தித்திக்கும் தீபாவளி... தினமும் கொண்டாடுங்கள்

இதோ வந்துவிட்டது தீபாவளி... வழக்கம்போல புத்தாடை, பலகாரம், பட்டாசு என களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம், அதே குதுகலத்துடன் நம் வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்க சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே...
 

இதோ வந்துவிட்டது தீபாவளி... வழக்கம்போல புத்தாடை, பலகாரம், பட்டாசு என களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம், அதே குதுகலத்துடன் நம் வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்க சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே...

வருடம் முழுவதும் கொண்டாட்டம்

நம் கலாசாரத்தில் ஒரு காலத்தில் வருடம் 365 நாட்களும் விழாக்கள் நடந்தன. எனவே, 365 நாட்களும் கொண்டாட்டங்களாக இருந்தன. விழா என்ற பெயரில் அன்றாடச் செயல்களையே ஒரு கொண்டாட்டமாகச் செய்தார்கள். அந்த அனைத்துக் கொண்டாட்டங்களும் மக்களுக்கு வாழ்க்கையின் பொருளை வெவ்வேறு வகைகளில் உணர்த்துவதாக இருந்தன.

தீபாவளி என்பது அந்த ஒரு நாளில் மட்டும் பட்டாசுகளை வெடித்துவிட்டு அடங்கி விடுவது அல்ல. தினமும் இதுபோன்று நமக்குள் நடக்கவேண்டும்.

குறிப்பாக இலையுதிர் காலத்தின் தொடக்கத்தில் வரும் பண்டிகைகள் நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்தக் கொண்டாட்டங்கள், நவராத்திரிப் பண்டிகைகள், தசரா கொண்டாட்டங்கள், துர்க்கா பூஜை விழா, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என்று பல விதங்களில் கொண்டாடப்படுகின்றன. அனைத்துக் கொண்டாட்டங்களுமே, தீமையை நன்மை வென்றதன் அடையாளமாகத்தான் கொண்டாடப்படுகின்றன.

ராமன், ராவணனை வென்றதற்காக நவராத்திரி கொண்டாட்டமும், மகிஷாசுரனை துர்க்கா அழித்ததன் அடையாளமாக துர்க்கா பூஜைக் கொண்டாட்டங்களும், கிருஷ்ணன் நரகாசுரனை வென்றதற்காக தீபாவளி என நடைபெற்றாலும் உண்மையில் மனிதன், தான் என்ற தன்மையையும் அறியாமையையும் வென்று வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவதன் அடையாளமாகத்தான் இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஜெயின் மதத்தினரும் மகாவீரர் அறியாமையை வென்று மகா நிர்வாணம் அடைந்த நாளாகத் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

கொண்டாட்டங்கள்தான் எப்போதும் நம் உயிர்த்தன்மையைப் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது என்றும், உற்சாகத்தில் இருக்கும் மனிதர்களே தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்றும் எனவே கொண்டாட்டங்கள் நிறைந்த நம் கலாசாரத்தை மீட்டெடுப்பதின் அவசியத்தையும் சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதோ சத்குருவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி இங்கே அனைவருக்கும்...

தித்திக்கும் தீபாவளி...

சத்குரு:

தீபாவளிப் பண்டிகை, எதிர்மறை சக்திகள் அழிந்து புத்தொளி பிறப்பதன் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. நம் கலாச்சாரத்தில், அனைத்து நாட்களும், ஏதோவொரு காரணத்தோடு பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. காரணத்தைவிட கொண்டாட்டமே முக்கியமாகக் கருதப்பட்டது. உண்மையில் எந்த ஒரு காரணமுமே கூட இல்லாமல் மனிதன் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்போது உயிரோடு இருக்கிறீர்கள். இதைவிட வேறென்ன காரணம் உங்களுக்குத் தேவைப்படுகிறது? நீங்கள் வாழும் வாழ்க்கையே ஒரு பெரிய கொண்டாட்டமாக நடக்க வேண்டும்தானே? அதற்காகவே உங்கள் வாழ்க்கையில் பல பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் பரவலாக அனைவரும் கொண்டாடுவது தீபாவளி.

ஒரு பண்டிகை என்பது வாழ்க்கையை உற்சாகமான மற்றும் குதூகலமான நிலைக்கு மாற்றும் ஒரு கருவியாக இருக்கிறது. எப்போது நமக்குள் கொண்டாட்டம் இல்லையோ, அப்போது நம் உயிர்த்தன்மையிலும் குதூகலம் இருக்காது. குதூகலமற்ற மனிதர் ஒரு மருந்தில்லாத பட்டாசு மாதிரிதான். தீபாவளி என்பது அந்த ஒரு நாளில் மட்டும் பட்டாசுகளை வெடித்துவிட்டு அடங்கி விடுவது அல்ல. தினமும் இதுபோன்று நமக்குள் நடக்கவேண்டும். நாம் நம்முடைய கண்களை மூடும்போதும் திறக்கும்போதும், நம் உயிர்சக்தி, இதயம், மனம் மற்றும் உடல் ஆகியவை வெடித்து விடும்படியான உற்சாகத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு ஊசிப்போன பட்டாசு போல இருந்தால், தினமும் வெளியே இருந்து யாராவது உங்களை நகர்த்தத் தேவையிருக்கும். எனவே தீபாவளி என்பது அன்று ஒரு நாள் வெளியில் விளக்குகளை ஏற்றி வைத்தால் போதாது. வருடம் முழுவதும் உள்ஒளியிலும் திளைக்க என்ன தேவையோ அதைச் செய்யவேண்டும் என்பதற்கான நினைவூட்டலே இந்த தீபாவளித் திருநாள். உங்களுக்குள் சேகரித்திருக்கும் இருள் மேகங்களை அகற்றினாலே, அங்கு தானாக உள்ஒளி ஏற்படும். இதற்கான உங்கள் முயற்சிக்கு எப்போதும் நாம் துணையாக இருப்போம்.

அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பும் அருளும்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1