Question: தொப்புள் கொடி அறுபட்டதுமே நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் அகதி என்றே தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

உங்கள் அன்னை என்றும், தொப்புள் கொடி என்றும், நீங்கள் என்றும் அழைக்கப்படும் எல்லாமே இந்த மண்ணின் ஒரு பாகம்தான். மண்ணின் ஒரு துளிதான் மேல் எழுந்து ஆடுகிறது. அதுவே பின்னால் உங்களை உள்ளே இழுத்துக்கொள்ளும். உங்களைப் பற்றி ஏதேதோ விசித்திரமான எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றுகின்றன.

மனதை தெய்வீகத்தை சென்றடைவதற்கான ஏணியாகவும் பயன்படுத்தலாம் அல்லது உங்களை இந்த சிறிய உடலுக்குள் சிறைப்பிடித்து வைக்கவும் பயன்படுத்தலாம்.

உங்களுக்கும், எனக்கும் முன்பாக இந்த மண்ணில் பலகோடிபேர் பிறந்து வளர்ந்தார்கள். அவர்களுக்கும் தங்களைக் குறித்து இப்படி எத்தனையோ விசித்திரமான எண்ணங்கள் தோன்றின. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். இந்த பூமியின் மேற்பரப்பில் புதைந்து கிடக்கிறார்கள். எல்லோருமே அதே போல் புதைந்து போகப் போகிறவர்கள்தான். ஒருவேளை எழுந்து விடுவார்களோ என்று அஞ்சினால் ஆழப் புதைத்து வைப்பார்கள். இதில் உங்களைக் குறித்து விசித்திரமான எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றுகின்றன. எல்லாரிடமும் இருந்தும் நீங்கள் தனித்திருப்பதாக எண்ணுகிறீர்கள். அதனாலேயே அகதியாகவும், அநாதையாகவும் உங்களைக் குறித்து உங்களுக்குத் தோன்றுகிறது. இப்படித் தோன்றுவதற்கு வாழ்வின் இயல்பு காரணமல்ல. எண்ணங்களின் இயல்புதான் காரணம். மனதை தெய்வீகத்தை சென்றடைவதற்கான ஏணியாகவும் பயன்படுத்தலாம் அல்லது உங்களை இந்த சிறிய உடலுக்குள் சிறைப்பிடித்து வைக்கவும் பயன்படுத்தலாம். அப்படி சிறைப்பிடித்து வைப்பதால்தான் உங்களை அகதி என்று எண்ணிக் கொள்கிறீர்கள்.

இந்த உலகில் ராக்கெட்டுகளை உருவாக்குகிறார்கள். இயந்திரங்களை உருவாக்குகிறார்கள். கார்களை உருவாக்குகிறார்கள். ஆனால் மனிதர்களை உருவாக்குவதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. இந்த உடல், மனம் ஆகிய கருவிகளை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களை உருவாக்க முற்படுவதில்லை. அப்படி உருவாக்குவதைத்தான் நான் ஆன்மீகம் என்று சொல்லுகிறேன். உடலையும், மனதையும் பயன்படுத்தி உயர்நிலைக்கு கொண்டு செல்ல தகுதியும், வாய்ப்பும் இருந்தால்கூட உயிரை அழிப்பதற்கு அவற்றை பயன்படுத்துகிறீர்கள்.

உங்களிடம் உள்ள கருவிகளை உயிரை மேம்படுத்த பயன்படுத்துகிறீர்களா உயிரை அழிக்கப் பயன்படுத்துகிறீர்களா? என்பதுதான் கேள்வி. உயிரை அழிக்கப் பயன்படுத்துவதென்றால் நீங்கள் கொலை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. தன்னை அகதிபோல் கருதிக் கொள்வது உங்களை நீங்களே அழித்துக் கொள்வதுதான். மற்ற உயிர்களை அழித்தாலாவது அவை உங்களைத் தடுக்கும். ஆனால் உங்களை நீங்களே அழித்துக் கொள்கையில் உங்களுக்கு நீங்களே எந்த எதிர்ப்புணர்வும் காட்டுவதில்லை.

எனவே இப்படி தத்துவங்களையும் விசித்திரமான எண்ணங்களையும் சொல்வது அறிவாளிகள் போல் நடிப்பவர்கள் மத்தியில் போதைதரும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் நன்மை விளையாது. உங்களையும் மற்ற உயிர்களையும் மேம்படுத்தும் விதமாக உங்கள் எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.