேயே உணர்ந்தேன். அமைதியான மாற்றங்களை நிகழ்த்துவதுதான் உண்மையான புரட்சி என்று தெளிந்தேன். புரட்சி பற்றி சிந்தித்தபோதும் சரி, செயல்பட்டபோதும் சரி, வன்முறையில் ஈடுபடும் விருப்பம் எனக்கு வந்ததே இல்லை. ஆனால், இன்று வன்முறை ஆங்காங்கே வெடிப்பதைப் பார்க்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தன் உயிரைவிட தன் கொள்கைக்கு அதிக மதிப்பு கொடுப்பவர் அற்புதமானவர்தான். பொதுவாக அவரைப் பாராட்டுவேன். ஆனால், கோபமாக இருப்பவர் தன் கொள்கையை நிலைநிறுத்திப் பார்க்கையில், அது கொடூரமாக மாறுகிறது. அவர் தன் உயிரை மட்டுமல்லாது, மற்றவர் உயிர்களையும் பணயம் வைக்கையில், அது அராஜமாகிறது.

அதே கொள்கை கோபத்தின் மீது எழுப்பப்படாமல், அன்பின் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டு இருந்தால், அவ்வளவு அற்புதமான மனிதராகியிருப்பார் அவர்!

வெடிக்கும் மனித வெடிகுண்டுகள்

மனித வெடிகுண்டு பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு முறையும் என் இதயம் அந்த மனிதனுக்காகக் கண்ணீர் சிந்தும். உயிரை விட மேம்பட்டதாக அவனுள் எழுந்த அந்த உணர்வு, துரதிர்ஷ்டவசமாகக் கோபத்தாலும், காழ்ப்பாலும் அல்லவா கிளறப்பட்டு விட்டது? அவனுக்காக எப்படிப் பெருமை கொள்ள முடியும்?

நீங்கள் கவனித்திருக்கலாம். எங்கெல்லாம் கோபம் இருக்கிறதோ, அங்கெல்லாம் கிலி பிறக்கும். ஒரு தகப்பன் கோபமானால், குழந்தைக்கு கிலி பிறக்கும். ஒரு தலைவன் கோபமானால், தேசமே கிலி கொள்ளும்.

இந்த அச்சுறுத்தல் எப்படியோ நம் வாழ்வு முறைகளில் ஒன்றாகிவிட்டது. அதுவும் நம் தேசம் வன்முறையின் தீவிரங்களால் காயங்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. எதனால் இங்கே இத்தனை தீவிரவாத வன்முறை?

வன்முறையின் காரணிகள்

முக்கியமான ஒரு காரணம் சமநிலையற்ற அரசியல் போக்கு. அதைவிட மோசம், மதச் சார்ப்பான தூண்டுதல்கள்.

தங்கள் கடவுளுக்காக ஆயுதம் எடுப்பவர்களிடம் கேட்கிறேன்... எல்லாவற்றையும் படைத்தவன், எல்லாவற்றையும் ஆள்பவன் என்று உங்களால் துதிக்கப்படுபவன் உங்கள் ஆயுதங்களை நம்பி இருக்கும் அளவுக்கு பலவீனமானவனா? தன்னையே தற்காத்துக் கொள்ளத் தெரியாதவனையா கடவுள் என்று வணங்குகிறீர்கள்?

மதத்தின் அடிப்படை நோக்கம் என்ன? விடுதலை, சொர்க்கம், கடவுள்தன்மை, இதில் ஏதாவது ஒன்றையாவது வன்முறை கொண்டு அடைய முடியுமா?

தனி மனிதர்கள் மாறாமல் மோசமாக இருக்கும் களத்தில், சமூகத்தைத் திருத்துவதற்காக நீங்கள் அதிகபட்சம் என்ன செய்ய முடியும்? வெற்றுச் சட்டங்களை இயற்றலாம். வேலை செய்யாத விதிமுறைகளை அமல்படுத்தலாம்.

ஆனந்தமாக இருப்பது எப்படி, அமைதியாக இருப்பது எப்படி என்று உங்களுக்கே தெரியவில்லை என்றால், உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு என்ன வழங்க முடியும்?

இதற்குத் தீர்வுகள் என்ன? சமூகத்தில் வளம் பெருக வேண்டும். அது எல்லோரையும் சென்று சேர வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும். அரசியல் பகைமை களையப்பட வேண்டும். இதெல்லாம் இரவோடு இரவாக நடந்து முடிந்துவிடாது.

அதுவரை தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? கிடையவே கிடையாது. இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதம் அடக்கப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்காகப் பரிந்து கொண்டு மனித உரிமைகள் பற்றிப் பேசுபவர்கள், பலியான அப்பாவி உயிர்களுக்கும் மனித உரிமை இருந்தது என்பதை மறக்கக்கூடாது.

இதை ஒடுக்குவது எப்படி?

குற்றமற்ற பொதுமக்களுக்கு எதிராகத் துப்பாக்கியோ, வெடிகுண்டோ சுமக்கும் மனிதர்களுக்கு மனித உரிமை பற்றி பேசும் தகுதி கிடையாது. எந்த நேரடிக் காரணமும் இல்லாமல், ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் ஒரே நோக்கத்தில், எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத பொதுமக்களை வெடிகுண்டுகள் போட்டு அழிப்பவர்களுக்கு எதிராகத் துப்பாக்கி உயர்த்துவதில் என்ன தப்பு?

நடைமுறையில் இருக்கும் சட்டம் இதற்கு உதவாது. தப்பான இடத்தில் தர்மம் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டும். நம் சகிப்புத்தன்மையும், தர்ம உணர்வும், கருணை மனமும் நமக்கே ஆபத்தாக மாறக்கூடிய நிலையில் வாழ்ந்தோமானால், அந்தக் குணங்கள் மீதே நமக்கு நம்பிக்கையற்றுப் போய்விடும். தகுதியற்றவர்களுக்குக் கருணை காட்டுவது பற்றிப் பேசுவதை விடுத்து, நாட்டின் இறையாண்மைக்குக் கேடு விளைவிக்க நினைப்பவர்கள் ஒடுக்கப்பட வேண்டும்.

அத்தகைய தீவிரவாதிகளையும் ஒரே வீச்சில் திருத்துவதற்கு எந்த வழியும் இல்லை. 'என் மதம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது, என் செயல்கள் அதற்கு உடன்பாடாக இருக்கின்றனவா?' என்று புத்திசாலித்தனத்துடன் ஒவ்வொரு தனி நபரும் யோசிக்க வேண்டும். மாற வேண்டும்.

மற்றவர்களை உங்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்யும் முன்பு, நீங்கள் உங்களை முதலில் வளமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனந்தமாக இருப்பது எப்படி, அமைதியாக இருப்பது எப்படி என்று உங்களுக்கே தெரியவில்லை என்றால், உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு என்ன வழங்க முடியும்?

உங்கள் கோபத்தையும், பொறாமையையும், சோகத்தையும், வேதனைகளையும் அல்லவா மற்றவர்கள் மீது அப்பிவிடுவீர்கள்? தொற்றுநோயைச் சுமந்து கொண்டு மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் புறப்படுவதற்கும், இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு விதத்தில் அபாரமானவன். பிரம்மாண்ட சக்தி கொண்டவன். அவன் வளர்ச்சியைப் பற்றி அவன் உண்மையான அக்கறை கொண்டாலே போதும். அவன் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சுற்றிலும் நிகழும்!