ஞானம் அடைய என்ன செய்ய வேண்டும்? புத்தகத்தை படிக்க வேண்டுமா? இல்லை அதைப் பற்றி சிந்திக்க வேண்டுமா? இப்படி செய்வதால் அதை அடைந்து விடுவோமா.... ஞானமடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு சத்குருவின் விளக்கமும் ஆசியும்...

சத்குரு:

கடவுளைத் தேடிப் போகாதீர்கள். விடுதலையைத் தேடிப் போகாதீர்கள். கடவுள், நிர்வாணம், முக்தி, ஞானம் போன்றவற்றைப் பற்றி பேசாதீர்கள். உங்கள் பேச்சில் கடவுளும், சொர்க்கமும், மோட்சமும் நிலைபெற்று இருக்கிறதுதானே? முதலில் கண்களைத் திறந்து அனைத்தையும் பாருங்கள். வெளிச்சூழலைப் பொறுத்தவரை, நாம் அனைவரும் வெவ்வேறு விதமான திறமை கொண்டவர்கள். இரண்டு மனிதர்கள் வெளியில் வேலை செய்யும்போது ஒரே அளவுக்கு திறமைசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் உள்நிலையைப் பொருத்தமட்டில், நாம் அனைவரும் சமமான திறமை கொண்டவர்கள்தான். அங்கு திறமையின்மை என்பதே கிடையாது. தயாராக இருக்கிறீர்களா, திறந்த நிலையில் இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.

ஞானம் என்பது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதால் நடைபெறாது, படித்துக் கொண்டிருப்பதால் நடைபெறாது, அது குறித்த கேள்வி ஞானத்தால் நடைபெறாது. இந்த “சிந்திக்கும் ஆன்மீகம்”, “பேசும் ஆன்மீகம்,” “படிக்கும் ஆன்மீகம்” பல காலமாக மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் இன்னும் பல முட்டாள் தனங்களை எல்லாம் நீங்கள் ஒதுக்கி வைத்துவிட்டால், நீங்கள் ஒரு அங்குலமாவது உடனே முன்னோக்கி நகர முடியும். இதுபோன்ற ஒரு சிறிய அடி எடுத்து வைப்பது கூட நீங்கள் பேசும் எல்லா வேதாந்தங்களையும் விட அதிக மதிப்பு வாய்ந்தது. எனவே, வெறுமனே விரும்புவது மட்டும் எப்போதும் வேலை செய்யாது. உணர்தல் என்பது நீங்கள் விரும்புவதால் மட்டும் நிகழ்வது அல்ல. நீங்கள் உங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வையுங்கள், என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். என்ன நடக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யாதீர்கள். சூரிய ஒளி உங்கள் வீட்டுக்குள் வருகிறது. நீங்கள் அதை விரும்பினீர்கள் என்பதற்காக அது வரவில்லை. நீங்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்ததால் அது நடக்கிறது. நீங்கள் சூரியனுக்கு அழைப்பிதழ் தர வேண்டியதில்லை, ஜன்னல்களைத் திறந்ததும் ஒளி தானாகப் பாய்கிறது. எனவே நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்களைத் திறந்தநிலையில் வைத்திருப்பதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.