சத்குருவை நேரடியாகக் காண ஆசை கொண்டு, ஈஷா மையம் வரும் தியான அன்பர்கள் மற்றும் பொதுமக்கள், ஆவலுடன் கேட்கும் ஒரே கேள்வி 'இன்று சத்குரு தரிசனம் இருக்கிறதா?' என்பதுதான். சத்குருவை இதுவரை காணதவர்க்கும், கண்ணாறக் கண்டுகளித்து மீண்டும் ஒரு வாய்ப்பிற்காக ஏங்குபவர்க்கும் அரியதொரு வாய்ப்பாக வந்துள்ளது '7 நாட்கள் தரிசன' அறிவிப்பு! இந்த இனிப்புச் செய்தியை முழுதாய் அறிய, தொடர்ந்து படியுஙகள்.

"தர்ஷன்" என்றால் என்ன?

சத்குரு:

'தர்ஷன்' என்றால் தரிசனம், அதாவது ஒரு நொடியேனும் மனம் நிறைய, கண்குளிரக் காண்பது. 'தரிசனம் கிடைத்தது' என்று சொன்னால், நான் கண்ட அக்காட்சி என்னுள் நிறைந்து, என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது என்று அர்த்தம். வாழ்வின் இயக்கமுறைகளை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு, அதன் செயல்பாடுகளை அறிந்தமையால், இந்த 'தரிசனம்' நம் கலாச்சாரத்தில் தோன்றியது. இந்தியாவில், மக்கள் பிரார்த்தனை செய்வதற்காக கோவிலுக்குச் செல்வதில்லை. விசேஷ தினங்களில் பெரும் மக்கள் கூட்டம் கோவில்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அலைமோதும். அது தங்களுக்கு வேண்டியவற்றை எப்படியும் பெற்றே தீர வேண்டும் என்றெண்ணி அல்ல - எப்படியும் ஒரே ஒரு நொடியேனும் தெய்வத்தின் தரிசனம் பெற்றுவிட வேண்டும் என்று தான். பிரார்த்தனைக்கு அல்ல, பூஜைக்கு அல்ல, வழிபட அல்ல, வேறெதுவுமே அல்ல. தெய்வத்தை தரிசித்து விடவேண்டும், அவரால் ஆட்கொள்ளப் படவேண்டும் என்று தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒரே ஒரு முறை தரிசனம் கிடைத்துவிட்டால், அதன் பிறகு உங்கள் கண்கள் மூடியிருந்தாலும், அதன் பிம்பம் உங்களுக்குள் இருக்கும்.

தரிசித்து விடுவது என்றால், கண்குளிரப் பார்த்துவிடுவது என்றால், இது ஏதோ கடைக் கண்ணாடி வழியே பொருட்களை பார்த்து ரசிப்பது போலல்ல. பெரும்பாலனவர்கள் இதன் ஆழத்தை புரிந்து கொள்வதில்லை. 'தரிசனம்' என்று சொன்னால், நீங்கள் காணும் அக்காட்சி, உங்களுக்குள் ஒரு பிம்பமாக தன்னை பிரதிபலித்துக் கொள்கிறது. உணர்வுநிலையில் அக்காட்சியுடன் நீங்கள் ஒன்றிவிடுகிறீர்கள். வேறெதுவுமே உள்ளே செல்ல வழியில்லாமல், நீங்கள் உங்களால் நிரம்பியிருந்தால், அக்காட்சி போகிற போக்கில் கண்களில் விழுந்த ஏதோ ஒரு புகைப்பட உணர்வாகத்தான் இருக்கும். ஆனால், 'நீங்கள்' என்ற எண்ணம் மிகக் குறைவாகவோ, அல்லது முற்றிலுமே இல்லாமல் இருந்துவிட்டால், அந்நிலையில் சரியான முறையில் உள்வாங்கப்படும் இக்காட்சி, உங்களுக்குள் பதிவது மட்டுமல்லாமல், உங்களுக்குள் வேர்விட்டு வளரவும் ஆரம்பித்துவிடும்.

அதனால்தான் மக்கள் தெய்வீகத்தை ஒரு நொடியேனும் பார்த்துவிட பிரயத்தனப் படுகிறார்கள். ஒரே ஒரு முறை தரிசனம் கிடைத்துவிட்டால், அதன் பிறகு உங்கள் கண்கள் மூடியிருந்தாலும், அதன் பிம்பம் உங்களுக்குள் இருக்கும். முழு விருப்பதோடு, நீங்கள் உள்வாங்கிக் கொள்ளும் அக்காட்சி, உங்களை நீங்கள் குறைத்துக் கொள்ள, குறைத்துக் கொள்ள, உங்களுக்குள் மேன்மேலும் வளர்ந்து உங்களை ஆட்கொண்டு, உங்களுக்குள் ஒரு உயிரோட்டமான உண்மையாக நிலைபெறும். உங்களில் ஒரு அங்கமாக மாறிவிடும். உங்களை முற்றிலுமாய் முழுவதுமாய் அது ஆட்கொள்வதும் ஆக்கிரமிப்பதும், உங்கள் கைகளில் தான் உள்ளது. ஆம், நீங்கள் ஒன்றுமற்று போக எப்பொழுது தயாராகிறீர்களோ, எப்பொழுது ஒன்றுமற்றுப் போகிறீர்களோ, அப்பொழுது முற்றிலுமாய் முழுவதுமாய் ஆட்கொள்ளப் படுவீர்கள்.

சத்குரு தர்ஷன்

நமது மையத்தில் சத்குரு இருக்கும் தினங்களில், மாலை 6:20 மணிக்கு, சந்திரகுண்டம் முன்பாக சத்குருவின் தரிசனம் நிகழும். இது சத்சங்கம், கேள்வி-பதில் என்று மட்டுமில்லாமல் சத்குருவின் சக்திவாய்ந்த இருப்பை உணர்ந்திட ஒரு அரிய வாய்ப்பாகவும் அமைகிறது. மக்கள் நேரடியாக சத்குருவை சந்திக்கும் ஒரு வாய்ப்பாகவும் இந்த தரிசனம் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

சத்குருவின் நெருக்கடியான கால அட்டவணை காரணமாக, முன்னறிவிப்புகள் ஏதுமின்றி எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்பொழுது என்று, கடந்த சில மாதங்களாக சத்குருவின் தரிசனம் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. இதனால் ஈஷாவிற்கு வருபவர்களுக்கு சத்குருவின் தரிசனம் தற்செயலாகக் கிடைத்தால்தான் உண்டு என்ற நிலை. இதை நிவர்த்தி செய்யும் விதமாக, சத்குருவின் தரிசனம் இப்பொழுது முன்னறிவிப்புடன். ஆம், சத்குரு தரிசனத்திற்கான அரிய வாய்ப்பு ஜுன் மாதத்தில் காத்திருக்கிறது. வரும் ஜூன் 18 முதல் 24 வரை தொடர்ந்து 7 நாட்களும் சத்குரு தரிசனம் அளிக்க உள்ளார். தியான அன்பர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் யாவரும் இதில் கலந்துகொள்ளலாம்.

நேரம்: மாலையில்
இடம்: ஆதியோகி ஆலயம், ஈஷா யோக மையம்

மேலும் தொடர்புக்கு:

வடக்கு மண்டலம்: 83000 11000
(சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்கள்)

கிழக்கு மண்டலம்: 94878 95177
(திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்கள்)

தெற்கு மண்டலம்: 83000 66000
(மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்கள்)

மேற்கு மண்டலம்: 94434 94434
(கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்கள்)